Sunday, 10 July 2022

சிவ சிவ

 

இந்த வார்த்தை சிவன் கோவில் உள்ளே போகும்போது நியான் விளக்கில் பின்னே எழுதப்பட்டிருக்கும் சிவ சிவ வோ” அல்லது சிவனைப் பற்றி உபன்யாசத்தின் தொடக்கமோ இல்லை.

இது ஒரு ஆச்சர்யமான “சிவ சிவ”. நாம் பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான/ஆச்சர்யமான ஒரு செய்தியைக் கேட்டவுடன் நாம் உடனே காதைப் பொத்திக்கொண்டு “சிவ சிவ போறும், சொல்லாதே” என்று சொல்வோமே, அது,

இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ? என்று கேட்டால் மூன்று முக்கியமான நூல்களில்/புராணங்களில் இந்த வரிகளைக் கையாண்டிருக்கும் அழகு. அதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஒன்று மூக பஞ்ச சதியில்

இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின் ஆத்மார்பண ஸ்துதியில்

மூன்றாவது, ஆச்சர்யமாக- நாராயணீயத்தில்.

அ) நாராயணீயத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

நாராயணீயத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைப் பிழிந்து கொடுத்து இருக்கும் இந்த அற்புதமான் கிரந்தத்தில், ஸ்ரீ. சுந்தர் குமார் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் சொல்கிறேன்.

வால்மீகி ராமாயணத்தில் “சுந்தர காண்டத்தில் எத்தனை பகுதிகளோ (chapters) அத்தனை பகுதிகளை வார்த்தைகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒரு வார்தையாக) ஒரு 4 வரியில் (35 வது சதகம், 3 வது செய்யுள்) முடித்து இருக்கிறார்.

இதெல்லாம் குருவாயூரப்பன் அருள் இல்லாமல் எப்படிச் செய்ய முடியும்  ? 

இதில், ராமாயணத்தைப் பற்றி நாராயண பட்டத்ரி சொல்லும்போது, ஒரு இடத்தில் சிவ சிவ வருகிறது.

நா.ப. சொல்கிறார்:   (35 வது சதகம், 9 வது ஸ்லோகம்)

உத்தர காண்டத்தில், ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, பதினாறாயிரத்திற்க்கு அதிகமான வருடங்கள் சுகமாக ஆட்சி செய்தீர்கள். பிறகு சீதாதேவி விஷயமான அபவாதச் சொல்லைக் கேட்டு, கர்ப்பிணியான அவளை பரித்யாகம் செய்தீர்கள் அல்லவா ?

சிவ சிவ -என்ன கொடுமை இது”

“மைதில்யாம் பாபவாசா....ஷிவ ஷிவ் கில தாம்” என்று சம்ஸ்க்ருத பதம் வருகிறது.

ஆ) இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின்- ஆத்மார்பண ஸ்துதி

தீக்ஷிதர் பற்றி முன்னுரை தேவையில்லை. அவரைப் பற்றி, காஞ்சி பெரியவர், ஒரு ஆடியோ ஒன்று வெளியீட்டு யூ ட்யூப் ல் இன்றும் இருக்கிறது. செம்மங்குடி மாமா “மௌளம் கங்கா, ஷஷாங்கௌ.......” என்று மாயமாளவ கௌளையில் ஒரு விருத்தம் பாடுவார், அது இவரது தான்.

அவர் தேவி மகாத்மியத்தை சுருக்கி, ஸாரமாக, துர்கா சந்திர கலா ஸ்துதி” என்று ஒன்று எழுதி இருக்கிறார். உத்தமாமான ஒரு கிரந்தம் இது.

அவர் “பைத்தியம் ஆக இருந்தபோது ஒரு 50 ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். ஏன்/எதற்க்கு பைத்தியம் ஆனார் என்பதை

https://www.youtube.com/watch?v=u0aJAkpMxic

இந்த ஆடியோவைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது “உன்மத்த பஞ்சாஷத்” என்றும் அழைக்கப் படுகிறது. இப்படி ஒரு அற்புதமான கிரந்தத்தை எழுதிவிட்டு, கடைசி ஸ்லோகத்தை இப்படி முடிக்கிறார்.

“இறைவா, ஒருமுகப்பட்ட மனதுடன், இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை நான் இயற்ற வில்லை. கருணைக் கடலே !  இந்த அற்பமானவன் வார்த்தை அளவிலாவது சரணம் அடைந்துள்ளான் என்று நினைத்து என்னை ரக்ஷிப்பாயாக  !!!!

இந்த வரிகளை “உன்மத்த” நிலையில் எழுதி இருக்கிறார்.....!!!!!

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு தூக்கி வாரிப் போடுகிறது.

இதில், 8 வது ஸ்லோகத்தில் இப்படிச் சொல்கிறார்

“காமனை எரித்தவனே, எருக்கு, தும்பை முதலான மலர்களால், உன்னை அர்ச்சனை செய்து, அத்ன் பலனாக மோக்ஷ சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம் என்பதை அறிந்தும் கூட

 “சிவ சிவ”

எனது காலத்தை வீணாக்கி, ! ஓ ஆத்மரூபியே  !  ஆத்மத்ரோஹியாகி, இந்த்ரியங்களுக்கு அடிமையாகி, உன்னை மறந்து, நான் மேல் மேலும் அதோ கதியை அடைகிறேன்”

“எதத் ஜாநன் அபி “சிவ சிவ” வியர்தயன் காலம் ஆத்மன்”

இ) இது மூக பஞ்ச ஸதி- இதுவும் காஞ்சி பெரியவா சொன்ன ஆடியோ தான்.

ஆர்யா சதகத்தில் 48 வது ஸ்லோகம் – இதன் அர்த்தம் இப்படிப் போகிறது.

“ஸ்ரீ காமக்ஷி தேவியின் கடாக்ஷத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட மகா புருஷன், காட்டையும், அரண்மனையும், சத்ருவையும், ஸ்நேகிதனையும், ஒட்டாஞ்சல்லியையும், யுவதிகளின் கோவைக்கனி போன்ற உதடுகளையும் சமமாக பார்க்கிறார்கள். 

சிவ சிவ

என்ன ஆச்சார்யம், என்ன ஆச்சர்யம்..... என்று முடிக்கிறார்.

“ஷிவ ஷிவ பஷ்யந்தி சமம்.......” என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்.

மகான்கள் கஷ்டப்பட்டு, நமக்காக சொன்ன விஷயங்கள்

நான் கொஞ்சம் யோசித்தேன். இதை தவிற, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல இடங்களில் சிவ சிவ”பிரயோகப் பட்டு இருக்கலாம். உங்களுக்கும் பல இடங்கள் தோன்றலாம். எனக்கு தோன்றிய சில

1)  திரௌபதி மான பங்கப் படுத்தப்பட்ட போது

2)  கர்ணன் அடிபட்டு குற்றுயிரும், குலையுயிரும் ஆக இருக்கும்போது, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ! கர்ணா ..... என்று பாடிக்கொண்டே “உன் தர்மத்தை தானம் பண்ணு” என்று கிருஷ்ணர் கேட்பாரே – அப்போது

3)  இறப்பே கிடையாது, நான் எப்போது இறப்பேன் என்று நான் தான் முடிவு செய்வேன் என்று ஒரு வரம் பெற்ற பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் போது, அந்த வலியிலும், நமக்குக் கொடுத்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4)  ராமாயணத்தில் பல இடங்களில்

5)  எல்லாவற்றிற்க்கும் மேலாக, அரிச்சந்திரன் கதைதான். வஷிஸ்டருக்கும், விஷ்வாமித்தருக்கும் நடந்த போட்டியில், பெரிய ராஜாவாக இருந்த ஹரிச்சந்த்ரனை, பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று கங்கணம் காட்டிக்கொண்டு, இந்த விஸ்வாமித்ரர் அவனை படுத்திய பாடு, ராஜாவை, கடைசியில், சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்ய வைத்து, இறந்து போன மகனையே, தன் மகன் என்று தெரியாமல், மனைவியை பிரிந்து பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா.

இப்பவும் காசிக்குப் போய், அந்த “ஹரீஷ்சந்திர காட்” என்ற இடத்திற்க்கு போய் நின்று ஒரு நிமிடம் அரிச்சந்திரனை, நினைத்துப் பார்த்தால், கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.

முடிவில், மும்மூர்த்த்திகளும் அரிச்சந்திரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க- “வஷிஸ்டர் தான் ஜெயித்து விட்டோம் என்று, விஷ்வாமித்ரரை “அவமதிக்கக் கூடாது” என்று ஒரு வரம் கேட்டார் பாருங்கள்- அதுதான் எனக்கு சிவ சிவ.

நானாக இருந்தால், மினிமம், விஷ்வாமித்ரரை “ணங்” என்று ஒரு குட்டாவது குட்டி இருப்பேன்.

நிகழ் காலத்தில், நம்பி நாராயணன் உண்மைக் கதை கூட எனக்கு சிவ சிவ தான்.

 

 

Monday, 4 July 2022

ஆனந்த நடன பிரகாஸம்.......

 ஆனித் திருமஞ்சனம் - 2

இன்று ஆனித் திருமஞ்சனம், சிதம்பரம் தேர். கொஞ்சம் நடராஜர் பாடல்களை அலசுவோம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றி நிறைய பேர் பாட்டு எழுதி இருக்கிறார்கள்.  எனக்கு என்னவோ மத்த கோவிலை விட, சிதம்பரத்தில் தான் நிறைய பேர் நிறைய பாட்டுகள் எழுதி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தவிர, தேவாரம், நடராஜர் பத்து போன்ற பல.

கோபால கிருஷ்ண பாரதி, மாரி முத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன், பாப விநாச முதலியார் போன்ற பலர்- (நான் தமிழ் பாடல்களை மட்டும் சொல்கிறேன்.)

இவர்கள் மூன்று விதமான ரசனையுடன்” பாடல்களைக் கொடுத்து இருக்கிறார்கள்:

முதல் வகை - ஸ்வாமியின் வர்ணனை மற்றும் அடியார்களின் பெருமை

இரண்டாம் வகை- கேலியும், நையாண்டியுமாக – உரிமையுடன் பாடிய பாடல்கள்.

கொஞ்சம் கடுமையாக- மானிடர்களை,  மிரட்டும் தொனியில..

முதலாவது:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. எல்லா வரிகளின் முடிவில் “தூக்கி என்பதால் கூட இருக்கலாம்”

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

ஆரம்பத்தில் பல்லவியில், “வேலைத்தூக்கும் பிள்ளை, தனைப் பெற்ற தெய்வமே” என்று முருகனையும் கூப்பிடுகிறார்.

காலைத் தூக்கி, பாட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி

திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க

நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று அய்யன் ஸ்ருதியும் தாளமும் தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.

இதே மாதிரி, பாபநாசம் சிவன் பாட்டு ஒன்று இருக்கிறது

முதல் சரணம்

“மானும் மழுவும் பிஞ்சு, மதியும் நதியும் தவழ்

செவ்வானம் நிகர் சடையாட, இள நாகை தழுவும்

மதி முகமும் திரு விழி அழகுமாய் – (ஞான சபை)

இரண்டாவது சரணம்:\

நேமியுடன் முழங்காழி அணி, சாரங்கபாணி மிருதங்கமும்,

நி ச த நி ப ம ரி க ம ரி ஸ்வர நாரதர் வீணையும்.

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

சேரன், சோழன், ஹிரண்யவர்மன் கோபுரமும்

சூர வீரப்பன் செய்த திரு மதில்களும்

பாருலகும் போற்றுகின்ற பஞ்சாக்ஷர படிகளும்,

ஹாரங்கள் சூழ்ந்த திரு ஆயிரங்கால் மண்டபமும்

இன்னும் இரண்டு அற்புத சரணங்கள் உண்டு இந்தப் பாட்டில்

“சேவிக்க வேண்டுமையா” என்ற இன்னொரு ஆந்தோளிகா” ராக கீர்த்தனையில், கடைசி சரணம் இப்படி முடிகிறது.

“நல்ல திருவிழா ஆனித் தேரும், நாடெங்குமே புகழ் நற்கோபுரம் நான்கும்,

தில்லை மூவாயிரவர் வளர் வீதியும், திருமஞ்சனமும், மார்கழி தரிசனமும்”

இன்னொரு இடத்தில், இதே பாடலில் - சிற்றம்பலம் என்னும் பேரம்பலத்தானை” என்கிறார்

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம், சிவகாமி தரிசனம்- என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.

சிதம்பரத்தில் உற்சவ நாள், கிழமையெல்லாம் சரியாகச் சொல்கிறார் கோ.கி.பாரதி.

நாடும் தைப்பூரண பூசத்திலே, தில்லை நாயகனார் குரு வாரத்திலே-மன்றுள் – ஆடிய பாதத்தைக் காணாரே, ஆனந்தம் பூணாரே” என்கிறார் கோ.கி.பாரதி.

இவர்களெல்லாம், தில்லை அம்பலத்தானை அணு அணுவாக ரசித்து இருக்கிறார்கள்.  அந்த இன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், நமக்கும் பாடல்கள் மூலம் வாரி வழங்கி இருக்கிறார்கள். !!

நமக்கு மிகவும் தெரிந்த = “கிருபாநிதி, இவரை போல கிடைக்குமோ” பாடல்

இரண்டாவது

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-

“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்

அதனை சொன்னேனா.

ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..

தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா

பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா

எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)

சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா

இப்படிப் போகிறது, .....

பாப விநாச முதலியாரின், மிகவும் பிரசித்தமான – நடமாடித் திரிந்த+ பாடலில் இப்படி வரியின் அர்த்தம் இப்படிப் போகிறது.

“திருநீறைப் பூசியதால் வாதம் வந்துடுத்தா ?

மார்கண்டேயனுக்காக, யமனை உதைத்ததில், கால் சுளுக்கிண்டுடுத்தா..!

சுந்தரருக்காக, பரவை நாச்சியாருக்காக, தூது நடந்தாயே – அதனாலோ,   . என்று சொல்லிவிட்டு

 

“நான் பண்ணின பாபம், இப்படியெல்லாம் எனக்கு மனக் கஷ்டம் தர வேண்டும் என்று காலை முடமாக்கிக் கொண்டாயோ” – என்கிறார்.

 

மூன்றாவது:

அழியும் இந்த உடலை, மெய் என்று நினைக்காதே. உடம்பை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே” என்று இருக்காமல், உடனே இறைவனை நினைத்துக் கொண்டே இரு.

 

 

பாபநாசம் சிவன் பற்றி கேட்கவே வேண்டாம்.

“வையத்திலே கருப்பையுள் கிடந்துள்ளம், நையப் பிறவாமல்

அய்யன் திரு நடம் காண வேண்டாமோ.

ஓடைச் சடலம் ஒடுங்க் வெற்றுடம்பு, கூட்டினில் இருந்து உயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ”

என்று, கிறு கிறுக்க வைக்கிறார்.

கோபால கிருஷ்ண பாரதி – இப்படிச் சொல்கிறார்:

“கொட்டமடிக்கும் புலந்தொழில் நீக்கி

கோடி காலம் செய்த பாவங்கள் போக்கி

வெட்ட வெளியிலே, நெட்டென தூக்கி,

வேதம் பணிந்திட தென் முகம் நோக்கி (ஆடிய பாதத்தை)

இல்லோரு பாடலில் – இருவினைப் பிணிகளை கருவறுத்திடுகிறேன்-பயப்படாதே !!! (வருவாரோ)

என்கிறார்

இந்த மூன்றாவது விஷயத்தில்.... சிதம்பரம் இல்லாது, அருணகிரிநாதரும் பல பாடகளின், நம் பேதமையை வெளிப்படுத்துகிறார்:

அவர் செவிட்டில் அறைந்து போல பல பாடல்களில் சொல்லி இருக்கிறார். ஒரே ஒரு உதாரணம்:

சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் - “சுருதி முடி” என்று “ஹரி காம்போதியில்” ஒரு திருப்புகழ் பாடி இருக்கிறார். அது யூ ட்யூப் ல் இன்று கூட பார்க்கலாம். அதில் அவர் முதல் சரணத்தையும், கடைசி சரணத்தையும் பாடி முடித்திருப்பார். நடுவில் ஒரு சரணம் இப்படிப் போகிறது

 

“கலகமிடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் – என

உழலு மாயஞ் செனித்த குகையே உறுதி – கருது அசுழம் ஆம்

இத்த மட்டை தனை ஆள உனதருள் தாராய்”

“அசுழம் – நாய்” – மட்டை – மூடன்

உற்றுப் படித்தால், அர்த்தம் புரியும். “பகீர்” என்று இருக்கும்

இதற்கெல்லாம் நாம் அசறுவோமா என்ன.  அதுவும் கலி காலத்தில்.

ஆனால் இந்த ஸ்மரணை இருந்தாலே போதும்

Wednesday, 29 June 2022

காலைத் தூக்கி நின்று....

 

ஆனித் திருமஞ்சனம் அடுத்த சில நாட்களில் வர இருக்க, கொஞ்சம் நடராஜர் தியானம்:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

சிதம்பரேசனைப் பற்றிப் பாடிய பல பாடல்கள் அற்புதம். 

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம் என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.

மாரி முத்தாப் பிள்ளையின் இந்தப்  பாடலில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உண்டு: 

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

பிறகு, கண்ணை மூடிக் கொண்டு ஒரு 5 நிமிடம் இந்த இன்ப நிலையை அனுபவிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பல்லவியில், சோமாஸ்கந்தராக முருகனையும் கூப்பிடுகிறார்.

'காலைத் தூக்கி' பட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி

திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

கண்ணை மூடிக்கொண்டு, இந்த வரிகளை கேளுங்கள். உங்களுக்கு சிவனின் உருவம் மனதில் படியும். மேற் சொன்ன வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க

நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று அய்யனும் ஸ்ருதியும் தாளமும் தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.

ஆனால், எனக்கு சஞ்சய் சுப்ரமணியம் ஒரு தரம் இந்தப் பாட்டை பாட, அதில் விழுந்தேன். மகாராஜபுரம் சந்தானத்திற்க்குப் பிறகு, நான் பாடலை கற்றுக் கொண்டேன் என்றால் அது சஞ்சய் பாடிதான்.  அதுவும் யதுகுல காம்போதி. ..ம். தனிச்சுவை. ராமரை, “ஹெச்சரிக்க கா ராமா” என்று கூப்பிட்ட ராகம்.

இந்தப் பாட்டெல்லாம், கோவிலுக்குப் போக முடியாமல், வீட்டில் இருப்பவர்களுக்கு, சிவ சாயுஜ்யம் கிடைப்பதற்காக, இறையருள் பெற்ற, கோபால கிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, பாபநாசம் சிவன், போன்றவர்கள் போட்ட ராஜா பாட்டை.

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-

“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்

அதனை சொன்னேனா.

ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..

தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா

பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா

எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)

சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா

இப்படிப் போகிறது, .....

“நிறைய பேர் கோவிலுக்குப் போயே ஆக வேண்டுமா  ? என்று கேட்கிறார்கள்”

நாவுக்கரசர் திருமறைக்காடு பதிகத்தில் இப்படிப் பாடுகிறார் “விரதமெல்லாம் மாண்ட மனத்தான் மனத்தார் தன்னை”.

அதனால் கோவிலுக்குப் போவது என்பது ஒரு விரதம், மெதுவாக அதிலிருந்து விலகி,

“சும்மா இரு சொல் அற – என்றலுமே

அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே”

என்று கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் பாடுபவதைப் போல்.

இருக்கவேண்டும்

அது எப்படி முடியும்  ?

வீட்டில் உட்கார்ந்து இது போன்ற பாடல்களை கேட்டு, உள் வாங்கி ரசித்தாலே போதும். கோவிலுக்குப் போகவேண்டும் என்ற அவசியமே இல்லை

தியாகராஜ ஸ்வாமி, ராமனை நினைத்துக் கொண்டே அற்புதமான கிருதிகளை, கண்ணீர் மல்க பாடினார். அவர் திருவையாறிலேயே இருக்கும் தர்ம சம்வர்தினி கோவிலுக்குக் கூட எத்தனை முறை சென்றிருப்பார் எனத் தெரியாது.  இவரின் பக்திக்கு ராம பிரான், தன் புடை சூழ அவர் வீட்டுக்கு வந்தார்

ராமாயணத்தில் சபரி எந்த கோவிலுக்குப் போனாள். கீழ் ஜாதியில் பிறந்து, பூ பறித்து கொடுத்து, யாக சாலையை சுற்றி கூட்டி, மெழுகி, மற்ற நேரங்களில் ராம நாமாவைத்தான் சொன்னாள். எது பறித்தாலும், அதை ராமனுக்கே அர்ப்பணம் பண்ணினாள். எல்லா முனிவர்களும் ஒன்றாக, மேலோகம் செல்லும்போது, சபரியை அழைத்துக் கொண்டு போகவில்லை,

கண்ணீர் மல்க கேட்கிறாள். “நான் என்ன பாவம் செய்தேன், என்னை ஏன் அழைத்துக் கொண்டு போக மாட்டீர்கள்” என்று. அதற்க்கு அவர்கள் சொல்கிறார்கள். நாங்களாவது ஸ்வர்கத்தை, அவரின் பாத கமலங்களில் ஐக்கியமாக சென்று கொண்டு இருக்கிறோம். எந்த பாதத்தை நோக்கி நாங்கள் போகிறோமோ, அந்தப் பாதம் உன்னை தேடி வரும்”.

அப்படியே ராம லக்ஷ்மணர்கள், சபாரியை தேடி வருகிறார்கள்.

நான் துபாயில் இருக்கும்போது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், குரு, வெங்கி அண்ணா அவர்களின் தலைமையில் பண்ணுவோம். அந்த ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம். கண்ணை மூடிக் கொண்டு, அம்பாள் பிரார்தனை. அற்புதமான தருணங்கள்.

இது ஒரு சக்ர வியூகம், வெளியே வருவது கஷ்டம். அபிமன்யு க்கு வேறு விதமான முடிவு. நமக்கு வேறு விதமான அனுபவம்.

இப்படியே பகவத் ஸ்மரணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.

 

Sunday, 26 June 2022

திருப்பைஞ்சீலி

 

திருச்சியில் மேற் படிப்பு படித்தும், 6 வருடங்கள் இருந்த போதிலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல கோவில்களைப் பார்ததில்லை.  வயதானபிறகு, கொஞ்சம் புத்தி வந்து, ஒரு பிரார்த்தனைக்காக, திருப்பைஞ்சீலி என்ற ஒரு க்ஷேத்ரத்திர்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் பெருமமையைச் சொல்லும்போது “அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே” என்கிறார் திருநாவுக்கரசர்

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இப்பவும் வாழை மரத்தையோ, கன்றையோ கொடுத்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தல விருட்சம் என்போம். மருந்துக்கு ஒரு மரம் இருக்கும்.  இந்த இடம் வளமாக இருந்தது என்போம் ! இப்போது, கட்டிடங்கள், மக்கள், என்று அங்கலாய்ப்போம் !!

ஆனால் இதற்க்கு மாறாக, மண்ணச்ச்நல்லூரில் இருந்து, திருப்பைஞ்சீலி செல்லும் அந்த 1 கிலோமீட்டர் முழுவதும் வாழை மரங்கள் தான். ஒரு 10 தோப்பு பார்த்திருப்பேன். ஒரு 5000 மரங்கள. பச்சை பசேலென்று, குலை தள்ளி எத்தனை மரங்கள். இப்படி ஒரு இயற்க்கை சூழலை, திருச்சிக்கு மிக அருகே எதிர்பார்க்க வில்லை.

தாதாசார்யார் தோட்டமாக இருந்து இப்போது கட்டிடங்களாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்கத்தில் இப்படியும் ஒரு இடம் !!! 

ஸ்தல புராணத்தில், நாவுக்கரசர்,  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரரையும், தாய்மானஸ்வாமியையும், தரிசனம் செய்து விட்டு, நடந்து வர, களைப்பால் பசியெடுத்து, ஒரு மரத்தின் கீழ் அமர, வயோதிக வேடத்தில், சிவ பெருமான், கட்டுச் சோறு, கொண்டு கொடுத்தாராம். அதை சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஞீலீஸ்வரர் கோவிலைப் பற்றி, வினவ, அவரை அழைத்துக் கொண்டு சென்று, ரிஷபரூடராக, ஊமையம்மையுடன் காக்ஷி கொடுத்தாராம்.

இப்பவும் இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, இடது புறத்தில், சிவன், நாவுக்கரசருக்கு, ஒரு மூட்டையில் சாப்பாடு கொடுப்பதுபோல், விக்ரகம், அதன் எதிரில், பெரிய நந்தி தான் ஆச்சர்யம். ஏனெனில் உள்ளே இருக்கும் ஞீலீஸ்வரருக்குக் கூட அவ்வளவு பெரிய நந்தி இல்லை. பக்தனோடு சேர்ந்து இருக்கும் ஸ்வாமிக்கு “ஸ்பெஷல்” நந்தி.

மூன்றாம் திருமுறை- தேவாரத்தில்

“தொத்தின தோள் முடியுடைய வன்றலை பத்தினை நெறித்த பைஞ்சீலி மேவலான்” என்கிறார்.

““கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்” என்று அர்த்தம்.

ராமன் ராவணனை அழிப்பதற்க்கு முன்பு, சிவனும், கொஞ்சம் பயம் காட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில், நாவுக்கரசர், பைஞ்சீலியில், தொண்டு செய்து காலத்தைக் கழித்ததை, எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்:  !!!!

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி

மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து

மெய்ஞ்ஞீலிர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள்பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்   5.1.31

 இதை ஒரு முறை, தவறில்லாமல் பார்த்துப் படித்தாலே, அவருக்கு, சிவபெருமானை விட்டு, இன்னொரு மூட்டை சாப்பாடு கொடுக்கச் சொல்லலாம்  !!!!!

 சிவ பெருமான், நாவுக்கரசரை, கூட்டிக்கொண்டு போய் இந்தக் கோவிலில் சென்று மறைந்து போக, உள்ளம் உருகுகிறார். தன்னுடன் வந்து நீயா ?  என்று

 “அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து, விழுந்து விழுந்து, கண்ணீர் மாரி பயில் வித்தார்” என்கிறார்.

 திருப்பள்ளி எழுச்சியில் – “தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒரு பால்” (பால் என்றால் புறம்) என்கிறார் மணி வாசகப் பெருமான். கடவுளை நேரில் பார்க்காத பக்தனே இப்படி துவளும்போது, கூட இருந்தவர்- அந்த பெருமான் என்று அறிந்த பின் உள்ளம் எவ்வளவு பூரிக்கும் !!!

 என்ன ஒரு அற்புதமான் தமிழ். அந்தக் காலத்தில் எப்படி தமிழின் மூலம் இறையை அனுபவித்து இருக்கிறார்கள் ?

 விசாலாக்ஷி தாயார் சன்னதி தனியே இருக்கிறது. இதிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு. இங்கே  நீல நெடுங் கண் நாயகி என்ற பெயரிலும் ஒரு அம்பாள் விக்ரஹம் இங்கு உண்டு.  கும்பகோணம் மங்களாம்ம்பாள் மாதிரி கொஞ்சம் பெரிய விக்ரஹமாக இருக்கும்,  விசாலக்ஷி க்குத் தான் அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. நீல.நாயகிக்குக் கிடையாது. ஆனால் த்வஜஸ்தம்பம் நீல. நாயகிக்குத்தான் இருக்கிறது.

இந்த ஆச்சர்யத்தை, அங்கு இருத ஷண்முக குருக்களிடம் கேட்டபோது, அவர் “விசாலக்ஷி” அம்மன் சற்று “பின்னப்பட்டு விட்ட படியால், தோஷ நிவர்த்திக்காக, நீல நெடுங்கண் நாயகியை பிரதிஷ்டை பண்ணினோம்”.  ஆனால் புராதானமாக இருக்கிற அம்பாளைத் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆகமப்படி, பூஜை நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

அடுத்தது, நாம் இந்த்க் கோவிலில் முக்கியமான எமன் சன்னதிக்கு வருவோம். திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்காக எமன் சம்ஹாரம் பண்ணப் பட்ட பிறகு, அழிக்கும் தொழில் ஸ்தம்பித்துப் போக, ப்ரம்மா, விஷ்ணு எல்லோரும் சென்று முறையிட, திருப்பைஞ்சீலி வந்து பல ரிஷிகள், கடும் தவம் புரிய, மனமிரங்கிசிவன், எம தர்மராஜரை உயிர்பித்த இடம் இது.

இது பூமி மட்டத்தின் கீழே இருக்கிறது, குடவரை கோவில் போல். பூமியில் இருந்து உயிர்பித்தார் என்பதை காட்டுவது போலே. சோமாஸ்கந்தர் என்று சொல்வது போல், தாக்ஷயானி யோடு, மிருத்யுஞ்சய மூர்த்தியும் மடியில் முருகனும், கீழே காலுக்கடியில் எமன், - ஸ்வ்யும்பாக தோன்றிய உருவம்.

சட்டென்று, ஸ்வயம்புவாகத் தோன்றியது, என்றால் எனக்கு உடனே ஞாபகம் வருவது, வேதாரண்யத்தில், திருமறைக்காடர் என்று போற்றப்படும் சிவனின்  பின்னால், திருமணக் கோலத்தில், பார்வதி சிவனோடு அற்புதமாகக் காட்சி அளிப்பார். இது அகத்தியருக்காக காண்பிக்கப்பட்ட கல்யாண கோலம். அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி.

இங்கு திருக்கடையூரில் சென்று 60 வது 80 வது கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள், இங்கு செய்து கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு, இப்படி பல பரிகாரங்கள் இந்தக் கோவிலில் செய்து வருகிறார்கள்.

நவக்ரஹத்துக்கு சன்னதி இல்லை, எமன் சனீஸ்வரருக்கு அதிபதி என்பதால். ஆனால் நவக்ரஹம், 9 படிகளாக இருக்கிறது, நாம் இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும்.

 வேறு கோவில்:

கும்பகோணம் செல்லும் வழியில், திருக்கோடீஸ்வரர் என்று ஒரு ஸ்தலமும் உண்டு. அங்கே ஒரு பக்தனுக்கு இரங்கி, சிவன் கட்டளையிட, எமன் இந்தக் கோவிலுக்கு வருபவர்களை எமன் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் -  என்பது.

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஸ்ரீ வாஞ்சியத்திலும் எமனுக்கு ஒரு சன்னதி  உண்டு.

அற்புதமான கோவில், அழகான தரிசனம், அமைதியானது மனசு.