Thursday 27 July 2017

தரங்கிணி கச்சேரி – சுமித்ரா வாசுதேவ்- Music Academy Mini Hall - 17-7-2017


நாராயண தீர்த்தரின் தரங்கப் பாடல்கள்.

பக்க வாத்யம்-

வயலின் – நிஷாந்த் சந்திரன்

மிருதங்கம் – மேலக்காவேரி பாலாஜி


MUSIC ACADEMY  ஒவ்வொரு வருடமும், ஒரு நாள், சுமார் 2 மணி நேரம், (மாலை 6-8)  ஒவ்வொரு வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகளை, உதாரணமாக, புரந்தரதாசர் கிருதிகள், சதாசிவ ப்ரஹ்மேந்த்ராள் கிருதிகள், அண்ணாமச்சார்யா கிருதிகள், கோபால கிருஷ்ண பாரதி கிருதிகள் என்று பிரித்து, ஒரு நல்ல பாடகர்களைக் கொண்டு பாட வைக்கிறார்கள்.

நேற்று, (17-7-17) தரங்கம் என்பதால், எனக்கு தரங்க அலையின் கிருஷ்ண அனுபவத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. 

சாதாரணமாக சொல்லுவார்கள். “கடல் அலைகள், யானை- இவைகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அலுக்காது”. என்று. அது போல், கிருஷ்ண லீலை என்ற, நாராயண தீர்த்தரின், அலைகள், கேட்க, பாட, அலுக்கவே அலுக்காது.

அதற்கு மனது தோயவேண்டும்.

அருணாச்சல அக்ஷர மணிமாலையில், ரமண பகவான் சொல்கிறார்

“தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் 
தோயவே அருள் என் அருணாசலா”

தாயுமானவர் சொல்வது போல், “உள்ளே ஆனந்த வெள்ளம்” பாயவேண்டும்

தரங்கம், நமக்காக பாடப்பட்டது. நாராயண தீர்த்தர், வரகூரில், வெங்கடேசப் பெருமாளுக்கு முன்பு உட்கார்ந்து பாடி இருந்தால் கூட, பல பாடல்கள், நமக்காக, நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பாடப்பட்டது.

உதாரணமாக- பயத்தைப் போக்குவதற்கு மட்டுமல்ல, அந்த பயத்திற்கு காரணாமாக இருக்கிற, “மூல வஸ்துவை” வேரோடு களைந்து ஏறிய, அவர் இயற்றிய பாட்டுதான்  ஜெய ஜெய ஸ்ரீனிவாசா”

எப்போதும் எனக்கு க்ஷேமத்தைச் செய்வீராக- என்று சொல்லும் “க்ஷேமம் குரு கோபாலா”.  இது தினமும் வீட்டில் பாடலாம். பாடும்போது “எனக்கு” என்பது பாடுபவரைக் குறிக்கும்.

என் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர் –என்று “பூரய மம காமம்” என்ற பாட்டு இருக்கிறது

குழந்தை பிறப்பதற்கு, “ஆயாஹி மாதவ” என்ற பாட்டு. இப்பொழுதும், இந்த பாட்டை பாடி, தொட்டில் வாங்கித் தருகிறேன் என்று வேண்டிக்கொண்டு, குழந்தை பெற்றவர்கள் இருக்கின்றனர். என் குடும்பத்திலேயே உண்டு.

இப்போது மெயின் அயிட்டத்திற்கு வருவோம்:

சுமித்ரா  வாசுதேவ் அவர்களைப் பற்றி, சங்கீத ரசிகர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், அவரைப் பற்றி ஜாஸ்தி இங்கு எழுதப் போவதில்லை.  ஸ்ரீமதி, வேதவல்லி அவர்களின் சிஷ்யை என்ற ஒரு “பருக்கை” போதும் அவர்களின் வித்வத்தைப் (ஒரு பானை சோறு) பற்றிச் சொல்ல.

நான் அரங்கிற்குள் உள்ளே நுழையும்போது, தம்புராவை சரி பார்த்துக்கொண்டிருந்தார். கச்சேரி ஆரம்பிக்கும் போது, அவர் “ஒவ்வொரு பாடல் ஆரம்பிப்பதற்கு முன், இந்த பாட்டு, கிருஷ்ணாவதாரத்தில் எந்த கட்டத்தில் வருகிறது, என்பதையும், தரங்கப் பாடலுக்கு முன் இருக்கும், ஸ்லோகத்தையும், சொல்லி, பாடலைப் பாடுகிறேன்” என்றார்.

இதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.  சாதாரணமாக தரங்கம் என்பது கச்சேரிகளில் கடைசியாகப் பாடும் பாடலாக அமைந்து விட்டது. மல்லாடி சகோதரர்கள், ஒரு அண்ணமாச்சர்யா, ஒரு தரங்கம் என்று “துக்கடாவாக” பாடுவார்கள். மற்ற பாடர்கள் “கோவர்தன கிரி தாரா, கோவிந்தா” என்ற ஒரு பாடலை, ஹிந்தோளத்தில் கடைசியாக பாடி ஓட்டி விடுவார்கள். விஜய் சிவா எப்போதாவது, மெயின் ஐட்டமாக, கல்யாணி ராகம் பாடி, “கதய கதய மாதவம், ஹே ராதே....” என்ற ஒரு தரங்கத்தைப் பாடுவார்.

தரங்கம் பாடுவதே சந்தேஹமாக இருக்கும் போது, ஸ்லோகம் எங்கே சொல்லி பாட்டு பாடுவது,- என்ற நிலையில், ஸ்லோகம் சொல்லி பாடியது, மிகவும் மகிழ்சியாக இருந்தது.

போன இரண்டு வருடங்களாக, தரங்கக் கச்சேரி, இதே அரங்கில்  கேட்டு வருகின்றேன், போன தடவை, நிஷா ராஜகோபாலும் சரி, அதற்கு முந்தின வருடம் பாடிய காயத்ரி வெங்கட்ராகவனும் சரி, ஸ்லோகம் பாடி தரங்கம் பாடவில்லை.

இப்படி பேச்சு-ஸ்லோகம்-பாடல்" என்று அமைத்துக் கொள்வதில் ஒரு சிரமம் உண்டு. பாடல்களையும் பாட வேண்டும், வயலினுக்கும் தனி விடவேண்டும், ம்ருதங்கத்துக்கும் தனி விடவேண்டும்.  கொஞ்சம் planning வேண்டும். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தரங்கத்தில் எல்லா சரணமும் பாடினால் இன்னமும் நன்றாக இருக்கும். ஆனால் இது போல கச்சேரிகளில், முதல் casuality சரணம் தான். அது தான் நடந்தது.  இரண்டு மணி நேரத்தில் எல்லாம் சாத்தியமாகுமா, ஆயிற்றா ?  – மேலே பார்ப்போம்.

இதில் வரும் பாடல்களில், பாடகர் சொன்ன கருத்துகள், பாடிய விதம், இவைகளைத் தவிர  என் கருத்தையும் சொல்லி இருக்கிறேன்.

முதலில் சம்பிரதாயமாக, கணபதி கிருதியான, “ஜெய ஜெய ஸ்வாமின்,” பாடலை நாட்டை ராகத்தில் பாடினார்.  அதில் முடிக்கும்போது, அருமையான ஸ்வரக் கோர்வையை கொடுத்து ஒரு அழகான “அருகம் புல்” மாலையாகப் புள்ளையாருக்குப் போட்டார்.

தரங்கம் மேல் ஒரு “தீராக் காதல்” வருவதற்கு முன், பெங்களூரில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, சாம்ராஜ்பேட் என்ற ஒரு இடத்தில, T.V.சங்கர நாராயணன் அவர்கள், இந்தப் பாடலை பாடி என்னை திக்கு முக்காடச் செய்தார். இதே ராகம், ஸ்வரம் “ஜெய ஜெய” இடத்தில தான். மதுரை மணியின் “பைத்தியமான” எனக்கு, TVS ன் அந்த அலட்டல்கள் ஒரு அதிசயமே இல்லை. இருப்பினும், என் மனதில் வடுவை ஏற்படுத்திய பாட்டு இது.

பிறகு பலர் பாடி கேட்க, ஒரு தரம், பெங்களூர் தரங்கிணி உற்சவம் பண்ணும்போது, வித்யாபூஷன் அவர்கள், இந்த பாடலை ஆரபி ராகத்தில் பாடினார்.

ஒரு முறை திருச்சி, கல்யாணராமன் உபன்யாசம் செய்ய வரகூர் வந்தபோது, இந்த பாடலில்- ஒரு வரியான “शेष भूषन शिव वारिधि चन्द्र” அதற்கு அருமையான விளக்கம் அளித்தார்.  “சிவபெருமான் என்ற சமுத்திரத்தில் உதித்த சந்திரனே. மேலும் “இதுபோல் கணபதியை யாரும் கொண்டாடவில்லை” என்றும் சொன்னார்

அதில் “சாம வேத கீத” என்ற ஒரு வரி வரும். சாம வேததிற்கே பெயர் போன பெரிய வேத விற்பன்னர்கள் பிறந்த வரகூரில், நாராயண தீர்த்தர் “நச்” என்று சாம வேதத்தை தன்னுடைய பாடலில் சேர்த்தது இன்னும் அழகு

இந்தப் பாடலை நாராயண தீர்த்தார், காவேரிக் கரையில் இருக்கும் பிள்ளையாரைப் பார்த்து பாடியிருக்கலாம். இரட்டைப் பிள்ளையாரைப் பார்த்தும் பாடியிருக்கலாம். அனால் எந்தப் பிள்ளையார் என்பதை விட, அந்தப் பாடலின் பொருள் மிக அழகானது

மேலும் வரகூரை நெருங்கும்போது, சிவன் கோவிலுக்கு சற்று முன்பாக, மேலே சொன்ன இரட்டைப் பிள்ளையார் என்று ஒரு சிறிய கோவில் உண்டு.  அதில் மேலும் கீழுமாக இரண்டு பிள்ளையார் உண்டு. மாமனார் பிள்ளையார், மாப்பிள்ளை பிள்ளையார் என்று இவர்களை சொல்லுவது வழக்கம்.

வரகூர் வாசிகள், கிராமத்திற்கு உள்ளே போகும்போது, காரிலோ, வேறு வண்டியிலோ, உட்கார்ந்து கொண்டே, இந்தக் கோவிலைப் பார்த்து “கும்பிடு” போட்டுக் கொண்டு கிராமத்திற்கு உள்ளே போய் விடுவார்கள்.

என்னைக் கேட்டால், திரும்பி வீட்டிற்கு போய் விட்டு, பெருமாளைப் பார்பதற்கு முன் நேரே “இரட்டைப் பிள்ளையாரைப்” பார்த்துவிட்டு, சிவன் கோவிலுக்குக் வந்து, ஆனந்தவல்லியையும், மகா கைலாச நாதரையும் பார்த்து விட்டு, பிறகுதான் பெருமாளைப் பார்க்க வேண்டும்.

அப்பா சொல்லுவார். “வரகூரில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லவேண்டும் என்றால், சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து, வெளிப் பிராகாரத்தில் நமஸ்காரம் செய்யும் போதுதான் ஆரம்பிக்க வேண்டும்” என்பார்

இரண்டாவதாக, “மங்களாலய மாமவ தேவ” என்ற கேதார கௌள ராகத்தில் அமைந்த பாடலை எடுத்துக் கொண்டார்.  இந்த ராகம் மிக அழகு, “அந்த ராம சௌந்தர்யம், என்னால்” என்று ஒரு அருணாசல கவி ராயர் பாடு ஒன்று உண்டு. அதை ஒரு முறை மகாராஜபுரம் சந்தானம் பாடிக் கேட்டு, அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. ராமரின் சௌந்தர்யத்தை, ஆஞ்சநேயர், சீதைக்கு, அசோக வனத்தில் எடுத்துச் சொல்வதாக அமைந்த பாட்டு இது.

மிகவும் நேர்த்தியாக அமைந்த தரங்கம். என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்பதால் ஒரு ஈர்ப்பு உண்டு. . இந்தப் பாடலை ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அவர்கள், “தீர்த்தர் முதலில் எழுதிய பாட்டு இது தான் என்றும், பகவானே, சின்னக் குழந்தையாக வந்து முதல் வரியான “மங்கலாலய: என்ற வரியை எடுத்துக் கொடுத்தார்” என்றும் சொல்வார்.

மேலும், “குரு பக்த சிவ நாராயண தீர்த்த” என்று முடியும் இந்தப் பாடலில், நாராயண தீர்த்தர் தன் குருவான, சிவ நாராயண தீர்த்தரை மனதில் வைத்து எழுதிய பாடல் என்பது இன்னொரு பெருமை.

பாடகர், இந்தப் பாடலை பாடுவதற்கு முன் விளக்கம் சொல்லும்போது, “கிருஷ்ணன், தேவகி, வசுதேவருக்கு, குழந்தையாக பிறப்பதற்கு முன்பு, விஷ்ணுவாக, “சங்கு சக்ர கதா தாரியாக” முதலில் தன்னைக் காண்பித்து விட்டு, பிறகு குழந்தையாக மாறினார்”- என்றார்.  “அந்த பாவத்தை. மனதில் வைத்து தீர்த்தர் இந்தப் பாடலை இயற்றினார்” – என்று சொன்னார்.

இதில் “மங்களாலய மாமவ தேவ” என்ற இடத்தில, பாடகர் நிரவல் எடுத்தார். பிறகு ஸ்வரமும் பாடினார்.

மூன்றவதாக. முகாரி ராகம் ஆலாபனை ஆரம்பித்தார். அழகாக அமைந்த ஆலாபனை இது. நல்ல குரு பரம்பரையில் அமைந்த ஒரு பாடகரின் நேர்த்தியான வெளிப்பாடு.

“கிருஷ்ணம் கலய சகி சுந்தரம்  என்ற இரண்டாவது தரங்கத்தில் உள்ள பாடல். ஒரு கோபிகை இன்னொரு கோபிகையைப் பார்த்து, கிருஷ்ணனின் பெருமைகளைப் பற்றிச் சொல்லும் பாடல்.

இந்தப் பாடலுக்கும் முன்பு சொல்லப்படும் गध्यं என்ற சூர்ணிகையில், கிருஷ்ணனை चोर शिखामने-रागनमं गीयते என்ற ஒரு பதம் வருகிறது. இதற்கு அர்த்தம் “திருடர்களுக்கெல்லாம் சிகாமணியாக இருக்கும் அந்த கிருஷ்ண பகவானின் வருகை பாடப்படுகிறது”  நாராயண தீர்த்தரின் Poetic beauty இது.  பாடகர் இதை மேற்கோள் காட்டி, அற்புதமாக பாடலைப் பாடினார்.

सदा बाल – என்று ஒவ்வொரு சரணத்திலும் வரும் பாடல் இது. கோபிகைகள் சொல்லும்போது, ...... இந்தக் கிருஷ்ணனை த்யானம் செய்..... என்கிறார்கள்............ எந்தக் கிருஷ்ணனை ???

1)      உலகப் பற்று இல்லாதவன்

2)      எண்ணற்ற அடியார்களுக்கு நன்மை புரிந்தவன்

3)      அஞ்சா நெஞ்சம் படைத்தவன்

4)      மிக அழகு பொருந்தியவன்  என்று பல உவமானங்கள் வருகின்றன.

முடிக்கும்போது

ஸ்ரீ நாராயண தீர்தருக்கு ஒப்பு உயர்வற்ற மோக்ஷ புருஷார்த்தமாக இருப்பவனை................ என்று

இந்தப் பாடலில், சம்ஸ்கருத பதங்களைப் பார்க்கும் பொது, நாராயண தீர்த்தரின் ஆளுமை புரியும்.  அவர் எழுதிய வரிகளை, கொஞ்சம் அனுபவிப்போம்:

கிருஷ்ணம், கதவிஷய த்ருஷ்ணம், ஜகத்ப்ரப விஷ்ணும்

சுராரி கன ஜிஷ்ணும்- ஸதா பால

தீரம், பவ ஜலதி பாரம், சகல வேத சாரம், சமஸ்த யோகி தாரம்-சதா பால

அர்த்தம், ஷிதிலீக்ருதா நர்த்தம், ஸ்ரீ நாராயண தீர்த்தம், பரம புருஷார்த்தம் –சதா பால.

எப்படி, முடிக்கிறார் பாருங்கள்.....

(எனக்கு கண்ணதாசனின் சில பாடல்கள், நினைவுக்கு வருகிறது. உதாரணமாக “அத்தான், என்னத்தான்” (பாவ மன்னிப்பு), (எல்லா வார்த்தைகளும் “தான்” இல் முடியும் அன்பு நடமாடும் கலை கூடமே  (எல்லா வரிகளும் “மே: யில் முடியும்))

இந்தத தரங்கப் பாடலை, முதலில், காலேஜ் படிக்கும்போது, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் L P (LONG PLAY) ரெகார்டில், பாடியதை கேட்டிருக்கிறேன். அவரின் வசீகரக் குரலில், மயங்கிய காலம் அது

நானகாவதாக, ஆஹிரி ராக ஆலாபனை ஆரம்பித்தார். சம்ப்ரதயாமாக பாடப்படும். 12 வது பகுதியில் உள்ள, “வீக்ஷேகம் கதா, கோபாலமூர்த்திம்” என்ற பாடலைப் பாடினார்.

ருக்மிணி, சிஷுபாலனை திருமணம் செய்ய மறுத்து, கிருஷ்ணனை மணம் செய்ய ஆசைப்படும் பாடல் இது.

சாக்ஷான் மதன கோடி, சௌந்தர்யா ரச பேடிம்” என்ற அனு பல்லவியில் அர்த்தம் “கோடி மன்மதனின் அழகுக்கு ஒப்பான அழகு உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவத்தை எப்போது காண்பேன்” என்று ருக்மிணி உருகுவது போல்.

இந்தப் பாடலும், “க்ஷேமம் குரு கோபாலா” என்ற பாடலும் நாராயண தீர்த்தரின் master piece என்று சொல்வேன்.  இதற்கு சமமான அழகுடன் வேறு பாடல் இருக்கிறதா என்று தெரியவில்லை

இந்தப் பாடலை பற்றி நான் ஒரு விஷயம் சொல்லியாகவே வேண்டும். எங்கள் வரகூரில், சுவாமி புறப்பாடு, கல்யாணம், உரியடி உத்சவம், எதாக இருந்தாலும், நாராயண தீர்த்தர், சொல்லி, எழுதிக் கொடுத்த அந்த :முறையில் தான் பாடப் பட்டு வருகிறது அதில் மாற்றமே இல்லை.  அதுவே இந்தக் கோவிலுக்கு ஒரு பெருமை. Sort of Not-Negotiable.

இந்தப் பாடல் சுவாமி புறப்பாடு முடிந்து, கருவறைக்கு வெளியே, உள்ள ஒரு சிறிய இடத்தில், சுவாமியை கொண்டு வைப்பதற்கு முன், பாடப் படும் பாடல் இது.  இதற்கு “ஏகாந்த சேவை” என்று பெயர். சுவாமி உள்ளே வந்தவுடன், வெளி கதவு தாளிடப்படும்.  ஸ்ரீ பாதம் தாங்கிகள் மறும் பாகவதர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய, ஒரு அற்புதமான காட்சி. அப்போது, சுவாமியை, தோளில் தூக்காமல், கையை மடக்கி “V” மாதிரி வைத்துக்கொண்டு அல்லது, துண்டை இடுப்புடன் சேர்த்து, “வாரையை” இறுக்கிக் கட்டிக்கொண்டு இருப்போம். அப்போது “வீக்ஷேஹம்” பாட்டு பாடப்படும். அப்போது சுவாமியை “ஊஞ்சல் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டே பாடுவோம்.

சில விஷயங்கள், எவ்வளவு சொன்னாலும் புரியாது. அதை அனுபவிக்க வேண்டும்.

ஆண் மகனாகப் பிறந்தால் வரகூரில் பிறக்க வேண்டும். வழுக்கு மரம் ஏற வேண்டும், சுவாமி தூக்க வேண்டும். ஏகாந்த சேவையை அனுபவிக்க வேண்டும். அனுபவித்தால், மறு பிறவி கிடையாது.

நாம் பெருமைப் பட வேண்டிய ஒரு காட்சி இது,

ஐந்தாவதாக, மோகன ராகத்தில், “எஹி முதம் மம தேஹி”

இந்தப் பாட்டின், கத்யத்தில் “கிருஷ்ணன் குழந்தையாக தவழ்ந்து வரும் காட்சியில், ஒரு கை, ஒரு காலை கீழே மடக்கி ஊன்றிக்கொண்டு, மறு கையில், வெண்ணையைத் தூக்கிக் காண்பிக்கிறார்.

இதற்கு நாராயண தீர்த்தர் கொடுக்கும் விளக்கம் அற்புதமானது

ஒரு பக்கம், பூமியின் பாரத்தை சுமக்கிறார்

மறு கையில், வெண்ணை, (வெள்ளைக் கலர்), பாலின்/மோரின் சாரம். உலகத்தின் சாரத்தை தன கையில் வைத்துக்கொண்டிருப்பது போல...காட்டிக்கொண்டிருக்கிறார்.

பாட்டை முடித்த பிறகு, கொஞ்சம் நிரவல் செய்தார்.

பிறகு, சாவேரியை கையில் எடுத்து, விலாவரியாக ஆலாபனை செய்தார்.

“ஸ்வாமினம் வன மாலினம்” என்ற மற்றொரு அற்புதமான பாடலை பாடினார்.

இது அக்ரூரர், கிருஷ்ணனையும், பல ராமரையும், கோபிகைகளிடம் இருந்து, மதுராவுக்கு அழைத்து செல்லும்போது, கோபிகைகள் இவர்களைப் பார்த்து பாடுவதுபோல் அமைந்த பாட்டு.

இதில் ஒரு இடத்தில், सुखमुद्रम என்ற ஒரு வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். அர்த்தம், “பேரானந்தத்தை அளிக்கும் “சின் முத்ரையுடன்” இருப்பவர் என்பதாகும்.

சின் முத்ரை என்பது “ஜீவாத்மா, பரமாத்மா” ஐக்கியம். வேதாந்தங்கள் கூறியது போல், ஜீவாத்மா கட்டை விரல் அளவே என்பதால், கட்டை விரல் ஜீவாத்மாவை குறிக்கிறது. பரமாத்மா ஆள் காட்டி விரலை காட்டி அவரவர் செய்யும் ‘கர்மாக்களை” விடாம செய்ய சொல்லிக்கொண்டே இருப்பதால், ஆள் காட்டி விரல் பரமாத்மா.

இவ்விரண்டு விரல்களையும் ஒன்று சேர்த்தால், ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்று “சின் முத்திரை” கூறுகிறது.

போகிற போக்கில், இவ்வளவு கடினமான விஷயத்தை “ஒற்றை” வரியில் சொல்லி விளங்க வைக்கும் நாராயண தீர்த்தரின் பெருமையை என்னென்று சொல்வது ?

தனி ஆவர்த்தனம் முடிந்தவுடன், கடைசியாக, ஸ்ரீ கோபாலகம் ஏகம் எவ தைவதம்” என்ற பாடலை மத்யமாவதி ராகத்தில் பாடினார்கள். 

இது கோப குமார்கள், காட்டில், பல இன்னல்களில் இருந்து காப்பற்றிய, கிருஷ்ணனைத் துதித்து பாடுவது போல் அமைத்தது.

கடைசியாக:

வயலினில், நிஷாந்த் ஆரம்பத்தில், சொஞ்சம் சறுக்கினாலும், சாவேரியிலும், மோகன ராக நிரவலிலும், அழகாக வாசித்தார்.  சங்கீத கலாநிதி கன்யாகுமாரியின் சிஷ்யர். 

மிருதங்கம் கன ஜோராக இருந்தது.

சுமித்ரா வாசுதேவ் அவர்களின் கச்சேரி மிகவும் அருமையான கச்சேரியாக அமைந்தது,

கட்ட கடைசியாக:

தரங்கிணியை படித்தாலும், பாடினாலும், பாடியதைக் கேட்டாலும், அவர் அவர் விருப்பதிகேற்ப, ஆறம், பொருள், இன்பம், வீடு முதலியவற்றை அளிப்பதாக, பலஸ்ருதி யில் சொல்லியது போல், நல்ல சங்கீதம் பாட அதைக் கேட்ட பாக்த ஜனங்களுக்கும் சகல சௌபாக்யங்களும் கிடைக்கு என்பது திண்ணம்.

Friday 7 July 2017

வரஹூர் மகாமஹோபாத்யாயர்கள் – பகுதி 4


ஸ்ரீ நாராயண சாஸ்த்ரிகள்

இவர் “பகுதி- 3 ல் சொல்லிய மகான் ஸ்ரீ. ராமகிருஷ்ண சாஸ்திரிகளின் தம்பி ஆவார்

திருவையாறு பாலக்ருஷ்ண சாஸ்திரிகளிடம் சாஹித்யம், வியாகரணம் இவைகளைக் கற்றவர். சாமுதிரி மகாராஜாவின் வித்தியாலயத்தில் கள்ளிக்கோட்டையில் சம்ஸ்க்ருத ஆசிரியராக இருந்தார். பிறவியிலேயே கவிதா வாசனை உடையவர்.

ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றதும், வரஹூரில் தங்கி, பெருமாளை பூஜித்து வந்தார். மாலை நேரங்களில், சிறுவர்களை அழைத்துச் சென்று கோவிலின் பிரகாரங்களை, புல்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வார். இரவு நேரங்களில், நாரயணீயம், பாகவதம் இவைகளைப் பாராயணம் செய்து பொருள் கூறுவார்.

கிருஷ்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். உரியடி உற்சவத்தை வருணித்து, வட மொழியில், வசனம், செய்யுள் இரண்டு வடிவத்திலும் சம்பூ என்ற பெயரில் இயற்றி உள்ளார். இந்நூலானது, 1941 வருஷம் எஸ். வீ குருசுவாமி சாஸ்த்ரிகள் அவர்களால், சோதிக்கப்பட்டு, A. ராமசாமி ஐயரால் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய நூல்கள்

1)      சிக்யோத்சவ பிரபந்தம்

2)      மதாலசா சரிதம்

3)      மதோன் மூலனம்

4)      ஸுக ஜீவனம்

5)      மன்கண்டேய நாடகம்

6)      காமாக்ஷி துதி சதகம்

7)      குருவாயூர் கிருஷ்ணா சதகம்

8)      குணசேகரம் வெங்கடேச சதகம்

9)      ஸ்ரார்தார்ஜூ நீயம்

பரம பக்தனான, நாராயண சாஸ்திரிகள் அவருடைய பக்திக்கு அடையாளமாக ஏகாதசியில் பூத உடலை நீத்து, வைகுண்ட பதவி அடைந்தார்.

பாஷ்ய பாவக்ஞ்ச வெங்கட்ராம சாஸ்த்ரிகள்

19 வது நூற்றாண்டின் முடிவில், வரகூரில் பிறந்தவர். பைங்காடு மஹா மஹோபாத்யாய கணபதி சாஸ்திரிகளிடம், வேதாந்த சாஸ்த்ரத்தை முறைப்படி காற்றவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.  ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளால், “பாஷ்ய பாவக்ஞ” என்று விருது அளித்து கௌரவிக்கப்பட்டவர்.

ஆர்யா தர்மம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியாக இருந்தார். சிலகாலம் திருவானைக்கோவில் வித்யா ஸ்தாபனத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.  தர்ம சாஸ்த்ரத்திலும், ஜோதிட சாஸ்த்ரத்திலும், மாசற்ற அறிவு படைத்தவர்.

மிகக் கடினமான் விஷயங்களை, தக்க த்ருஷ்டாங்களைக் காட்டி, தெளிவாய்  துலங்கும்படி பேசும் திறன் வாய்ந்தவர்.

முறைப்படி சோம யாகம் செய்து சோமயாஜியாகத் திகழ்ந்தவர்.  கும்பகோணம், திருச்சிராப்பள்ளி இவைகளில் நடைபெறும் அத்வைத சபைகளில் சிறந்த பண்டிதராக விளங்கியவர்.

காசியப்பா, அம்பி சாஸ்த்ரிகள்

அம்பி சாஸ்த்ரிகள் என்ற சுப்ரமணிய சாஸ்த்ரிகள் வரகூரில் வேம்பைய்யர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வேத சாச்ற்றங்களை அப்யாஸித்தவர்.  உரில், பலருக்கும், சம்ஸ்க்ருதம், சாஸ்திரம், புராணம் இவைகளை போதித்தவர்.

ப்ராதஸ்நானம், உத்யோபஸ்தாதம், ஒளபாசனம், வைஸ்வதேவம், புராணபடனம், ஆலயதர்சனம் இவைகளை நாள்தோறும் விடாது அனுஷ்டித்தவர்.  இவரும் அத்வைத சபைக்கு சென்று வருவார்.

மேலும், காசி வாசி சிவசுவாமி சாஸ்திரிகள், விஷ்ணுபுரத்தில் சம்ஸ்க்ருத பாடம் சொல்லி வந்த ரங்கநாத சாஸ்த்ரிகள், கைலாசமய்யர் சகோதரர், விஸ்வநாத சாஸ்த்ரிகள்- இவர்கள் அனைவரும் வரகூரில் பிறந்தவர்களே..

Wednesday 5 July 2017

.....சங்கரா ஆர் கொலோ சதுரர்.....

இந்த வாசகம் தேவாரம், திருவாசகம் போன்ற திருமறைகளைக் கேட்டவர்களுக்கு, படித்தவர்களுக்கு - அறிந்து கொள்ள முடியும்.

இதை முதலில் படிக்கும்போது, ஏதோ சிவபெருமான் கொலை செய்ய வருவது போலத் தோன்றும்,  மிக அருமையான ஒரு விளக்கத்தை மாணிக்கவாசகப் பெருமான் நமக்குச் சொல்ல வருகிறார்.

எனக்கு இந்த வார்த்தை ஏனோ பிடித்துப் போனது.  அதைப் பற்றி நாலு வரிகள் என் “BLOG”  எழுத நினைத்ததின் விளைவுதான் இது.
மாணிக்கவாசகர் சொல்கிறார்,

அல்பமான என்னை நீ எடுத்துக் கொண்டாய். ஆனந்த வடிவான உன்னை எனக்கு தந்து விட்டாய்”

“இதில் யார் கெட்டிக்காரர்” – “சங்கரா நீயே சொல்” – என்கிறார்.

இந்து மதம் என்பது தான் மனிதனை தெய்வமாகப் பார்க்கும் மதம் என்பது கீரன் ஒரு சொற்பொழிவில், சொல்லி இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறது.  அவர் சொல்லும்போது,

“மனிதனை மனிதனாகப் பார்க்கச் சொல்லும் “கார்ல் மார்க்ஸ்” காலத்திற்கு முன்பே மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தால் போதாது, மனிதனை தெய்வமாகப் பார்க்கச் சொல்லும் மதம் இந்து மதம்”

இதையே அபிராமி பட்டர், தன்னுடைய, அபிராமி அந்தாதியில், “ஆனந்தமுமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்” என்கிறார்.

நிறைகுடமாய் இருப்பவர்கள், கடவுளை உள்ளே கண்டவர்கள், ஆனந்தமாக இருப்பார்கள் என்பது திண்ணம். 

ராமகிருஷ்ண பரமஹம்சர், காளி கோவிலில், பைத்தியம் பிடித்தார் போல் நடந்து கொண்டது,  “வெட்ட வெளி தன்னில், மெய் என்று, இருப்போர்க்கு, பட்டயம் எதுக்கடி, குதம்பாய்” என்று பாடிய குதம்பை சித்தர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்.- பல மகான்கள் வாழ்ந்த பூமி இது.
மனிதராய் பிறந்த மாணிக்கவாசகர், தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு, திருப்பெருந்துறையில், உற்சவ மூர்த்தியாக திகழ்கிறார்.

சித்சபேசனாக இருக்கும், சிதம்பரத்தில், மார்கழி மாத திருவாதிரை திருநாளில், சிவன் சந்நிதியில், மாணிக்கவாசகர் எழுந்து அருளுவார். திருவெம்பாவை பாடி, ஒரே நேரத்தில், சிவனுக்கும், மாணிக்கவாசகர்க்கும், தீபாராதனை நடை பெறும்.  கண் கொள்ளா காக்ஷி அது.

விரும்பிய உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது, தேனும் புளித்ததே- திருமூலர்

திருமூலர் சொல்கிறார்.  “உடல் முழுவதும், கரும்பும் தேனும் கலந்து, சந்தோஷங்களின் முழுப் பரிமாணம். ஆனால் அவற்றைவிட மேலான இன்பம் ஒன்று இருக்கிறது.  அது சிவ பரம்பொருளாகும். அந்த சுவை வந்துவிட்டால், கரும்பும் கசக்கும், தேனும் புளிக்கும்.”

இது எப்படி சாத்தியம், என்பதற்கு, சம்பந்தப் பெருமான் சொல்கிறார்.

“தெளிந்த சிந்தனையுடன்” இருக்க வேண்டும்.
மாசு மறு நீங்கி இருக்க வேண்டும்

ஆசைகளாலும் தீய குணங்களாலும், அழுக்கடைந்து கலங்காமல் இருக்க வேண்டும்.”
இப்படிச் செய்தால், “தேனுமாய். அமுதாகி நின்றான்” என்று முடிக்கிறார், சம்பந்தர்.

“தேனுமாய், அமுதாகி நின்றான், தெளி சிந்தையுள்” என்று பாடுகிறார்.

இவ்வாறாக. மாணிக்கவாசகப் பெருமான், சொல்லும்போது
என்னுடைய உடலில் குடியிருந்தாய். நானல்லவா பாக்கியசாலி. c இவ்வாறு உன்னை எனக்குத் தந்து கொண்டதற்கு நான் எவ்வாறு உனக்குக் கைம்மாறு செய்யப்போகிறேன்" என்கிறார்.

மணிவாசகப் பெருமான். ஒரு ஒப்பற்ற அருளாளர். அவருடைய திருவாக்கு இந்தப் பூவுலகில் வாழும் எல்லா மக்களின் உள்ளங்களில் இறைவன்பால் எழும் நன்றி உணர்விற்கு இலக்கணமாக அமைகின்றது.

“திருவாசகத்திற்கு உருகாதவர், ஒரு வாசகத்திற்கு உருகார்” – என்று சும்மாவா சொன்னார்கள் !!!!