Friday 29 May 2020

கொரோனா அலப்பறைகள்


கொரோனா வந்து “விளையாட்டு போல” மூன்று மாதங்கள் முடியப் போகிறது. என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று புரியவில்லை. ஜாலியாக “எல்லாம் இன்ப மயம்” என்று இருந்த நாம் “சட்டி சுட்டதடா” என்று பாடிக் கொண்டு இருக்கிறோம்.  பக்கத்து ஊருக்குப் போக பயப்படும் காலமாக ஆகிவிட்டது.  தும்மினா “தீர்க்காயுஸு” என்றதெல்லாம் போய், இன்று தும்மினா, ராஜீவ் காந்தி ஜெனரல் ஆஸ்பத்திரியா, ஸ்டான்லியா என்று கேட்கும் காலம் வந்து இருக்கிறது.

இதன் நடுவின் செல் போன் எடுத்து, யாருக்ககாவது போன பண்ணினால், நமக்கு கொரோனா நிஜமாகவே வந்து விட்டது போல், ஒரு பெண், இருமலுடன் “உங்களுக்கு கொரோனாவா” என்று மிரட்டலாகப் பேசுவது இன்னும் கொடுமை. ஏனோ, “இன்று இப்படம் கடைசி” என்று கிராமத்தில் நோட்டீஸ் ஒட்டுவான் - அந்த ஞாபகம் தான் வந்தது.

வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  டிவி, கம்ப்யூட்டர், யூ டியூப், என்று பல சாதனங்கள் இருந்தும், எதோ ஒரு வெறுமை. வாட்ஸ் ஆப் என்று ஒன்று வந்து மாரடித்துக் கொண்டு இருக்கிறது.  ஒரே விஷயம் பல குரூப்ல் வந்தது கூட தெரியாமல், திருப்பி திருப்பிப் படித்துக் கொண்டிருக்கிறோம். (கொடுமை டா சாமி)

நான் கொரோனா ஆரம்பித்த போது சிங்கார சென்னையில் இருந்து தப்பித்து கும்பகோணம் சென்றுவிட்டேன்.  என் மனைவியின் ஊர் என்பதால் ரொம்ப நாளைக்கு அப்புறம் கும்பகோணம் போகும் சுகம் (எனக்கும் தான்). அடுத்த நாள் என் பெற்றோர்கள் இருந்த வரகூர் (திருவையாறு அருகில்) போவதாக பிளான். ஆனால் கொரோணா போட்ட போடில் நான் 15 நாட்கள் தங்கினேன்.

எனக்கு வாய்த்த “புக்காம்” (புக்ககம்) மாதிரி எல்லோருக்கும் கிடைக்காது. கும்பகோணத்தில் சோலையப்பன் தெருவில் இருக்கும் எங்கள் வீட்டில் வாசலில் இருந்து கொல்லை வரை நீங்கள் இரண்டு மூன்று முறை நடந்து சென்றால் உங்களுக்கு “சுகர்” வராது. நான் பிறந்த செம்மங்குடி வீட்டை அடிக்கடி  ஞாபகப்படுத்தும். 15 நாள் நல்ல அனுஷ்டானம், பூஜை, சாயந்தரம் விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் இதர பாராயணங்கள் -. அழகான ஆன்மீக வாழ்க்கை.

கும்பகோணத்தில், எல்லா கோவிலும் மூடி இருந்ததைப் பார்க்கும்போது நிஜமாகவே மனது கனத்தது. சாதாரணமாக நான் வந்தால் 1 நாள் தங்குவேன். கும்பேஸ்வரரையும் மங்களாம்பாளையும் பார்த்து விட்டு கிளம்பி விடுவேன். இப்போதுதான் இந்த ஊரை சற்று விஸ்தாரமாக பார்க்க முடிந்தது.  ATM  Center ஐ விட கோவில்கள் அதிகமாக இருக்கிறது.  ஒரு தெருவில் இரண்டு கோவில், சிறியதும், பெரியதுமாக.  

கற்பாகாம்பாள் கோவில் அருகில் இருக்கும் எனக்கே “அஹோ பாக்கியம்” என்று நினைக்கும்போது, இவ்வளவு கோவிலுக்கு அருகில் இருக்கும் கும்பகோண மக்கள் எவ்வளவு புண்ணியம் செயதிருக்க் வேண்டும் ?  கும்பகோணம் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கோவில்களில் உள்ள தெய்வங்களை ஒழுங்காகச் சொல்பவர்களுக்கு, பத்ம ஸ்ரீ அவார்டுக்கு பரிந்துரை செயவேன். – அவ்வளவு கோவில்கள்

இந்தப் 15 நாட்களில் நான் தினமும் பூ, பழம் வாங்க, பக்கத்துக்கு வீட்டு, (உ..பி.ச) கணேசன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கும்பேஸ்வரன் கோவிலை ஒரு சுற்று வருவேன்.  கும்பேஸ்வரன் கோவிலில் வாசலில் இருந்த பூ-ஆயா “நான் சாதாரணமாக தினமும் Rs. 1000  வரை பூ விற்பேன். பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி என்றால்   Rs.3000 வரை கூட விற்பேன்” என்று சொன்னாள்.  5 ட்ரில்லியன் எகானமி எங்கு ஆரம்பிக்கிறது என்று உணர முடிந்தது.  திடீரென்று ஒரு நாள், பூக்கள் எல்லாம் ரோடில். மாஸ்க் போடாமல் பூ விற்றதால் - போலீஸ் அலப்பறை.

சில ஆச்சர்யமான நல்ல விஷயங்கள் நடந்தன:
ஆத்திசூடி முதல் அச்சித்ரம் (வேதம்) வரை “ஆன்லைன்” கிளாஸ் வந்து விட்டது.  யாரைக் கேட்டாலும் “சார் என்னை 2 PM 4  PM disturb பண்ணாதீர்கள். சஹஸ்ரநாமம் கிளாஸ் இருக்கிறது. திருப்புகழ் கிளாஸ் என்று ஒரு குரூப்.  பஞ்ச பாத்திர உத்தரிணி என்பது பாக்யராஜ் படத்தில் சொல்வது போல், ஐந்து பாத்திரம் என்று சொன்னவர்கள் எல்லாம், உண்மையாகவே, ஸந்தியாவந்தனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பூணல் போட்டதில் இருந்து, த்ரி கால சந்த்யாவந்தனம் பண்ணாமல் “பிசி” ஆக இருந்தவர்கள் எல்லாம், கொரோனா “புண்ணியத்தால்” அனுஷ்டானம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பல பேர் எனக்கு போன் செய்து, “சார்
சஹஸ்ர காயத்ரி பண்ணுங்கோ, பண்ணினால் உங்களுக்கு ஓஜஸ், தேஜஸ் எல்லாம் வரும்.” என்று “ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர்” பாணியில் எனக்கு உபன்யாசம் பண்ணினார்கள். 

ஏதன் மத்தியில், “சஹஸ்ர காயத்ரி வாட்ஸ்ஆப் க்ரூப் ஒன்று ஆரம்பித்து, அதில் தினமும் ஸ.கா பண்ணுகிறவர்கள் “Progress Report” கொடுக்கவேண்டும். ஆக மொத்தம் பிராமணர்கள் பலர் பிராமணர்களாக வாழ வழி செய்த கொரோனாவுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.  மகா பெரியவா, “சந்த்யாவந்தனம் பண்ணுங்கோ” என்று அன்பாக சொல்லி செய்யாததை, அதிரடியாக செய்ய வைத்திருக்கிறது நம் கொரோனா !!!

ஒரு பக்கம் டீ வீயில் ராமாயணம், மகாபாரதம் ஓடிக் கொண்டிருந்தாலும், சங்கரா டீ வீயில், ஒரு லக்ஷம் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் என்று போய் கொண்டிருக்கிறது. வரஹூர் என்ற எங்கள் கிராமத்தில் இருந்த போது, பெண்கள் ஒன்றாக சாயந்திரம் லலிதா சஹஸ். ஜபிப்பது என்று முடிவு செய்து, ஒன்றாக கலந்தது ஆச்சர்யம்.  

சத்தியமாக, பல ஆண்கள் சௌந்தர்ய லஹரி, நாரயணீயம் “on line படித்து சொன்னதை நான் கிராமத்திலும் பார்த்தேன்.

ஆன் லைனில், ஸ்ரீ ஜெய கிருஷ்ண தீக்ஷிதர், ஸ்ரீ சுந்தர குமார் என்ற பல பெரியவர்கள், உபன்யாசம் செய்து வருவதை பார்க்க (கேட்க) முடிகிறது.

இந்த சமயத்தில். நான் என் செம்மங்குடி தாத்தா, பாட்டிக்கும் என் பெற்றோர்களுக்கும் என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். ஏனெனில், சந்தியாவந்தனம் சிறிய வயதில் செய்ய வைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் “நெட்ரு” பண்ண வைத்து (நாலு வரி சொனாதான் சோறு !!!), பின்பு, துபாயில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி, கத்து கொண்டதற்கும், மனைவியின் அத்தை குடும்பத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் மூலம், சாளக்ராம பூஜை பஞ்சாக்ஷரி போன்ற பல நல்ல விஷயங்களில் ஒரு ஆர்வம் வருவதற்கும்,  - அவர்கள் போட்ட விதையே காரணம்.

எனக்கு கொரோனா “லாக் டௌன் ல்” வித்யாசமே தெரியவில்லை. இந்த பூஜை “ஆபீஸ் போவதால்” பண்ண முடியவில்லையே என்று நினைத்ததை நன்றாக “உண்டு” என்று பண்ணினேன்.

கொரோனா நம் கடந்த கால வாழ்க்கையை நினைவு படுத்தி இருக்கிறது. சினிமா இல்லாமல், ஹோட்டல் இல்லாமல், “மால்” இல்லாமல், என் கோவில் கூட இல்லாமல் (பிராமணன் கோவில் போக வேண்டிய அவசியமில்லை. வீட்டில் பண்ணும் காயத்ரியும், பூஜையும் போறும்  என்று அன்று சொன்னதை இன்று உணருகிறோம்). வேறு வழியே இல்லாமல் பெற்றோர்களுடன், மனைவியுடன் குழநதைகளுடன், நீண்ட நேரம் செலவு செய்ய ஆரம்பித்து. “அட, இதிலும் ஒரு சுகம் இருக்கிறது” என்று உணர ஆரம்பித்து விட்டோம்.






Thursday 21 May 2020

நான் புரிந்து கொண்ட இராமாயணம்- 2 - தாடகை வதம்


இராமாயணத்தில் 2 சம்பவங்கள், சரியா, தவறா என்ற சர்ச்சைக்குள் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றன. அன்று ஸ்ரீ.கி.வா.ஜெகந்நாதன் முதற்கொண்டு, எம்பார், கீரன், சேங்காலிபுரம் தீக்ஷிதர் பரம்பரையச் சேர்ந்தவர்கள் முதற்கொண்டு இன்று இலங்கை ஜெயராஜ் வரை இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்

.“மெகா டிவி” போன்ற சில டிவி க்களில், கம்ப ரசம் என்ற பெயரில், இலங்கை ஜெயராஜ் அல்லது கற்றுத் தேர்ந்த பலர் ராமாயண காவியத்தை இன்றும் அலசுகிறார்கள்.

சந்தேஹமே இல்லாமல் கம்பனின் இராமாயண காவியம் மிக அழகு. அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், அந்த எழுத்தின் வீர்யம் புரியும். ஆச்சர்யமாக இருக்கும் அதன் உள்ளர்த்தம்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று தாடகை வதம், மற்றொன்று, வாலி வதம்.

தாடகை என்ற பெண்ணைக் கொல்லலாமா ?  என்ற ஒரு வாதம். தாடகை பெண் அல்ல அரக்கி, ராக்ஷஷி என்று கூறினால், (எங்கள் வீட்டிலும் தான் ராக்ஷஷி இருக்கிறாள் அவள் பெண் இல்லையா என்று, “திருப்பி போட்டு வாங்கும்” அதிரடி சர்ச்சைகள் !!! ), அது தவறு, முனிவர்களுக்கு யாக சாலையில் இன்னல் விளைவித்த அரக்கியை “போட்டுத் தள்ளுவது” தான் நீதி என்று இன்னொரு சாரார்- - வாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

வாலி வதமும் அப்படித்தான். மறைந்திருந்து “பார்க்கலாம்” (அதில் மர்மம் இல்லை). ஆனால். மறைந்திருந்து கொல்வது தவறு. என்று ஒரு சாரார். எதிரணியில் ராமன் செய்தது சரிதான் என்று பேசும் தேர்ந்த பேச்சாளர்கள்

இப்போது தாடகை கதைக்கு வருவோம். விஸ்வாமித்ரர், ராம லஷ்மணரகளை அழைத்துக்கொண்டு கானகம் செல்கிறார்.  இதில் ஒரு ஸ்வாரச்யமான விஷயம் ஒன்று உண்டு.  விஸ்வாமித்ரர் ராமனை மட்டும் தான் கேட்டார். ஆனால் தசரதன் லக்ஷ்மணனையும் சேர்ந்து அனுப்புகிறான். அதனால், ராமன், லக்ஷ்மணனை ஒரு அம்பு விடக் கூட பணிக்கவில்லை. எல்லா அரக்கக் கூட்டத்தையும் ராமன் ஒருவனே கொன்றான். தாடகை உட்பட. (ராமானந்த சாகர்-ராமாயணம் பார்த்து குழப்பம் அடைய வேண்டாம்)  பின்னால் லக்ஷ்மணன், இந்திரஜீத் போன்ற பல அரக்கர்களைக் கொல்லப் போகிறான். ஆனால், இங்கு விஸ்வாமித்ரர் கேட்டதை, ராமன் கொடுத்தான்.  (ராமன் ரோஷக்காரன். லக்ஷமணனை கேட்காதபோது என்னத்துக்கு ல்க்ஷமணனுக்கு வேலை கொடுக்க வேண்டும் ? - delegation of authority)

மாதரையும், தூதரையும் கொல்வது க்ஷத்ரிய தர்மம் அல்ல என்று ராமன் வாதம் செய்கிறான். நாளை என் மேல் பழிச் சொல் வந்துவிடும் என்று கவனமாக இருக்கிறான்

கம்பனுக்கு, இப்போது ஒரு சிக்கல் வருகிறது, படிப்பவருக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல, கொடூரமான அரக்கி என்ற எண்ணமும், அவள் மேல் வெறுப்பும் வர வேண்டும். அதனால் அவன் வார்த்தைகளை கவனமாகக் கையாளுகிறான்

இப்படிச் சொல்கிறான்

தாடகை நடந்து வருகிறாள். அவள் கால்களில் உள்ள சிலம்பில், மலையைப் பெயர்த்து அதை மணிகள் போல் சிலம்பில் கோத்துக் கொண்டு வருகிறாள். (அப்படி என்றால் எவ்வளவு பெரிய கால், எ.பெ. சிலம்பு !!!) அவள் எப்படி இருப்பாள் என்று நமது கற்பனைக்கு விடுகிறார்.

அவள் தரையை மிதித்து நடக்கிறாள். அவள் நடக்கும் போது பள்ளம் விழுகிறது. அந்தப் பள்ளத்தின் ஆழத்தில் கடல் தண்ணீர் வந்து நிறைந்து கொள்கிறது. (வேலை சலம் புக) (வேலை என்றால் கடல் தண்ணீர்)  கடல் தண்ணீர் காட்டுக்குள் வந்து. தாடகையின் பாதப் பள்ளத்தில் வந்து நிரம்புகிறது என்றால், எவ்வளவு பள்ளமாக இருக்க வேண்டும் ??

அவள் வரும்போது, எமன் கூட எதாவது ஒரு குகைக்கும் ஓடி ஒளிந்து கொள்வானாம்.  தாடகையின் கண்கள் அனல் கக்குமாம். பார்க்க முடியாதாம்.

அவள் நடந்து வரும்போது, அவள் பின்னால் மலைகள் எல்லாம் பெயர்ந்து உருண்டு வருமாம். (நிலக் கிரிகள் பின் தொடர) அவ்வளவு force.  (நம்மூரில், பஸ், ரயில் வண்டி வேகமாகப் போனால், பின்னே குப்பைகள் பறந்து வண்டியின் பின்னால் போவது போல்)

இப்படி ஒரு உருவத்தைக் கற்பனை செய்து பார்த்து, அவளை பெண் என்று சொல்ல யாருக்காவது தைர்யம் வருமா ??

இப்படி ஒரு உருவத்தை வர்ணிப்பதன் மூலம். விஸ்வாமித்ரர்- “இவள் பெண் போல் இருந்தாலும், பெண்களின் ஒரு லக்ஷணம் கூட இல்லாதவள். அதனால் நீ இவளை தாராளமாகக் கொல்லலாம்” என்கிறார்.

பின் நடந்த கதை தான் நமக்குத் தெரியுமே

Wednesday 13 May 2020

முக பஞ்ச ஷதியில் கர்ணன்


கர்ணன் பிறப்பு, மகாபாரதத்தில் அவனின் பாத்திரப் படைப்பு ஒரு புறம் இருக்கட்டும்.  மூக பஞ்ச சதியில், மூக கவி, கர்ணனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யம்.  காமாக்ஷியின் பெருமைகளை வாரி வாரிக் கொடுத்த கவி,  கடாக்ஷ சதகத்தில் 5 வது பாடலில். கர்ணனைக் குறிப்பிடுகிறார். பாண்டவர்களையும் குறிப்பிடுகிறார். அந்தப் பாடலின் அர்த்தத்தைப் பார்ப்போம், முடிந்தால் சம்ஸ்கருத்தையும் பார்ப்போம்

கடைக்கண் பார்வையை மட்டும் வைத்து 100 ஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார். காஞ்சி மகான் அடிக்கடி மேற் கோள் காட்டும் அற்புதமான புத்தகம் இது.

1944 ல், காஞ்சீபுரம் காமாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூக பஞ்ச சதி, புத்தகம் ஒன்று வெளிவந்து, அது என் கைக்குக் கிடத்தது. அதிலிருந்து. இந்த பதத்துக்கு விளக்கம்:

“காமாக்ஷியே ! அடிக்கடி வெண்ணிறமுடைய புன்முறுவலின் உதவியைப் பெற்றதாகினும், பயங்கர மூர்த்தியாகிய பரமசிவனின் மனத்தைக் களிப்பிப்ப்பதும் ஆகிய உம்முடைய கடைக்கண் ஒளியானது, அடிக்கடி புன் முறுவலை உடைய அர்ஜுனனின் உதவியைப் பெற்றதாகியும், பீமசேனனுடைய மனதை களிப்பிப்பதுமாகியுள்ள பாண்டவர்களின் சேனையைப் போன்றதாகியும் இருந்த அது .. “ஐயோ, கர்ணனுடைய பக்கத்திலே போய்ச் சேர்வதைப் போல், காதுகளின் அருகே செல்கின்றதே ?!!”  என்ற அர்த்தத்துடன் அமைந்து இருக்கிறது.

தேவியின் கண்கள் காது வரை நீண்டு இருக்கிறது. கடைக்கண்ணோக்குகள் காதுகளின் பக்கமாகச் செல்கின்றன என்று கூறி, கர்ணனின் பக்கம் சேர்ந்து கொண்டு விட்டாயே = என்று சிலேடையும், ஆச்சர்யமும் வருத்தமும் தோன்றக் கூறுகிறார்.
இப்படி ஒரு “Comparison” நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. அபாரம். அம்பாளின் அருள் பெற்றால் எது தான் சாத்தியமாகாது  ??

வைத்ய ஸ்ரீ S.V.ராதா கிருஷ்ண சாஸ்த்ரிகள் தான் எழுதிய முக பஞ்ச ஷதி பாஷ்யத்தில், இப்படிக் கொண்டாடுகிறார்

உன் கடாக்ஷத்தின் அழகாகிய லக்ஷ்மீ, புன்சிரிப்பாகிற அர்ஜுனனுக்கு உதவுவதாக, பீமனாகிற சிவனின் மனத்தை மகிழ்விப்பதாக, பாண்டவரின் சேனை போல், கர்ணனாகிய காதின் அருகே செல்கிறது.
அர்ஜுனன் பீமன் கர்ணன் என்பவை இரு பொருள் உள்ள சொற்கள். புன் சிரிப்பு வெள்ளை, அர்ஜுனனும் வெள்ளை.  பீமன்-பீமசேனனும் சிவ பெருமானும். பீம சங்கரர் என்ற ஜோதிர் லிங்கம் புகழ் பெற்றது. பதினொரு ருத்ரர்களில் ஒருவர் பீமர். கர்ணன் குந்தியின் பிள்ளையாக இருந்தும், பாண்டவர்களின் விரோதி.  பண்டவ சேனை, கர்ணனை வெல்ல, அவன் அருகே செல்கிறது. கடாக்ஷம் காதின் அருகே செல்கிறது. பாண்டவர் சேனை போன்று தேவியின் கடாக்ஷ அழகு
பாண்டவர் சேனை, அர்ஜுனனுக்கு உதவ, பீமனை மகிழ்விக்க, கர்ணனை நோக்கி செலவது போல், தேவியின் கடாக்ஷ அழகு, வெண்ணிறமுள்ள புன் சிரிப்புக்கு உதவ, சிவனின் மனம் குளிர, காதின் அருகே செல்கிறது.

“......காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீணா..” என்கிறார், முக கவி.
கவிகளின் உலகம், எல்லையற்ற சுகம்.



Friday 8 May 2020

எடுக்கவோ கோர்க்கவோ


மகாபாரதம் ஒரு சிக்கலான ஒரு காவியம். பல பெயர்கள். பல கிளைக் கதைகள். வியாச முனிவரின் சொந்தக் கதையைப் படித்தாலே தலை சுற்றும். சிகண்டி ஏன் சிகண்டினியாக மாறினாள். ? பீஷ்மரை வைத்து ஒரு வருடத்திக்கு, prime time ல் ராமாநந்த சாகரின் ராமாயணத்திற்கு முன்பு ஒரு சீரியல் ஓட்டலாம்.  ஏன் –எதற்கு-எப்படி நிறைய உண்டு. இப்போது தலைப்புக் கதைக்கு வருவோம்.

மகாபாரதம் படித்தவர்களும், கொஞ்சம் தமிழில் ஆசை உள்ளவர்களுக்கும், அட.. கர்ணன் படம் பார்த்தவர்களுக்கும், (சிவாஜி-சாவித்திரி-அசோகன்) மேற் சொன்ன வரிகள் புரிந்திருக்கும்
வில்லிப்புதூரார், எப்படி தன் பாடலில் இந்த இடத்தைக் கையாளுகிறார் என்று பார்க்கலாம்.

“சட்” என்று புரியாதவர்களுக்கு, சுருக்கமாக, கதையைப் பார்க்கலாம்.  கதை தெரிந்தவர்கள் அடுத்த பாராவை “ஸ்கிப்” செய்து விடலாம்

குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். அதற்கு முன்பு....

கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர் தூது முடிந்தபின், கர்ணனை, துரியோதனிடம் இருந்து பிரிக்க வேண்டும், அப்படி பிரிக்க முடியாவிட்டால், செயலிழ்க்கவாவது செய்ய வேண்டும் என்று குந்தியைப் பார்க்க வருகிறார். குந்தியிடம் கர்ணன் பிறப்பைப் பற்றிச் சொல்லி, “அவன் உன் மகன்” என்று சொல்லி குந்தியைப் பதற வைக்கிறார். கர்ணனைப் போய் பார்த்து உண்மையைக் கூறுமாறும், பாண்டவர் பக்கம் வந்து விடுமாறும் கூறச் சொல்கிறார்.  அப்படி அவன் மறுத்தால் (செஞ்சோற்றுக் கடன்). அவனிடம் இரண்டு வரங்களைக் கேட்கச் சொல்கிறார்.

இரண்டு வரங்கள் என்ன என்பதை நான் கூறப்போவதில்லை. இந்த கட்டுரைக்கு அது அவசியம் இல்லை.

குந்தி சந்திக்க வருகிறாள்.  கர்ணனிடம் தான் உன் தாய், நான்தான் என்று கூறுகிறாள்.  நிலை குலைந்து நிற்கும் கர்ணனிடம், குந்தி பாண்டவர் பக்கம் வந்துவிடுமாறு கூறுகிறாள்.

கர்ணன் மறுக்கிறான், அவன் பாண்டவர் பக்கம் ஏன் வரமாட்டேன் என்பதற்கு ஒரு காரணம் கூறுகிறான். அதுதான் இந்த “தலைப்பு”

இப்போது வில்லியாரின் பாடலைப் பார்ப்போம்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு

அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப

"எடுக்கவோ?கோக்கவே?'" என்றான்; திடம் படுத்திடு வேல் 

இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

சில வரிகளுக்கு அர்த்தம் பார்ப்போம்:

பொன்-திரு மேகலை மணி- இடையில் கட்டி இருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே – உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம் தன்னில் – (நான் மிகவும் ரசித்த வரிகள்) – கர்ணனும் பானுமதியும் தனியாக இருக்கிறார்கள். ஆனாள், அந்த குற்றமோ, தவறோ நிகழாத இடம்.

மற்ற வரிகள் எளிமையானவை, அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமில்லை

சரி – இப்போது விஷயத்திற்கு வருவோம் – எடுக்கவோ கோர்க்கவோ என்று துரியோதனன் கேட்கிறான் !

எடுப்பது சரி, எதற்குக் கோக்கவேண்டும் ?

முத்தில் நூலைக் கோர்க்கும்போது, கை நடுங்காமல் இருக்க வேண்டும். கை எப்போது நடுங்கும். ஆத்திரத்தில்,  கோபத்தில் நடுங்கும்.

கோபம் கொள்ளக் கூடிய, ஆத்திரம் அடையக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது. ஆனால் துரியோதனுக்கு, ஆத்திரமும் இல்லை, பயமும் இல்லை. நிதானமாக இருக்கிறான். கர்ணனின் மேல் 

அவ்வளவு நம்பிக்கை. அதனால், “கோர்க்கவோ” என்றான்.

இரண்டு அர்த்தம் கொள்ளலாம்- ஒன்று, கர்ணனோ, பானுமதியோ அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர், எதிர் பாராத இந்த நிகழ்ச்சியால் – துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று (அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து)

“நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்துத் தருகிறேன்” என்று துரியோதனன் சொன்னது, தன் உயிர் நண்பனிடம், தன் மனைவியிடமும் அவன் வைத்த நம்பிக்கை.

இதை கர்ணன் தன் அம்மாவிடம் சொன்னது இன்னும் மேன்மையானது. இது போன்ற ஒரு “ situation” ஐ இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். அதுவும் தன் தாய் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் – சொல்கிறான்.

ஒரு வரி- இரண்டு அர்த்தம். வில்லியாரின் வரிகள் அபாரம்.

கர்ணன் படம் திருப்ப பார்க்கும்போது – இந்த சீனைப் பாருங்கள். “சிவாஜியில் அதிர்ச்சியும், சாவித்திரியின் பதற்றமும், அசோகனின் கனிந்த பார்வையும் – அபாரமாக இருக்கும்.