Sunday 18 September 2022

T.V சங்கரநாராயணன் (TVS) – “எப்போ வருவாரோ”

 வாஷி=நவி மும்பை- நான் திருமணம் ஆகி மும்பையில் முதல் வேலை கிடைத்து செட்டில் ஆகிக் கொண்டிருத்த நேரம்

அப்போது. அணுசக்தி நகரில் என் சித்தி சித்தப்பா இருந்ததால் வாரக் கடைசியில் அங்கு போய் எப்போவாவது நடக்கும் கச்சேரியை கேட்பதுண்டு. அப்படித்தான் ஸ்ரீ ஓ எஸ் தியாகராஜன், ஸ்ரீ. டி.என் சேஷகோபாலன், ஸ்ரீ. டி.வீ  சங்கரநாராயணன், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் எல்லோரும், மும்பை வந்தால், அணுசக்தி நகர், செம்பூர் பைன் ஆர்ட்ஸ், முலண்டு, மாடுங்கா என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு சென்னை திரும்பிப் போவார்கள்.

அப்படி ஒரு நாள் TVS அவர்கள் பாடினார். நான் அவரின் பரம ரசிகன், பல கச்சேரிகள், திருச்சி, பெங்களூர், மும்பை, சென்னை என்று கேட்டு இருக்கிறேன்.

அவர் ஒரு நிரவல் “புன்னகை முகம் ஆறு, அருள் வரம் தேடி வந்தேன், பன்னக சயன, மருகா, முருகா, குகா” என்று (கந்தன் என்ற பெயர் –பாடல்). அது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. “அம்மாடி. என்ன ஒரு நிரவல். மிக பிரமாதம்” என்று சொன்னால் நான் நரகத்துக்குத்தான் போவேன். மிக மிக அதற்க்கும் மேலே ஒரு வார்த்தை போட ஆசை. எனக்கு இன்று வரை அந்த வார்த்தை தெரியவில்லை.

இன்னொரு நிரவல் ..அன்னை காமாட்சி போலே அருள் வடிவாக வந்தார். என்று காமகோடி ஆச்சார்யா பெயரில் பெரியசாமி தூரனின் (புண்ணியம் ஒரு கோடி) கீரவாணியில் - ஒரு பாடலில் ஒரு வரி அது. இப்படிப் பல பாடல்கள்.

12 வயதில், மணி ஐயருடன் கூடப் பாடியது, 1968 ல் முதல் கச்சேரி, மணி அய்யர் மறைந்த வருடம். 77 வயது மறைவு. எந்த ராகம் பாடினாலும் அதில்  கோலோச்சியவர். எத்தனை கச்சேரி, எத்தனை இடங்கள், எத்தனை கோவில் கச்சேரிகள்..

லயமும் பாவமும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை பரவசப்படுத்திய பாடல்கள் அவருடையது.

டி.எம். கிருஷ்ணா அவர்கள் சொன்னது போல், அவருடைய சங்கீதம் “filled with passion, romance, flourish and unrestricted flow” அவர் பாடல் விளக்கு என்றால் நம்மை வீட்டில் பூச்சியாக விழ வைப்பார்.

சென்னையில் நான் CA படிக்கும்போதி பல நண்பர்கள், உறவினர்கள் TVS பைத்தியம்.  அதிலும் சாத்தூர் AGS அவர்களின் மாப்பிள்ளை ஸ்ரீ  சுந்தரம் மாமா என்று ஒருவர் இருந்தார். அவர் டி‌வி‌எஸ் பாடல்களை அக்கு வேறு ஆனி வேறாக அலசுவார். ஏன் அவர் பெஸ்ட் என்று சொல்லி நம்மை பிரமிக்க வைப்பார். இப்படிப் பலருடன் நான் பழகியது டி‌வி‌எஸ் மேல் நான் வைத்த மரியாதையை இன்னும் கூட்டியது

அந்தக் காலத்தில் ஆடியோ டேப் மிகவும் பிரபலம் என்பதால் அவருடைய பல லைவ் கசேரிகளின் ரெகார்டிங் நான் வாங்கி ஒரு பொக்கிஷம் போல வைத்துக் கேட்பேன்.  இங்கிலீஷ் நோட்டுக்கும், எப்போ வருவாரோ பாடல்களுக்கு ஏங்கும் மக்களிடையே, நான் ஒரு வாசஸ்பதியோ (சகஸ்ரா), கன்னட கௌளையோ (சொகசு ஜூட) ஸ்வரங்கள் எப்படி பிரளயமாக வருகிறது என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

பெங்களூர் சேஷாத்ரிபுரம் ஒரு கச்சேரி, “ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே” என்ற ஒரு தாசர் பாடலை சாரங்காவில் ஆரம்பித்து ராக மாலிகையில் பாடினார். குரல் அது மாத்திரம் குழைந்து கொடுக்க அள்ளிக் கொடுத்தார். அது தான் முதல் பாட்டு – அந்தக் கச்சேரியில்...

சாதாரணமாக அவர் வர்ணம் எல்லாம் பாடுவது கிடையாது. மாமா மணி அய்யர்வாள் மாதிரி நேரே பாட்டுதான்.  ஒரு ஹம்ஸத்வனி யோ நாட்டை யோ.. அதில் ஸ்வரம் நிச்சயமாக உண்டு. அதிலே அவர் குரலை சரி பண்ணிக் கொண்டு விடுவார். கற்பக விநாயகக் கடவுளே என்று ஒரு வரியை பாடி அதில் மேல், கீழ் எல்லாம் பாடிவிட்டு கசேரியை ஆராம்பித்து விடுவார். ஸ்வர மழை பொழிவார். சாதாரணமாக முதல் இரண்டு பாட்டு முடிந்தபிறகு போனால் பரவா இல்லை என்று நினக்கும் பல பாடகர்கள் இருக்கும் காலத்தில், முதல் பாட்டு மிஸ் ஸே பண்ணக் கூடாது என்று நான் நினைத்த ஒரே வித்வான் TVS தான்.

சங்கீத கர்வம், மிடுக்கு ஒன்றுமே கிடையாது. ஒரு சிரிப்பு, எனக்கு ரசிகர்கள் போறும், என்று ஒரு எண்ணம். மணி அய்யர்வாளிடம் இருந்து இவருக்கு வந்தது – இதெல்லாம்.

சாதாரணமாக மிடுக்குடன் ஜிப்பா என்ன சட்டை என்ன, அங்கவஸ்த்ரம் என்ன, காதில் தோடு, வெளியில் தெரியும் தங்கச் சங்கிலி, துண்டு என்ன, சென்ட் என்ன, “மீசைக்குக் கூட கருப்பு அடித்து” – என்று வரும் பாடகர்கள் இடையே, சாதாரணமாக ஒரு கதர் ஜிப்பா, போட்டுக் கொண்டு, லேசா ஒரு விபூதி கீற்று, ஏதோ தூங்கி எழுந்து மூஞ்சி அலம்பி, ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவது போல், ஒரு மனிதர். ஆனால் உட்கார்ந்து பாட ஆரம்பித்தால், எவ்வளவு பெரிய கலைஞர், சரஸ்வதி கடாக்ஷம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, இசை மேதை- என்பது எனக்குத் தெரியும்.

கான கலாதரரின் முக்கியமான விஷயங்களை, அவர் எந்த எந்த விஷயங்களில் ரசிகர்களின் மனதை அபகரித்தாரோ, அதை அப்படியே தன்னுள் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பாணியையும் சேர்த்து, ஒரு ஜகஜ்ஜாலாம் செய்து, என்னை போன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டவர்.  

தான்  இரண்டு முக்கியமான என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள். ஒன்று ஒரு மாதிரியான கலக்கமான (இப்போது நினைத்தாலும் பகீர் என்று இருக்கும்) நிகழ்ச்சி. இரண்டு நான் மிகவும் வருத்தப்படும் நிகழ்ச்சி.

வருத்தப்படும் நிகழ்ச்சி – நான் இப்போது குடியிருக்கும்
“ரமணியம் சுமுகம்” (ராஜா அண்ணாமலை புரம்) என்ற குடியிருப்பில்
, மொத்தம் 5 தளங்கள். நான் 4 வது தளத்தில் இருக்கிறேன். 5 வது தளம் “பெண்ட் ஹவுஸ்” மாதிரி. அந்தத் தளத்தை TVS மாமா 4 மாதம் முன்பு வாங்கி இருக்கிறார். அந்தத் தளத்தில், உள் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. 3-4 தடவை அவர் வந்து பார்த்ததாகவும் எனக்குச் செய்தி வந்தது. என் குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம். ஒரு சங்கீத கலாநிதி, பத்ம பூஷண். நான் மிகவும் நேசித்த, மிக உயர்ந்த மனிதர். என் தளத்துக்கு மேலே வருகிறார் என்பதும், அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் சாதகம் பண்ண கேட்கலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அது கனவாகப் போயிற்று.

பகீர் நிகழ்ச்சி:

1982 வருடம் அப்போது நான் “வாஷி கான்வ்” (vaashi village)  ல் குடி இருந்தோம். அப்போது வாஷி ரயில் நிலையம் வரவில்லை. மான்கூர்ட் என்ற ஒரு station தான் கடைசி. வாஷி யிலிருந்து மும்பை போவதற்க்கு பஸ் தான். வாஷி பாலத்தைக் கடந்து மான்கூர்ட் வழியாக மும்பை யை அடைய வேண்டும்.

அப்போது செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் ல் TVS கச்சேரி. நானும் என் மனைவியும் போய் வருவதாக பிளான் செய்து கிளம்பினோம். அப்போது என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். 6 மாதம் என்று நினைக்கிறேன். பஸ் ஏறி சென்று செம்பூர் செல்ல வேண்டும். வாஷி பாலம் வருவதற்க்கு முன்பு, ஒரு ஸ்பீட் பிரேக்கர் ஒன்று உண்டு. நானும் என் மனைவியும் பின்னால் ஏறி நின்று கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கர் வரும்போது ஒரு பிரேக் போட்டு வண்டி ஏறி இறங்கியது. அது பின்னால் ஒரு தூக்கு தூக்கிப் போட, என் மனைவி கத்த, நான் பதறிப் போய், ஒரு நிமிடம் என் மூச்சு நின்று விட்டது.  பஸ்ஸில் பல பேர் ஓடி வந்து என் மனைவியை பிடித்து உட்கார்த்தி வைத்து ஆஸ்வாஸப் படுத்தினார்கள. பிறகு மெதுவாக செம்பூர் ல் இறங்கி, மெதுவாக அரங்கத்திற்க்குப் போனால், மாடிக்கு தான் போக வேண்டும்’. கீழே ஃபுல் ஆகிவிட்டது.  மெதுவாக படி ஏறி, (நிறைய படிகள்), ஏறி உட்கார்ந்து கச்சேரி கேட்டோம்.  அப்போது அவர் பாடிய RTP- பிருந்தாவன சாரங்கா- “ஸ்ரீ ரங்கா ஹரி ரங்கா, பாண்டு ரங்கா, பிருந்தாவன சாரங்கா” – இன்றும் என் மனதில் இருக்கிறது. அது ஒரு “அட்வெஞ்சர்”.  இன்றும் அதை நினைத்தால் ஒரு பகீர் கலந்த சந்தோஷம் !!!!  

ஒரு ஆடியோ காசெட் ரொம்ப வருடங்களாக நான் வைத்து இருந்தேன். அதில் ஆபோகி- “மனசு நில்ப”, அடுத்து கல்யாணி ராகம் பாடி “நம்பிக் கெட்டவறல்லரோ” அதற்க்குப் பிறகு பைரவி பாடி “தனயுனி ப்ரோவ”.  அது என்னமோ நான் அடிக்கடி போட்டு கேட்ட பாடல். அதில் “இன குலோத்தம” – என்ற ஒரு இடத்தில் “ஒரு சொழட்டு சொழட்டுவார்” ஒவ்வொன்றும் அற்புதம். நான் பம்பாய் இருந்தபோதும் சரி ஆதற்க்குப் பிறகு துபாய் சென்று 6 வருஷங்கள் இருந்த போதும் சரி, பிறகு சென்னை – என் கூடவே இருந்தது. 

யூ ட்யூப் காலத்தில் இதெல்லாம் காணாமல் போனால் கூட அந்த நினைவுகள் பசுமையானவை.

சங்கீதக் கடவுள் என்று நான் கருதும் மணி அய்யர் அவர்களின் மருமான், அவருடன் மறுபடி உடன் பாடச் மேலே சென்று விட்டார்.

நமக்கு அதில் உடன் பாடில்லை. இருந்தாலும் அவருடைய பாடல்கள், கச்சேரிகள், கொட்டிக் கிடக்கின்றன -You tube ல்.

அவருடைய பேட்டியில், 1984  ல் வந்தது, இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது

 

1.  முக்கியமான தவறுகள் வீத்துவான்களிடம் தான் இருக்கின்றது. ரசிகர்களிடம் அல்ல

2.  நாம் நன்றாகப் பாடினாலே போரும். ஜனங்கள் நிச்சயம் வருவார்கள்.

இங்கிலீஷ் நோட் பாடுங்கள் என்று மியூசிக் அகாடெமியில் உட்கார்ந்த எல்லோரும், ஒரு சேர எழுந்து கேட்டுக் கொண்டது, மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் இசை என்றும் அழியாது.