Wednesday 20 November 2019

அரிய புலையர் மூவர் பாதம் -: யார் அந்த மூவர் ? ( சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா ?) )



எப்படி செம்மங்குடி என்றார் என் மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறக்குமோ, அதே போல் சிதம்பரம் என்றால், இன்னும் பல பட்டாம்பூச்சிகள் பறக்கும். என்னுடைய அப்பாவின் பூர்விகம் என்பதாலோ,  செம்மங்குடி பாட்டியின் பூர்விகம் எம்பதாலோ இருக்கலாம்.  

சிதம்பரம் பல ஆச்சர்யங்களின் பிறப்பிடம்.  அள்ள அள்ள குறையாத அதிசயங்கள்,  தோண்டத் தோண்ட பல "கீழடிகளை" பார்க்கலாம்.

ரொம்ப நாளாகவே, கோபாலக்ருஷ்ண பாரதி பாடிய “நந்தனார் சரித்திரத்தில், வரும் ஆபோஹி ராகப் பாடல் “சபாபதிக்கு வேறு தெய்வம், சமானமாகுமா”  என்ற பாடலில் “அரிய புலையர் மூவர் பாதம் அறிந்தே என்றே புராணம்...” வரி வரும்,  இந்த மூவர் யார், என்பதை என் "BLOG" ல் எழுத வேண்டும் என்பது தான்......நான் இதைப்பற்றி யாரும் விரிவாக எழுதியதாக நினைவில்லை அதனால் நானும் கொஞ்சம் எழுதலாம் என்றுதான்....

சங்கீதம் தெரிந்தவர்கள், கோ.பா பற்றி தெரியாதிருக்க வாய்ப்பில்லை. சிதம்பர நடராஜரைப் பற்றி உருகி உருகி எழுதி இருக்கிறார். மதுரை மணி அய்யரின், மறக்க முடியாத “எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர”, “மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி, வருத்தப்டுத்த வேண்டாம்”-என்று பொட்டில் அடித்தால் போல் ஒரு பாட்டு. இந்தப் பாட்டைக் கேட்டால், சிதம்பரம் போக வேண்டாம் என்பது போல், “எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே, இருக்க வேண்டும் அய்யா.” என்று எனக்கு மிகவும் பிடித்த, “ஆடிய பாதத்தை காணாரே, பிறந்து ஆனந்தம் பூணாரே”.  மாஞ்சி ராக “வருகலாமோ” – கே.வீ நாராயணசுவாமி அவர்களால் மெருகேற்றப்பட்ட பாட்டு.  என்னுடைய தேவகி பெரியம்மாவுக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி பாடும் "யாராடினார் இனி எவர் ஆடுவார்". இரு வினை பிணிகளை கருவறுத்து விடுகிறேன், பயப்படாதே"- என்று ஒரு audacity பாட்டு.  நந்தனார் என்ற ஒரு character மூலம், அந்த நடராஜப் பெருமானை உருகி உருகி கொண்டாடி நம்மையும் உருக வைக்கிறார்.

இப்போது மெயின் டாபிக்குக்கு வருவோம்:

அந்த மூவர்:

நந்தனார் (திருநாளைப் போவார்)
பெற்றான் சாம்பன்
தில்லை வெட்டியான்

இந்த மூவரும், சிதம்பரத்தை சுற்றி இருந்த ஊரில் இருந்தவர்கள். தன்னுடைய, மனம் தளராத பக்தியினால், தில்லை நடராஜருடன் இரண்டற கலந்தவர்கள்.

கண்ணப்பர், மூவரில் ஒருவரோ என்ற சந்தேஹம் சிலருக்கு உண்டு. அவர் ஒரு வேடுவ குலத்தைச் சார்ந்தவர்.  புலையர் அல்லர். – என்றும் ஒரு தியரி உண்டு

மூவரில் பெ.சாம்பனை  சற்று விரிவாகத்தான் பாப்போமே !

பெற்றான் சாம்பன் :  சிதம்பரத்தில் உமாபதி சிவம் தீக்ஷிதர் என்பவர் இருந்தார். நடராஜப் பெருமானை பூஜை செய்யும் உரிமை கொண்டவர். அவர் தன குருவாக      மறைஞான சம்பந்தர் என்பவரை  கொண்டவர். அவர் ஒரு ஞானி போல் வாழ்ந்து வந்ததால், பல குலத்தவரிடம், கூழ் வாங்கி குடித்து தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவரை குருவாகக் கொண்டதால், உமாபதியார், பலரின் இழிச்சொல்லுக்கு ஆளானார்.

ஆகவே ஊரிலிருந்து சற்று ஒதுங்கி “கொற்றவன் குடி” என்ற இடத்தில், (தற்போது அண்ணாமலைப் பல்கலைகழகம் இருக்கும் இடம்) இருந்தார்.

பெற்றான் சாம்பன் என்ற ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் விறகு வெட்டிப் பிழைப்பு நடத்துபவர். அளப்பரிய சிவ பக்தி உடையவர். உடம்பு முடியாத போது கூட, சிவலோக நாதனை பார்க்க முடியாவிட்டால், அன்று பட்டினி தான். தினம்தோறும் விறகு வெட்டி வந்து, கோவிலில் சேர்ப்பது தான் அவர் வேலை. “துதிக்கின்ற இதழ்களை விட, தொண்டு செய்யும் கரங்கள் உயர்ததல்லவா” இவரின் பணியக் கண்டு மகிழ்ந்த கூத்தன், இவர் கனவில் தோன்றி, தில்லை வாழ் அந்தணர்களால், தீண்டத்தகாதவர், என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, உமாபதியாரிடம் விறகு வெட்டிக்கொண்டு கொடுக்கச் சொன்னார். அவ்வண்ணமே செய்து வந்தார் பெற்றான் சாம்பன். இது உமாபதியாருக்குத் தெரியாது.

ஒரு நாள், நல்ல மழை பெய்ய. சாம்பன், விறகு வெட்டிக்கொண்டு வர முடியாமல் போகவே, சமையல் தாமதாகப் போனது. உமாபதியார், ஏன் என்று வினவ, “நாளும் விறகு கொண்டு வரும் சாம்பன் அன்று வரவில்லை” -என்றார்கள். மிகவும் ஆச்சர்யப்பட்ட, உமாபதியார், சாம்பன் வந்ததும், தன்னிடம் அழைத்து வரச் சொன்னார். மறு நாள், சாம்பன் விறகு கொண்டு வந்தார்.

அவர் இங்கு வருவதற்கு முன், தில்லை அம்பலத்தான், ஒரு பெரியவர் வடிவில் தோன்றி, சாம்பனிடம், எதோ எழுதி ஒரு ஓலையைக் கொடுத்து, அதை உமாபதியாரிடம் கொடுக்கும்படி சொன்னார். வந்தவுடன், அவரை, உமாபதியாரிடம் அழைத்து வர. சாம்பன், விறகு கட்டை கீழே வைத்துவிட்டு, ஒலையை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கி படித்த உமாபதியார், மிகவும் ஆச்சரியம் அடைந்தார். அது இறைவன் ஓலை அல்லவா ? அதில் எழுதி இருந்த வரிகள், கீழே ...


அடியாற்(கு) எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற்(கு) எழுதிய கைச்சீட்டுப்- படியின்மிசை
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை."
  
என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது.


இதன்பொருள்

அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்ஷைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம்.

அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், இறைவன்மேல்பேரன்புகொண்டதனாலும், அவ்வன்பு வெறும் அன்பாக இல்லாது, செயல்படும் அன்பாக ஆகித் தில்லைநடராசனுக்கும், அவரின் அடியாரான உமாபதிசிவத்துக்கும் பலன்கருதாது தொண்டுப்பணியாக மலர்ந்ததாலும் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார். எனவே முத்திபெறத்தகுதி குலப்பிறப்போ, பெரும் படிப்பறிவோ இல்லை, மாறாக அன்பு அவ்வன்பும் எவ்விதப்பலனையும் கருதாத தொண்டாக மாறும்நிலையே முக்கியம்.

இதனைத் தன் ஞானத்தால் உணர்ந்த உமாபதிசிவம் அவருக்கு முறையாக சிவதீக்ஷை செய்து அருள்செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்;

அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார்.

இதற்குப் பிறகு, நடந்த anti-cliamx ஐ பார்ப்போம்

 இதனைக் கண்ட அவர் சுற்றத்தார், உண்மை உணராது, மன்னவனிடம் சென்று, உமாபதிசிவம் பெற்றான் சாம்பனை எரித்துக் கொன்றுவிட்டதாக “போட்டுக கொடுக்க”. மன்னன் அவரை அழைத்து வினவியபோது, அவர் நிகழ்ந்ததைக் கூறினார். சிவதீட்சையின் மேன்மையையும், இறைவன் ஆணையையும் விளக்கினார். அதனை முழுதும் நம்பாத மன்னன், அப்படிஎன்றால் இங்குள்ள வேறு யாராவது ஒருவருக்கு முத்தியளித்துக் காட்டுக என்று கூறினான். அதனைக்கேட்ட உமாபதிசிவம், அங்கிருந்த அனைவரையும் உற்றுநோக்கினார், அவர்களுள் எவர் ஒருவருக்கும் முத்திபெறும் தகுதியில்லை. தகுதியான 'சந்நிதிபாதம்'  பெற்ற நிலை அடைந்தவர் இல்லை என்பதைக் கண்ட உமாபதிசிவம், வருந்தி மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது, அங்கு சிவனுக்கு அபிஷேகம் செயயும் இடத்தின் பக்கத்தில், நாளும் இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனத்தின் நீரை (அபிஷேக நீரை) உண்டு வளர்ந்த அரளிச்செடியே தக்க பக்குவநிலையில் இருந்ததனைக்கண்டார் உமாபதிசிவம். தம் அருட்பார்வையினால் அச்செடியை நோக்க, அச்செடி ஒளிப்பிழம்பாக மாறி விசும்பில் எழுந்து மறைந்தது. அதனைக்கண்ட மன்னனும், சுற்றத்தாரும் உண்மையுணர்ந்து உமாபதிசிவத்தைப் பணிந்து வணங்கினர்.

தில்லை வெட்டியானைப் பற்றி, ஒரு குறிப்பும் இல்லை. அவருடைய பெயரைப் பார்க்கும்போது, தன் தொழிலைச் செய்து கொண்டு, இறைவனிடத்தில் அபரிமிதமான பக்தி கொண்ட இன்னொருவர் என்று சொல்லலாம்

நந்தனார் சரித்திரம் பிரசித்தம், அதனால், விளக்கமாக இங்கு கூறப்போவதில்லை

இந்த மூவரும் தான் கோ.கி பாரதி சொல்லும் மூவர்.


கொசுறு- புலையன் என்ற வார்த்தையை வேறு கோணத்தில் பார்ப்போம்

அப்பர் சுவாமியின் வாக்கிலிருந்து வரும் கீழ்க்கண்ட  வரிகள் அற்புதமானவை

குபேரன், சிவபெருமானின் நண்பன். குபேரனின் செல்வக் குவியல்களை சங்க நிதி, பதும நிதி என்று பிரிப்பார்கள்.

அப்பரிடம், ஒரு ராஜா, ஒரு ஓலையில் “சங்க நிதி, பதும  நிதி” இரண்டும் உனக்குத் தருகிறேன், இந்த மண்ணுலகம் இருக்கும் வரை, மண்ணுலகமும், அதற்குப் பிறகு, விண்ணுலகமும் தருகிறேன்” என்று எழுதி கொடுக்க, அப்பர் ஸ்வாமி ராஜாவிடம் “ஏம்பா ! உனக்கு தெய்வ பக்தி உண்டா” என்று கேட்க, அதற்கு ராஜா “அதேல்லாம் கிடையாது”  என்றான்.

உடனே, அப்பர், அந்த ஓலையை சுருட்டி அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, சற்று தூரம் சென்று பார்த்த போது, அங்கு உடலெல்லாம் தொழு நாயால் பாதிக்கப்பட்டு, மாட்டின் தோலை உரித்து உண்ணக்கூடிய புலையன் ஒருவன் நின்றிருக்க, அவனிடம் அப்பர் ஸ்வாமிகள் சென்று அவனிடம் “ஏம்பா உனக்கு தெய்வ பக்தி உண்டா” என்று கேட்க, அவன் அப்பர் ஸ்வாமியிடம் “அதெல்லாம் இல்லை சாமி, எப்போவாவது “சங்கரா சங்கரா” என்று சொல்வேன்” என்று சொல்ல, தடாரென்று, நெடுஞ்சாண்கிடையாக அவன் காலில் விழுந்து, கீழே கூறப்பட்டுள்ள செய்யுளைக கூறுகிறார்.


சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து, தரணியொடு வானாளத் தருவரேனும், மங்குவார், அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்......

அதற்கு மாறாக,

அங்கமெல்லாம்  குறைந்து அழுது தொழு நோயராய்
ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும், கங்கை வார் சடைக் காந்தர்க்கு அன்பராகில், அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே

இந்கு புலையன் என்பது வட மொழியில் சண்டாளனைக் குறிக்கும். அவன் தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும், கங்காதரனாகிய சிவ பெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார்- அப்பர் பெருமான்.

இந்த அழகெல்லாம், தமிழில் தான் பார்க்க முடியும்

தை புலவர் கீரன் சொல்லக் கேட்கவேண்டும். பட்டையைக் கிளப்பும்வார்.

நடராஜின் பாடல்களைப் பற்றி ஒரு சிறு குறிப்புடன், இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

சிதம்பரத்தைப் பற்றி, மாத்தி யோசிக்கும்போது,  நிறைய பேர், இந்த கோவிலைப் பற்றி பாடி இருக்கிறார்கள்.  பொன்னையா பிள்ளை,  மாரி முத்தாப் பிள்ளை, நீல கண்ட சிவன், பாபநாசம் சிவன் என்று பலர். எனக்குத் தெரிந்து, சிதம்பரதைப் போல், இத்தனைப் பேர் பாடிய க்ஷேத்ரம் வேறு எனக்கு நினைவில்லை.  இதில் முத்து சுவாமி தீட்சிதர், அப்பையா தீட்சிதர் போன்ற ஸம்ஸ்கருத பண்டிதர்கள் வேறு.

பாப விநாச முதலியார் என்று ஒருவர் "நடமாடித் திரிந்த உமது இடது கால் உதவாமல், முடமாகிப் போனதென்று சொல்லுவீரையா ?! என்று ஆச்சரியமுடன், சிறிது நக்கலுடன் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். இவர் எழுதிய வேறு பாட்டு எனக்கு தென் படவில்லை. இதை என் அம்மா, பாட்டி, தாத்தாக்கள் பாடி கேட்டு இருக்கிறேன்

அதில் ஏன் முடமாகியது என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார்

- நெருப்பான மேனியில் திரு நீரை சுமந்ததினால், வாதம் வந்ததனால்
- மார்கண்டேயனுக்கு வக்காலத்து வாங்கி எமனை உதைத்தால், கால் சுளுக்கியதா ?
- சுந்தரருக்காக, திருவாரூரில், பரவை நாச்சியாருக்காக, காதல் தூது நடந்ததால் கால் வலியோ (நடையாய் நடந்தாராம்....)
- அர்ஜுனனுடன் சண்டை போட்டு, காலில் "முட்டி பிசகியதோ"
- தாருகா வனத்தில் அலைந்ததில், முள் குத்தி விட்டதோ...

என்று அடுக்குகிறார். கடைசியில் அபாரமான "கண்ணீர் வர  வழைக்கும், வரிகளில் முடிக்கிறார்

பக்தி செய்யும் பெரியோர்கள், பாப நாசனமாகும் பரம பதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ !! என்று முடிப்பதற்கு முன்பு, அம்பாளைப் வைத்து ஒரு வரி எழுதுகிறார்  பாருங்கள் - அது "டாப் க்ளாஸ்"

"சக்தி சிவகாமவல்லி தன் பாகம் நோகுமெஎன்றே, தரையில் அடி வைக்க தயங்கி நின்றதுவோ !!"

You tube ல், இந்தப் பாடலை காம்போதி ராகத்தில் பல பேர் பாடிக் கேட்கலாம். முடிந்தால் கே.வீ. நாராயணசுவாமி அவர்கள் பாடியிருக்கிறார் கேளுங்கள்.  விஜய் சிவா- சக்தி சிவகாமவல்லி யில் நிரவல் பாடி, பாடியிருக்கிறார்.  ஆஹா... அற்புதம்

சிதம்பரம் க்ஷேத்ரம் போய், சந்நிதி முன்பு நின்று,  இடது காலை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது, அம்பாளுக்கு கால் வலிக்கும் என்றா ? என்று ஒரு கேள்வி கேட்டு,  அவரை உற்று நோக்குங்கள்.  நீங்கள் மெய் சிலிர்க்க - நடராஜப் பெருமான் "ஆமாம்" என்று, ஜடா முடி அழகாக அசைய தலையை ஆட்டுவார்.




Monday 11 November 2019

செம்மங்குடியும் அன்னாபிஷேகமும்


இன்று 12.11.2019 அன்னாபிஷேகம். மயிலாப்பூரில் இருக்கும் எனக்கு, சுற்றி வர இருக்கும் நிறைய சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் பார்க்கும் பாக்கியம் உண்டு. சிகரம் வைத்தால் போல் இருக்கும் கபாலி கோவிலில் கேட்கவே வேண்டாம். இன்று முழுவதும் திமிலோகப்படும். கூட்ட்டம் நெறியும்.

இருந்தாலும் என் மனசில் என்னால் என்றுமே மறக்க முடியாத செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

பாரதி வார்த்தையை சற்று மாற்றிப் பாடினால், “அன்னாபிஷேகம் என்ற போதினிலே, செம்மங்குடி சிவன் கோவில் பிரசாதம் சுவை வந்து “மோதுது” நாக்கினிலே”. என்று சொல்லலாம்.

ஐப்பசி என்றால் எங்கள் செம்மங்குடி வீட்டில் கவலை வந்து விடும், “ஐப்பசி என்றால அடை மழை” எனற வார்த்தையை சற்றும் பொய்க்காமல் மழை கொட்டும். மழைக்காலம் என்பதால், பத்தாயத்தில் (பத்தாயம் என்பது என்ன என்று தெரியாதவர்கள், செம்மங்குடி product  அல்லர், அதனால் அவர்களுக்கு தெரிய வேண்டாம் பத்தாயம், சப்பரம், முத்தாலத்தி- இவையல்லாம் எங்கள் ஊரில் பிரசித்தம்).  நெல் கொட்டி வைக்கவேண்டும், வீட்டில் மழை ஒழுகாமல், கூரையை சரி செய்ய வேண்டும். சாக்கு தைத்து பெரியதாக பண்ணி அதை தரையில்போட்டு ஈரப்பசையை சரி செய்ய வேண்டும், மாடு, கன்று, வைக்கோல் போர், என்ற பல கவலைகள்.

ஆனால் எனக்கு ஐப்பசி பௌர்ணமி அன்று வரும் அன்னாபிஷேகம் மிக முக்கியம். எனக்கு என்றால், நான், நாகராஜன், எதுத்த வீட்டு கணக்கு பிள்ளை அவர்களின் பையன், வாசு, அய்யங்கார் சார் வீட்டுப் பையன், (பல பெயர் மறந்து விட்டது) தட்டாத்தி மூலை வெங்குட்டு, பிச்சை சாராத்து (சேங்காலிபுரம்) சுந்தரராமன் இவர்கள் மல்லையா, நிரவ் மோடி மாதிரி, திடீரென்று வந்து காணாமற் போய் விடுவார்கள்.)

எங்களுக்கு சீனியர், என் மாமா, அப்புவாது ராமதுரை, போஸ்ட் மாஸ்டர் ஆத்து கோபால கிருஷ்ணன், பக்கத்தாத்து எக்கு. ராமமூர்த்தி, சுப்பய்யன், சீனு, மில் காராத்து ஜெயராமன், பிச்சை சார் பையன், ஹெட் மாஸ்டர் வீட்டு ராமமூர்த்தி மற்றும் பலர்- இவர்கள் அன்னாபிஷேக volunteers – (இவர்கள் என் மரியாதைக் குரியவர்கள்)

மண்டகப்படி, - ஹெட் மாஸ்டரோ, கரெஸ்பாண்டெனடோ, பட்டாமனியக்காரரோ – தெரியாது. தெரிந்து என்னமோ சாப்பாடு தான்

என் வீட்டில் சாப்பாட்டு மெனு என்பது சிறிய வட்டம். ஒரு சாஸ்த்ரிகள் குடும்பத்தில் 10 பேர் இருந்து கொண்டு, (இதில் அடிக்கடி வரும் கெஸ்ட் வேறு)  தனக்கு இல்லாவிட்டாலும், தன் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடவேண்டும் என்று பார்த்து பார்த்து சமைத்து என்னை வாழ வைத்த என் தாத்தா பாட்டி வாழ்ந்து என் மனதில் நிறைந்த இடம் 

சாம்பார், ரசம், கறிகாய் வகைகள் வாரத்திற்கு இரண்டு நாள் (அ) ஐந்து நாள் தான்.  மோர் சாதம்,, வெத்தகுழம்பு, மாவடு, கடாரங்காய் ஊறுகாய்.. இவைகளுடன் சந்தோஷமாக இருந்தாலும், அன்னாபிஷேகம் என்றால் எங்களுக்கு சாப்பிட “வடை, சக்கரைபொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம் போன்ற “சித்ரான்னங்கள்” இத்யாதி – கிடைக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு.

வைகுண்டம் வருகிறாயா என்று யாராவது கூப்பிட்டால் ”இருங்கோ, அன்னாபிஷேகம் அன்று சிவன் கோவிலில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்வது போல் இருந்தது என் வாழ்க்கை     

செம்மகுடியில் சிவன் கோவில் அன்னத்தால் அபிஷேகம் செய்வது என்பதோ, அம்பாளுக்கு அபிஷேக ஸகிதம், அன்னத்தால் பட்டுப் பாவாடை போல, ஏகாம்பர சிவாச்சாரியார் அற்புதமாக அலங்காரம் செய்கிறார் என்பதோ, போஸ்ட் மாஸ்டர் மாமா. “மகாதேவா” என்று மனமுருக அழைக்கும் போது கிடைக்கும் அற்புத சுகமும், ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகளும், சிவகுரு மாமா, குமாரு தீட்சிதர் மாமா மற்றும் பல சாஸ்திர பண்டிதர்கள் சொல்லும் மகான்யாசம், ருத்ரம், சமகம் அதில் ஜ்வலிக்கும் அகஸ்தீச்வர், பாவாடை கட்டிய பெண்கள்
“ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி” என்று “செஞ்சுருட்டி” ராகத்தில் பாடுவதோ -– எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. எனக்கு வேண்டியது அன்றைய தினம் இரவு கிடைக்கும் சர்க்கரைப்பொங்கல் தான். 

இந்த scnene ஐ சொல்லியே ஆக வேண்டும். சிவன் கோவிலில் தீபாராதனை முடிந்தவுடன், பிரகாரத்தை சுற்றி வாழை இல்லை போட்டு உட்கார வைத்து விடுவார்கள். கொஞ்சம் லேட் ஆக வந்தால் உங்கள் இடம், துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே போய் விடும். எனக்கே நடந்து இருக்கிறது. ஒவ்வொரு பதார்த்தமாக வரும்போது, திகில் படம் பார்க்கும் பயம் இருக்கும்.  நம் இலைக்கு வரும்போது, பதார்த்தங்கள் இருக்குமா, நமக்கு பக்கத்தது இலையை விட “நிறைய போடுவார்களா”. குறைத்துப் போடுபவரை கேட்டால் “கம்......டி. எல்லோருக்கும் போடா வேண்டாமாடா ?” – என்று திட்டு கிடைக்கும். ஸ்வீட் வந்தால், ஜாக்கிரதையாக இடது கையில் வாங்கி, பத்திரப்படுத்திக் கொள்வேன். அடுத்த நாளைக்கு, அதுதான் என் சொர்க்கம்

இலையில் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட்டு, குளத்தில் கையை அலம்பி, ஒரு வாய் ஜலம் குடிக்கும்போது, வரும் அந்த சுகம் இருக்கிறதே.............அந்த சுகம் -ஆள்காட்டி விரலையும், ஒரு மொபைலையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே விலை பேச முடியும் என்றாலும் இன்று எனக்கு வீட்டில் ஸ்வீட் பண்ணி சாப்பிடும்போதும், வலது பக்கம் Swiggy,  இடது பக்கம் zomato, கபாலி கோவிலை சுற்றி இருக்கும் சரவண பவன் முதல், போன மாதம் திறந்த “வெற்றி விலாஸ் – இவ்வளவு இருந்தும் – - வரவில்லை

எனக்குத் தெரிந்து, பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்று எங்கள் தாத்தா மண்டகப்படியில், மிகவும் பிரமாதமாக நடக்கும். அது இன்றும் அடுத்த ஜெனரேஷனிலும் தொடருகிறது


ராம நவமி அன்று, நீர் மோர், பானகமும், விசிறியும் கொடுப்பார்கள். அதுவும் எனக்கு பானகம் வரும்போது “உத்தரிணி” பானகமும், கொஞ்சம் கரையாத வெல்லமும் கிடைக்கும்.  கலரே இல்லாத மோர் தான்.....



.