Thursday 12 March 2020

நான் புரிந்து கொண்ட இராமாயணம் 1 - செம்மங்குடியில் போட்ட விதை


இராமாயணத்தை நான் பல முறை கேட்டிருக்கிறேன்.  தமிழ் நாட்டில் பிறந்து. தமிழ் தெரிந்த நான் எப்போதும் பெருமைப் படும் விஷயம், இதே போல், ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ மத் பாகவதம் போன்ற பல நல்ல கதைகளை, சிறு வயதிலேயே கேட்டது

செம்மங்குடியிலே, கோபால வாஜபேயாஜி போன்ற பல உபன்யாசகர்களின் கதைகளைக் கேட்கும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது. அவர் தன் பெயருக்கு முன்னால், “உபன்யாஸ கேசரி” என்றெல்லாம் போட்டிருப்பார். பக்கத்து ஊரான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களும் “புடை சூழ” வந்து, பெருமாள் கோவிலில் உபன்யாசம் செய்ததுண்டு.  சின்ன வயதில் ஆழப் பதிந்த இந்த கதைகள், 5 வருடம் கழிந்த பின்னும் இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுதுகிறது என்றால், அது ராமன் என்ற அற்புதமான கதாபாத்திரமும், அதன் உட்கருத்துகளை புரியும்படியும், பிரமிக்கும் படியும் சொன்ன மகான்கள்.

சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர் மூலமாக 9 நாட்கள் சொல்லும் “நவாகம்” – இராமாயண உபன்யாசம் வரகூரில் கோவிலில் வைத்தது மூலம் எங்கள் குடும்பம் கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கொண்டோம். மேலும் செம்மங்குடி தாத்தாவும் ஸ்ரீரங்கத்தில் நவாகம் வைத்து, ஆஞ்சநேயர் போல தீக்ஷிதர் பக்கத்தில் உட்கார்ந்து அணு அணுவாக ரசித்தது என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ராமாயணத்தில் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேட்ட ரசித்த பல நிகழ்வுகளை என்னுடைய “பதிவேட்டில்” இடுவதன் மூலம் கொஞ்சம் புண்ணியம் தேடலாம் என்பது எனது எண்ணம்.

“நேற்று நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்து கொண்டிருக்கும்போது (சுகர் நடைதான்) சு. தீக்ஷிதர் அவர்களின் ராமாயணம் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில்

சீதா கல்யாணம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாளில் “ஆண்டாள் கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம், சீதா கல்யாணம் போன்ற திருக் கல்யாணமங்கள் நடந்த நாட்கள். இவை மற்றுமின்றி, முருகன், ஐயப்பன் இவர்களுக்கும் மிகுந்த நாள்” என்றும் சொன்னார். 

“அன்று ஒரு நாள் தான், ஸ்ரீ ரங்கத்தில் தாயார் வெளியில் வருவார். படி தாண்டா பத்னி என்பது தாயாருக்குத் தான் பொருந்தும். அன்று ஒரு நாள் கர்ப்பக் கிருகத்தில் இருந்துட வெளியில் வந்து அரங்கனாதருடன், எழுந்தருளி காட்சி கொடுத்து விடடு, அன்று இரவே உள்ளே சென்று விடுவார். பிறகு அடுத்த பங்குனி உத்தரம்தான்.  வெளியில் வருவது, வெளிப் பிராஹாரம், வீதி உலா, எல்லாம் நம்மாள்தான் (அரங்கநாதர்). தனிக்காட்டு ராஜா.”

திருச்சியில் 5 வருடம் படித்த எனக்கு, இது நேற்றுதான் தெரியும். 

ஜனகன் ஒரு பெரிய ஞானி, அவருடைய குல குருவான “சதாநந்தரை விட” மிகவும் சிறந்த ஒரு தீர்க்கதரிசி யான அரசன். சீதைக்கு மணம் முடிக்கும் முன், அக்கினி குண்டத்தின் அருகில் சென்று மெளனமாக நின்று 2 நிமிடம் சென்று பிறகு கன்னிகா தானத்திற்கு செல்கிறான்.  அந்த நிமிடத்தில் அவர் நினைத்தது, “ஏ அக்கினியே, இன்று சுயம்வரத்தில் உன் சாட்சியாக என் மகளை இராமனிடம் ஒப்படைக்கின்றேன்.  இன்றொரு சமத்தில் உன் சாட்சியாக சீதையின் ஒழுக்கத்தை, பாதிவ்ரதத்தை, சோதிக்கிற நேரம் வரும். அப்போது அவளை கை விட்டு விடாமல் காக்க வேண்டும்” – என்று பிரார்த்திக்கிறான்.

என்ன ஒரு அருமையான பாத்திரம், அருமையான எண்ணங்கள்.

தொடரும்