Friday 6 May 2022

சௌந்தர்ய லஹரியும் மீனாக்ஷியும் (sankara jayanthi)

 

ஸ்ரீ சங்கர ஜயந்தி (6-4-22) தினமான இன்று, கொஞ்சம் அம்பாள் தியானம். பகவத் பாதாளின் அற்புதமான சௌந்தர்ய லஹரியில் இருந்து சில பகுதிகளை ஸ்புரிப்போம்.. 

இன்று ஆதி சங்கரரின் நினைவாக அவரின் சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகத்தை எடுத்து எழுவது எனக்கு பெரும் பாக்யம். சௌ. ல ஆதி சங்கரரின் முக்கியமான ஒரு படைப்பு. அதனால் தான் அவர் அஷ்டோத்தர நாமத்தில். “சௌந்தர லஹரி முக்ய பஹூ ஸ்தோத்ர விதாயகாய நம:” என்று இருக்கிறது போலும். அபிராமி அந்தாதி என் சிந்தையுள்ளே” என்று அபிராமி பட்டர், சௌ.லஹரியின் சாரத்தைப் பிழிந்து கொடுத்து இருப்பதும், தமிழ் கூறு நல்லுலகுக்கு கிடைத்த பெரும் பாக்யம்.

அம்பாளின் பெருமையை யுகம் யுகமாக சொல்லி ஓய்ந்த பாடில்லை. அங்கே மூக கவி “உலக மக்களின் தாபங்களை ஒரு நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் அகற்றிக்கொண்டு, அருள் புரிகிறாள் என்பதை – “லோகானாம் சம்க்ஷனமாத்ர சம்ஸ்மரனதஹ சந்தாப விச்சேதினி” (ஸ்துதி ஸதகம் 12) என்கிறார்

ஆதி சங்கரரின் படைப்புகளில் எனக்கு சுப்ரமண்ய புஜங்கமும் மிகவும் பிடித்தது. முருகன் தமிழ் கடவுள் என்பதாலோ, அந்தக் காலத்தில் ஒரு பழ மொழி உண்டு, சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமண்யர்க்கு மிஞ்சின தெய்வம் இல்லை” என்பதாலோ – தெரியாது.

பகவத் பாதாள் நமக்கு அளித்த ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். நாம் அவரை தினமும் ஸ்‌மரித்தாலே போதும்.

என்னதான் எங்கள் ஊர் காபாலி ஜம் என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு, அதிகார நந்தி மேலோ, தேரிலோ பவனி வந்தாலும், அவர் இட்டுக்கொள்ளும் வீபூதி என்னவோ, கற்பகத்தின், பாத தூளி தான் என்று, சௌ. லஹரியின் இரண்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லி விடுகிறார் (ஹர: சம்க்ஷூப்த ஏனம் பஜதி பசிதோத்தூலன விதிம்)

சமீபத்தில் அனந்த ராம தீக்ஷிதர் அவர்களின் மறு அவதாரம் என்று நான் கருதும் ஸ்ரீ. சுந்தர் குமார் அவர்களின் ஸ்ரீ மத் பாகவதம் உபன்யாசம், என் அருமை சகோதரராக பாவிக்கும். நங்கநல்லூர் ஸ்வாமிநாதன் அவர்களின் வீட்டில் நடந்தது. அதில் மீனாக்ஷி யைப் பற்றி அவர் குடுத்த சில விஷயங்களை தான் கீழே பகிர்ந்து கொள்கிறேன். அது ஆதி சங்கரரின் சௌ. லஹரி யாக அமைந்தது நாம் செய்த பாக்யம்.

லலிதா சகஸ்ரநாமத்தில் மீனாக்ஷி பெயர் வரவில்லை என்பது அதை ஊன்று படித்து, கவனித்து இருப்பவர்களுக்குப் புரியும். ஆனால் மறை முகமாக, அபர்ணா சண்டிகா” என்ற ஸ்லோகத்திலும், வக்த்ர லக்ஷ்மி பரீ வாஹ சலன் மீனாப லோசனா” என்ற வரிகளிலும் காண்பித்து இருக்கிறார்.

சௌ.ல – யில் மீனாக்ஷி யின் பெயர் வரவில்லை என்பதும் அதை படித்தவர்களுக்கு தெரியும்.  ஊன்று படிதவர்களுக்கு 56 வது ஸ்லோகத்தில் மீனாக்ஷியின் கண்களை வர்ணிப்பதன் மூலம், மதுரைத் தாயை மறை முகமாக வர்ணிக்கிறார், பகவத்பாதர். 

முதலில் தவ அபர்ணே” என்று ஆரம்பிக்கிறார். அபர்ணா என்பதன் அர்த்தம் “எவர்க்கும் கடன் படாதவள்”, பார்வதியாக தவம் செய்த போது, இலைகலைக் கூட உண்ணாமல் தவம் செய்தவள்” என்றும் பொருள். பகவத்பாதர், மிக அருமையாக ஒரு ஹாஸ்யமான உபமானத்துடன் மூலம், இந்த ஸ்லோகத்தை அருமையாக கொண்டு போகிறார்.

கொஞ்சம் விலகி ஒரு விஷயத்தைப் பேசலாம். ஒரு அழகில்லாத பொருள், அழகான பொருளுடன் சேரும்போது அதுவும் அழகாகி, மிளிரும். அதை நாம் எப்படி காட்டுகிறோம் என்பது பொருள். இரண்டு உதாரணம் இப்போது பார்ப்போம்:

குருக்ஷேத்ர போரில், கிருஷ்ண பரமாத்மா, மிகவும் லாவகமாக தேரை ஒட்டிச்சென்று, அர்ஜுனன் போர் செய்வதற்க்கு உதவியாக இருக்கிறார். அப்படி ஓடும்போது வரும் சிரமத்தால், அவர் உடல் முழுவதும் முத்து முத்தாக வேர்த்து விட்டு இருக்கிறது. முக்கியமாக, நெற்றியில் பொட்டு போட்டாக  அந்த வேர்வை முத்துக்கள் தெரிகின்றன. அந்த வேர்வையில், குதிரை குளம்பு மண்ணில் பட்டு, அந்த மண் துகள்கள், மேலே கிளம்பி, கிருஷ்ணணின் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது, மண்ணின் நிறத்தை ஒத்து, பகவானுக்கு முத்தங்கி சேவை, ஸ்ரீ ரங்கத்தில் செய்வார்களே, அது போல இருக்கிறது.

இதை காளிதாசன் ஒரு உவமையுடன் அருமையாக விளக்குகிறார். குளத்தில் பாசி இருக்கிறது. அது ஒரு அருவருப்பான வஸ்து. குளத்தில் இறங்கி அது நம் காலில் பட்டால் உடனே பிடிக்காமல் தள்ளி விடுவோம். அந்த பாசி குளத்தில் ஏற்படும் அலையால் தள்ளப்பட்டு, குளத்தில் நடுவே உள்ள தாமரையின் கீழே தண்டோடு ஒட்டிக் கொண்டுவிடும். அப்பாது அது பாக்கும்போது, தாமரை மலருக்குக் கீழே இலை போன்று அழகாக இருக்கும். இதுதான் அழகில்லாத..... அழகான....சேரும்போது...வரும் அழகு.

இங்கே சங்கரர். 56 வது ஸ்லோகத்தில். அம்பாளின் கண்கள், காது வரை நீண்டு, காதிடம் கோள் சொல்கிறது. (போட்டுக் குடுக்கிறது என்று இன்றைய புது மொழியில் சொல்வதுண்டு). இதை லக்ஷ்மிதரர், தன் வியாக்யானத்தில், இப்படிக் கூறுகிறார்.

அபர்ணே, பார்வதி, உன் கண்கள், காதுகளிடம் சென்று ரகஸ்யம் பேசி, தன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை மறைத்து கோள் சொல்லுகின்றன.

என்ன கோள் சொல்கின்றன என்பதை அருணா மோதினீ இன்னும் விளக்குகிறது:

“தேவி, ஈடிணை அற்ற அழகியான உன்னைச்சார்ந்த எங்களுடைய அழகை இந்த மீன்கள் பரிகசிக்கின்றன. எம்மை விட இதுதான் அழகாம். எங்களுக்கு துரோகம் செய்கின்றன. எங்களுக்கு துரோகியான தாமரைகளில் எப்போதும் லக்ஷ்மி வசிப்பதால், தாமரையும் எங்களுடன் போட்டி போடுகின்றன. உன்னைச் சார்ந்தவர்களுக்கு. துரோகம் விளைவிக்கின்ற அவர்களுக்கு நீதான் தண்டனை தர வேண்டும். இனி இதை கவனியாதிருப்பது தவறு” எனக் கோள் சொல்கின்றன.

இதை மீன்கள் கவனிக்கின்றன. இப்படி கோள் சொல்லுவாளோ (கண்) என பயந்து மீன்கள் நீரின் அடியில் வளைய வருகின்றன. லக்ஷ்மியும் விடியும் வரை பொறுத்து இருக்க விரும்பாமல் தாமரை மொட்டின் மீதமர்வதை விட்டு பயந்து இரவில் எவரும் அறியாதபடி, அல்லியின் மொட்டைப் பிளந்து, அதில் இரவு முழுவதும் தங்கி, காலையில் அதனை விட்டகன்று, தாமரையிடம் பயந்தே செல்கிறாள்.

இதை “ஆனந்தக்ரியா” இன்னும் அழகாக வர்ணிக்கிறது.

அரசரின் காதுகள் அருகே நின்று, ஒருவனைப் பற்றி தவறாகக் படும்படி கோள் சொல்பவரிடம், பயந்து, நீர் மடுவில், மூழ்கி மறைந்து, வாழ்பவரின் நிலை, பெண் மீனுக்கு நேர்ந்துள்ளது.

தாத்பர்ய தீபிணி இப்படி சொல்லி முடிக்க்றது:

“தேவி, அபர்ணே, உனது காதுகளில் கோள் சொல்லுகின்ற கண்கள் கூறுகிற ரகசிய செய்தியில் பயந்த மீன்கள் கண்கள் மூடுவதில்லை. கண்கள் விரும்பிகின்ற அழகு அல்லிப் பூக்களிடமும் உள்ளது. அல்லீயும் இரவில் மலர்ந்து, பகலில் மூடிக் கொள்கிறது.

மீனாக்ஷியின் கண்கள், மீன்கள் இவற்றின் காரணமாக, மதுரையில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் இருப்பதில்லை என்றும் ஒரு செய்தி உண்டு.

சிருங்கேரி பெரியவா சொன்னது போல் ஆதி சங்கரர் இல்லை என்றால் இன்று நாம் படிக்கும் பல ஸ்லோகங்கள் இல்லாமல் போய் இருக்கும்.

அதுவும் கடந்த 2 வருடங்களாக, கொரொனா போட்ட போடில், நம் மனதிற்க்கு அரு மருந்தாக இருந்தது, பகவத் பாதாளின் “ஆயி கிரி நந்தினியும், கனகதாரா ஸ்தோத்ரமும், சுப்ரமண்ய புஜங்கமும், மற்றும் இது போன்ற ஸ்லோகங்கள் தான்.