Tuesday 8 February 2022

ஒரு தமிழனின் பார்வையில் – லதா மங்கேஷ்கர்

 

லதா மங்கேஷ்கர் மறைவு வட இந்திய சினிமா உலகத்தில், ஏன் உலகம் முழுதும் உள்ள இந்திய ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு.

சங்கீதம் என்பது ஒரு பெரிய சக்தி. சினிமா பாடல்கள் இன்னும் ஒரு படி மேல். 40-50 வருடமாக மிகச் சிறந்த பாடல்களைப் பாடி நம்மை மயக்கிய குரல் அவரின் குரல்.

நான் துபாயில் இருந்தபோது, காரில் ரேடியோவில் வரும் பாட்டுகளில், ஹிந்தி பாடல்கள் தான் அதிகம். அதில் நிறைய பாடல்கள் அவரின் குரலில் கேட்டு மயங்கி இருக்கிறேன். துபாயில் தான் அவரில் பாடல்களை கேட்கும் பாக்கியம் என்று கூடச் சொல்லுவேன். வசீகரமான குரல்.

நான் கிராமத்தில் பிறந்து. திருச்சியில் படிக்கும்போது ஷோலே என்று ஒரு ஹிந்தி படம் வந்தது.  கெயிட்டி தியேட்டரில் 100 நாட்கள் மேல் ஓடிய அந்த படத்தில், “ஜப் தக் ஹை ஜான்” என்று ஹேம மாலினி பாடும் ஒரு பாடல். நான் மிகவும் ரசித்த அந்தப் பாடல் தான்.  நான் லயித்து கேட்ட ல.ம அவர்களின் முதல் பாடல்.  பிறகு பெங்களூரு வந்து, பிறகு மும்பை, துபாய் போன்ற பல இடங்களில் வேலை செய்த போது, நிறைய பாடல்கலைக் கேட்டு ரசித்து இருக்கிறேன்.

நௌஷாத், எஸ்.டி பர்மன், சலீல் சௌத்ரி, மொஹம்மத் ரபி, கிஷோர் குமார், முகேஷ் போன்ற பல ஜாம்பவான்களுடன் பல அற்புதமாக எழுதப்பட்ட பாடல்களை சேர்ந்து பாடி, பாரத் ரத்னா வாக மிளிர்ந்தவர். அவரே எனக்கு விருதுகள் வேண்டாம் என்று அன்போடு மறுக்கும் அளவுக்கு விருதுகள்.

ஆனால், தமிழ் நாட்டில் லதா மங்கேஷ்கர் பிரபலமாக இருந்தாலும், வட இந்திய மக்களைப் போல் அவ்வளவு பிரபலமாக இல்லை. தமிழ் நாடு ஒரு ஆச்சர்யமான மாநிலம். ரேணிகுண்டா தாண்டினால்தான் ஹிந்தி. இங்கு நாம் ஹிந்தியை முதலில் இருந்தே வேண்டாம் என்று உதறியதால் கூட இருக்கலாம். தமிழ் சேனல்களில் கூட இவர் மரணம் ஒரு சாதாரண மரணமாகத்தான் பார்க்கப்பட்டது.  

தமிழ் நாடு எப்படி என்றால், வந்தாரை வாழ வைக்கும் மாநிலம். நம் மாநிலத்தை தேடி வந்து, வியாபாரம் பண்ணினாலோ, பாட வந்தாலோ அவர்களை வாழ வைக்கும். ஒரு பி. சுசீலா என்ற ஒரு அற்புதம்” இங்கு அருமையான பாடல்களின் மூலம் நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிறகு, வேறு யாரையும் நம் மனதில் வைக்க தமிழனுக்கு மனம் வரவில்லை – என்றே தோன்றுகிறது. மேலும். கர்நாடக சங்கீதத்தில். ஒரு எம்.எஸ் சுப்புலக்ஷ்மி, டி,கே பட்டம்மாள், எம். எல் வசந்தகுமாரி போன்ற சங்கீதா சிகரங்கள். அதற்க்கு முன்பே என்.சீ வசந்தா கோகிலம். ராதா ஜெயலக்ஷ்மி போன்றவர்கள். நமக்கு, பெண்கள் பாடிய சங்கீததில் ஒரு குறைவே கிடையாது.

இங்கு சுசீலா அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். 1964 ல் வீணை எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த பொம்மை திரைப்படத்தில் “எங்கோ பிறந்தவராம்” என்று ஒரு பாட்டை ராக மாலிகையில் பாடி இருப்பார். அதில் ஒரு ஹுசேனி ராகத்தில் ஒரு சரணம் வரும். மனதை வருடும் குரல் அது.

அதற்க்குப் பிறகு, எஸ். ஜானகி, வாணி ஜெயராம். எஸ். பி ஷைலஜா என்று பல பாடகர்கள் வந்தாலும் என்னும் சுசீலா அவர்களின் குரல் மறக்க முடியாத அளவுக்கு நம் மனதில் இடம் பெற்று இருக்கிறது. பி.சுசீலா தான் நம்மூர் லதா மங்கேஷ்கர்.

அங்கு ல.ம க்கு பிறகோ, சம காலத்திலோ சிறந்த பாடகர் மிக சிலரே. இங்கு நிறைய.

அத்தான் என்னத்தான் (பாவ மன்னிப்பு) படத்தின் பாடலை கேட்ட பிறகு, இப்படி ஒரு பாடல் எனக்குக் கிடைதால், நான் தமிழ் நாட்டிலேயே இருந்து விடுகிறேன் என்று சொன்னவர் இவர்.

சில தமிழ் பாடல்கள் பாடி இருந்தாலும், “வளையோசை கல கல வென” என்ற பாடல் மிகவும் அருமையான ஒன்று. அது இளையராஜாவின் அருமையான இசையமைப்பு. கமல் போன்ற ஒரு அருமையான கலைஞனின் உருவாக்கம். எஸ். பி. பாலசுப்ரமண்யம், லதா மங்கேஷ்கர் மீது மிகவும் மரியாதை வைத்து இருந்தால். ஒரு மேடை கச்சேரியில், அவரில் காலை தொட்டு வணங்கி பிறகு பாட ஆரம்பிப்பார்.

வாணி ஜெயராம் ஹிந்தி படத்தில் பாடுவதற்க்கு, முட்டுக் கட்டை போட்டார் என்று அப்போது பல கதைகள் சொல்வது உண்டு.

ஆனால். லதா மங்கேஷ்கர் அவர்கள் ஒரு சகாப்தம். பணிவு, அடக்கம், ஒவ்வொரு பாட்டு பாடுவதற்க்கு முன்பு அவர் எடுத்துக் கொண்ட அக்கறை. தன் சக பாடகர்களுடன் இருந்த ஒரு சகோதர பாசம், இவைகள் அவரை மிகப் பெரிய உச்சத்தில் கொண்டு வைத்தது என்பது உண்மை.

ஏ.ஆர் ரஹ்மான் அவரை பற்றி கூறியது, இந்த generation லிலும், அவர் எவ்வளவு, மதிக்கப் பட்டிருந்தார் என்பது தெரிகிறது.

எனது மனதில், இன்றும் “மிலே, சுர், மேரா தும்ஹாரா” என்ற ஒரு தேச பக்தி கீதத்தில், பல பேர் பாட, அவர் கடைசியில் “ஹமாரா” என்று முடிப்பார்.

அவர் எப்பவுமே “ஹமாரா” லதா மங்கேஷ்கர் தான். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.