Friday 21 January 2022

சொல்லின் செல்வன்

 

அனுமான்

அனுமான் முதன் முதலாக ராம லக்ஷமணர்களை சந்திக்க வருகிறார். இந்த நிகழ்ச்சியை சற்று சிந்திப்போம்.

அனுமான் நமக்கு management கிளாஸ் எடுக்கிறார் !!!!

நாம் முதலில் ஒருவரை, முதல் தடவையாக சந்திக்கும்போது என்ன செய்வோம்:

·         அவர்களை பற்றி யாராவது நமக்கு முன்பு சொல்லி இருப்பார். அதை மனதில் வைத்து அவரைப் பற்றி நமது மனதில் ஒரு ஐடியா கிடைக்கும்.

·         அவரை பார்த்த ஐந்து நிமிடத்திலேயே அவரைப் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும்.

·         அவருடைய நண்பர்களின் மூலமும் அவரை பற்றித் தெரியும்.

இப்படி ஒரு preparation உடன் செல்லும்போதே, சில சமயங்களில் சொதப்புவோம். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்போம். அவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்.... இப்படி பல சத்திய சோதனைகள் !!!!

 

ஆஞ்சநேயரைப் பற்றி, எவ்வளவு எழுதினாலும், இன்று முழுவதும், என்றும் ரசிக்கலாம். அவர் சத்குருநாதர். ஒரு குரு தான், நம்மையும், இறைவனையும் இணைக்கிறார். அவர் ஒரு பாலம். சீதா என்ற ஜீவாத்மாவை, ராமன் என்ற பரமாத்மாவுடன் இணைத்தவர் அவர்தானே. அதால் தான் அந்த காண்டத்திற்க்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார்கள் !!!!  வீட்டில் சுந்தர காண்டம் பாராயணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். ஆஞ்சநேயர் நம் கூடவே இருப்பார்.

நாமும், நித்யம் பரமாத்மாவுடன் இணைவதற்க்கு படாத பாடு படுகிறோம். குருவைத்தேடி துவண்டு போகிறோம். சுந்தர காண்டம் படித்தால், ஆஞ்சநேயர் வந்து நம்மை குருநாதரிடம் அழைத்துப் போவார். அவரே குருநாதராகவும் வருவார்.

கமபன் சொல்லும்போது- சீதை, அனுமானை, “அருளின் வாழ்வே” என்கிறாள். இதற்க்கு “அருளை வாழ வைப்பவனே (அ) அருளே வாழாக இருப்பவனே (அ) அருளுக்கு வாழ்வு தருபவனே- என்று பல பொருள்களை கூறலாம்.

செய்யுள் நடை - “அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே, அருளின் வாழ்வே” என்று போகிறது.

சீதை தற்கொலைக்கு முயன்றால். அதை தடுத்து நிறுத்தியதால், அனுமன் தாய் தந்தை ஆனான்- என்றும் கொள்ளலாம்.

சீதை- “நீ சிரஞ்சீவியாக இருப்பாய்.” என்கிறாள். “நான் குற்றமற்ற குணம் உள்ளவள் என்பது உண்மையானால். ஒர் ஊழிக்காலம் பகலாக மாறி, இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும், இன்று போல் நீ இருப்பாய்” என்கிறாள். 
இங்கு குரு பரமாத்மாவை தேடி வரும் அறிய காட்சியை
, வால்மீகி எப்படி எடுத்துக் காட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.

சொல்லின் செல்வன் என்று கம்பன் காட்டும் அனுமான் (கிஷ்கிந்தா காண்டம் ஆரம்பம்) எப்படி ஒரு அந்தணர் வேஷம் பூண்டு ராம லக்ஷ்மணர்களிடம் வந்து பேச ஆராம்பிக்கிறார். (முதலில் முன் பின் தெரியாதவர்களிடம் பேசும்போது எப்படி “பாசிடிவ்” ஆக பேச வேண்டும் என்பதை ஒரு வானரம் நமக்குக் காட்டுகிறது)

வால்மீகி சொல்கிறார்- “அனுஷ்டானத்தில் உள்ளபடி வரவேற்று பிறகு பேசுகிறார். (பிராமணர் வேஷம் பூண்டு இருக்கிறார் இல்லையா) – அதனால் வேதம் இங்கு வருகிறது.

முதலில் அவர்களுடைய குணாதிசயங்களை புகழ்ந்து பேசுகிறான், பிறகு அவர்களின் நோக்கத்தைக் கேட்கிறான் ....

·         அபூர்வமான உடல் வண்ணம் பெற்றுள்ள தாங்கள் இருவரும் இந்த இடத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?

·         மிகவும் மன உறுதி படைத்தவர்கள் போல காணப் படுகிறீர்கள். சிங்கத்தைப் போன்ற பார்வை. சிங்கத்தைக் காட்டிலும் அதிக பாராக்ரமம். இந்திரனுடைய வில்லைப் போன்ற ஒரு வில் வைத்திருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் எதிரிகளை அடக்க வல்லவர்கள் என்று தெரிகிறது.

·         தாமரையிதழ் போன்ற கண்களை உடையவர்கள், தற்செயலாக தேவ லோகத்தில் இருந்து இந்தப் பிரதேசத்திற்க்கு வந்து விட்டவர்கள் போலத் தோன்றுகிறீர்கள்.

·         எதிர் பாராத விதமாக பூமிக்குள் வந்துவிட்ட சூரிய சந்திரர் போல இருக்கிறீர்கள்.

·         எல்லா அணிகலன்கள் அணியத்தக்க உடல் உறுப்புகளை கொண்ட நீங்கள் ஒரு அணிகலன் கூட அணியவில்லை !!

·         அம்பு, வில் இவர்களைப் பற்றியும் அனுமான் புகழ்ந்து தள்ளுகிறார்.

அனுமனின் முதல் சந்திப்பில், அவன் சொன்ன வார்தைகளை கவனித்தால் தெரியும். ஒரு பெரிய அறிவு ஜீவி, ஆனால் அதை எவ்வளவு அடக்கமாக பேசுகிறான் என்று மேலே பார்த்தோம்.

இதற்க்கு ராமன், இலக்குவனிடம் சொல்லும் பதில் “இவன் மகாபலம் பொருந்திய சுக்ரீவனின் அமைச்சன். தங்களுக்கு க்ஷேமம் உண்டாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் வந்திருக்கிறான். சுமித்திரை செல்வனே, இனிய நட்பு தோன்றும் சொற்களால் பதில் கூறுவாயாக !    ரிக் வேதம் படிக்காத, யஜுர் வேதம் பயிற்சி பெறாத, சாம வேதம் பயிலாத ஒருவனால், இவ்வளவு உயர்தரமான சொற்களை கொண்டு பேச முடியாது”

ராமனின் கணிப்பைப் பாருங்கள்.

எப்படி ராமன், ஒரு சராசரி மனிதனிடம் இருந்து விலகி, ஓர் தனித்துவமிக்க, ஒரு உதாரண புருஷனாக இருக்கிறான் என்பதைப் பர்ர்ப்போம்:

நம்மைப் பற்றி ஒருவர் புகழ்ந்து பேசினார் என்றால் நாம், “என்ன சார், ரொம்ப புகழாதீங்க, இதற்கெல்லாம் நான் லாயக்கே இல்லை என்று ஒரு பதில் சொல்லுவோம்.  இல்லாவிடில், “சார் நான் அதுவும் பண்ணி இருக்கேன், இங்கேயும் பண்ணியிருக்கேன், என்று அவர் மறந்ததை எல்லாம் சுட்டிக் காட்டி “தற்பெருமை” யை பறை சாற்றிக் கொள்வோம். மூன்றாவதாக, “இவன் நம்மிடையே ஏதோ காசோ, பணமோ, வேறு ஊதவியோ எதிர் பார்த்து வந்திருக்கிறான்” என்று ஜாக்கிரதையாக இருப்போம்.

சத்தியமாக, எதிராளியை புகழ்ந்து பேசவே மாட்டோம். ஆனால், ராமன் எப்படி மாறுபட்டு, தன்னைப் பற்றிப் பேசியதை லட்சியம் செய்யாமல், எதிராளியை புகழ்ந்து தள்ளுகிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

  

Tuesday 18 January 2022

ஸ்ரீ. ராஜகோபாலன் - செம்மங்குடி நினைவுகள்

 

ப்பிம்ருதி பார்க்கிறேன் 

ஸ்ரீ. ராஜகோபாலன் 

“செம்மங்குடி நற்பணி மன்றம் கும்பாபிஷேக மலருக்காக எழுதி அனுப்பவும்” என்று சொன்னபோது நினைவுகள் ஐம்பது வருடத்திற்குப் பின் சென்றது. எங்கே ஆரம்பிப்பது.  எதை விடுவது என்று. இது பல மலர்கள் சேர்ந்த மலரும் நினைவுகள்

2000 ம் வருடத்திற்குப் பிறகு, தலைமுறை, தலைமுறையாக இருந்த வீட்டை, கனத்த மனதுடன், விற்று சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி செம்மங்குடி செல்வது குறைந்துவிட்டது. ***. உத்யோகம், பதவி, என்ன செய்வது ?

பகவான் அனுக்ரஹம் அப்படி. ஆனாலும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் கும்பாபிஷேகம் மற்றும் சிவன் கோயிலில் ஒரு சில விசேஷங்களுக்கு சென்று வருவேன். எல்லாவற்றையும் விட புரட்டாசி சனிக்கிழமை எனக்கு எப்பவுமே ஒரு ஸ்பெஷல் தான்.

7 ம் வயதில் உபநயனம், எலிமெண்டரி ஸ்கூல். பிறகு ஹை ஸ்கூல். வாழ்க்கையில் படிப்பு மிகவும் அவசியமாகிவிட்டது. அந்தக் காலத்தில் ப்ரோஹிதர்களுக்கு வருமானம் இப்போது போன்று இல்லாததால் அப்பாவின் ஆசைக்கு மாறாக அம்மாவினால் படிப்புக்குத் திசை திருப்பப்பட்டு படிப்பில் ஒரு பிடிப்பு வந்து விட்டது.  பள்ளியில் SSLC பரீட்சையில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதும் அதற்க்குக் காரணம்.  சாஸ்திரிகள் பையன் என்பதாலும் வேறு ஒரு கேளிக்கைகளுக்கு இடம் கொடுக்காத ஒரு வாழ்க்கை. சாயங்காலம் கோவில்களுக்கும் போயே ஆக வேண்டும். அப்படித்தான் பெருமாள் மீதும் கோயில்கள் மீதும் ஒரு ஈர்ப்பு. எனது குடும்பத்தில் நான் மட்டும் செம்மங்குடியில் பிறந்தேன். நான் பிறப்பதற்காக ,என் அப்பா புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் ஆரம்பித்தார் என்றும் அடுத்த வருடமே நான் செம்மங்குடியில் பிறந்ததாக (மற்ற சகோதரிகள் சிதம்பரத்தில்)  அறிந்ததால் கூடுதல் கவனம். மூலவர் வரதராஜப் பெருமாள் என்றாலும் உற்சவர் சந்தான கோபாலன் என்று அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அதிலும் என் தந்தையார், புரட்டாசி உற்சவத்திற்க்காக பணம் கேட்டு POST CARD எழுதி பல பேர்களுக்கு அனுப்புவார். அதை எங்களையும் எழுதச் சொல்லும்போது வெறுப்பாக இருந்தாலும், இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது, “பணம் இல்லாதபோதும், உற்சவங்கள் நடத்துவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் ?” என்ற எண்ணம் வருகிறது, பணம் அனுப்ப இயலாதவர்களுக்கும் பிரசாதம் அனுப்புவார்.  இன்று பணத்திக்காக மிகவும் கஷ்டப்பட வேண்டாம் என்றாலும், பெரியவர்கள் போட்ட ராஜ பாட்டையில் சுகமாக பயணிப்பதை எப்படி மறக்க முடியும் ?

அப்பா என்னை எக்காலத்திலும்  சனிக்கிழமை ஊற்சவத்தை நிறுத்தக்கூடாது என்றும் சங்கல்பம் “ஸ்வர்ணபுரி மஹா ஜனங்களுக்காக”  என்று செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ஏற்ப எல்லாருடைய ஈடுபாட்டினால் இன்று வரை சிறப்பாகப் பெருமாள் நடத்த்திக் கொண்டு இருக்கிறார்.

சித்திரை மாதம் ஒன்றாம் நாள் பஞ்சாங்க படனம். பனை ஓலை விசிறி, சுண்டல் , மறக்கமுடியுமா? தேவுடு மாமாவாத்து உபயம் அது. புரட்டாசி சனிக்கிழமை  அலங்காரம்  பெரிய விதவான்களின் கச்சேரி மற்றும் உபன்யாசங்கள். ஸ்ரீ வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதரின் பஜனை.  உபசாரமு” என்கிற தியாகராஜர் கிருதிக்கு அவர் ஆடும்போது பெண்கள் வெட்கப்பட வேண்டும். கல்யாண பட்டாச்சாரியார் அவர்கள் ஒவ்வொரு ஏகாதசியிலும் ராமாயணம் உபன்யாசம் நம் பெருமாள் கோயிலில் ஆரம்பித்தார் என்று நினைக்கிறன்.

ஸ்ரீ. பட்டாலு மாமா வின் வேங்கடாசலபதி மற்றும் பார்த்தசாரதி அலங்காரங்கள் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. உற்சவ அலங்காரம் மிகவும் அருமையாக இருக்கும். அந்த உற்சவருடன் வீதி உலா.  பிறகு பிராஹாரத்தில் ,அனைவருக்கும் புளியோதரை, வடை  சுண்டல். பசுமை (காரம்) நிறைந்த நினைவுகள். அரசவனங்காடு சந்தானம் மாமாவை நினைவு கூறவேண்டும். அவரும் எல்லா வீட்டிற்குச் சென்று அரிசி பருப்பு எல்லாம் வாங்கிக் கொன்டு வருவார். கார்த்திகை மாதம் சொக்கப்பானை. சிவன் கோயிலுக்கு பிறகு பெருமாள் கோயில் அதை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து விளக்கு ஏற்றி சாப்பாடு. சொக்கப்பானையில் வெடி போட்டு வெடிக்கும் போது ஒரு அல்ப/அலாதி  திருப்தி

மார்கழி மாதம் காலையில் 5 மணிக்கெல்லாம் பாட்டு போட (இசைத்தட்டு) ஆரம்பித்து விடுவார்கள். டி.எம்.எஸ் ஸின் “திருப்பதி மலைவாசா” வும் சீர்காழி யின் “சின்னஞ் சிறு பெண் போலே” வும் “மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்” என்று கடினமான ஷியாமளா தண்டகத்தை, மின்னல் வேகத்தில் பாடும் டி.கே.பட்டமாளின் வசீகரக் குரலும், MLV யின் திருப்பாவை, சிவானந்த விஜயலக்ஷ்மி யின் அருமையான பாட்டுக்கள், ஆண்குரலில் திருவெம்பாவை, மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகளின் சுப்ரமண்ய புஜங்கம்…..

எதைச் சொல்ல, எதை விட. காலையில் இந்தப் பாட்டுக்களால் தூக்கம் கலைந்து எழுந்து, மார்கழி மாதத்தை திட்டிவிட்டு, பிறகு முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்குவது  அலாதி திருப்தி. மேலத்தெரு, கீழத் தெரு பஜனை. “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற தேவாரப் பாட்டு, அதில் தவறாகப் பாடுவர்களுக்கு உடனே திட்டு கிடைக்கும். பஜனை முடிந்தவுடன் சுட சுட பொங்கலும் கிடைக்கும்.  இப்போது  நினைத்தாலும் சுகம்..

எப்படி இசைத்தட்டிலிருந்து பாட்டு கேட்கிறது என்று HMV விளம்பரதில் ஒரு நாய், ஸ்பீக்கரின் வாயைப் பார்த்துக் கொண்டு இருக்குமே, அதுபோல் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு இசைத்தட்டுக்கும், அது இசைப்பதற்க்கு, ஒரு ஊசி இருக்கும். அதற்க்கு ஒரு டப்பா இருக்கும். சின்ன பென்சில் கூட வைக்க முடியாத அந்த டப்பாவிற்கு அடித்துக் கொள்வோம்.   மொத்தத்தில் செம்மங்குடி பெருமாள் கோயில் அனுபவம் சொல்லி மாளாது.  மார்கழி மாதம் முடிந்தவுடன் கடைசி நாளில் சினிமா பாட்டும் போடுவார்கள்.

ஸ்ரீனிவாஸ பாட்டச்ச்சார்யார் பற்றிச் சொல்லவில்லை என்றால் இது முழுமை ஆகாது. Dedication என்னும் பதத்திற்கு ஒரு உதாரணம். விடியற்காலை முதல்  அர்த்த ஜாமம் வரை பிரசாதம் எடுத்துக்கொண்டு போவதே அழகு. தோள் பட்டையை விட்டு பிரசாதம் கிழே இறங்காது. அவரால் தான் பெருமாள், பெருமாளால் தான் அவர். பிரிக்க முடியாத பந்தம், பூமா மாமியின் புளியோதரை மிகவும் பிரமாதமாக இருக்கும். தில்லானா மோகனாம்பாள், மனோரமா சொல்வதுபோல், இந்த பிரசாதம் பூமா மாமியின் கை வண்ணமா இல்லை.......எல்லோருக்கும் வருமா ? என்று கேட்பதுபோல்..

பாபு மாமாவைப் பற்றியும் சில வரிகள். மாலை 6.45 மணிக்கு, தீபாராதனைக்காக, கோவிலுக்கு வந்து விடுவார். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எல்லோருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகம் வாங்கிக்கொடுத்து, கற்றுக் கொள்ள வைத்தார். யக்ஞராமன் தலைமையில்  சாயந்தரம் நித்ய பாராயணம். சிறுவர்களை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தியதற்க்கு அவர்தான் முக்கிய காரணம். பக்கத்தாத்து கிருஷ்ணமூர்த்தி மாமா அர்த்த ஜாமத்திற்கு ஆஜர். அவர்தான் மணி அடிப்பார். பிறகு வெளியில் இருப்பவர்களுக்கு தயிர் சாதம் வினியோகம்.

மற்றவர்களும் எழுதுவார்கள் என்பதனால் இத்துடன் என் நினைவுகளை முடித்துக் கொள்கிறேன் பல வருடங்களுக்கு பிறகும் செம்மங்குடியில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடப்பதுற்கு காரணம் செம்மங்குடி மஹா ஜனங்கள்தான். அவர்கள் அத்துணை பேருக்கும் அடியேனின் நமஸ்காரங்கள்..

***2 மாதம்முன்பு பூர்வீக வீட்டை திரும்ப வாங்கி விட்டேன்

மறக்க முடியுமா என் செம்மங்குடியை,,, ஸ்ரீமதி கோமதி கிருஷ்ணமூர்த்தி

எங்கள் வரதராஜப் பெருமாள் கும்பாபிஷேக மலர் என்றவுடன் கை பர பர வென்று ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றினாலும்,  என்னுடைய இன்னொரு கண்ணான “கல்யாணீம் கருணா கடாக்ஷ லகரீம்” என்று ஸ்ரீமத் ஆனந்தவல்லீ சௌபாக்ய பஞ்ச ரத்னத்தில் கொண்டாடப்படும் எங்கள் ஊர் ஆனந்தவல்லீ யும் உடனுறை அகஸ்தீஸ்வரரும் நம் எல்லோரையும் ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

எங்கள் ஊரின் சிறப்பே, சங்கீத பிதாமகர் ஸ்ரீ. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் இருந்த இடம் என்பதும், ஸ்ரீ வித்யா உபாசகர் என்று பெயர் பெற்று ஆனந்தவல்லியின் கிருபா கடாக்ஷத்தைப் பெற்று இன்றும் எங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஏகாம்பர சிவாச்சார்யார் அவர்களும், எங்கள் வாழ்வில் கல்வி என்ற ஒளி விளக்கை ஏற்றி பிரகாசிக்கச் செய்த, செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியும், ஜைனர்களுக்குக் கோவில் உண்டு என்று பறை சாற்றி, எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஜைனன் கோவிலையும் சொல்லலாம்.  இதற்க்கு சிகரமாக “இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று திருவள்ளுவர் சொன்னது போல், “அன்பையும் அறனையும்” பெற எங்களுக்கு துணையாக இருந்த கோவில்கள்.

தஞ்சாவூர் பகுதியில் எந்த கிராமத்தை எடுத்துக் கொண்டாலும், ஒரு சிவன் கோவில், ஒரு பெருமாள் கோவில், அக்ரஹாரத் தெரு, அதை சுற்றியும் பல தெருக்கள். எங்கள் தெருவும் அதற்கு வி‌தி விலக்கல்ல. .

ஆனால் நான் பிறந்து வளர்ந்து முதலில் “இது தான் உன் வாழ்க்கைக்கு ஆதாரம்” என்று என் பெற்றோர்களால் காண்பிக்கப்பட்ட  என் வரதராஜப் பெருமாளையும், ஆஞ்சநேய ஸ்வாமியையும். ஆனந்தவல்லியையும் பற்றி எழுதுவதில் எனக்கு கர்வம் உண்டு.

செம்மங்குடி வரதராஜப் பெருமாள் “அவ்யாஜ கருணாமூர்த்தி” என்பதில் சந்தேகமில்லை. செம்மங்குடியில் பிறந்து, பல நாடுகளில், ஊர்களில் இருந்தாலும், பல விதமாக உதவிகள் செய்து இந்தப் பெருமாள் கோவிலை சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பெருமாள் கோவிலில் ஸ்ரீ. சாயி பாகவதர் அவர்களால் நடத்தப்பட்ட ராதா கல்யாணம் அதற்கு ஒரு சாட்சி.  இந்த ராதா கல்யாணத்தின் போது பல பேர் செய்து கொண்ட பிரார்த்தனைகள் நிறைவேறி இருக்கிறது என்பதும் நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று.

பல நீங்காத நினைவுகள்:

நான் மேல் படிப்பு படித்து வேலை கிடைக்காமல், நான் நம் பெருமாளை மனமுருக வேண்டிக்கொண்டு கிடைத்ததுதான் இந்தியன் வங்கி வேலை. இதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.

எங்கள் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் முன்பு நின்று கொண்டு, என் அப்பா ஸ்ரீமான். ராமமூர்த்தி சாஸ்த்ரிகளுடன் சேர்ந்து சொன்ன விஷ்ணு சகஸ்ரநாமம், என் தாயார். ஸ்ரீமதி. அலமேலு அம்மாளுடன் சேர்ந்து செய்த கார்த்திகை பொரி உருண்டைகள், கோகுலாஷ்டமி சீடை வகைகள், அது சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று தூக்கத்தைத் தொலைத்த நாட்கள்....

பெருமாள் கோவில் தோட்டத்தில், பூ பறித்துக் கொண்டு வரச் சொல்லும் என் அப்பாவின் வேண்டுகோளை சிரமேற்றுக்கொண்டு, ஓடி ஓடி ஸ்ரீ கணேச மாமாவிற்க்கு போட்டியாக, பூக்களை பறித்து கொண்டு வந்தது. படிப்பதற்க்கு சீக்கிரம் எழுந்தேனோ இல்லையோ, பூ பறிப்பதற்கு, விடியற்காலையில் பூந்தோட்டதில் ஆஜர்  !!

ராம நவமி யன்று கிடைக்கும், பானகம், நீர் மோர், குடை, பனை விசிறி உட்பட எல்லாம் எங்களுக்கு வருஷத்தில் ஒரு நாள் கிடைக்கும் பொக்கிஷம்.. ஏகப்பட்ட மாலைகளுடன் ஸ்வாமிக்கு ஸ்பெஷல் அலங்காரம். ஸ்ரீ ராம நவமி உத்சவத்தில், அக்கா மைதிலி காலத்தில் ஸ்ரீமான் நடேச ஐய்யர் கோவிலில் அமர்ந்திருக்க அந்த வயது ஒத்த குழந்தைகள் உட்பட “ராம” நாமம் ஜபிக்கச் செய்வார். கடிகாரம் வைத்துக்கொண்டு, ஒரு மிடுக்குடன், அதே போல் எங்களுக்கு பயம் கலந்த மரியாதையுடன் இருந்த அவரின் ஆளுமை மறக்க முடியாது. குழந்தைகளுக்கு அவர் காட்டிய அபரிமிதமான அன்பு, தாராளமாக தரும் கல்கண்டு இத்யாதிகள்.  மறக்க முடியமா ?

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எங்கள் பெருமாள் கோவில் கோலாகலம் தான். அக்ரஹாரத்தில் உள்ள எல்லோரின் பங்கும் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்த்தில் என் அப்பா ஸ்ரீ ராமமூர்த்தி சாஸ்த்ரிகளும், பட்டாமணியராத்து ஸ்ரீ சந்தான மாமாவும் சேர்ந்து “கோவில் கட்டளை” போல் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, வருடா வருடம் எல்லா புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் விமர்ஸையாக நடக்க வித்திட்டார்கள். அதன் பலன் புரட்டாசி உற்சவம் இன்றும் ஜாம் ஜாம் என்று நடக்கிறது.  எத்தனை பஜனைகள், சீதா கல்யாணம், ராதா கல்யாணம், கச்சேரிகள், ஊரே கோலாகலம்தான். அந்த ராதா கல்யாண உற்சவங்கள் போட்ட விதை தான் “அஷ்டபதி” கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு வெறி.  அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டவர் எங்கள் அபிமான குருநாதர் ஸ்ரீ. கோபால் சார் தான். “பாட்டுக்கார அய்யா”  நாங்கள் அன்புடன் அழைக்கும் ஸ்ரீ செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் அவர்களின் புதல்வர் அவர், என் தாயார் ஸ்ரீமதி அலமேலு அம்மாளுக்கு முத்துசாமி தீக்ஷதரின் “கமலாம்பா நவா வர்ண கிருதிகளை” கற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால் சனிக்கிழமை பஜனை என்றால் இரவு 11 மணிக்கு முடியும். எங்கள் ஸ்ரீ. ஸ்ரீனிவாச பட்டாச்சார்யாரும் பொறுமையுடன் இருந்து பிறகுதான் அர்த்த ஜாம பூஜை நடக்கும். அவர் கொடுத்த உற்சாகத்தை என் வாழ் நாளில் மறக்கமுடியுமா?

வெள்ளிக் கிழமை கோலம் போடுவதற்க்கு போட்டா போட்டி. மீனாக்ஷி மாமி, ஜயா மாமி, ருக்மிணி மாமி மற்றும் என் அம்மா என்று பல பேர் அதில் முக்கிய அங்கம் வகிப்பார்கள்.  அப்புவாத்து சரஸ்வதி மாமியின் “கோமாளி மணி அடிக்கும் கோலம்” மிகவும் பிரசித்தம். அப்புவாத்து லலிதா அக்காவின் முத்துப் பாவாடை, முத்தங்கி ஏகப்பட்ட அலங்கார ஆபர்ணங்கள்.  இரவு 11 மணி வரை கோலம் போடுகிறேன் பேர் வழி என்று அரட்டை அடித்து வீட்டில் திட்டு வாங்கியதை மறக்க முடியுமா  ?

கார்த்திகை மாதத்து “சொக்கபானை”. மார்கழி மாதத்து விடியற்காலை பனியில் தவ்ழ்ந்து வரும் பெருமாள் கோவிலில் “இசைத்தட்டு” பாடல்கள். கொஞ்சம் சீரகம், மிளகு  தாளித்து, செய்யும் பொங்கல். மார்கழி மாதம் முழுவதும் தினமும் வீட்டில் பொங்கல் தான். அலுக்கவே அலுக்காமல் “தேவாம்ருதம்” போல் அதை சாப்பிடுவோம். அதற்குப் பிறகு இன்று வரை அப்படி ஒரு அமிர்தம் கிடைக்கவே இல்லை.  இந்தப் பக்கம் மார்கழி மாத திருப்பாவை, திருவெம்பாவை, அந்தப் பக்கம் “விஸ்வநாத ஆசாரி” புடை சூழ பாடிக்கொண்டு வரும் தேவாரம் {தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன்}. இது போதாது என்று என் தம்பி ராஜகோபாலன் தோழர்களுடன் “ராதே ராதே” என்று பாடிக் கொண்டுவர, பொங்கல் மணத்துடன், தெய்வீக மணமும் கலந்து வரும்.

மார்கழி மாதத்தில் வாசலில் கோலம் போடுவது என்பது ஒரு பெரிய சவால். யார் வீட்டில் முதலில் கோலம் போடுவது என்பது முதல், பெரிய கோலம் யார் போட்டிருக்கிறார்கள், என்ன டிசைன், எத்தனை புள்ளி கோலம், வளைவு சுளிவுகள், என்பது வரை. மார்கழிப் பனிக்கும், பூசனிப் பூக்களை அழகாக நடுவில் வைத்து, அதற்க்கு மேலும் அழகூட்டும் கோலங்களும், நெய் மணக்க வரும் பொங்கல் வாஸனையும்.. அடடா. எங்கள் கிராமம் தேவ லோகம்.....

சிறிய வயதில் “போகிற போக்கில்” கற்றுக் கொண்ட பாடல்கள் என் வாழ் நாளில் ஒரு ஆசிரியையாக பல குழந்தைகளுக்கு பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், நான் பிறந்த வீட்டுக்கு (செம்மங்குடிக்கு)  பெருமை தேடி தருகிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கற்றுக் கொண்டு பள்ளியில் முதல் பரிசு வாங்கியதை எப்படி மறக்கமுடியும் ?

எங்கள் பெருமாளுக்கு ஒரு கொலுசு வாங்கிப் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது எங்கள் கிராமத்து ஜனங்களுக்கே தெரிந்த ஒரு ரகசியம்.

எங்கள் ஊர் பெருமையை சொல்லி மாளாது.  இப்போது நினைதாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் மூதாதையர் ஆசை ஆசையாக, மிகவும் கஷ்டப்பட்டு, திரவியம் சேர்த்து, எத்தனை கும்பாபிஷேகம் நடத்தி இருப்பார்கள்  ?  இப்போது இருக்கும், பஸ், ரயில், தொலை தொடர்பு, ஏன், மின்சாரம் கூட இல்லாத நிலையில் நடத்திய உற்சவங்கள் எத்தனை எத்தனை ?  அவர்களையும் இந்த நிமிடத்தில் நினைவு கூர்ந்து,  எல்லோருக்கும் வரதராஜப் பெருமாளின் கடாக்ஷம் கிடைக்கவேண்டும் என்று பிரார்திக்கிறேன்.

  

Sunday 9 January 2022

என்றைக்கு சிவ கிருபை

 

1)   நஞ்சுண்ட நீலகண்டன்

ஆதி சங்கரர் “சிவ பாதாதி கேசாந்த்ர ஸ்தோத்ரம்” என்று ஒன்று எழுதி இருக்கிறார்.  அதில் சிவனுடைய ஒவ்வொரு அங்கத்தையும் பற்றி ஒரு நான்கு வரிகள். முடியும் போது, அந்த அங்கம் என்னை/நம்மை காக்கட்டும் என்று முடிக்கிறார்.

இந்த புத்தகம், காஞ்சி பெரியவர் முன்னுரை எழுதி ஒரு புத்தகமும், ஸ்ருங்ககிரி சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் முன்னுரை எழுதிய புத்தகமும் கிடைத்தது.

இதில் நீலகண்டத்தைப் பற்றி ஆச்சர்யமான ஒரு ஸ்லோகம் உண்டு. இதற்க்கு முன்பு, அபிராமி பட்டர் எழுதிய ஒரு அற்புதமான செய்யுளில், “அம்மா, நான் எவ்வளவோ நல்லது கெட்டது எடுத்துச் சொன்னாலும் நான் தவறு செய்து கொண்டு தான் இருக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள். அதற்க்காக என்னைக் கை விட்டு விடாதே. பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் அள்ளி உண்டான். அந்த நஞ்சையே அவன் கழுத்தில் நிறுத்தி அவரை காத்தாய். ஆல கால விஷத்தின் தன்மையயே மாற்ற வல்லவள் நீ. நான் செய்யும் பிழைகள் எல்லாம் ஜூஜூபி. “ என்கிறார்.

“புது நஞ்சை உண்டு, கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே”  என்கிறார்

ஆதி சங்கரர், இந்த சீரியஸ் ஆன விஷயத்தை கொஞ்சம் நகைச்சுவை நகைச்சுவை கலந்து சொல்கிறார். “பார்வதி தேவி பதியான பரமேஸ்வரனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கழுத்துக்கு கீழே பிடிக்க, மகா விஷ்ணு உலகத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்று மேலே பிடிக்கிறார்.”

(சப்ராந்தாயா: சிவயாஹா: என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்)

மேலும் சொல்கிறார். இந்த இருவரும் கோபத்துடன் (சரபசம்) முன்னும் பின்னும் இழுக்க, எந்த ஹால கால விஷம், திரிசங்கு போல ஒரு அவஸ்தையை அனுபவிக்கிறதோ, அந்த நீலகண்டனின் நாபி, எங்களின் (வ:) பாபக் கூட்டங்களை அடியோடு நாசம் செய்யட்டும்.” என்று முடிக்கிறார்.

எவ்வளவு அழகு.....