Sunday 9 January 2022

என்றைக்கு சிவ கிருபை

 

1)   நஞ்சுண்ட நீலகண்டன்

ஆதி சங்கரர் “சிவ பாதாதி கேசாந்த்ர ஸ்தோத்ரம்” என்று ஒன்று எழுதி இருக்கிறார்.  அதில் சிவனுடைய ஒவ்வொரு அங்கத்தையும் பற்றி ஒரு நான்கு வரிகள். முடியும் போது, அந்த அங்கம் என்னை/நம்மை காக்கட்டும் என்று முடிக்கிறார்.

இந்த புத்தகம், காஞ்சி பெரியவர் முன்னுரை எழுதி ஒரு புத்தகமும், ஸ்ருங்ககிரி சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் முன்னுரை எழுதிய புத்தகமும் கிடைத்தது.

இதில் நீலகண்டத்தைப் பற்றி ஆச்சர்யமான ஒரு ஸ்லோகம் உண்டு. இதற்க்கு முன்பு, அபிராமி பட்டர் எழுதிய ஒரு அற்புதமான செய்யுளில், “அம்மா, நான் எவ்வளவோ நல்லது கெட்டது எடுத்துச் சொன்னாலும் நான் தவறு செய்து கொண்டு தான் இருக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள். அதற்க்காக என்னைக் கை விட்டு விடாதே. பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் அள்ளி உண்டான். அந்த நஞ்சையே அவன் கழுத்தில் நிறுத்தி அவரை காத்தாய். ஆல கால விஷத்தின் தன்மையயே மாற்ற வல்லவள் நீ. நான் செய்யும் பிழைகள் எல்லாம் ஜூஜூபி. “ என்கிறார்.

“புது நஞ்சை உண்டு, கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே”  என்கிறார்

ஆதி சங்கரர், இந்த சீரியஸ் ஆன விஷயத்தை கொஞ்சம் நகைச்சுவை நகைச்சுவை கலந்து சொல்கிறார். “பார்வதி தேவி பதியான பரமேஸ்வரனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கழுத்துக்கு கீழே பிடிக்க, மகா விஷ்ணு உலகத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்று மேலே பிடிக்கிறார்.”

(சப்ராந்தாயா: சிவயாஹா: என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்)

மேலும் சொல்கிறார். இந்த இருவரும் கோபத்துடன் (சரபசம்) முன்னும் பின்னும் இழுக்க, எந்த ஹால கால விஷம், திரிசங்கு போல ஒரு அவஸ்தையை அனுபவிக்கிறதோ, அந்த நீலகண்டனின் நாபி, எங்களின் (வ:) பாபக் கூட்டங்களை அடியோடு நாசம் செய்யட்டும்.” என்று முடிக்கிறார்.

எவ்வளவு அழகு.....

No comments: