Monday 11 April 2022

உயிர்ப்பான காவியம் – வில்லி பாரதம்

 

உயிர்ப்பான காவியம் – வில்லி பாரதம்

புலவர் கீரன் சொற்பொழிவு, தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்றுக்கு ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.  அவரது தமிழ் வீச்சு அலாதியானது.

 அவர் ஒரு தடவை சொல்லிய வில்லி பாரத சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் கீழே. இப்போதும் அந்த கதை நம் வாழ்க்கைக்குப் பொருந்தும்.

வி.பா தில் இன்றும் நாம் வாழ்க்கைக்கு ஏற்றதான சில பாத்திரங்கள் இருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவதற்க்காக ஓர் சில கதாபாத்திரங்கள்:

அவர் இப்படி ஆரம்பிக்கிறார். நம் வாழ்க்கையில் இரண்டு துருவங்கள் இருக்கிறது.

ஒன்று, உலகத்து சுகங்களில் நாட்டம் இல்லை என்று “பொய்” சொல்லி ஒரு வாழ்க்கை வாழாதே.

இரண்டாவது, இன்பமே வாழ்க்கை என்று இருந்து விடாதே !

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்:

ஒன்று. உலகத்து இன்பங்களில் நாட்டம் இல்லை என்று பொய் சொல்லாதே. என் உள்ளம் எல்லாம் துறந்த உள்ளம் என்று சொல்லாதே.  உலகத்து இன்பங்கள் வேண்டாம் என்று தள்ளி விடக் கூடாது. அது எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பது கிடையாது.  ஏதோ 100 வருஷங்களுக்கு ஒரு முறை புலன்களை அடக்கும் மனிதர்கள் இந்த தேசத்தில் பிறக்கிறார்கள். அவர்கள் ஞானிகள் அவதார புருஷர்கள்.  அதனால் தான் திருமூலர் சொல்கிறார்

அஞ்சும் அஞ்சும் அடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும் அடக்கும் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

என்கிறார்

அதாவது ஐம்புலங்களையும் அடக்கு என்று அறிவில்லாதவர்கள் சொல்லுவார்கள். அப்படி அடக்கியவர்கள் யாருமில்லை.  ஐம்புலங்களையும் அனுபவித்து மெதுவாக சிவ சிந்தனையில் திருப்பி ஞானம் பெற வேண்டும்” என்று முடிக்கிறார்.

அதனால், அந்த அந்த வயதில் உள்ள இன்பங்களை அனுபவித்து இறை உணர்வோடு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் உண்மையான வாழ்க்கை.

திருவள்ளுவர் ஒரு அருமையான குறள் ஒன்று சொன்னார்.  தெய்வத்திடம் நீ என்ன வேண்டுவாய்  ? நாம் நாம் சிக்கல்கள், கவலைகள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். இது போல பல பிரார்தனைகள்.

ஆனால் நாம் நாம் கடமைகளை ஒரு அளவு முடித்துவிட்டு எஞ்சி இருக்கிற வாழ்க்கையை இறைவனுக்காக ஒதுக்க வேண்டும். எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் கோவிலுக்குச் சென்று, பிறவாமை வேண்டும் என்று கேட்க வேண்டும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை – மற்றவை

வேண்டாமை வேண்டா வரும்

வேண்டிக்கொண்டால் மட்டும் போறாது. அதை உறுதி படுத்தி கொள்ள ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.

அதை விட்டு விட்டு, குடும்ப பந்தத்திலேயே உழன்று, பேரன், பேரனுக்கு பிள்ளை, அவர்களை வளர்ப்பது என்று ஸம்ஸாரக் கடலிலே உழன்று கொண்டு இருந்தால் எப்போது இறை வழிபாடை முழுமையாக செய்வது ? அர்ப்பணம் என்று ஒரு இருக்கிறதல்லவா ?  பரமபரை பரம்பரையாகவே பாசத்தில் ஈடுபடக்கூடாது.

அப்படி வாழாவிட்டால் என்ன ஆகும் என்பது தான் இந்தப் பகுதி:  முதல் துருவத்தில் வாழ்ந்த ஒரு ராஜா வின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கீழே: 

நகுஷன்:

நகுஷன் என்ற ஒரு ராஜா இருந்தான். மிகப் பெரிய அரசனாக இருந்து, எல்லா போகங்களையும் அனுபவிக்கக் கூடிய நிலையில் இருந்த போதிலும், எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தான். அமைச்சர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கேட்பதாக இல்லை. ராஜாங்கத்தை கவனிக்காமல், போகங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து கொண்டு இருந்தான்.  

“எனக்கு பிறவியே இருக்கக் கூடாது” என்றான். அதனால் எந்தப் பொருளின் மேல் நாட்டம் இல்லை என்று முடிவு செய்து, ஒரு சாமியார் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான்.

வேறு வழியில்லாமல், நகுஷனிடம், அமைச்சர்கள் சொன்னார்கள். “நீங்கள் நிறைய புண்ணிய காரியங்கள் செய்து இருக்கிறீர்கள். அதற்க்கு உண்டான இந்திரப் பதவியை பெற்ற பிறகு, நீங்கள் மறு பிறவி இல்லாத உலகத்திற்க்குச் செல்லலாம்” என்றார்கள்.

நகுஷன் “அந்த இந்திரப் பதவி பெற்ற பிறகுதான் எனக்கு மறு பிறவி இல்லாமல் போகும் என்றால், அந்தப் பிறவி பெறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும். ?” என்று கேட்டான்.

அமைச்சர்கள். “100 அசுவ மேத யாகம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். உடனே செய்வதற்க்கு உத்தரவு பிறப்பித்தான்.

நகுஷன் அசுவமேத யாகம் செய்து முடித்தான். அவனை இந்திர லோகத்திற்க்கு அழைத்துப் போவதற்க்கு பல்லக்கு வந்து நிற்கிறது. பல்லக்கில் அழைத்துப் போவதற்க்கு சப்த ரிஷிகள் (7 ரிஷிகள்) வந்து நிற்கிறார்கள். அவன் கையில் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டுன் பல்லக்கில் மெதுவாக ஏறி உட்கார்ந்து கொண்டு இந்திர லோகம் நோக்கிப் போகிறான். பல்லக்கை தூக்கிக் கொண்டு போகும் ரிஷிகளின் மேல் மிகுந்த மரியாதை கொண்டு, அவர்களை மெதுவாகப் போகச் சொல்கிறான்.

முனிவர்கள் சொன்னார்கள் “100 அசுவமேத யாகங்கள் செய்த உன்னை சுமந்து செல்வது, எங்களுக்குப் பெருமை. அதனால் அந்தப் புண்ணியத்தை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார்கள்.

இருந்தாலும், மரியாதை காரணமாக மெதுவா, மெதுவா செல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தான் நகுஷன். அவனைத் தூக்கிக் கொண்டு வந்த முனிவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் தூக்கிக் கொண்டு வந்தனர்.

இந்திர உலகத்தில் வாயிலுக்குச் சென்ற நகுஷன் அங்கே பிரமாண்டமான இந்திர உலகத்தை நிமிர்ந்து பார்த்தான்.  அங்கே உப்பரிகையில், இந்திராணி தான் தலை முடியைக் கோதிக்கொண்டு இருப்பதைப் பார்த்தான். அதுவரை, மெய், வாய், கண் என்ற ஐம்புலங்களின் மேல் நாட்டமில்லை என்று கூறிக் கொண்டிருந்தவன், இந்திராணியைப் பார்த்த மாத்திரத்தில், அவள் மேல் சொல்ல முடியாத ஆசை கொண்டான். இதுதான் “twist”

இதுவரை அவன் கொண்ட “சாமியார்” கொள்கை காற்றில் பறந்தது. அவளை உடனே அடைய ஆசை கொண்டான். இதுவரை, வேகமாக சென்று கொண்டிருந்தது என்று நினைத்துக்கொண்டு, மெதுவா மெதுவா என்று சொல்லிக் கொண்டிருந்த நகுஷன், இப்போது இந்த பல்லக்கு, இப்போது மெதுவாக செல்கிறது என்று நினைத்து, வேகமாக செல்ல வேண்டும் என்று (அவளை அடைய) என்று முடிவு செய்து, பல்லக்கை விரைவாக செல்லச் சொன்னான்.

உடனே பல்லக்கை சுமந்து சென்ற முனிவர்களிடம் “வேகமாக செல்லுங்கள்” என்று சொன்னான். தான் கொண்டு வந்திருந்த “தடியால்” அவர்களை தட்டி “வேகமா” என்று சொன்னான்

இப்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது

வேகமா என்பதற்க்கு சம்ஸ்கிரிதத்தில் “ஸற்ப” என்று சொல்லுவோம்.

 

பல்லக்கை சுமந்து சென்றவர்களில் ஒருவர் மகாமுனி அகத்தியர். அவர் கொஞ்சம் குட்டை. அதனால் அவர் பல்லக்கை சமமாகத் தூக்க முடியாததால், கொஞ்சம் முட்டுக் கொடுத்து, சிரமமாக தூக்கிக் கொண்டு சென்றார். நகுஷன் அவரால் தான் பல்லக்கு மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து, தடியால் அவரை தட்டி “சர்ப, சர்ப என்றான்.

 

அகத்தியர்க்கு கோபம் வந்து விட்டது. என்னை “சர்ப” என்று சொல்லி அடித்ததால், நீ சர்ப்பமாக (பாம்பாக போகக் கடவது” என்று சாபம் இட்டார். இந்திரா உலகம் வரைக்கும் போன நகுஷன், பாம்பாகிப் போனான்.

 

இந்தக் கதையில் இருந்து தெரிவது என்ன என்றால்,

முதல் பகுதியில் சொன்ன விஷயங்களை தவிர, எல்லாவற்றிர்க்கும் மனது தான் காரணம். உலகம் என்றும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி பல்லக்கு வேகமாகப் போவதோ, மெதுவாகப் போவதோ நகுஷன்  மனதில் இருந்ததோ, அப்படித்தான் இருக்கிறது,

கணியன் பூங்குன்றானார் அன்றே சொன்னார் – “நன்றும் தீதும் பிறர் தர வாரா” அதான் மனம் போல மாங்கல்யம் என்பார்கள்.

அடுத்த துருவம் பின்பு பார்ப்போம்: