Monday, 12 October 2026

வேத பாஷ்ய ரத்னம், மகாமஹோபாத்யாய முல்லைவாசல் ப்ரம்ஹஸ்ரீ டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்....

 

மகாமஹோபாத்யாய முல்லைவாசல் ப்ரஹமஸ்ரீ ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள், அவர்கள் செப்டம்பர் 27, 2026  அன்று பிற்பகல் 1.30 மணியளவில் சிவ பதம் அடைந்தார்.

காஞ்சீபுரத்தில் நான்கு பெரியவாளுடன் சம்பந்தப்பட்டு, கடைசியில் பால பெரியவாளின் “சாதூர் மாஸ்ய வ்ரதம்” முடிந்து விஷ்வ ரூப தரிசனம் பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்து, மாளய தர்ப்பணம் முடித்து, மரணம்.

அனாயேசேன மரணம் என்பது இதுதானோ ?

அவரின் ஸ்ரத்தாஞ்சலி சென்ற வாரம் 1.10.2026 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள, “ஆஸ்திக சமாஜத்தில்” நடந்தது. பிரம்மஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள் (வைதீகஸ்ரீ). பிரம்மஸ்ரீ மணி திராவிட் அவர்கள், ஸ்ரீ. ராம சுப்பு அண்ணா,  ஸ்ரீ. துக்ளக் குருமூர்த்தி, ஸ்ரீ. காமகோடி மற்றும் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்ட அருமையான நிகழ்ச்சி. அவரிடம் பாடம் படித்த பல “பிரம்மஸ்ரீ” க்கள் ஒவ்வொருவரும் கண்ணீருடன் பேச, ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது

அன்று, வர முடியாத பலர் கொடுத்த  “இரங்கல் செய்திகளை” ஒரு மலராகக் (book)  கொடுத்தார்கள். அதில் சில பகுதிகளையும், நான் ஸ்ரத்தாஞ்சலியில் கேட்ட சில நிகழ்வுகளை கீழே தருகிறேன்.

நான் இவரைப் பற்றி எழுவதற்கு முன் நிறைய யோசித்தேன். எனக்கு ஒரு யோக்யதையும் இல்லை. அவருடன் பழகினதும் இல்லை. இரண்டு- மூன்று முறை பார்த்து இருக்கிறேன். கொஞ்சம் பேசி இருக்கிறேன். என்ன எழுதுவது ? 

இதற்க்கு முன்பு சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  ஏனெனில் நான் அவருடன் பழகி இருக்கிறேன். அவருடைய உபன்யாசங்கள் நிறைய கேட்டிருக்கிறேன். என் குடும்பத்தில் என் அம்மாவுக்கு சகோதரர் முறை. அவர் குடும்பமும் எனக்குப் பரிச்சயம்...

இதில் எதுவுமே இல்லாத எனக்கு இவரைப் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்தபோது, என் சம்பந்தி மாமா “ஸ்ரத்தாஞ்சலி” நினைவுபடுத்த, அங்கு போன பிறகு, இவரைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இதுவும் மஹா பெரியவாளின் கட்டளை என்று கருதி எழுதுகிறேன். 

The Enduring legacy of Sri. Mulla vasal Sastrigal with Traveloka  என்ற ஒரு கட்டுரையில் (மலர்) ல் இருந்து.  (தெரியாதவர்களுக்கு, தத்வலோகா என்பது Sringeri பீடத்தின் சார்பில் நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம். ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது)

பர்த்ருஹரியின் நீதி ஷதகத்தில் (69) ஒரு ஸ்லோகம் உண்டு:

मनसि वचसि काये पुण्य पीयूषपूर्णा:

तिर्भुवनम् उपकारश्रेनिभि: प्रीणयन्तः

परगुणपरमाणून्  पर्वतीकृत्य नित्यं

निजहृदि विकसन्त: सन्ति संत: कियन्तः

How many noble souls whose minds, bodies and speeches are full of nectar of good actions and who have done good to the three worlds, who always find pleasure in elevating the lowly atoms of other virtues to a high pitch like that of a mountain and rejoice in their own hearts.

இது அவருக்குத்தான் பொருந்தும்.

 பல நூல் படித்து நீ அறியும் கல்வி – பொது

நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்- பிறர்

உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் – இவை

அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.

இது ஒரு சினிமா பாட்டு. ஆனால் பர்த்ருஹரி லெவெலுக்கு எழுதப்பட்ட பாட்டு ..

இதுவும்...

எனக்கும் அவருக்கும், முன்பே சொன்னபடி,  பெரிய பரிச்சயம் கிடையாது. சில தடவை வரகூர் உரியடி உற்சவம் வந்திருக்கிறார்.  கிருஷ்ண ஜனனம் உபன்யாசம் செய்திருக்கிறார். ஒரு முறை ஸ்கந்த சஷ்டி உத்சவத்திற்கு வந்திருந்தார் என் அம்மா சாப்பாடு போட்டிருக்கிறாள்.   

ஒவ்வொரு வருடமும், மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில் பஞ்சாங்கப் படனம் நடக்கும்.  அதற்கு அவர் வருவார். அழகாக விளக்கிச் சொல்லுவார்.  போன சித்திரை “பராபவ” வருஷத்திற்கு வந்திருந்தார். நமஸ்காரம் பண்ணினேன். 

கொஞ்சம் பேச நினைத்தேன். அவருக்கு உடம்பு முடியவில்லை. பல தடவை (பல பாட சாலைகளுக்காக) சம்ஸ்கிருத புஸ்தகங்கள் வாங்க அவர் வீட்டுக்குப் போகும்போது, மாமியை சந்தித்து இருக்கிறேன். மறக்காமல் குடிக்க மோர் தருவார்.  யார், எவர் என்று பார்க்காமல் உள்ளே வரச் சொல்லி உட்கார வைத்து, கொஞ்சமாவது பேசி அனுப்புவார். அங்கு எப்போதும் 10 குழந்தைகள் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டு இருப்பார்கள்.  வேத பாட சாலை போல இருக்கும்.

சம்ஸ்க்ருத காலேஜ் அருகில் இருக்கும் அவர் வீட்டில் எல்லா பீடாதிபதிகளும் விஜயம் செய்திருக்கிறார்கள். அவ்வளவு புண்யம் செய்த இடம். அவர் வீட்டில் வந்து, கொஞ்சம் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். எல்லா காருண்ய மூர்த்திகளும், பிரம்மஸ்ரீ க்களும், வேதமும் நடந்த இந்த பாத தூளிக்கு இணை எது ?

வீடே அழகாக இருக்கும், தனி வீடு. உள்ளே நுழைந்தவுடன் நந்தவனம். இரு புறமும் பல கலரில் செம்பருத்தி, நந்த்யாவட்டை, துளசி மாடம், வில்வ மரம். அழகான திண்ணை. உள்ளே ஒரு பெரிய பாத்திரத்தில் மோர். மண் பானையில் குடிக்க தண்ணீர்.......

ஸ்ரீ. கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள் எப்போது பேசும்போதும் கொஞ்சம் சம்ஸ்க்ருதம் பேசிவிட்டு பிறகு தமிழ் பேசுவார். (அதே பாணியை வைதீகஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள் தொடர்ந்து செய்கிறார்.)  எப்போது (படனம் போது) பேசினாலும், “நவக்ரஹங்கள் இந்த இந்த நட்சத்ரத்தில் வந்து படுத்தும், இந்த ராசியில் விலகும். என்றெல்லாம் பேசிவிட்டு, கடைசியில் “த்ரி கால ஸந்த்யாவந்தனம் ஒழுங்காக பண்ணுங்கோ, கொல்லை வழியா வரும் சனி, கிணத்துக்கு இந்தப் பக்கம் வராது. அப்படியே ஓடிப் போய் விடும்” என்பார்

எப்போது பேசினாலும் அதில் லேசாக ஒரு ஹாஸ்யம் இருக்கும். அது பெரிய கலை.

“எப்போது அவர் காஞ்சீபுரம் போனாலும், பெரியவாவை பார்த்தவுடன் பெரியவா முகத்தில் பெரிய புன்னகை வரும். இது எப்படி என்றால், ராமன், ஆஞ்சநேயஸ்வாமியை முதலில் பார்க்கும்போது, அவரை அறியாமலேயே முகத்தில் ஒரு புன்னகை வந்துவிட்டது.  என்னதான் “ஆத்மானம் மானுஷே மன்யே” என்று சொன்னாலும் ராமனாலேயே அந்த சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடியவில்லை”.... – ஒரு சிஷ்யர் சொன்னார். ..

 அவர் பால பெரியவாளைப் பற்றிச் சொல்லுமோது, “அவர்” பேரன்டா, (பெரியவாளின்) என்ன ஒரு வித்வத், கடாக்ஷ வீக்ஷிண்யம்,   ஞாபக ஷக்தி,  என்று கிலாகித்துப் பேசுவாராம். பால பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி.  

புதுப் பெரியவாளுடன் இவருக்கு இருந்த பக்தியை பற்றி மட்டும் நிறைய எழுதலாம்

காஞ்சி மஹா பெரியவாளைப் பற்றி பேசாத நாளே கிடையாது. கலியுக ப்ருஹ்ம ரிஷியாகவே வாழ்ந்தார்கள் என்று வைதீகஸ்ரீ, பிரமஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள் அவர்கள் கூறும்போது அவர் கண்கள் கலங்கின.

அவரின் பிரதம சிஷ்யர், - மாமியைப் பற்றிப் பேசும்போது “மாமி, பாரி முனை போன்ற பல இடங்களுக்கு, பஸ்ஸில் தான் போவார். அப்போது போகும்போது மறக்காமல் மஞ்சள் கிழங்கு எடுத்துக் கொண்டு போவார்கள். அங்கு பஸ்ஸில் இருக்கும் சுமங்கலிகளுக்கு ஆளாளுக்கு இரண்டு மஞ்சள் கிழங்காவது கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்கள். யாராவது பெண்கள் முடியை விரித்து போட்டுக்கொண்டு போனால், பதவிசாக சொல்லி முடிந்து கொள்ளச் சொல்வார்கள்”  என்றார்.

மாமாவும் மாமியும் தீவிரமான ராம பக்தர்கள்.  மாமா மாமியை “ராமா” என்று கூப்பிடுவார்கள். மாமி, மாமாவை “ராம் ராம்” என்றே கூப்பிட்டுக் கொள்வார்கள். எப்போதும் ஜே ஜே என்று அவர் வீட்டில் வேத குழந்தைகள்.  ஒரு நிமிடம் முகம் சுளித்து பேசவோ, செய்யவோ கிடையாது. எல்லோருக்கும் சாப்பாடு. ஸ்வீட். தடாலடி தான். Dr. காமகோடி அண்ணா பேசும்போது ‘என் வீட்டில் சாப்பிட்ட ஸ்வீட் டை விட, மாமியாத்தில் தான் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றார்

என் அம்மா சொல்லும்போது, மாமி முல்லைக்கொடி கிராமம். சப்தரிஷிகளின் (ஒருவரின்) புத்ரி என்பதும். இளமையிலேயே கிரந்தம், சம்ஸ்கருதம் இவைகளில் பரிபூர்ண தேர்ச்சி -என்று சொன்னார்கள்.

நான் முல்லைக்கொடி கிராமத்திற்குப் போயிருக்கிறேன். அங்கு இவர் க்ருஹத்த்தில் சுமார் 1000 சம்ஸ்கருத, கிரந்த, தமிழ் புத்தகங்கள் இருந்தன. அதில் போதாயன சூத்ரம் பிரயோக புத்தகம் ஒன்று எடுத்து வந்தேன்.

பெரியவா எப்போதும் புதிதாக ஏதாவது நிகழ்ச்சி என்றால் மாமியை தான் முதலில் சம்ஸ்க்ருதம் பேசச் சொல்வார்கள். சமீபத்தில்  பெரியவா பீ. எஸ் பள்ளியின் Golden Jubilee Celebration க்காக வந்திருந்தபோது, ஆரம்பமாக மாமி சம்ஸ்க்ருதத்தில் ஒரு 5 நிமிடம் பேசினார்.    

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் குருஜி – எழுதும்போது

“எப்போதும் ஒருவரால் சிரித்த முகத்துடன் இருக்க முடியமா ? அப்படி ஒருவரைத் தெர்யுமா என்றால் தெரியும் என்பேன் அவர்தான் சாஸ்திர ரத்னாகர முல்லைவாசல் சாஸ்த்ரிகள் என்று

எனக்கு அவருடன் 35 வருடங்களாகப் பழக்கம். காலையில் எழுந்து அனுஷ்டானம் முடிந்து, பிரம்ம யக்ஞம் செய்து, அடுத்து வேத பாடம், வருபவர்களுக்கு வேத பாஷ்யம், அடுத்து பாஷ்ய பாடம், மாலையில்

பிரவசனம் இருக்கும். அவர் பகலில் படுத்துக் கொண்டார் என்பதே கிடையாது.

மூன்று மடங்களில் நடக்கும் சபைகளுக்குச் செல்வார். எல்லா மடாதிபதிகளுக்கும் சாஸ்த்ரிகள் மீது நல்ல மதிப்பு உண்டு. வித்யா கர்வம் துளி கூட கிடையாது. இன்று அவருடைய குமாரன் பேராசிரியர் ராம சுப்ரமண்யன் மகா மேதாவி. அவருடைய அறிவுக்காக உலகம் முழுவதும் போற்றப் படுபவர்.”

முடிக்கும்போது, நாம் சாஸ்திரிகளுக்கு தகன சம்ஸ்காரம் செய்யவில்லை. ஒரு வித்யா கோசத்திற்கு தகன சம்ஸ்காரம் செய்ததாக எனக்குத் தோன்றியது.

Dr.V. காமகோடி அவர்கள் சொல்லும்போது

 “என் தந்தை ஸ்ரீ. வீழிநாதன் அவர்களிடம் ஸ்ரீ. கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள் Ph.D. செய்தார்.  அவர் வேத பவனம் என்னும் பாடசாலையை ஆரம்பித்து, ஏராளமான சிஷ்யர்களை உருவாக்கினார். மேலும் தர்க்க பாடம், காவ்ய பாடம் ஆகியவைகளையும் சொல்லிக் கொடுப்பார்.  எனது அப்பா காலமானபோது எனக்கு ஆறுதலாக இருந்தது, மறக்க முடியாது”

 ஸ்ரீ. அஹோபில மடத்தில் இருந்து, கைப்பட எழுதி இருந்த கடிதம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அதில் “எனக்கு 45 வருட பழக்கம். மிகவும் சாந்தர். நான் திருப்பதியில் வாசிக்கும்போது Vice-Principal ஆக இருந்தார். த்ரிவேத பாஷ்ய பாடங்கள் சொல்லி கொடுத்து நிறைய வித்யார்த்திகளை உருவாக்கி இருக்கிறார். அவர் மறைவு வேத உலகத்திற்கு பெரிய இழப்பு” என்று ஜீயர் எழுதி இருந்தார்.

 

தொடரும் -.......

Saturday, 10 October 2026

எனது பார்வையில் – த்ரிஷ்யம்- மூன்று....

 

இந்த “SequeL” என்று சொல்லக்கூடிய படங்கள் எனக்கு கொஞ்சம் ஒத்துக் கொள்வதில்லை. அதுவும் நம்மூர் படங்கள்.  உதாரணமாக.  பொன்னியின் செல்வன்... புத்தகம் படித்தவர்கள், கதையை ரசித்தவர்களுக்குத் தெரியும்.. இதில் பார்ட் இரண்டு வேறு.

அதே போலதான், இந்த துரந்தர், - ஒரு கசாப்பு கடைக்குள் நுழைந்த அனுபவம். வெட்டு குத்து,  இதில் பார்ட் இரண்டு வேறு.

இப்போது சர்தார் இரண்டு - என்ற கொடுமையான படம்....

ஆனால் இங்கிலீஷ் படங்கள் சில பார்ட் இரண்டு, ஒன்றைவிட மிகவும் அம்சமாக இருந்தது.  ஒன்று. The Terminator,  இரண்டாவது   Die Hard II,  முதல் பாகத்தில் பட்டையைக் கிளப்பிய   Raiders of the Lost Ark. அடுத்த பாகம் ஓகே வாக இருந்தாலும்.... இப்படி சில

ஆனால், த்ருஷ்யம் கொஞ்சம் ஒத்துக்கொள்ளும் படியாக இருந்தது. அதற்க்கு ஜீது ஜோசப் ன் கதைக் களமும், மோகன் லால் என்று ஒரு அசுர நடிகன் இருந்த்தால்.  மோகன் லால் பலமே அவர் கண்கள் தான். அது பல உணர்ச்சிகளை பேசும்.

த்ருஷ்யம் இரண்டு – பாக்கும்போது. முக்கியமாக, அந்த எலும்புக்க் கூடை மாற்றும் காட்சி வரும்போது எனக்குத் தெரியும். மூன்றாம் பாகம் வரும் என்று. ஏனெனில் எ.கூ யார் மாற்றினார்கள் என்று மார்ச்சுவரி யில் விசாரித்தால் தெரிந்து விடும் ... என்ற சிம்பிள் லாஜிக்...

அனால் ஹிந்தி யோ, தெலுங்கோ தமிழோ பார்க்கவில்லை. ஏனெனில், மோகன் லாலின் உணர்சிகளை யாரும், ஏன் கமல் முதற்கொண்டு காட்ட முடியாது. கதை அதேதான் என்பதால் சுவாரஸ்யம் கம்மி.

த்ருஷ்யம் 3 – மலையாளம் பார்த்த பிறகு தான் உணர்ந்தேன். எண்டா போனோம் என்று. இடைவேளைக்குப் பிறகு “சர சர” என்று சீன்ஸ் போனாலும். ஒரு பிடிப்பு இல்லாத கதையாக இருந்தது.  முக்கியமாக, மோகன் லால். தன் குடும்பத்தைக் காப்பதற்காக, தன் பெண்ணின் கையையே வெட்டுவது -  ரொம்ப சினிமாடிக் ஆக இருந்தது.  ஜீது சொதப்பிட்டரே என்று தோன்றியது.

த்ருஷ்யம் – 3 – hindi - அதே கதையை காப்பி அடிக்காமல், புதியதாக யோசித்து, வேறு ஒரு கதையில் பயணிக்கிறது என்று கேள்விப்பட்டபோது, “பரவா இல்லையே, ஹிந்திகாரன் கூட யோசிக்கிறானே !! என்று தோன்றியது.

அஜய் தேவகன் ஒரு பெரிய நடிகர் என்று ஒப்புக் கொள்ளமாட்டேன்.  சில நாட்கள் முன்பு மறைந்த நானா படேகர் ஒருவர்தான் நான் பார்த்த ஹிந்தி சினிமாவின் ஒரே சிவாஜி.

தேவகனின் அரை கண் வேறு மூடியே இருக்கும். அவர் அப்படி ஒன்னும் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தாக நினவு இல்லை.

வேறு கதை என்னவாக இருக்கும் என்று யோசித்து,  ரெவியு வேறு கொஞ்சம் கலந்து கட்டி இருந்ததால், போய் பார்த்தேன்.

அசந்து போனேன்.

படத்தை செதுக்கி இருந்தார்கள். மலையாளத்தில் சொதப்பிய எல்லா பாகத்தையும் தவிர்த்து.  லாஜிக் ஓட்டை இல்லாமல், நம்பும்படியாக இருந்தது  மோகன் லாலுக்கு சரியான வில்லன் யாரும் இல்லை. அனால் இங்கே புது Crime Branch SP போலீஸ் ஆபிசர், வக்கீலாக பிரகாஷ் ராஜ். இந்த இருவரும் அஜய் தேவகனுக்கு “தண்ணி” காட்டுகிறார்கள்.  கடைசி 10 நிமிடத்தில், அஜய் தன்னுடைய “பக்கா ப்ளான்” ,மூலம் சரி கட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார்...

இதில் இரண்டாவது பாகத்தில், கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் எடுத்த எலும்புக் கூடு, மாற்றப்பட்டு விட்டு விட்டது என்று தெரிந்தபோதிலும், அந்த மண்ணில் DNA இருக்க்குமே என்று போலீஸ் சொல்லும்போது, :அட பரவயில்லையே” என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.  கடைசி வரை, கதையை மிக அற்புதமாக நகர்த்தி இருந்தார்கள்.

முதல் பாகத்தில் போலீஸ் காரராக வருவாரே, அஜய் தேவகனால் அவருக்கு வேலை போகுமே -அவரையும் “பழி வாங்க” படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.  (மலையாளம் போலவே)

எந்த எலும்புக் கூட்டை மாற்றினார்களோ, அந்த கல்லறையை தோண்டிப் பார்க்கவேண்டும் என்று பிரகாஷ் ராஜ், “அவர் பாணியில்” வாதாட, அது கூடாது என்று எதிர் தரப்பு, ஒரு மதத்தின் உரிமை மீறல் என்று பேச,  நீதிபதி, அந்தக் கல்லறையைத் தோண்ட உத்திரவு போடுகிறார்.  நமக்கு மூச்சு நின்றுவிடுகிறது..... அருமையான சீன்கள் ....

ஒரு தடவை அவசியம் பார்க்கலாம்....  கமுக்கமாக, அஜய் தேவகன் ட்விஸ்ட் கொடுக்கும்போது,  அந்தக் குடும்பம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது – அல்லவா !!! அதுதான் படத்தின் வெற்றி.

சிகரெட் பிடித்தால் கான்சர் வரும் என்று படத்திற்கு முன் வாய் வீங்கிய ஒரு patient ஐ காட்டுகிறார்கள்.  அனால் படம் முழுவது அந்த  SP சிகரட் பிடித்துக் கொண்டே இருக்கிறார்.  அதை பார்த்த எனக்கே  மூச்சு முட்டுகிறது .   SP  கொஞ்சம் முடி வெட்டிக் கொண்டு இருந்திருக்கலாம்......

  

 

 

 

Sunday, 16 August 2026

ஸ்ரீ குருப்யோ நமஹ.. ஸ்ரீ மாத்ரே நமஹ.. சாதுர்மாஸ்யம்......

 

மதுரையில் உள்ள ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் ஸத்குருவாக இருக்கும்  பூஜ்யஸ்ரீ  ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.  சாதுர்,மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் இந்த மாதத்தில், அவருக்கு பாத பூஜை பண்ணும் பெரும் பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த்து.

சாதாரணமாக, மதுரையில் வருடா வருடம் அனுஷ்டிக்கும் இவர், இந்த முறை. சென்னையில்.

நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் அருகில், மாருதாத்மஜம் (பேரே எவ்வளவு அழகாக இருக்கிறது) என்ற கட்டிடத்தில் அவருடைய பிரவேசம். மொட்டை மாடியில் மேலே பந்தல் போட்டு, பூஜை, கீழே அவர் வாசம்.

இந்த முறைதான், அவர் உபாஸனை மூர்த்தியான அம்பாளை (மதுரை மீனாக்ஷி என்று நினைக்கிறேன்) எடுத்து வந்திருந்தார்.  அத்தனை அழகு.

ஸ்ரீ பெரும்புதூரில் இதுக்கும் என்னுடைய மச்சினன், பாத பூஜை செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் நானும் ஒட்டிக்கொள்ள, அங்கு போய் நானும் பாத பூஜை பண்ணும்படி அமைந்துவிட்டது (பிக்ஷா வந்தனம் போதும் என்றுதான் போனேன்)

எல்லாம் குரு அணுக்ரஹம்

 அங்கே சென்றவுடன் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி கொண்டு இருந்தார்கள்  மூன்று முறை சொல்வார்கள் போலும்.  பிறகு லலிதா நவரத்ன மாலை, பின் காமாக்ஷி வ்ருத்தம்..  (பத்து விரல் மோதிரம்....). பிறகு சோடசோபசாரம்.... பிறது பாத பூஜை, மஹா தீபாராதானை...

குருஜியில் பூர்வீகம் - பூஜ்யஸ்ரீ ஸ்ரீ. கோபாலக்ருஷ்ண பாகவத சுவாமி அவர்களின் குமாரர், ஸ்ரீ. சஞ்சீவி பாகவதர் அவர்களின் புத்திரன் இவர்.

எங்கள் கருமண்டபத்தில் ராதா கல்யாணம் பண்ணும்போது, ஒரு முறை சஞ்சீவி பாகவதர் வந்திருக்கிறார்.  என் அம்மா, மாடியில் வலது புர ரூமில் தங்க வைத்து மடியாக சமைத்துப் போட்டது இன்றும் நினைவு இருக்கிறது

அம்மா பண்ண அந்த புண்யம்தான், இவரின் சா.மா வரதம் வேளையில் என்னையும் பங்கு கொள்ள வைத்தது.  நான் அடிக்கடி பல நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நன்கு பாடுவார் கூட.

கருமண்டப நிகழ்வை அவரிடம் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.  நாம சங்கீர்த்தனம், பூஜை, தியானம் மூன்று விஷயத்திலும் மிகவும் ஆழமான உணர்வு பூர்வமான கீர்த்தி.  தினமும் விடியல் காலை 3  முதல்   இரவு 9 மணி வரை.  பூஜை, வேத பாராயணம், என்று மிகவும் அருமையாக  ஸ்ரவணம் பண்ணி தேஜஸுடன் இருக்கும் மகான்.

 தபோவனம் ஸத்குரு   போல் ஒரு தோற்றம்.  மிகவும் அமைதியான பேச்சு, ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசி.  நான் வரகூர் என்று சொல்லவுடன் “அப்படி சொல்லுங்கோ” வரகூரா என்றார்.

அருமையான சாப்பாடு.

அன்றைய தினத்தில் ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது.

கொஞ்சம் தபோவனம் செல்வோம்:

தபோவனம் என்பது, திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை போகும் வழியில் இருக்கும் குருநாதர் என்று அழைக்கப்படும் ஸத்குரு ஞானாநந்தரின் அதிஷ்டானம்.

ஞானானுபவம்  என்ற ஒரு புத்தகம் நாமாஜி அவர்களால் எழுதப்பட்டது.  தபோவன ஸத்குருவுடன் குருஜி என்று அன்புடன் அழைக்கப்படும் ஹரிதாஸ் கிரி மற்றும் நாமாஜியும் இருவரும் ஸத்குருவுடன் கட்டளையின் படி நாமப் பிரசாரம் செய்வது என்பதை முழு மூச்சாகக் கொண்டார்கள்

குருஜி ஜல சமாதி ஆனவுடன், நாமாஜி அவர்கள் தேசம் முழுதும் நாமப் பிரச்சாராம் செய்து, குருநாதர் கட்டளையை நிறைவேற்றினார். 

ஸத்குரு ஞானானந்தர் எப்படியெலாம் அவர்களுக்கு அணுக்ரஹம் பண்ணினார் என்பதை பற்றி எழுதிய அற்புதமான புத்தகம்.  இன்னும் தபோவன பக்தர்கள், சாய் சரிதம் போன்று, நிதமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்தப் புத்தகம் படிக்கிறேன் என்று மனைவி ஸ்ரீ ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் “நான் தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்றார்.

எங்களுக்கு தூக்கி வாரி போட்டது.

அவர் பெயர் ஸ்ரீ பால குரு என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹன்.

ஸ்ரீ பால குருவை நான் அன்று சந்திக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது.  குருஜியையும், நாமாஜியையும்  பக்கத்த்தில் இருந்து பார்த்து, அவரகள் சொல்லிய அனுபவங்களை எழுதி இருக்கிறார்

அவர் சொன்ன ஆச்சர்யமான விஷயம் தான் எனக்கு பிரமிப்பும் குருநாதரின் அளப்பறியா கருணையையும் எனக்குப் புரிய வைத்தது. 

அவர் சொன்னார் “எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது, குறிப்பாக ல ள வித்தியாசம் தெரியாது,  மிகவும் ஸ்ரமப்பட்டு தான் ஒரு வரி எழுதுவேன்.  இந்தப் புத்தகம் முழுவது நான்தான் எழுதினேன்” என்றார் 

மேலும் சொன்னார் “யாரோ என் அம்மாவிடம் சென்று, உன் மகன் குருநாதரின் அனுபவங்களை தமிழில் எழுதுகிறான்” என்று சொல்ல என் அம்மா சிரித்து, “இதற்க்கு வாய்ப்பில்லை, அவனுக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது” என்றார்.  

“நான் எழுதியதை நினைத்துக் கொண்டு தபோவனம் சென்றால் அந்தக் காட்சிகள் குறிப்பாக, சத்குரு, குருஜி, நமாஜி சம்பாஷனைகள் நேரே நடப்பது போன்று தோன்றும்” என்றார்.

நான் மானசீகமாக அவருக்கு நமஸ்காரம் செய்தேன். குருஜி, நாமாஜி யை நேரில் பார்த்த ஒரு மகான் சர்வ சாதாரணமாக் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஸ்ரீ. ஸ்ரீ ராமானந்த சுவாமிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு அனுபவம்.

 

 

 

 

 

 

Wednesday, 5 August 2026

மூத்தோன் ஆயினை........

 

இன்று ஆடிக் கிருத்திகை. குரு வாரம்.  கொஞ்சம் முருகக் கடவுள்.  கொஞ்சம் குரு, கொஞ்சம் திருப்புகழ்.

ஒரு திருப்புகழில் “மூத்தோன் ஆகி” என்ற ஒரு வரியை உபயோகப் படுத்துகிறார்....

மூத்தோன் ஆகி என்ற சொல்லுக்கு பொருள் “மூத்த சகோதரனாய் விளங்கினாய்” என்று பொருள்.  இவர் எங்கே எப்படி மூத்த சகோதரன் ? என்ன புதுக் கதை ?

எத்தனை முறை சொன்னாலும்,  நான் “பால் மாறாத” ஒரே வார்த்தை. திருப்புகழ் ஒரு அமிர்தம்.  அதை பருக பருக நாம் அடையும் ஆனந்த்திற்க்கு அளவே இல்லை.

அந்த சந்தம், அந்த சொல் வார்த்தைகள். அர்த்தத்துடன் வரும் அந்த வார்த்தைகள்.  (உ.ம்)  “அ வு. ரு பிரணவா மந்திர கர்த்தவிய மாக வரு குருநாதா” என்று ஒரு வரி வருகிறது. அது அழகாக சாருகேசி ராகத்திலும் தாளத்திலும் உட்காருகிரது

திருப்புகழ் அன்பர்கள் குழு சென்னைக்கு தலைவராக இருக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இந்த திருப்புகழுக்கு ராகம், சந்தம் எல்லாம் போட்ட ராகவன் சார், ஆபீசில் இருந்து வந்து, முருகப்பெருமான் இருக்கும் பூஜை அறையில் கதவை சாத்திக்கொண்டு உட்கார்ந்து விடுவாராம். முருகன் ராகம் சொல்ல, சந்தம் சொல்ல இவர் எழுதுவாராம். அப்படி வந்த பொக்கிஷம் தான் திருப்புகழ்.

அந்த ராகவன் சார் என்ற மகானை, மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில் நடந்த திருப்புகழ் பஜனையில் நான் நேரே பார்த்து, நமஸ்காரம் செய்து, வீபூதி பிரசாதம் வாங்கி இருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் மெய் சிலிர்க்கிறது.  மும்பையில் இருக்கும் என் சித்தி, எல்லா திருப்புகழையும் பார்க்காமல், ஒரு வரி பிறழாமல் பாடுவாள்.

ஒரு பாட்டு நான் “நெட்ரூ” பண்ணுவதற்குள், குண்டலினி சக்தி மேலே எழும்பி விடும் போல எனக்கு இருக்கிறது. திருப்புகழ் ஒரு பீஜம் போன்றது... அருணகிரிநாதர் என்ற மகான் நமக்கு அளித்த கொடை.

எத்தனை பேருக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் எழுவதற்கு முன்பே, வில்லிப்புத்தூரரிடம் ஒரு போட்டியில் இவர் ஜெயித்த கதை தெரியும் .? அதாவது வி/பு ஒரு பாடல் பாட இவர் பதில் சொல்ல வேண்டும், அதே போல் அ.கி பாடி அவர் பதில். இல்லாவிட்டால் தோற்றவர் காதை, ஜெயி த்தவர் அறுக்க வேண்டும்.  வி/பு பாடலுக்கு இவர் அர்த்தம் சொல்லி விட்டார். இப்போது அருணகிரி பாடுகிறார்.

..திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா.....

இது முதல் வரி, இது போல் இன்னும் மூன்று வரி இருக்கிறது. இதை ஒழுங்காகப் படித்தாலே போறும். நமக்கு புஷ்பக விமானம் ரெடி.

இதற்ககு பதில் தெரியாமல் வி.பு திணற, காதை அறுக்காமல்,  அர்த்தம் சொல்லி புரிய வைத்து, பாரதம் பாடுக. என்று அணுக்ரஹம பண்ணுகிறார்..

வில்லிபுத்தூராரின் பாரதம் இப்படி வந்தது தான். 

இதற்க்கு அர்த்தம் வாரியார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார்.  அற்புதம். கூகுளில் கிடைக்கும் தேடி படியுங்கள்..

இன்று வியாழன், குரு அணுக்ரஹம் என்பது அப்படி சாதாரணமானது அல்ல. ப்ரேமி அண்ணா சொல்வது போல், நீ “ஆதி மூலமே” என்று கூப்பிடாதே, கஜேந்திரா என்று கூப்பிடு.  நமக்கு எதற்கு ஆதி மூலம். ஆயிரம் பேர் பகவானை நினைத்து மோட்ச கதி அடைந்திருக்கிறார்க்கள்.  அவர்களில் ஒருவனாய், ஒரு பிரஹலாதனை, துருவனை, ஆஞ்சநேயர்...இப்படி

ராமாயணத்தில் ஸபரி போன்ற ஒரு பாத்திரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவள் குரு கைங்கர்யம் பண்னினாள்,  குருவின் யாக சாலையை சுத்தம் பண்ணினாள்.  தரையை மொழுகினாள்,  பாத்திரம் தேய்த்தாள்.  ஒரு நாள் எல்லோ குருமார்களும் கிளம்ப, சபரி கேட்கிறாள் “என்னை தனியாக விட்டுப் போகிறீர்களே, நான் என்ன செய்வேன்” என்று கேட்க, முனிவர்கள் “நாங்கள் யாரைத் தேடித் போகிறோமோ அந்த பரமாத்மா, ராமன் என்ற பெயரில் உன்னை தேடி வருவார்”.  என்கிறார்கள்.

அதற்குப் பிறகு அவள் ராமனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள், இந்த கனி, பழ வகைகள்... எல்லாம் ரெடியாக.

ராமன், லக்ஷ்மனனோடு வருகிறார். அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.  உபசாரங்கள் முடிந்து, ராமர் என்ன வேண்டும் என்று கேட்கிறாள். சபரிக்குத் தெரியும், வந்தது சாக்ஷாத் பரமாத்மா என்று. முன்னமேயே (முடிவர்கள் சொன்னதன் பேரில்)

சபரி உடனேயே “ததி பாண்டன்” மாதிரி, பானையோடு வைகுண்டம் போகவேண்டும் என்று கேட்கவில்லை.  “எனக்கு ஒன்றும் வேண்டாம் ராமா. எதோ உன்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பார்த்து விட்டேன். நான் கிளம்புகிறேன். எனக்கு ஏற்கனேவே புஷ்பக விமானம் ரெடியாக இருக்கிறது” என்கிறாள்.  எந்த ராமனை முனிவர்கள் கட்டி தழுவவேண்டும் என்று நினைக்கிறார்களோ, எந்த ராமன் ராமாயணத்தில்  ஜகஜ்ஜாலம் பண்ணினானோ., எந்த ராமனை ஆஞ்சநேயர் அன வரதமும்  த்யானம் செய்கிராறோ, அந்த ராமனை சபரி கண்டுக்கவே இல்லை.

குரு கிருபை அது.

இப்போது திருப்புகழுக்கு வருமோம் !!!

 ஓர் உருவாகிய தாரக பிரம்மத்து – என்று தர்பாரி கானடாவில் ஒரு பாட்டு இறுக்கியது.  இந்தப் பாடல் அமைப்பு  ஒரு தேர் போல அமைக்கப்பட்டது. தேர் தட்டு போல, தேர் தட்டு, 1  முதல்  7 வரை கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்லும். இப்படி அமைப்புடன் எங்கு தேடினாலும் ஒரு பாட்டு கிடைக்காது.

இது சுவாமி மலை திருப்புகழ். ஞானம் தெறிக்கும் பாட்டு. தர்பாரி கானடாவின் அத்தனை அழகையும் கொட்டித் தீர்த்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டை கேட்டு “ஆஹா” என்று ஆனந்தக் கண்ணீர் விடாதவர்கள் மிகக் குறைவு.

ஒன்றாய், இருமையின், நான்முகன் என்று பல ஆரம்ப வரிகளில் வரும் இந்தப் பாடல்  ஒரு சிறிய பகுதியைத் தருகிறேன்

முன்பொரு நாள்

உமையைம்மையின் இரு மார்பிலும் சுரந்த  ஞானப் பாலை அருந்தி

இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி

நால்வகை கவிகளிலும்  வல்லவனாகி

ஐம்புலன்களுக்கு அடிமைப்படாத அவர்களை ஜெயித்த உரிமையாளன் ஆகி

ஆறு முகம் உடைய சண்முகம் இவன்தான் என்று யாவரும் கூற

இப்போது  திருப்புகழ் வரிகள் “எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை” என்கிறார்.

இதில் “கழுமலத்து உத்த்தனை” என்றால் – சீர்காழியில் திருஞானசம்பந்தராக தோன்றினாய்” என்கிறார்.  அருணகிரிநாதர் என்ற குரு, சம்பந்தப் பெருமானை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பாடலில் முடியுமோது “ஏரகத்து இறைவன் என இருந்தனையே” என்று முடிக்கிறார்.  இதை த.கா வில் பாடும்போது. நம்மை உருக்கும்.

கௌமாரம்.காம் ல் இந்தப் பாடல் ராகவன் சார் பாட நாம் இன்றும் கேட்கலாம்.

இப்போது முதல் கேள்விக்கு பதில் – வள்ளியை திருமணம் செய்ய கிழவன் ரூபத்தில்   முருகன் வந்து சேர,  இவள் பயந்து ஊட விநாயகர் யானை ரூபத்தில் வந்து  காப்பாற்றினார். . இந்த இடத்தில் முருகனுக்குப் பின்பு, விநாயகர் வந்ததால்,  முருகன் மூத்தோன் ஆகிறார்.

முருகா சரணம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, 26 June 2026

கோடை நகர் வாழ வந்த பெருமாளே !!!!....

 

என்று அருணகிரிநாதர், வல்லக்கோட்டை முருகனை துதித்துப் திருப்புகழ் எழுதி இருக்கிறார்.

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் ஆகி  இன்று ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது. சம்வத்ஸரம். அதனால் கோடை நகர் முருகனைப் பற்றி......

இது சென்னையில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர்,- படப்பை, ஓரகடம் வழியாகச் செல்லும்போது, வழியில் அழகான பெரிய “போர்டு” உங்களை வரவேற்கும்.  கொஞ்சம் உள்ளே போனால்.... கோவில்

1500 வருட ஸ்தலம்.   வேலுக்கு மட்டும் தனியாக ஒரு சந்நிதி உண்டு. 

அற்புதமான கோவில். மூலவர் மிகவும் உயரம். ஒரு ஏழு அடி இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கிறார். நான் நினைப்பதுண்டு. குருக்கள் “நேர் முகத் தேர்வு” பண்ணும்போது, ஆகம விஷயங்களைத் தவிர, உயரத்தையும் பார்க்கவேண்டும் என்று.  தலைக்கு மேல், "அயம் மே ஹஸ்தோ பகவான்" எல்லாம் பண்ண முடியாது

ஆறு முகங்களோடு, என்கண் மாதிரி ஒரு மூலவரும் உண்டு

“யாமிருக்க பயமேன்” என்று அபய ஹஸ்ததைக் காட்டி, முருகன் சொன்ன இடம் இதுதான் என்று ஒரு அற்புதமான சரித்திரம் உண்டு

வள்ளல் என்ற அசுரன், மிக அதிக வரங்களைப் பெற்று, தேவர்களைத் துன்பப்படுத்த, அவர்கள், முருகனிடம் முறையிட, அவர் இந்த அரசன்/அசுரனை அழித்துக் கோட்டையை’ கைப்பற்றிய இடம் தான் வல்லக் கோட்டை.  இன்னொரு சரித்திரமும் உண்டு.

அருணகிரியார் மைலாபூரிலும் பாடி இருக்கிறது. எப்படி போனார் என்று தெரியாது, இங்கும் பாடி இருக்கிறார்.

திருப்போரூரில் இருந்து, திருத்தணி போகும் வழியில் உள்ளது. அருணகிரிக்கு வல்லக் கோட்டை வா !  என்று முருகன் கனவில் சொன்னதாக ஒரு வரலாறு உண்டு

மூலவருக்கு எதிரில் இரண்டு மயில்கள் இருப்பது ஆச்சர்யம்.  இதைப் பற்றி அங்கு இருந்த குருக்களிடம் கேட்ட போது- “அசுரர்களை அழித்துக் காப்பது என்ற தொழிலையும், பக்தர்களை காத்து, அருளுவது என்ற இரு செயலையும் ஒன்றாகச் செய்பவர். ஒரு மயில் கொஞ்சம் உக்ரமாக இருக்கும், அது அசுர வதம், இன்னொன்று சாந்தமாக இருக்கும் – பக்த சம்ரக்ஷணம்”   

நான் கண்ட இன்னொரு விஷயம், மூலவர் மிகவும் அருகில். நாம் கோவிலுக்குப் போனோம் என்றால், மூலவர் எங்கோ உள்ளே இருப்பார்.  கற்பபூரம் காட்டும்போதுது கொஞ்சம் முகமும், பாதமும் தெரியும்.  இங்கு மூலவர் கிழக்கு நோக்கி இருப்பதாலும், நல்ல வெளிச்சம். பெரிய விக்ரஹம் ஆதலால் ஆனந்தமாக அபிஷேகமோ, தீபாரதனையோ மிக அருகில் பார்க்கலாம்

பாதிரி மரத்திற்க்குக் கீழே, இந்த திருவிளையாடல் புரிந்த முருகன்.

அருணகிரிநாதர், சென்னை வாழ் மக்களின் “பரிதாப” நிலையைப் புரிந்துகொண்டு ஒரு எளிமையான திருப்புகழ் ஒன்று பாடி இருக்கிறார். அவர் சொல்கிறார்

“அம்மாவின் உடலில் இருந்து கஷ்டப்பட்டு பிறந்து

ஆசையுடனே பிறந்து, நேசமுடனே வளர்ந்து, அழகான ஆண் மகனாகி,

உலகம் முழுது சுற்றி, கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளை பெற்று, போதும் போதும் என்று பணம்  சேர்த்து –

இதே மாதிரி – “போகமதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உந்தன் பூ அடிகள் சேர அன்பைத் தருவாயே” என்று  எச்சரிக்கிறார் !!!”

இது ஒரு பாதி

அடுத்த பாதி= திருமால், சிவன், அம்பாள் அவருடைய வீரம் என்று திருப்புகழை முடிக்கிறார்.

திருப்புகழைப் படித்தால் – எல்லா கடவுளையும் ஒரு சுற்று வரலாம் என்பதற்கு உதாரணம் சொல்லும் – இன்னொரு திருப்புகழ்

இதை மாயா மாளவ கௌளையில்- ஸ்ரீ ராகவன சார் ;பாடியிருக்கிறார்.  Kaumaaram.com ல் கேளுங்கள். கண்களில் கண்ணீர் வரும்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம். அன்னதானம். “பக்கத்தில் “RENAULT கம்பெனி”  தன்னுடைய CSR பணத்தின் மூலமாக, ஒரு அன்னதானக் கூடம் கட்டி, பாத்திரங்கள் வாங்கி, நிரந்தரமாக சமையர்காரர்களை போட்டு, நித்யம் அவர்கள் செலவில் அன்னதானம் செய்கிறார்கள்

 வரும் எல்லோருக்கும் சாப்பாடு உண்டு.