Saturday, 14 March 2026

தாடகை

 

இராமாயண காலத்தில் இருந்து இன்று வரைக்கும், இந்த தாடகை வதம், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற சில விஷயங்கள் “சரியா தவறா” என்ற வாதம் இன்றும் உண்டு.

தமிழ் அறிஞர் சத்யசீலன், புலவர் கீரன் போன்ற பலர், இன்று, இலங்கை ஜெயராஜ் போன்ற பலரும் சரி, தவறு என்று போட்டி போட்டுக் கொண்டு பேசுவதைக் கேட்டு பார்த்து இருப்போம். நமக்கே, அட போங்கப்பா !!! என்று டீ வீயை அணைக்கும் வரை.

இதில் தாடகையை வதம் செய்யலாமா ? அவள் அரக்கியாக இருந்தாலும் ஒரு பெண் இல்லையா, என்று வக்காலத்து கும்பல் ஒன்று இன்றும் உண்டு.

மாதரையும் தூதரையும் கொல்வது பாவம் என்பது தர்மம். தர்மத்தின் வழி நடந்த ராமன் தர்மம் தவறி நடக்கலாமா ?  என்று ஒரு கும்பல் கலாய்க்கவேண்டியது.

விச்வாமித்ரரே, தாடகையை போட்டுத் தள்ளி இருக்க வேண்டியதுதானே, எதுக்கு ராமனைக் கூட்டிக்கொண்டு போனார் ?  என்று ஒரு கும்பல் அலப்பறை.

தாடகையை, இவள் அரக்கி, பெண்ணில்லை. பெண்ணிற்கு உண்டான ஒரு குணமும் இவளிடம் கிடையாது, எனவே கொன்று விடு ! என்று முனிவர் சொல்லி  ராமன் செய்ததாக நாம் படித்து இருக்கிறோம்

கொஞ்சம் கம்பனிடம் வருமோம்

ஒரு அரக்கி பெண்ணில்லை என்று சொல்ல வரும் கம்பன் அந்த அரக்கியைப் பற்றி விவரிக்கிறார். -  நாம் கொஞ்சம் கற்பனை செய்வோம். -என்ன சொல்லமுடியும் சார். >

அவள் பற்கள் நீளமாக இருந்தன, பருத்த உடம்பு, கண்ணில் தீப்பொறி, கைகள் அகலம். இத்யாதி இதாயதி. நம்முடைய கற்பனைக்கு வருவது அவ்வளவுதான்.

படிப்பவர்களுக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் ராமன் மேல் பழி வராது.

கம்பன் கூறுகிறான்

சிலம்புகள் சிலம்பிட செழித்த கழலோடும்: 

தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்கு பதில், மலைகளை பிடுங்கி கோத்து இருக்கிறாள். கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் மேரு மலை, மேற்கு தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி, விந்திய அப்படியே கொஞ்சம் நம்ம பரங்கி மலையையும் சேர்ந்து பாருங்கள். !!!!   நினைத்துப் பார்க்கும் நமக்கே கொஞ்சம் திகில் ஆகா இருக்கும் .....

நிலம் புக மிதித்தனள்:

அந்தத் தரையை அழுத்த மித்திது நடக்கிறாள். அந்த தரையில் பள்ளம் விழுகிறது. எவ்வளவு பெரிய பள்ளம் தெரியுமா  ?

நெளித்த குழி வேலை சலம் புக:

அதில் கடல் தண்ணீர் வந்து நிறையுமாம்.  கடல் ஊருக்கு வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்கவேண்டும். அப்போ அவள் கால்.....

அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம் புக

அவள் வரும்போது அனல் கக்கும் கண் உள்ள எமனும் தெறித்து ஓடி, ஏதோ குகைக்குள் ஒளிந்து கொள்வானாம்.

எமனுக்கு எமள்.....

நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்

அவள் கொலுசில் கோத்தது போக மிச்ச மலைகள் எல்லாம் அவள் பின்னே ஓடி வருமாம்.

எதோ காத்து அடிச்சால் பேப்பர் பறந்து வருமே.  தெலுங்கு பட சண்டையில் வீரர்கள், புவி ஈர்ப்பு விசையை பழிப்பது போல் மேலே பரப்பார்களே.. அது போல.

என்று முடிக்கிறார்

இவள் பெண்ணா. நளினம் எதாவது இருக்கிறதா ?  என்று நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும் பாடல் இது.

விச்வாமித்த்ரர் யாகம் செய்வதால், விரதம் மேற்கொண்டு, வதம் செய்யாமல் இருந்தார் என்பதாலும், “இதனை இதனால், இவன் முடிக்கும்” என்று ஆராய்ந்ததினால் ராமன் வந்தான் என்பதாலும், அவருடைய தொலை நோக்குப் பார்வை ராமனைக் கூட்டிக்கொண்டு, சீதையை கல்யாணம் செய்து கொடுப்பதில் மூலம், தம் “அரிச்சந்திரனையும், சந்திரமதியையும் பிரித்த பாபத்திற்க்கு பிராயச்சித்தம் தேட, ராமனை அழைத்துக் கொண்டு போனார், என்பது ராமாயணத்தை நன்கு படித்தவர்க்கு புரியும். 

இதில் இன்னொரு சூக்ஷமமான விஷயம், விஸ்வாமித்ரர், தசரதனிடம், ராமரை மட்டும் கேட்டார். தசரதன், பயந்து, கூடவே லக்ஷ்மணனையும் அனுப்பித்தார். போரில், ராமன் இலக்குவனை சேர்க்கவே இல்லை, தாடகை வதம், மாரீசனை, குற்றுயிரும் குலையிருமாய், கடலில் தள்ளியது, (பின்னணி ராவணன் மரணத்துக்கு உதவியாய் இருப்பான் என்ற ஒரு நல்ல எண்ணம்) எல்லாம் ராமன் ஒருவனே செய்தான்

ஆனால் அதே சமயம் இலக்குவன் வீரத்தை குறைத்து மதிப்பிட்டுவிடுமே என்று இந்த்ரஜித்துடன் போருக்கு, இலக்குவனை மட்டும் அனுப்பி வைத்த்தான்.

விராட வதம் போது, இலக்குவனை, சீதையை ரட்சிக்கும் பொறுப்பை விட்டு விட்டான்.

ராமன் ஒரு அற்புதமான Management Consultant/Expert

 

 

Wednesday, 11 March 2026

பட்டினத்தார் பக்தி

 நாம் பக்தி செய்கிறோம்.  கோவிலுக்குப் போகிறோம். வீட்டில் காலையில் எழுந்து விளக்கு வைத்து, சுவாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்கிறோம். அப்போ அப்போ விரதம் இருந்து உடலை வருத்திக் கொள்கிறோம். சபரிமலை, பழனி என்று ஒரு மண்டல விரதம் வேறு. பல மைல் கால் நடையாக நடந்து கோவிலுக்குச் செல்கிறோம். அர்ச்சனை செய்கிறோம்.  க்ஷேத்ராடனம் என்று பல கோவிலுக்கு சென்று பல தெய்வங்களைப் பார்க்கிறோம். அப்போ அப்போ அன்னதானம் செய்கிறோம். தினமும் விஷ்ணு ஆராதனை, சிவா ஆராதனை வேறு..... சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கண் முழிப்பு வேறு...

இதெல்லாம் செய்துவிட்டு, “நான் தான் பக்தி செய்தேன்” என்று சொல்லிக் கொள்கிறோம். வெளியில் சொலாவிட்டாலும், நம் மனதுக்குள்ளே, “நான்தான் சிறந்த பக்திமான்” என்று அப்பப்போது சொல்லிக் கொள்கிறோம்.... இல்லையா.........

பட்டினத்தார் சொல்கிறார்.  யார்.... இவர்....”ஒன்றுமே வேண்டாம் என்று ஒரே இரவில் எல்லாவற்றையும் உதறிவிட்டு கோமணத்தைக் கட்டிக்கொண்டு புறப்பட்டவர்.”.. யார் “காதறுந்த ஊசியும் வாராது காண கடைவழிக்கே” என்றவர் - . சொல்கிறார்.  

நான் செய்வது என்ன பக்தி, அந்த மூன்று பேர் முன்னால் ஏன் பக்தி எம்மாத்திரம்.....என்று புலம்புகிறார்.

யார் அந்த மூன்று பேர்  

“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்”  -  சிறுத்தொண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார். 

அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். அவரும் ஒத்துக் கொண்டார்.  சிவனடியார் சில நபந்தனைகளை வைத்தார்.

 பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்

 பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது

 தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க   வேண்டும்

முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள். (பிறகு நடந்தது நம் எல்லோருக்கும் தெரியும்)

இது பக்தியா, நான் செய்வது பக்தியா ????- என்று கேட்கிறார் பட்டினத்தார் 

இரண்டாவது:

மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்

சூள் என்றால் சத்தியம்

திருநீலகண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார்.  “தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன் என்று” வாழ்ந்த தகுந்த பெருமை உடையவர்.

அவர் கொஞ்சம் மனச் சஞ்சலமுடன், காமத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்தார். இது அவர் மனைவிக்குத் தெரிய, எதோ ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை நெருங்கும்போது, “எம்மைத் தொடாதீர்கள், அந்தத் திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று சொல்லிவிட்டார்.

எம்மை என்று சொன்னதால், எல்லாப் பெண்களையும் மற்றும் அல்லாது தன மனைவியையும் குறிக்கும் என்பதால், தன் இச்சைகளை துறந்து, கடைசி வரையில், தன் மனைவியிடம் போகாமல் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

காமத்தை அடக்க முடியுமா என்ன ?  இந்த உலகத்தில் மண்ணுக்கும், பெண்ணுக்கும் அடிமையாகாமல் எத்தனை பேர் இருக்கிறோம்.  ?

ஒரே குடிசையில், இருவரும் தனியே... “சத்தியம் செய்த ஒரு வார்த்தைக்காக” காம் நிலையை அப்படியே நிறுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்

பட்டினத்தார் சொல்கிறார்.. “இப்படி ஒரு வாழ்க்கை நான் வாழ வில்லையே, இப்படி ஒரு பக்தி நான் பண்ணவில்லையே ? என்று

மூன்றாவது

“நாலாறில் கண்ணிடத்து அப்பவல்லேன்”

யார், நம்ம கண்ணப்ப நாயனார். சிவலிங்கத்தைக் கண்ட ஆறாவது நாளிலேலேயே மனம் உருகி, அந்தக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவத்தைப் பொறுக்க மாட்டாமல், தன் ஒரு கண், இல்லை, இரண்டு கண்களையும் தோண்டி தர விழைகிறார்.  7 வது நாளில்  "நில் கண்ணப்ப? என்று சிவபெருமான் தரிசனம்.....

இந்த பக்தி எங்கே ?  இவர்கள்  செய்த பக்தியில் நூற்றில் ஒரு பங்கு நான் செய்ய வில்லையே ?

“நானினி சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே” என்று முடிக்கிறார்......

நாம் ஏதோ பேருக்கு பக்தி பண்ணிவிட்டு, ஒன்றும் துறக்காமல், சுகர் மாத்திரையும் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்வீட்டையும் சாப்பிட்டுக் கொண்டு, -வைகுண்டத்தில் நமக்கு ஒரு சீட் , CONFIRMED என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்

பட்டினத்தார், அனைத்தையும் விட்டுவிட்டு, போவோமோ, மாட்டோமோ என்று சந்தேஹப்படுகிறார்.

தேறுவதெப்போ நெஞ்சே, தெளிந்து கரை ஏறுவதேப்போ நெஞ்சே என்ற நீலண்ட சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது....

அப்படி என்றால் நான் எப்படித்தான் பக்தி செய்வது என்று சண்டைக்கு வரக்கூடாது.

பக்திக்கு வைராக்கியம் முக்கியம்.  பக்தி பண்ணி கொண்டே இருக்க வேண்டும். பக்தியில் கர்வம் கூடாது.  நாம் பெற்றோர்கள் செய்த அந்த பக்தியை நாம் செய்தாலே போதும்.