நாம் பக்தி செய்கிறோம். கோவிலுக்குப் போகிறோம். வீட்டில் காலையில் எழுந்து விளக்கு வைத்து, சுவாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்கிறோம். அப்போ அப்போ விரதம் இருந்து உடலை வருத்திக் கொள்கிறோம். சபரிமலை, பழனி என்று ஒரு மண்டல விரதம் வேறு. பல மைல் கால் நடையாக நடந்து கோவிலுக்குச் செல்கிறோம். அர்ச்சனை செய்கிறோம். க்ஷேத்ராடனம் என்று பல கோவிலுக்கு சென்று பல தெய்வங்களைப் பார்க்கிறோம். அப்போ அப்போ அன்னதானம் செய்கிறோம். தினமும் விஷ்ணு ஆராதனை, சிவா ஆராதனை வேறு..... சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கண் முழிப்பு வேறு...
இதெல்லாம் செய்துவிட்டு, “நான் தான் பக்தி செய்தேன்”
என்று சொல்லிக் கொள்கிறோம். வெளியில் சொலாவிட்டாலும், நம் மனதுக்குள்ளே, “நான்தான்
சிறந்த பக்திமான்” என்று அப்பப்போது சொல்லிக் கொள்கிறோம்.... இல்லையா.........
பட்டினத்தார் சொல்கிறார். யார்.... இவர்....”ஒன்றுமே வேண்டாம் என்று ஒரே இரவில் எல்லாவற்றையும் உதறிவிட்டு கோமணத்தைக் கட்டிக்கொண்டு புறப்பட்டவர்.”.. யார் “காதறுந்த ஊசியும் வாராது காண கடைவழிக்கே” என்றவர் - . சொல்கிறார்.
நான் செய்வது என்ன பக்தி, அந்த மூன்று பேர்
முன்னால் ஏன் பக்தி எம்மாத்திரம்.....என்று புலம்புகிறார்.
யார் அந்த மூன்று பேர்
“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்” - சிறுத்தொண்ட
நாயனார் என்று ஒருவர் இருந்தார்.
அவர் வீட்டுக்கு சிவனடியார்
உருவத்தில் வந்த சிவன்,
"பிள்ளைக் கறி"
போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்
சாப்பிடமாட்டேன் என்றார். அவரும் ஒத்துக்
கொண்டார். சிவனடியார் சில நபந்தனைகளை
வைத்தார்.
பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது
தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க வேண்டும்
முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக்
கூடாது.
சிறுத்தொண்டரும்,
அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக்
கறி செய்து போட்டார்கள். (பிறகு நடந்தது நம் எல்லோருக்கும் தெரியும்)
இது பக்தியா, நான் செய்வது பக்தியா ????- என்று கேட்கிறார் பட்டினத்தார்
இரண்டாவது:
மாது சொன்ன சூளால் இளமை துறக்க
வல்லேன் அல்லன்
சூள் என்றால் சத்தியம்
திருநீலகண்ட நாயனார் என்று ஒருவர் இருந்தார். “தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும்
அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன் என்று” வாழ்ந்த தகுந்த பெருமை
உடையவர்.
அவர் கொஞ்சம் மனச் சஞ்சலமுடன், காமத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்தார். இது அவர் மனைவிக்குத் தெரிய, எதோ ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை நெருங்கும்போது, “எம்மைத் தொடாதீர்கள், அந்தத் திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று சொல்லிவிட்டார்.
எம்மை என்று சொன்னதால், எல்லாப் பெண்களையும் மற்றும்
அல்லாது தன மனைவியையும் குறிக்கும் என்பதால், தன் இச்சைகளை துறந்து, கடைசி வரையில்,
தன் மனைவியிடம் போகாமல் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
காமத்தை அடக்க முடியுமா என்ன ? இந்த உலகத்தில் மண்ணுக்கும், பெண்ணுக்கும்
அடிமையாகாமல் எத்தனை பேர் இருக்கிறோம். ?
ஒரே குடிசையில், இருவரும் தனியே... “சத்தியம் செய்த
ஒரு வார்த்தைக்காக” காம் நிலையை அப்படியே நிறுத்தி ஒரு வாழ்க்கை வாழ்ந்து
இருக்கிறார்
பட்டினத்தார் சொல்கிறார்.. “இப்படி ஒரு வாழ்க்கை நான்
வாழ வில்லையே, இப்படி ஒரு பக்தி நான் பண்ணவில்லையே ? என்று
மூன்றாவது
“நாலாறில் கண்ணிடத்து அப்பவல்லேன்”
யார், நம்ம கண்ணப்ப நாயனார். சிவலிங்கத்தைக் கண்ட ஆறாவது நாளிலேலேயே மனம் உருகி, அந்தக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவத்தைப் பொறுக்க மாட்டாமல், தன் ஒரு கண், இல்லை, இரண்டு கண்களையும் தோண்டி தர விழைகிறார். 7 வது நாளில் "நில் கண்ணப்ப? என்று சிவபெருமான் தரிசனம்.....
இந்த பக்தி எங்கே ?
இவர்கள் செய்த பக்தியில் நூற்றில் ஒரு பங்கு நான் செய்ய வில்லையே ?
“நானினி சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி
அப்பனுக்கே”
என்று முடிக்கிறார்......
நாம் ஏதோ பேருக்கு பக்தி பண்ணிவிட்டு, ஒன்றும் துறக்காமல், சுகர் மாத்திரையும் சாப்பிட்டுக் கொண்டு, ஸ்வீட்டையும் சாப்பிட்டுக் கொண்டு, -வைகுண்டத்தில்
நமக்கு ஒரு சீட் , CONFIRMED என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்
பட்டினத்தார், அனைத்தையும் விட்டுவிட்டு, போவோமோ, மாட்டோமோ என்று சந்தேஹப்படுகிறார்.
தேறுவதெப்போ நெஞ்சே, தெளிந்து கரை
ஏறுவதேப்போ நெஞ்சே என்ற நீலண்ட சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது....
அப்படி என்றால் நான் எப்படித்தான்
பக்தி செய்வது என்று சண்டைக்கு வரக்கூடாது.
பக்திக்கு வைராக்கியம்
முக்கியம். பக்தி பண்ணி கொண்டே இருக்க
வேண்டும். பக்தியில் கர்வம் கூடாது. நாம்
பெற்றோர்கள் செய்த அந்த பக்தியை நாம் செய்தாலே போதும்.
No comments:
Post a Comment