Wednesday 30 December 2020

செம்மங்குடியும் மார்கழி மாதமும்

 

இந்த சிற்றுரைக்கு - ஷ்யாமளா தண்டகமும், திருப்புகழும் என்று கூட தலைப்பு வைக்க நினைத்தேன்

மார்கழி மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை தவிர, மேற் சொன்ன இரண்டையும் பற்றி கொஞ்சம் “அசை” போடலாம் என்றுதான் இது.

நான் ஏதோ இரண்டையும் ஆராய்ந்து கட்டுரை எழுதப்போகிறேன் என்று பயப்பட வேண்டாம். என்னை இந்த இரண்டும் எப்படி என் வாழ்க்கை நீரோட்டத்தில் நின்று யோசிக்க வைத்தது/பாதித்தது என்பதைப் பற்றித்தான் இது.

செம்மங்குடியில் எங்கள் வீடு, பெருமாள் கோவிலில் இருந்து நான்காவது வீடு. மார்கழி மாதத்தில் விடியற் காலை நான்கு மணிக்கு, பாட்டு போட்டு விடுவார்கள். அதில் பல பாடல்கள், எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

உதாரணமாக, பாடகி எம், எல். வசந்தகுமாரியின் யின் திருப்பாவை. “திருப்பதி மலைவாசா வெங்கடேசா” என்ற T M சௌந்தர ராஜனின் பாட்டைச் சொல்லலாம். (இதற்க்குப் பிறகு வேறு எங்கேயும் நான் இந்தப் பாட்டைக் கேட்டதில்லை). “அங்கம் ஹரே” என்று கனகதாரா ஸ்தோத்ரமும் உண்டு

இதில் முக்கியமாக, 5 செகண்ட் வீணை வாசித்தவுடன், ஒரு பெண்மனி “மாணிக்க வீணாம் உபலாயந்திம்” என்று “பொட்டில் அடித்தார் போல” ஒரு பாட்டு ஆராம்பிப்பார்.  ஸ்லோகம் போன்று நீண்ட வரிகளோடு ஒரு 15 நிமிடம் ஒரு பாட்டு வரும். அதுதான் பின்னாளில், நான் தெரிந்துகொண்ட ஷ்யாமளா தண்டகம்.  

கொஞ்சம் ஷ்யாமளா தண்டகம் பற்றி:

தண்டகம் என்பது ஒரு செய்யுள் போன்று, அதில் 26 வார்த்தைகள், அதற்கு மேலேயும் வரும். ஒரே மூச்சில் பாடினால்தான் அது அழகாக இருக்கும். இல்லாவிட்டால் நமக்கு தொடர்ந்து படிப்பது கஷ்டமாகக் கூட இருக்கும். இது ஒரு செய்யுள் போல இல்லாமல், உரை நடை போல கூட இருக்கும்.

இதை இயற்றிவர் மஹாகவி காளிதாசன். பாரதியார் “கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும் தெரியாமல் போயிற்று” என்று பெருமையாகச் சொல்லும் ஒரு புலவர்.  அம்பாளின் அருளுக்கு ஏங்கி, அதைப் பெற்றவுடன், பீறிட்டுக் கொண்டு வந்தது இந்த ஷ்யாமளா தண்டகம். மிகவும் பட்டினி கிடந்து இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கு, சோறு கிடைத்தால் எப்படி சாப்பிடுவான். அது போல்.

திரும்பவும் செம்மங்குடி:

எனக்கு செம்மங்குடியில், கோவிலில்,  இந்தப் பாட்டு ஆரம்பித்தவுடன், கடுப்பாக இருக்கும். “யாராவது மார்கழி மாதத்தில் விடியற் காலை 5 மணிக்கு மூச்சு விடாமல் பாடுவார்களா ?  (அரைத்தூக்கத்தில் ரசித்த ஸ்லோகமும் இதுவே..என்பது வேறு விஷயம்)  இவ்வளவு நீளமான வார்த்தைகள். யாரு இந்த பாடும் அம்மா !!!, இப்படிப் படுத்தறாளே”, என்று இருக்கும். போதாக்குறைக்கு, சிவன் கோவிலில் இருந்து, விஸ்வநாத ஆசாரி தன் குழுவோடு “தோடுடைய செவியன்” என்று பாடிக்கொண்டே வருவார்கள். ஜால்ரா வேறு. கோவில் மணி மாதிரி.  என் வீட்டைக் கடந்து போனபின்பு, “அப்பாடி” என்று இருந்தால், “u turn”  போட்டு, “தில்லை வாழ் அந்தணர்க்கு அடியார்க்கும்” என்று பாடிக்கொண்டு செல்வார்கள். போதாதிற்கு, சீர்காழி கோவிந்தராஜன் வேறு “சின்னஞ்சிறு பெண் போலே” என்று பாட..... (சீர்காழி பாடினால், இந்தப்பக்கம் மணக்கால் அய்யம்பேட்டை, அந்தப்பக்கம் சேங்காலிபுரம் வரை கேட்கும்)

இதை விட கோவிலில் பாட்டு போடும், record player என்பது ஒரு மினி  ஜெனேரேடர் மாதிரி இருக்கும்.  அதில் வட்டமாக ஒரு  சாதனத்தைப் போட்டு. ஒரு  கைப்பிடி மாதிரி இருக்கின்ற ஒன்றில் ஒரு ஊசியைப் போட்டு, அந்த ரெகார்ட் (தட்டில்) மேல் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும்.   பாட்டு முடிந்தவுடன் அந்த ஊசியைத் தூக்கிப் போட்டு வேறு ஒரு ஊசி (அடுத்த ரெகார்டுக்கு). அது பாட ஆரம்பிக்கும்.  இதில் என்ன வேடிக்கை என்றால்,  அந்த ஊசி ஒரு சின்ன டப்பாவில் (பொடி டப்பா  மாதிரி)  இருக்கும் அந்த டப்பா காலியானவுடன், அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். அதற்க்கு நாங்கள் அடித்துக் கொள்வோம்.   முன்னமேயே "ரிசர்வ்" செய்து வாங்கி கொள்வோம்.  இப்போது  நினைத்தால் அதெல்லாம் பைத்தியக்காராத் தனமாகக் கூட தோன்றும்.  ஆனால் அந்த வாழ்க்கையின்  நினைப்பே சுகமானது.

இப்போதும் அதே மாதிரி டப்பா இருக்கிறது. அதை  இரண்டு பகுதியாகப் பிரித்து,  சாப்பிடுவதர்க்கு முன்,  சாப்பிட்ட பின் என்று மாத்திரை வைத்து இருக்கிறேன்.  !!!!

அரைப் பரீட்சை முடிந்து, ஸ்கூல் லீவ் விட்டபிறகு, தொடங்கும் மார்கழி மாதத்தில், விடியற்காலை தூக்கம் என்பது, ஒரு அனுபவம். அது ஏதோ எழுதினோம், போனோம் என்று இல்லாமல், ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது. அதைக் கூட அனுபவிக்காமல் இப்படி பாட்டு போட்டு கடுப்பேத்தினால் எப்படி இருக்கும் ?

மார்கழி மாதத்தில் எல்லோரும் வாசலில் கோலம் போட்டு, பூசணிப் பூவை நடுவில் அழகாக வைத்து இருப்பார்கள். வீதியே பூக்கோலம் பூண்டிருக்கும். ஓட்டு மேல் பூசணிக் கொடி படர்ந்து இருக்க, ஓட்டு மேல் ஏறி, பூ பறித்து தரவேண்டியது என் வேலை. பக்கத்து ஆத்து நாகராஜன் வீட்டில், திருடி ஒரு தடவை “சந்திராவிடம்” (நாகராஜன் அக்கா) மாட்டி கொண்டேன்.

மார்கழி மாதத்தில், நான் ஏறக்குறைய அடித்துதான் எழுப்பப்படுவேன். அப்படி அடிபடாமல் நானாகவே எழுந்த நாள், திருவாதிரை தான், சிவன் கோவிலில், களி கிடைக்கும். பல வீட்டில் இருந்து நைவத்யம் பண்ணி கோவிலில் விநியோகம். பல் தேய்த்துவிட்டு, நேரே சிவன் கோவில் குளத்தில் குளித்து விட்டு களி சாப்பிட்டுவிட்டு, ஏதோ “உலகத்தையே ஜெயித்தால் போல” ஒரு நடை நடந்து வீட்டுக்கு வருவேன்.  

தேவுடு மாமா வாத்தில் இருந்து, இந்தப்பக்கம் அப்புவாம் வரை. பிரசாதம் கொடுத்து காலி பாத்திரத்தை அவர்கள், அவர்கள் வீட்டில் சேர்க்கும் வேலை எனக்கு. அதனால் அவர் அவர்கள் வீட்டுக்குப் போய் “எக்ஸ்ட்ரா” களி வேறு. ஒரு “கட்டு” கட்டிவிடுவேன். சாஸ்த்ரிகள் பேரன் என்ற மரியாதை வேறு.   

அதைத் தவிர எங்கள் வீட்டில் "எறிச்ச கூட்டு" என்று  "மீந்து போன" கூட்டை (கூட்டு என்பது, பல வித காய்கறிகளின் சங்கமம்)  சுண்ட வைத்து ஒரு வாரம் வைத்து இருந்து பழைய சாதத்தை,  (எருமைத்) தயிருடன்  கலந்து, உருட்டி,  வலது கையில் வைத்து,  நடுவில் குழித்துக் கொண்டு, அரை கரண்டி அந்த  எ.கூட்டு வைத்து சாப்பிட்டால்,  ஏறக்குறைய சொர்க்கத்தைப் பார்க்கலாம்.  நான் பல முறை பாரத்து இருக்கிறேன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,  இது ஒன்றுமே எனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்வது போல்,  மார்கழி மாசம் முழுவதும் 4 மணிக்கு எழுந்து, ஒரு நாள் கூட விடாமல் தனுர் மாச பூஜை பண்ணிய என் அப்பா, தானும் எழுந்து, நைவேத்யம் என்று சொன்னவுடன்,  "டாண்" என்று பொங்கல் பண்ணி கொண்டு வைத்த  என் அம்மா"  ... இப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சம் சத்தியமாக விம்முகிறது.   

கோலப்போட்டியை நீங்கள் செம்மங்குடியில் மார்கழி மாத்ததில் பார்க்க வேண்டும். எத்தனை புள்ளி வைத்து கோலம் போடுவது என்று முதல் நாள் வீட்டில் ஒத்திகை நடக்கும்.  எதித்தாத்து, கணக்கு பிள்ளை மாமாவின் பெண் பத்மா,  எங்கள் வீட்டில் சசி,  ONE TO ONE .....  "சின்னதாக கோலம் போது போறும், பனியாக இருக்கிறது" என்று கரிசனப்படும்  எங்கள் அப்பா.

இன்று என் வீட்டில் செய்த "திருவாதிரை களி" யை என் வீட்டு  WATCH MAN மற்றும் அவன் மனைவி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்

 ஷ்யாமளா தண்டகமும் திருப்புகழும்:

பின்னால், சம்ஸ்க்ருதம் படிக்க ஆரம்பித்த பிறகு, சங்கீத அறிவு சற்று வளர்ந்த பிறகு, ஷ்யாமளா தண்டகத்தை கேட்க வாய்ப்புக் கிடைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் செம்மங்குடியில் கேட்ட பாட்டு இசை அரசி டி. கே பட்டம்மாள் அவர்களின் குரல் என்பது மேலும் ஒரு சந்தோஷம், சம்ஸ்க்ருத உச்சரிப்பு ஸ்பஷ்டமாக, மிகவும் அழகாக பாடி இருந்ததைக் கேட்க ஒரு புரியாத பிரமிப்பு

நான் எம்.எஸ், எம்.எல் வி போன்ற பெண் பாடகர்களின் தீவிர ரசிகன். DKP எனக்கு என்னமோ சுதந்திர பாடல்கள் “ஆடுவோமே பள்ளு” பாடுவதற்குத்தான் லாயக்கு என்று இருந்த நான், ஷ்யாமளா தண்டகத்தைக் கேட்ட பிறகு, நிறைய கச்சேரி ஆடியோ கேட்டு, “பட்டம்மாள் ஸ்கூல் சங்கீதத்தின்” ஆழத்தை கண்டு பிரமித்து நின்றேன். நான் விஜய் சிவாவிடம் சீட்டு கொடுத்து “எந்த செளுவகே” என்ற புரந்தராசரின் கிருதி பாடச் சொன்னது, பட்டம்மாள் அவர்கள் பாட்டு கேட்ட பிறகுதான்

பட்டம்மாள் அவர்கள் அந்த 5 செகண்ட் வீணை (ராகம் தன்யாசி) முடிந்த வுடன், பாட ஆரம்பித்து,  அதற்குப் பிறகு நடுவில் ராகத்தை மாற்றி, ஆரபி, பிலஹரி, சரஸ்வதி, ஸ்ரீ என்று பாடி அசத்தி இருந்தார். அதில் வித்யா பற்றி வரும் வரிகளை, சரஸ்வதி ராகத்திலும், கடைசியில் ஸ்ரீ என்று மகாலக்ஷ்மியைப் பற்றி வரும் இடத்தில ஸ்ரீ ராகத்திலும் பாடி இருப்பார்.

மிகவும் கஷ்டமான, மூச்சு விடாமல் சொன்ன ஒரு உரைநடை போன்ற இது. நான் புத்தகம் வைத்துக் கொண்டு, யூ டியுப் உதவியுடன் DKPயின் குரலில் ஷ்.த கேட்ட பிறகு கூட, அவருடன் தொடர்ந்து சொல்ல முடியவில்லை. இதற்கு அவர் எவ்வளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும், தப்பு இல்லாமல் சொல்வதற்கு. !!! 

அதே போன்ற அனுபவம், எனக்கு திருப்புகழிலும் நடந்தது. அங்கே அம்மா காளிதாசனுக்கு உதவி செய்ய, இங்கே பிள்ளை முருகன், அருணகிரிக்கு..

முத்தை என்று எடுத்துக் கொடுக்க, “முத்தைத்திரு” என்று ஆரம்பித்து  இருக்கிறார்.  தமிழின் அந்த “வீச்சு” அபாரம். இதை பலர் T M சௌந்தரராஜன், ஷண்முகப்ரியா ராகத்தில் பாடி கேட்டிருக்கலாம். ஆனால் குருஜி ராகவன் அவர்கள், கௌளை ராகத்தில் பாடியிருக்கும் பாடல் அது.

இந்தப் பாடலைப் பார்த்து ஒழுங்காகப் படித்தாலே போதும். தமிழ் தாய் மனங் குளிர்ந்து விடுவாள். அருணகிரியின் பல பாடல்கள், பார்த்துப் பாடுவதே மிக கஷ்டம். என்கண் என்ற செம்மங்குடி அருகில் உள்ள ஊரில் உள்ள முருகனைப் பற்றி ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். இதை ரஞ்சனி ராகத்தில் பாடுவோம். இப்படி எல்லாம் கூட ஒரு தமிழ் வரிகள் இருக்க முடியுமா என்று மலைக்கும் விஷயம்.  செம்மங்குடியில் பிறந்த, என் சித்தி சரஸ்வதி என்ற  சசிக்கு,  நிறைய திருப்புகழ் அத்துபடி.

இறை அருள் இருந்தால் எது தான் முடியாது ? செம்மங்குடியில் நான் படித்த தமிழ், எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்கள், போன மாதம் மறைந்த என் பெரியப்பா, ஸ்ரீ பாலக்ருஷ்ண தீட்சிதர் உட்பட,  போட்ட தமிழ் விதை, இது போன்ற அற்புதமான ஸ்லோகங்களை விமர்சிக்கும் அளவு, தைர்யத்தைக் கொடுத்து இருக்கிறது.

 கொசுறு:

இந்த நூற்றாண்டிலும், குருஜி ராகவன் போன்ற மகத்தான பெரியார்கள், திருப்புகழை உலகம் முழுவதும் பரவச் செய்து, மிகவும், மகத்தான சேவை செய்து இருக்கிறார்.

நான் துபாயில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அங்கு இருந்த, பெண்மணி, என் பெண்ணுக்கு அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தாள். (குருஜியின் சிஷ்யை). கடைசி வரை ஒரு பைசா கூட வாங்கவில்லை.