Friday 10 November 2017

என் சங்கீதத்தின் பரிணாம வளர்ச்சி !!

நானும் கடந்த 25 வருடங்களாக கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.  எப்படி இதில் ஒரு INTEREST வந்தது என்று என்னை நானே சுய பரிசோதனை செய்யும் கட்டுரை இது

முதலில் நான் பிறந்த மண்ணிலிருந்து ஆரம்பிக்கலாம்::

கர்னாடக சங்கீதம் கேட்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் நான் செம்மகுடி கிராமத்திற்கும், என் பெற்றோர்க்கும் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

நான் பிறந்தது செம்மங்குடி என்ற கிராமம் என்பதை, என்னுடைய சில “பதிவேடுகளைப்” பார்த்தால் தெரியும்.  உடனே “த்வைதமு சுகமா, அத்வைதமு சுகமா” பாட்டு, பாடு என்று என்னைக் கேட்கக் கூடாது.
செம்மங்குடி என்ற ஒரு “பாட்டு பாடும்” மிக உயர்ந்த பாடகர்,  பிறந்த மண்ணில் பிறந்ததால், மற்றும் என் தந்தையின் சங்கீத DNA என் உடம்பில் இருப்பதால்......)

நான் செம்மங்குடியில் பிறந்தது என்னமோ உண்மைதான்.  ஆனால், பாட்டு பாடவோ, கற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. எனக்கு அது சின்ன வயதில் வரவும் இல்லை.  இந்த லக்ஷணத்தில், செம்மங்குடி மாமாவாத்துக்கு எதிர்த்த வீடு எங்கள் வீடு. 

நாங்கள் சாஸ்த்ரிகள் குடும்பம். குடும்பதிற்க்கே உண்டான பொறுப்பு, கவலைகள், அதனால் படிப்பு மற்றும் ஒழுங்கான அனுஷ்டானம் என்றே ஓடி விட்டது.  அடிக்கடி செம்மங்குடி மாமா வின் ராக ஆலாபனை கூட, “அதிசய ராகம், ஆனந்த ராகம்” என்று புரியவில்லை.  (தலையில் எண்ணை வைத்துக்கொண்டு செம்மங்குடி மாமா “சங்கராபாரணம் ராகம், சுமார் 1 மணி நேரம் பாடுவாராம்). 

எனக்கு சங்கீத ஞானம் எப்போது வந்தது என்று ஞாபாகம் இல்லை, எப்படி வந்தது என்றால், அப்பா வுக்கு கர்நாடக் சங்கீதம் மிகவும் பிடிக்கும். மதுரை சோமுவின் பரம விசிறி.  சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த என் அப்பா, மாயவரத்திற்கும், சிர்காழிக்கும், BOARD MAIL ஏறி, சோமுவின் கச்சேரியை கேட்கப் போவாராம்.  சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையும்,சோமுவும் சண்டை சச்சரவுகளால், பேசாமல் இருந்தபோது, என் தந்தை, திருவையாறில், (வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது) இரண்டு போரையும், சமாதானப் படுத்துவதற்கு மிகவும் பிரயத்தனப் பட்டார். (வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்). இரவு முழுவதும், சோமுவின் கச்சேரி கேட்டு விட்டும், காலையில், அவர் அப்பவிடம் உதை வாங்கி இருக்கிறார்.  சோமு ஒரு பெரிய ரசிகன். நல்ல ரசிகனால்தான், ஒரு நல்ல பாடகனாக இருக்க முடியும் என்று சொல்வார். சோமுவின் பக்க வாத்தியங்கள்:

மிருதங்கம்
வயலின்
கொன்னக்கோல்
கடம்
மோர்சிங்
கஞ்சிரா

அப்பா சொல்வார்- “இவர்கள் அத்தனை பேருக்கும் சோமு “தீனி” போடுவான். தாளத்தை மாத்தி, மாத்தி, போட்டு, பக்க வாத்தியக்காரர்களை எல்லாம் திணற அடிப்பான்  7 மணி நேரம் கச்சேரியில் ஒரு பயலும் (ரசிகனும்) எழுந்திருக்காதவாறு- பாடுவான்” என்பார்

என்னுடைய பெரியப்பா, சு. சுவாமிநாதன் (சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில், உயிரியிலில் டாக்டர் பட்டம் வாங்கியவர்) அவர்கள், மதுரை மணி அய்யரின் பரம ரசிகர். திடீரென்று “கந்தன் கருணை புரியும் வடிவே” என்று மதுரை மணி அய்யர் போல் பாடுவார். “எப்போ வருவாரோ எந்தன்” என்று கொஞ்ச தூரத்தில் இருக்கும் நடராஜரை கொஞ்சி அழைப்பார்

என் அப்பா ஒரு தடவை, தன்னுடைய அக்காவை, நிறை மாத கர்ப்பிணியாக, BOARD MAIL ல் அழைத்துக் கொண்டு வரும்போது, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து GNB அவர்கள், வெளியில் வந்து நின்றதை, இப்பொழுதும் சொல்லி ஆச்சர்யப் படுவார்.

எனக்கு +2 வரையும், கர்நாடக சங்கீதம் என்றால் என்ன வென்று தெரியாது. ஆனால் சினிமா பாட்டு எல்லாம் அத்துப்படி. ஸ்கூலில், Music competition ல் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும். அந்த அளவுக்கு ஒரு சுமாரான குரல் வளம்.

எனக்கு, முதலில் கர்நாடக சங்கீதத்தில் ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது, யேசுதாஸ். அவருடைய “வாதாபி கனபதிம்பஜே” வும், பாவன குரு என்ற ஹம்சானந்தி ராக கீர்த்தனையும் எனக்கு கர்நாடக சங்கீதத்தின் அடித்தளமாக அமைந்தது: “பக்தியால் யான் உனை பல காலும்” என்ற ரேவதி ராக திருப்புகழ், இன்றும் வரி பிசகாமல் பாடுவேன் என்றால், அதற்குக் காரணம் யேசுதாஸ். ஹரிவராசனம் ஸ்லோகத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாமல், சீட்டு எழுதி பாடச் சொன்னவன். அவரின் பகல நிலபட்டியும்,  நீது சரணமுலேயும்- என்ன ராகம் என்னவென்று தெரியாமல்  கேட்டு கேட்டு உருகியவன்நான் சுமாராக அவரைப் போல், பேஸ் வாய்ஸில் பாடக் கூடியவன் என்பதாக இருக்கலாம். என்னை சினிமா பாட்டிலிருந்து, கர்நாடக் சங்கீதத்திற்கு மாறுவதற்கு ஒரு ஏணியாக் இருந்தார் என்று கூறலாம்.  அவருடைய பல மலையாள, கர்நாடக இசை தோய்ந்த பாடல்கள், என்னை இன்றும் மயக்குவது உண்மை

சென்னையிலிருந்து, பெங்களூர் போய், வேலை வேலை பார்த்த அந்த மூன்று, நான்கு வருடங்கள், என்னுடைய, கர்நாடக சங்கீதத்தின் வசந்த காலம் என்று கூறலாம்.

பிறகு, மும்பையில் இருக்கும்போது கூட, அணுசக்தி நகரில் இருந்துகொண்டு, அனுசக்திநகர் சபாவிலோ, செம்பூர் Fine ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ, ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ (எரிந்து போவதற்கு முன்பு இருந்த இடம்) எப்போதாவது நடக்கும், T.V.Shankara Narayanan,  Bombay Jaishree,  போன்றவர்களின்  கச்சேரியையும் கேட்டு ரசித்த காலம்
(தொடரும்)