Wednesday 19 April 2017

THE CELL- ஆங்கில படத்தில் விமர்சனம். (தேவையா !!!!?) - திருட்டு DVD தான்....

திருட்டு டிவிடி என்று ஒன்று இருக்கோ, பிழைத்தோமோ, சில ஆங்கில படங்கள், சென்னை மாநகரத்தை அடைவதற்கு முன்பாகவோ, அல்லது வரவே வராவிட்டாலும், பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.  திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது சாத்தியமே இல்லை. கொசு கூட சில சமயம் ஒழிந்தாலும் ஒழியலாம். அனால் தி.டி.வி.டி ஒழியாது

சில படங்கள், “உட்கார்ந்து யோசித்தாலும்”, வரவே வராத கதையெல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்க்கலாம். ஆனால் கடைசி வரையில் அந்த விறு விறுபை கொண்டு செல்லும் படங்கள் சில படங்கள் தான்.

ஆங்கிலப் படங்களில் எனக்கு என்ன பிடிக்கும் என்றால், அவன் அவன், நம்மூர் காய்கறி மார்க்கெட்டில் கேரட், முள்ளங்கி, மாதிரி ஒரு துப்பாக்கி வைத்திருப்பான், திடீரென்று, NYPD, CIA, FBI என்று “பொங்குவான்”.  நம்மூரில் அப்பளம் சுடுவது போல் சுட்டுகொண்டே இருப்பான்.  JACKIE CHAN படம் என்றால் கேட்கவே வேண்டாம்.  பேசினாலே அடிதான்.

நம்மூர் வில்லனையும், ஆங்கில பட வில்லனையும் COMPARE பண்ணி நான்கு வரி எழுத வில்லை என்றால், நான் நரகத்திற்குத் தான் போவேன்.  ஆங்கில படங்களில் வில்லன்கள், கோட், சூட், அணிந்து கொண்டிருப்பார்கள். டை வேறு கட்டியிருப்பார்கள். காலில் புத்தம் புது அல்லது பாலிஷ் போட்ட ஷூ அணிந்திருப்பார்கள்.  ஹீரோவிடம் குண்டடிபட்டோ, உதைபட்டோ கீழே விழுவார்கள். 2-3 நிமிஷத்தில் சாகிறவனுக்கு இந்த “பில்ட் அப்”.

நம்மூர் வில்லன், தலை முடி ஒரு பக்கம் சேப்பாக இருக்கும், மறு பக்கம் கருப்பாக இருக்கும். ஒரு வாரம் பல் தேய்த்து இருக்கமாட்டார். கழுத்தில், சைக்கிள் செயின் மாலையாகப் போட்டிருப்பார்.  மலை போல் வந்து, ஒல்லியாக இருக்கும் ஹீரோவிடம், ஒரு குத்து வாங்கி, நான்கு அல்லது 5 முறை குட்டிகரணம் அடித்து கீழே விழுவார்.

புவி ஈர்ப்பு விசை என்ற ஒரு சமாசாரம் இருப்பது என்பது, புத்தகத்தில் தான், நம்மூர் சினிமாவில் கிடையாது.

இப்போது படத்திற்கு வருவோம். படம் பெயர் பார்க்கும்போது, ஜெயில் கைதி தப்பிப்பது போன்ற கதையோ என்று நினைத்தேன்.  ENGLISH காரன் படங்களில், ஜெயில் கைதிகள் எல்லாம் பார்க்க “தமாஷாக” இருக்கும்.  போலீசைவிட, “காத்திரமாக” இருப்பார்கள், தலையில் முடி இருக்காது, உடம்பு பூராக பச்சை குத்தியிருப்பார்கள்.  சிலர் காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.  அடிக்கடி, நம் மூஞ்சியில் குத்துவது போல் போஸ் குடுப்பார்கள்.

அனால், ஜெயில் பற்றிய படம் இல்லை.  படம் AIRPORT ல், ஆரம்பிக்கிறது.  ஹீரோ, AIRPORT ல், செல்லில் பேசிக்கொண்டு இருக்க, செல் சார்ஜ் தீர்ந்து விடுகிறது.  பவர் பாயிண்ட் தேடுகிறார். கிடைக்கததால், LAND LINE ல், வீட்டுக்குப் பேசுகிறார்.  காசும் தீர்ந்து விடுகிறது. என்ன செய்யலாம் என்று யோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று, செல்லில் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாரும், காக்கா வலிபபு வந்தவர்கள் போல, “விலுக் விலுக்” என்று வாயில் நுரை தள்ள கீழே விழுகின்றனர்.  சிலர் மற்றவரை அடிக்கின்றனர், சில பேரை “போட்டுத் தள்ளுகின்றனர்”,  ஹீரோவுக்கு ஒன்றுமே புரியவில்லை.  கீழே இறங்கும் ஒரு விமானம், திடீரென்று வானத்தில் வெடித்து, AIRPORT க்குள் வந்து விழுகிறது.  இதன் மத்தியில், ஹீரோவை கத்தியால் குத்த வரும் ஒரு ஆளிடம் இருந்து தப்பித்து, ஹீரோ தலை தெறிக்க ஓடி, UNDERGROUND மெட்ரோ ஸ்டேஷனுக்கு போகிறார்.  அங்கே இன்னொரு உப ஹீரோ வுடன் மெதுவாக நடந்து, மெட்ரோ ஸ்டேஷன் வெளியில் வந்தால், ஊரே நிசப்தமாக இருக்கிறது. இவர்களைத் தவிர, மற்ற எல்லோருமே, “தண்ணி அடித்தவர்கள்” மாதிரி நடந்து போகின்றனர். 

இதற்கு, ஆங்கிலத்தில், ZOMBIES என்கிறார்கள்.  நம்மூரில், சோம்பலாக இருப்பவர்கள் எப்படி இருப்பார்களோ, அப்படியே இந்தப் படத்தில் வருபவர்கள் இருப்பதால் இந்த ஆங்கிலப் பெயர் வந்திருக்கலாம்

அதாகப்பட்டது, செல் போனில் உள்ள அலைகள், - கதிர்வீச்சுகள், என்ற ஒன்று,  அதை உபயோகித்தவர்கள் மூளையை அடைந்து, அவர்களை பைத்தியமாக அடிக்கிறதுஹீரோ, நல்ல வேளையாக, அந்த சமயத்தில், செல் உபயோகிக்காததால், பிழைத்து விடுகிறார்.  அவர் தன மனைவியையும், மகனையும், தேடி போகிறார். நடுவில், அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள், தன்னை கொல்ல வரும், “செல் பைத்தியங்களில்” இருந்து எப்படி தப்பிக்கிறார், தன் மனைவி, மகனைப் பார்த்தாரா ? என்பது மிச்ச படம். 

கடைசியில், படத்தை சப்பையாக முடித்திருந்தார்கள்.  Stephen King என்று ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை தழுவி எடுத்த படமாம்.


சரியாக தழுவவில்லை.

Thursday 13 April 2017

மயிலையில் “பங்குனிப் பெருவிழா” என்ற மகாமகம்


புன்னாக  வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”  என்ற பாடல் மூலம் ஆரம்பிப்போம்

அது என்னமோ தெரியவில்லை.  பங்குனி மாதம் என்றாலே, கபாலிக்கும், கற்பகாம்பாளுக்கும் கொண்டாட்டம் தான்.   ஜாலியாக வெளியே கிளம்பி நான்கு மாட வீதிக்கும் வந்து,  திகட்ட திகட்ட, தரிசனம் தந்து, பக்த ஜனங்களை,  ஜன்ம சாபல்யம் அடைய வைத்துவிடுவார்கள்
அதற்கு ஈடாக பகத கோடிகள் ஒன்றாகக் கூடி “மகாமகம்”  effect ஐ ஏற்படுத்திவிடுவார்கள். 

நான் நினைப்பது உண்டு, என்  63 வருக்கு மட்டும் இந்த கூட்டம் ?.  அதற்கு விடை தெரியவில்லை.  ஒரு வேளை அன்னதானமாக இருக்கலாம்.  பங்குனி வெய்யிலில் வீட்டில் உட்கார முடியாமல் வெளியில் கிளம்பி, மயிலாப்பூர் வரலாம்.  நிறைய கடைகள் திடீரென முளைத்து, விசிறி முதல் மண் சட்டி வரை விற்றுக்கொண்டு  இருப்பவர்களின், பர்ஸை நிரப்பவும் இருக்கலாம். 

ஆனால் பக்தி என்று ஒன்று இருப்பதாகவோ,  சுற்றுச் சூழல் மாசு என்று ஒன்று இருப்பதாகவோ – எனக்குத் தெரியவில்லை.  பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள்,  ஜூஸ் பாக்கெட்டுகள்,  சாப்பிட்டு அப்படியே மிச்சம் வைத்து தூக்கி எறிந்த தட்டுகள்- அடுத்த நாள்,  துப்பரவு பணியாளர்கள்,  மாங்கு மாங்கு என்று இவைகளை அகற்றும்போது, மனது வேதனையாக இருக்கிறது.

இவ்வளவு பெண்களுக்குள் யாருக்காவது   இயற்கை உபாதையால் அவதிப்பட்டால், அவர்களுக்கு,  டாய்லெட் எங்கே இருக்கிறது என்று கேட்டால் விடை இல்லை.

பெண் போலீசாரையே எடுத்துக் கொள்வோம், அவர்களுக்கும் இதே கதி தானே...

இருந்தாலும், கோவில் திருவிழா என்று வந்துவிட்டால், நம்மாளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.  “தும் தடாக்தான்”.

மூன்று முக்கியான பங்குனி உற்சவம்:

அதிகார நந்தி

தேர்

63 வர்
அதிகார நந்தி என்பது பேரைப் போலவே- சிவனை இவர் அனுமதி இல்லாமல் யாரும் பார்க்க முடியாது.  மனித உருவில், நந்தி முகத்தோடு, இடது காலை மடக்கி, நீட்டிய கரங்களில், ஐயனைத் தாங்கி வருவது, மிகவும் அழகு.  மேலும், அதிகார நந்தி என்றால், கபாலிக்கு மட்டும் இல்லை.  பிள்ளையார் முதற்கொண்டு,  முருகன் வரை, அதிகார நந்தி வாகனம்தான்.

பாபநாசம் சிவன் என்ற ஒரு மகா மேதை, கபாலியே கதி என்று இருந்த அவர், சில சங்கீத முத்துக்களைத் தந்திருக்கிறார்.  அதில் “காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி” என்று ஒரு பாட்டு.  அதில் இரண்டு இடங்களில்,  நெஞ்சு உருக கபாலியின், ஊர்வலத்தை கொண்டாடுகிறார்.

ஒன்று,  “அபாங்க அருள் மழை பொழி பவனி”

இரண்டாவது- “கண்ணாரக் கண்டு, உள்ளுருகி, பணிய, பலர் காண”

கோவிலுக்குப் போகாதவர்களைக் கூட மன்னித்து ஏற்றுக்கொண்டு,  “நான் வருகிறேன் என்று கோவிலை விட்டு வெளியில் வந்து, தேரிலும், ரிஷப வாகனத்திலும், அதிகார நந்தியிலும், யானை வாகனத்திலும், தான் மட்டும் வாராமல், பிள்ளையார், முருகன்,  சண்டிகேஸ்வரர் என்று பரிவாரங்களோடு வந்து, காக்ஷி கொடுக்கும்  கபாலி ஒரு பெரிய கோடை (கொடை என்று கூட சொல்லலாம்)  வள்ளல் தான்.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில், சாப்பாடு கட்டிக் கொண்டு வெகு தூரத்தில் இருந்து, மயிலாப்பூருக்கு வந்து 3 நாட்கள் தங்கி போவார்கள்.  அப்போது அவர்களுக்காக அன்னதானம், தண்ணீர் பந்தல் என்று மயிலாப்பூரில் உள்ள சத்திரத்தில், வீடுகளில் அமைத்துக் கொடுத்தார்கள்.

கபாலி கிருபையில், இன்னும் அன்ன தானமும் தண்ணீர் பந்தலும், வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 

இது மயிலாப்பூர் வாசிகளுக்கு, ஒரு உணர்ச்சி பூர்வமான ஒரு வைபவம். தேர் வரும்போது “விண்ணைப் பிளக்கும்” கபாலி என்ற ஒரு சத்தம், கைலாசம் வரை கூட கேட்கும் என்று சொன்னால் மிகையாகாது.  என்னதான் “ஏகம்பத்துரை எந்தாய் போற்றி” என்று கற்பகாம்பாளைக் கொஞ்சினாலும்,  மாட வீதி ஊர்வலம் என்றால் “கபாலி” தான்.  அந்த பிரம்மாண்டமான தேரும், அதில் கபாலி, சும்மா “ஜம்” என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிற அழகும், வடத்தை பிடித்து இழுக்கும்,  பக்தர்கள் கூட்டமும், அட அட அடா, காண, நிஜமாகவே, கண் கோடி வேண்டும்தான்.

63 வர் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.  63 நாயன்மார்களின் பின்னே வருகின்ற கபாலியும், உடனுறையாளும், முருகப் பெருமானும் மிக அழகு.

9 ம் நாள் பிட்சாடனர் வடிவிலும், மஹா விஷ்ணு, மோகினி வடிவிலும் காட்சியளிப்பது மிகவும் விஷேஷமானது.

இதோ, இதை முடிக்கும்போது, விடையாற்றி உத்சவம் என்று, இசை மேதைகள் பாட ஆரம்பித்து விட்டனர்.  இன்று ஸ்ரீ விஜய் சிவா பாடுகிறார், சஞ்சய் சுப்ரமணியம்,  ரஞ்சனி காயத்ரி என்ற மிகச் சிறந்த பாடகர்கள்,  கற்பகத்தையும், கபாலியையும், இசை மழையால், குளிர்விக்கப் போகின்றனர்.

ஒரு காலத்தில், மதுரை மணி அய்யர், மதுரை சோமு போன்ற மகா மேதைகள் 
இங்கு இரவு முழுவதும், மழை, பனி என்று பாராமல்,  பாடி அசத்தி இருக்கிறார்கள். 

ஒரு முறை, மதுரை மணி அயருக்கு,  நல்ல ஜுரமாம்.  பங்குனிப் பெருவிழாவில்,  பாட வேண்டிய தினம் அது. எல்லோரும், இன்று நீங்கள் பாட வேண்டாம் என்று மணி அய்யரை வற்புறுத்த, அவர், “ஒரு மணி நேரம் பாடிவிட்டு, வந்து விடுகிறேன்- எனக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பர்கள்” என்று சொல்லி வந்து பாட ஆரம்பித்து, 5 மணி நேரம் பாடினாராம். 


காளிதாசன் சொன்னது போல், வாக்கும், பொருளுமாக இருக்கும் கற்பகாம்பாள் சமேத கபாலிச்வரை நாம் மனதுருக வணங்குவோம். அவர்கள் அருளைப் பெறுவோம்.