Tuesday, 12 May 2026

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர் உபன்யாசம் - தேன் துளிகள் - பகுதி 2

 

நாரதர் உபதேசித்த ராமாயணம்

முதல் ஸர்கம், நாரதர் வால்மீகிக்கு உபதேசம் செய்த ராமாயணம். ராமாயணத்தை முழுவதுமாக சுருக்கி சொன்ன அற்புதமான ஒரு ஸர்கம்

இதை மையமாக வைத்துத்தான், வால்மீகி 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் எழுதுகிறார்...

ராமாயணத்தில் பல இடங்களில், ராமாயணம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில் சில இடங்களில் ஆஞ்சநேயர், முழு ராமாயணத்தைச் சொல்கிறார்.

சாதாரணமாக் ஒரு ஸர்கம் முடிந்தவுடன், பல ஸ்ருதி என்று ஒன்று உண்டு. பல இடங்களை கேட்பவர்க்கு, சகல செல்வங்களும், புகழும் கிடைக்க வேண்டும் என்று தான் இருக்கும்.

அனால், நாரதர் உபதேசித்த இந்த முதல் ஸர்க்கத்தில், , படிப்பவர்க்கு சகல ஸௌபாக்யங்களும் கிடைக்கும் என்று கூறுகிறார். இப்படி சொல்கிறார்   

“ராமாயணம் என்ற கதையைக் படிப்பவர்க்கு, மகன்கள், பேரன்கள், உறவினர்கள் கூட சேர்ந்திருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது அவர் உயிர் துறந்தபின் ஸ்வர்க்கத்திர்க்குச் சென்று அங்கே கௌரவிக்கப்பட்டு நிலையாக தங்கி விடுவார்”

இது மிகவும் விசேஷமாகும். விஸ்வாமித்ரர், ஸ்கந்த ஜனனம் பற்றி சொல்லும்போது பல ஸ்துதியில், கேட்பவர்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும் என்று சொல்கிறார். இப்படி பல இடங்கள்.

ஏன், நாரதர் சொல்லும் ஸங்க்ஷேப ராமாயணத்தில்,
“சொல்பவரை” ப் பற்றி குறிப்பிடுகிறார் என்றால் “நாரதர் குணத்தைப் பொறுத்து, -அவர் சொல்லும்  இருக்கிறது.” அவருக்கு சொல்லி சொல்லி பழக்கம். அவர் ஒன்று தம்புராவை மீட்டிக்கொண்டு “கல்யாண குணங்களை” பாடிக் கொண்டு இருப்பார். இல்லையென்றால் “யாருக்காவது உபதேஸம்”. இதை கலகம் என்று நாம் நினைத்தால், அது நமது அறியாமை

 அதனால் தான் படித்தால் பெருமை என்கிறார்.

 

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதரின் உபன்யாசத்திலிருந்து – தேன் துளிகள் - 1

 

மரவுரி அழகு

 அழகில்லா ஒரு வஸ்து, அழகான ஒரு விஷயத்துடன் சேரும்போது அதுவும் அழகாக ஆகிவிடும்

மரவுரி கட்டிக்கொண்டு ராமன் கிளம்பியபோது, ஒரு ராஜாவாக, ஆபரணங்களும், ஆடைகளும்  கட்டிக்கொண்டு இருக்கும்போது எவ்வளவு அழகாக இருப்பானோ, அதைவிட பல மடங்கு அழகாக இருக்கிறான். அவன் அழகைப் பார்த்து, காட்டில் ரிஷிகளே ஆசை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றன.

காளிதாசன், சாகுந்தலத்தில் இந்த கருத்தை எடுத்து ஒரு உவமையில் சொல்கிறார்.

சாகுந்தல நாடகத்தில், “மரவுரியை உடுத்தி இருப்பதால், சகுந்தலையின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் அழகு வாய்ந்தவளாக காணப்பட்டாள். சந்திரனில் காணப்படும் களங்கம், அதன் அழகைக் கெடுப்பதில்லை.”

सरसिजमनुविद्धं शेवलेनापि रम्यं

मलिनमपि हिमांशोः लक्ष्म लक्ष्मीं तनोति

इयं अधिकमनोज्ञा वल्कलेनापि रम्या

किमिव हि मधुराणां मण्डनं नाकृतीनाम् 

குளத்தில் பாசி பார்த்திருப்போம். பச்சையாக இருக்கும். அது குளத்தில் இறங்கும்போது காலில் ஒட்டிக்கொண்டு விடும். கஷ்டப்பட்டு எடுத்து எறிவோம். கடுப்பாக இருக்கும். அந்த பாசியே, குளத்தில் அலைகளால் லேசாக நகர்ந்து அங்கு இருக்கும் தாமரையில் ஒரு 3 அடிக்கு, தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். அது அந்த தாமரைக்கு மிக அழகாக இருக்கும். ஒரு பாசிக்கு அடித்த யோகம். 

மரவுரியின் அழகை அருணாச்சல கவிராயர், ராம நாடக கிருதியில் -- தரித்த மரவுரி இடையும் நடையும் கண்டு மனதையெல்லாம் உருக்கி வார்க்குமே --என்கிறார். “  

அதே போல் குருக்ஷேத்ர யுத்தத்தில், கிருஷ்ணர், தேரை லாவகமாக ஒட்டி, அர்ஜுனனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்கிறார்  இது மிகவும் கஷ்டமான ஆயாசமான வேலை.  அப்படிப் பண்ணும்போது, யுத்த பூமியில், குதிரைகள் ஓட, அந்த புழுதி மேலே எழும்பி, பரமாத்மாவின் நெற்றியில் முத்து முத்தான வேர்வை- அதன் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.  

அதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ரங்கத்தில், பெருமாளுக்கு, முத்தங்கி சேவை நடக்கும். மிகவும் விலை உயர்ந்த முத்துக்கள், பவழம் இவைகளை வைத்து ரங்கநாதரை அலங்காரம் செய்வார்கள். இதைவிட, யுத்த பூமியில், கிருஷ்ணரின் இந்த கோலம் பல மடங்கு அழகாக இருக்கிறது.

”புழுதிக்கு வந்த பெருமை”  

இதே போல், “நயா பைசா” பிரயோஜனம் இல்லாத நாம். அவர் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “பட்டி மாடான நான் உன்னை விட்டிராமே உலோகித, பத்ம சீர்பாத நீ இனி வந்து தாராய்” என்று திருசிராப்பள்ளி திருப்புகழில். அருணகிரிநாதர் பாடுகிறார்

தாயுமானஸ்வாமிக்கு, உபதேசம் செய்த முருகனாக பாவித்து செய்த அற்புதமான திருப்ப்கழ்

இதே போல் மெய் சிலிர்க்க வைக்கும் பல உபமானங்கள், முடிந்தபோது எழுதுகிறேன்.

 என்னுடைய எண்ணம்:

இதை நாராயண தீர்த்தர், தரங்கத்தில்.

உத்தவர் கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், கோபிகைகளிடம் சென்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பி வந்து, கிருஷ்ணரிடம், கோபிகளின் பக்தியை புகழ்ந்து சொல்லுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

“இதி வததி ஹி கோபி..” என்று ஆரம்பிக்கும் தரங்கம். நாங்கள் காம்போதியில் பாடுவோம். அதில் சொல்கிறார்.

मणिनायक मणिरपि परमधुना

गुनयोगे सति काचमणीनाम

मरकतमणिरपि मध्ये घटितो

गणनीयह: किं नहि काचेषु ।

“இரத்தினங்களில் மிகவும் சிறந்தது என்று புகழப்படும் மரகதம், பாசி மணிகளின் நடுவே சேர்க்கப்பட்டாலும், அந்த மரகதத்தின் அழகு ஒரு போதும் குறையாது அல்லவா, அதே போல், கிருஷ்ணன் எங்களிடம் இருப்பதால் அவர் அழகு கொஞ்சம் கூட குறையாது. என்று கோபிகைகள் சொன்னதாக ....சொல்கிறார்

மேலே உபமானங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நாமே எப்போவாவது கோவிலுக்குப் போய், ஒரு வீபூதியோ, குங்குமமோ இட்டுக்கொண்டு வந்தால், வீட்டில், “என்னப்பா பளிச் னு இருக்கியே” என்கிறார்கள்.  என்ன இது கொஞ்சம் உல்டா.  அழகான வஸ்து அழகில்லாத நம்மை சேருகிறது.

 

Friday, 8 May 2026

.....मानिषाद ......

 

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமண்ய தீக்ஷிதர்

எங்கள் மதிப்புக்கும் மரியாதைக்குரியும் உரிய உபன்யாஸகர், ப்ரும்ஹஸ்ரீ சேங்காலிபுரம் ஸுப்ரமண்ய தீக்ஷிதர், கடந்த 29.4.2026, அவர் மிகவும் நேசித்த, எங்களை நேசிக்க வைத்த, ஸ்ரீ மத் ராமாயணம், ஸ்ரீ மத் பாகவதம் இந்த இரண்டு இதிகாசங்களோடு இரண்டற கலந்து விட்டார்.

ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களிடமும், ப்ரும்ஹஸ்ரீ நாராயண தீக்ஷிதர் அவர்களிடம் நேராகவே மந்த்ரோபதேசம் பெற்று, அவர்கள் உடனேயே உபன்யாசம் செய்தவர்.

இன்னொரு தடவை அவரை வரகூருக்கு கூப்பிட்டு என் குடும்பத்தில் அத்துணை பேர் சார்பாகவும் ஒரு நவாஹமாக ராமாயணம் உபன்யாசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. நிறைவேறவில்லை. எனக்கு இதில் நிச்சயம் வருத்தம் உண்டு.

எங்கள் வரஹூர் பெருமாளிடம் அவர் கொண்ட பக்தி அளவிட முடியாது. அவர் முதல் சப்தாஹம் வரஹூரில் பண்ணினார்.  ஸ்ரீ. ப்ரேமி அண்ணா அவருக்கு தங்க தோடா போட்டு கௌரவித்ததும் வரஹூர். 100 வது சப்தாஹம்  செய்ததும் வரஹூர் தான்.

ஸ்ரீ. ராமனுடைய 16 குணங்களை கூறவேண்டும் என்று கேட்க, 64 குணங்களைக் கூறிய நாரதர். தீக்ஷிதர் எங்களுக்கு நாரதர், வால்மீகி, ஸுகப்ருஹ்மம், வியாசர் எல்லாமே.

என் செம்மங்குடி வாழ்க்கையில், பள்ளி நாட்களில் நிறைய உபன்யாசம் கேட்டு இருக்கிறேன், பல வாஜபேயயாஜிகள், பண்டிதர்கள். அந்த வாசனை இப்பவும் ஸ்ரீ. சுந்தரகுமார், ஸ்ரீ. அண்ணா, ஸ்ரீ விட்டல் தாஸ், போன்ற மகான்களின் உபன்யாசம் கேட்க ஆசையை தூண்டிவிடும் ஒரு கருவியாக இன்னும் இருக்கிறது. அதில் தீக்ஷிதர் மிக முக்கியமானவர்

சப்தாஹ சாம்ராட் என்று காஞ்சி பெரியவாளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஸரஸ பாஷி என்று பல பட்டங்கள் பெற்றாலும், என் குடும்பத்தில் ஒருவர்.

என்ன மேதா விலாஸம்,  நாரயணீயம் என்ன, சப்தாஹத்தில் எத்தனை கிளைக் கதைகள்  என்ன ?  ராமாயணம் ? எவ்வளவு மேற்கோள்கள்,

காளிதாசன், விஷ்ணு புராணம், க்ஷேத்ர மாஹாத்மியங்கள் .....இவ்வளவையையும் நான், இந்த ஜன்மத்தில், நேரே கேட்க வைத்த பெரிய குருவாஹ வந்த அவர் மறைவு ஆன்மிக உலகத்துக்கு பெரிய இழப்பு.

அதில் ப்ருமஸ்ரீ தீட்சிதர் ஒரு தனி. எங்கள் குடும்பத்தில் ஒருவர். ஆப்தாள் என்று அன்புடன் அழைக்கப் படுபவர்/

எங்கள் குடும்பத்தில் என் செம்மங்குடி தாத்தா. ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள்      ஸ்ரீ ரங்கத்தில்  நவாஹம் இராமாயண பராயணம் நடந்ததது. இவர் மேடையில் உட்கார்ந்து அவர் உபன்யாசம் செய்த காக்ஷி இன்னும் என் மனதில் இருக்கிறது,  என் தாத்தாவைப் பற்றி பல முறை அவர் உபன்யாசத்தில் ஆத்மார்த்தமாக புகழ்ந்து பேசியது ..எல்லாம் சத்தியம்.

கிருஷ்ண லீலா தரங்கிணியில் - முஹூர் முஹூர் நமன் நமன் முகுந்த பாதபத்மயோஹோ... என்று ஒரு சுலோகம் வருகிறது.  (ஹே ராம ஹே கிருஷ்ணா என்ற பாடலின் சுலோகம்)  அக்ரூரர், கம்சனால் அனுப்பப்பட்டு, கிருஷ்ணனைப் பார்த்தவுடன் நமஸ்காரம் பண்ணி கொண்டே இருந்தாராம். கிருஷ்ணன் அவரை ஆலிங்கனம்

செய்து கொண்ட பிறகு கூட திருப்பி நமஸ்காரம் செய்தாராம்.

அதே மாதிரி என் அம்மா எப்போது அவரைப் பார்த்தாலும் என் குடும்பத்தில் எல்லோரையும் நமஸ்காரம் செய்யச் சொல்லி தானும் செய்வாள்.  தீக்ஷிதரோ, என் தந்தையையும், தாயையும் வாய் கொள்ளாமல் வர்ணிப்பார்.

என் அம்மா மேல் அவர் கொண்டிருந்த அன்பு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் அம்மா அவருக்கு ஒன்று விட்ட சஹோதரி.  கூடப் பிறந்த சஹோதரியை விட அவ்வளவும் கனிவும் அன்பும். கடந்த முறை சப்தாஹம் சொல்ல வரஹூர் வந்த போது, புடவை வேஷ்டி வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். கனு வைத்தால் என் அம்மா முதலில் அவருக்குப் போன் செய்து ஆசீர்வாதம் வாங்கி கொள்வார்

சாப்பாடு என்றால், என் அம்மாதான் அவருக்கு பரிமாற வேண்டும். அவர் சாப்பிடும் முறையே அழகாக இருக்கும். அவருடைய பாஷையிலே சொல்ல வேண்டும் என்றால் “கல்யாணத்தில் சில பேர் சாப்பிடுவதைப் பார்த்தால் பயமாக இருக்கும், அவன் சாப்பாட்டோடு சண்டை போட்டுக் கொண்டு இருப்பான். கடைசி வரை சாப்பிட மாட்டான்” 

அப்படி இல்லாமல் மிகவும் நேர்த்தி. 

என் பெற்றோர்களின் சதாபிஷேக நினைவாக, சில தரங்கிணி பாடல்களை தொகுத்து ஒரு சிரிய புத்தகமாக வெளியிட்டேன். அதற்கு முன்னுரை எழுத தீட்சிதர் மாமாவுக்கு போன் செய்து கேட்டேன். உடனே “பேஷா சொல்றேனே.. என்று போன் லேயே எனக்கு சொன்னார்”

அவருடைய குடும்பத்தில் ஸ்ரீ. ராம்ப்ரசாத். ஸ்ரீ வித்யா அவர்களுடைய குழந்தைகள் எல்லோரும் எனக்கு மிகவும் பரிச்சயமான அருமையான குடும்பம்.

ஒருமுறை திருப்பதியில் சப்தாஹம். நான் சென்றிருதேன். என்னமோ தெரியவில்லை. செம ஜுரம். மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது ஒவ்வொரு மணிக்கு ஒரு தடவை. ஸ்ரீமதி வித்யா வே நேரே வந்து எனக்கு, மாத்திரை, ரஸம் எல்லாம் கொடுத்து அவர் வீட்டில் ஒருவராக என்னைப் பார்த்துக் கொண்டார். இதை மறக்கவே முடியாது.

அவர் மறைந்த அந்த தருணங்கள் மிகவும் குறைவு. 7-8 மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அவர் உபன்யாசங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்த வாழ்க்கை மிக மிக அதிகம். அதை நாம் நினைத்து சந்தோஷப்படவேண்டும்

ஒரு மஹா பெரியவா, ஒரு ஹரிதாஸ் கிரி, ஒரு தீக்ஷிதர் – நம் கண் முன்னாலேயே இருந்து, நம்மை மேலே தூக்கி விட்டு சாதாரணமாக கடந்து சென்றவர்கள்.

கடைசியில் ... மா நிஷாத என்று இருந்த என்னை மாநிஷாத என்று மாற்றியவர்.  இதற்கு அர்த்தம் தெரியாதவர்கள், வால்மீகி ராமாயணம் முதல் 10 பக்கம் படிக்கவும்)

மறைந்த விஷயம் கேட்டு குரோம்பெட் ஓடி வந்தேன். சற்றே இதழ் மூடிய தாமரை புஷ்பம் போல இருந்தார்.  உடலில் ஒரு சிறிய காயம், தழும்பு ஒன்றுமே இல்லை. எவ்வளவு ஆச்சரியங்கள், எவ்வளவு உபன்யாஸங்கள், எத்ததனை இடங்கள், குருவாயூர் என்ன, குணசீலம் என்ன, திருப்பதி, வரஹூர், அயோத்யா, பூரி..... எத்தனை இடங்கள். எத்தனை பேரை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தி பக்தி மார்கத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்.

அவர் அருகில் அவர் என்னை அடிக்கடி பாடச் சொல்லும் சில தரங்கங்கள் பாடினேன். தைத்ரீய உபநிஷத் வாத்யார் சொல்ல, ராம் பிரசாத் சித்தம் கலங்கி உட்கார்ந்து இருக்க  தீக்ஷிதர் சோம யாகம் பண்ணியதால், பெரிய ப கனபாடிகள், வாத்யார்கள் வந்து, மந்த்ரங்கள் ஆரம்பிக்க....

திரும்பி வரும்போது, அவர் உபன்யாசங்களில் சில நீதிகளை (moral values) எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த ஜென்மத்தில், எங்கள் குடும்பத்திற்க்கு, விதுரன் க்ருஹத்திற்கு வந்த கிருஷ்ணர் மாதிரி, வந்த மஹான்

 

(இன்னும் வரும்)