Friday, 26 June 2026

கோடை நகர் வாழ வந்த பெருமாளே !!!!....

 

என்று அருணகிரிநாதர், வல்லக்கோட்டை முருகனை துதித்துப் திருப்புகழ் எழுதி இருக்கிறார்.

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் ஆகி  இன்று ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது. சம்வத்ஸரம். அதனால் கோடை நகர் முருகனைப் பற்றி......

இது சென்னையில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர்,- படப்பை, ஓரகடம் வழியாகச் செல்லும்போது, வழியில் அழகான பெரிய “போர்டு” உங்களை வரவேற்கும்.  கொஞ்சம் உள்ளே போனால்.... கோவில்

1500 வருட ஸ்தலம்.   வேலுக்கு மட்டும் தனியாக ஒரு சந்நிதி உண்டு. 

அற்புதமான கோவில். மூலவர் மிகவும் உயரம். ஒரு ஏழு அடி இருக்கும். வளர்ந்து கொண்டே இருக்கிறார். நான் நினைப்பதுண்டு. குருக்கள் “நேர் முகத் தேர்வு” பண்ணும்போது, ஆகம விஷயங்களைத் தவிர, உயரத்தையும் பார்க்கவேண்டும் என்று.  தலைக்கு மேல், "அயம் மே ஹஸ்தோ பகவான்" எல்லாம் பண்ண முடியாது

ஆறு முகங்களோடு, என்கண் மாதிரி ஒரு மூலவரும் உண்டு

“யாமிருக்க பயமேன்” என்று அபய ஹஸ்ததைக் காட்டி, முருகன் சொன்ன இடம் இதுதான் என்று ஒரு அற்புதமான சரித்திரம் உண்டு

வள்ளல் என்ற அசுரன், மிக அதிக வரங்களைப் பெற்று, தேவர்களைத் துன்பப்படுத்த, அவர்கள், முருகனிடம் முறையிட, அவர் இந்த அரசன்/அசுரனை அழித்துக் கோட்டையை கைப்பற்றிய இடம் தான் வல்லக் கோட்டை.  இன்னொரு சரித்திரமும் உண்டு.

அருணகிரியார் மைலாபூரிலும் பாடி இருக்கிறது. எப்படி போனார் என்று தெரியாது, இங்கும் பாடி இருக்கிறார்.

திருப்போரூரில் இருந்து, திருத்தணி போகும் வழியில் உள்ளது. அருணகிரிக்கு வல்லக் கோட்டை வா !  என்று முருகன் கனவில் சொன்னதாக ஒரு வரலாறு உண்டு

மூலவருக்கு எதிரில் இரண்டு மயில்கள் இருப்பது ஆச்சர்யம்.  இதைப் பற்றி அங்கு இருந்த குருக்களிடம் கேட்ட போது- “அசுரர்களை அழித்துக் காப்பது என்ற தொழிலையும், பக்தர்களை காத்து, அருளுவது என்ற இரு செயலையும் ஒன்றாகச் செய்பவர். ஒரு மயில் கொஞ்சம் உக்ரமாக இருக்கும், அது அசுர வதம், இன்னொன்று சாந்தமாக இருக்கும் – பக்த சம்ரக்ஷணம்”   

நான் கண்ட இன்னொரு விஷயம், மூலவர் மிகவும் அருகில். நாம் கோவிலுக்குப் போனோம் என்றால், மூலவர் எங்கோ உள்ளே இருப்பார்.  கற்பபூரம் காட்டும்போதுது கொஞ்சம் முகமும், பாதமும் தெரியும்.  இங்கு மூலவர் கிழக்கு நோக்கி இருப்பதாலும், நல்ல வெளிச்சம். பெரிய விக்ரஹம் ஆதலால் ஆனந்தமாக அபிஷேகமோ, தீபாரதனையோ மிக அருகில் பார்க்கலாம்

பாதிரி மரத்திற்க்குக் கீழே, இந்த திருவிளையாடல் புரிந்த முருகன்.

அருணகிரிநாதர், சென்னை வாழ் மக்களின் “பரிதாப” நிலையைப் புரிந்துகொண்டு ஒரு எளிமையான திருப்புகழ் ஒன்று பாடி இருக்கிறார். அவர் சொல்கிறார்

“அம்மாவின் உடலில் இருந்து கஷ்டப்பட்டு பிறந்து

ஆசையுடனே பிறந்து, நேசமுடனே வளர்ந்து, அழகான ஆண் மகனாகி,

உலகம் முழுது சுற்றி, கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளை பெற்று, போதும் போதும் என்று பணம்  சேர்த்து –

இதே மாதிரி – “போகமதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உந்தன் பூ அடிகள் சேர அன்பைத் தருவாயே” என்று  எச்சரிக்கிறார் !!!”

இது ஒரு பாதி

அடுத்த பாதி= திருமால், சிவன், அம்பாள் அவருடைய வீரம் என்று திருப்புகழை முடிக்கிறார்.

திருப்புகழைப் படித்தால் – எல்லா கடவுளையும் ஒரு சுற்று வரலாம் என்பதற்கு உதாரணம் சொல்லும் – இன்னொரு திருப்புகழ்

இதை மாயா மாளவ கௌளையில்- ஸ்ரீ ராகவன சார் ;பாடியிருக்கிறார்.  Kaumaaram.com ல் கேளுங்கள். கண்களில் கண்ணீர் வரும்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம். அன்னதானம். “பக்கத்தில் “RENAULT கம்பெனி தன்னுடைய CSR பணத்தின் மூலமாக, ஒரு அன்னதானக் கூடம் கட்டி, பாத்திரங்கள் வாங்கி, நிரந்தரமாக சமையர்காரர்களை போட்டு, நித்யம் அவர்கள் செலவில் அன்னதானம் செய்கிறார்கள்

 வரும் எல்லோருக்கும் சாப்பாடு உண்டு.

Monday, 8 June 2026

ஏன் கோவிலுக்குப் போக வேண்டும். ? ஏன் நமஸ்காரம் பண்ண வேண்டும் ?

 இப்போதெல்லாம் கோவிலுக்குப் போனால், நாம் உதட்டை தொட்டு ஏதோ செய்கிறோம். அல்லாது, நெஞ்சில் கையை வைத்து ஏதோ பேசுகிறோம். அல்லது குனிந்து தரையை தொட்டு விட்டு போகிறோம்.

இப்போது புது பேஷன், செருப்பைக் கூட அவுக்காம, கோபுர வாசலில் இருந்து ஒரு “பறக்கும் முத்தம்” கொடுத்து விட்டுப் போகிறோம். !!!!!

இதை விட கொடுமை என்னவென்றால்,  சுவாமி வீதி உலா வரும்போது, செருப்பு கூட அவுக்காமல்,  கற்பூரம் ஒத்திக் கொள்வது.  

தெரிஞ்சு செய்யும் பாபத்திற்கு பரிகாரம் கிடையாது !!!!

நம் முன்னோர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மை விட அவர்களுக்கு, பணம் கம்மி, வசதிகள் கம்மி, அடுத்த வேளை சாப்பாடு கேள்விக் குறி, பொழுது விடிஞ்சா, அஸ்தமிச்ச்ச்சா கவலை. ஆனால் அவர்கள் கோவிலுக்குப் போவார்கள். ஏதோ முடிந்த அன்ன தானம் செய்வார்கள். கோவிலுக்குப்  போனாலோ, வீட்டில் பெரியவர்களுக்கோ, நமஸ்காரம் பண்ணும்போது, “நெடுஞ்சாண்கிடையாக” விழுந்து நமஸ்காரம் செய்வார்கள்.  தம் உடல் முழுதும் தரையில் படும்படியாக.  சாஷ்டாங்கமாக.. 

மஹா பெரியவா சொல்லும் போது, “தண்டம்” சமர்பிப்பது என்று சொல்லுவார். தண்டம் என்றால் “கோல்” கையில் வைத்திருக்கும் கம்பு போன்றது. அதை விட்டால்

எப்படி கீழே விழுமோ அப்படி விழ வேண்டும் 

ஏன் எப்படி ?

முதலில் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும் ?  இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஏதோ நெய் விளக்கு போடவேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாள், சனிக்கிழமை பெருமாள். நவஹ்ரகத்தைச் சுற்ற வேண்டும். ....இத்யாதி.

அது அல்ல காரணம்.  நம் எல்லா அவயவங்களும் சந்தோஷமாக இருப்பது கோவிலில் தான். உதாரணம். 

கோவிலுக்குப் போய் அம்பாள் அலங்காரத்தைப் பார்க்கிறோம். ஆஹா. தக தக என்று புடவை என்ன ? நகைகள் என்ன ? ஜொலிக்கிறாள்.  பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன ?  கண்ணுக்கு அழகு. அபிஷேகம் நடக்கிறது சிவனுக்கு. ஆஹா என்ன அழகு என்று மெய் மறந்து போகிறோம்

பக்கத்தில் ஒருவர். தேவாரமோ, ஒரு பாட்டோ பாடுகிறார்.  காதுக்கு இனிமை

நாம் “நமச்சிவாய வாழ்க, சுவாமி சரணம்” என்று ஸ்லோகம் சொல்கிறோம், நாக்குக்கு இனிமை.

கையெடுத்துக் கும்பிடுகிறோம். கைக்கு இனிமையாக இருக்கிறது.

ஒரு விளக்கு ஏற்றும்போது விரல்களுக்கு...

பிரகாரத்தில் நடக்கிறோம். காலுக்கு இனிமையாக இருக்கிறது.

கடைசியில் கொடி மரத்தில் நமஸ்காரம் செய்கிறோம். முழு உடலுக்கு இனிமையாக இருக்கிறது.

இந்த நமஸ்காரம் செய்யும்போது, முழு அவயமும் தரையில். ஏன் கொடி மரத்தில் ?

அந்த கொடி மரம், ;பல அதிர்வலைகளை ஏற்படுத்தும், “ஆன்மீக ஆண்டென்னா....”.  நாம் நமஸ்காரம் செய்யும்போது, அந்த அலைகள் நம் உடல் முழுதும் பாய்கிறது.  

அது மட்டுமல்ல ? எத்தனை பெரியவர்கள், மூதாதையர்கள், யோகிகள் இந்தக் கோவிலில் சுற்றி இருக்கிறார்கள். தரிசனம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நடந்த, நமஸ்காரம் செய்த இடந்தில் நாம் இருக்கிறோம் என்ற ஒரு நினைப்பே, நமக்கு உணர்ச்சி பூர்வமான தருணம்.

இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால், அடுத்த தலைமுறை பக்தியால் காப்பாற்றப்படுகிறது.

இப்படி நம் உடல் முழுவதும் சந்தோஷமாக இருக்கும் வேறு ஒரு இடம் சொல்லுங்கள் பார்ப்போம் ?

 

 

 


Thursday, 4 June 2026

நான்கையும் பிடி, ஒவ்வொன்றாக விடு

 

குஞ்சு ஸ்வாமிகள் -ரமணர் இடையே நடந்த உரையாடல். அதன் மூலம் கிடைத்த உபதேசம்....

குருஜி. முரளீதர ஸ்வாமிகள் சொற்பொழிவின் ஒரு பகுதி - இது YOU TUBE ல் இருக்கிறது. கேட்கலாம். நான் எழுத்து வடிவில் தருகிறேன். அவ்வளவுதான்......

ரமண மகரிஷியிடம் சில விஷயங்களை நாம் கவனித்து இருக்கலாம். அவர் கண்ணை மூடிக்கொண்டு ஒரு போட்டோ விலும் இருக்க மாட்டார். யாருக்கும் உபதேசம் பண்ணமாட்டார். ஓரிரு வார்த்தைகள் பேசினால் அரிது.

குஞ்சு ஸ்வாமிகள், கேரளாவில் பிறந்து, திருவண்ணாமலை வந்து, பகவானிடம் எதாவது உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவர் முதலில் எதை சொல்கிறாரோ, அதையே உபதேசம் என்று எடுத்துக் கொள்வது என்று முடிவு பண்ணினார்.

நாராயண தீர்த்தர், பெரும் வயிற்று வலியால் துடித்து, நடுக்காவேரியில் உள்ள பிள்ளையாரைப் பிரார்த்திக்க, கனவில், “காலை எழுந்தவுடன் எது முதலில் உன் கண்களில் படுகிறதோ, அதை தொடர்ந்து போ ! உன் வயிற்று வலி தீரும் என்று சொல்ல, அவர் காலையில் எழுந்து பார்க்க ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று நிற்க, அதை பின் தொடர்ந்து சென்று, பூபதிராஜபுரம் என்ற வரஹூரை அடைந்தார்.  பிறகு தரங்கிணி பாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது போல் குஞ்சு சுவாமிகளும், முதலில் அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் உபதேசமாக எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்தார்.

ரமண மகரிஷி இடம் வந்தவுடன் அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு கொட்டாங்கச்சியில் சூடாக கஞ்சி இருந்தது. அதை 4 நாய் குட்டிகள் சாப்பிட ஓடி வந்ததன. இதை பார்த்த குஞ்சு ஸ்வாமிகள் பதற,  பகவான், குஞ்சு சுவாமிகளிடம் “இந்த நான்கையும் பிடிச்சுக் கட்டு, ஒவ்வொன்றாக விடு” என்றார்.

சாதாரணமாக இந்த வரிகளைப் பார்க்கும்போது, நாய்குட்டி, சூடு கஞ்சி, குடித்தால் நாய்க்கு சுட்டுவிடும்... என்று தான் பார்ப்போம். ஆனால், குஞ்சு ஸ்வாமிகள் எவ்வாறு புரிந்து கொண்டார் ? 

ஜீவன் முக்தி அடைவதற்கு நான்கு நிலைகள்

பாராயணம்

ஜபம்

த்யானம்

ஆதம விசாரம்

நாம் எதை ஆழ்ந்து படிக்கிறோமோ, அதில் மனது லயித்துவிடும். நாம் வேதாந்த விசாரம் சம்பந்தமாக படிக்கும்போது. “உடல் நம்மது இல்லை. உடல் வேறு ஆத்மா வேறு. நீ மனசு இல்லை, அறிவு இல்லை” .....என்று அறிய - நிறைய வேதாந்த சமாசாரங்களை படித்துக் கொண்டே இருக்கவேண்டும். ராமனைப் போன்ற ஒரு ராஜா, ஒரு மனிதன், ஒரு சஹோதர பாசம், பணிவு, கருணை என்று ராமாயணத்தை படிக்கும்போது, நம் மனது பக்குவப்படும் – அதற்காக பாராயணம்.

ஊண் உறக்கமின்றி ஏழு நாள் ஸ்ரீ மத் பாவதம் கேட்டு முக்தி அடைந்த பரீக்ஷித் மகாராஜாவின் கதை கேட்கும்போது, மனது பக்தி மார்கத்தில் பக்குவப்படுகிறது – அதற்காக சப்தாக பாராயணம். ஒரு ராஜா “எழு நாட்களில் பாம்பு கடித்து இறக்கப் போகிறாய்” என்று தெரிய வர, உடனே, மோக்ஷ சாதனத்தை தேடுகிறான். எத்தனை பேருக்கு இந்த தெளிவு வரும் ?

கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம்,  லலிதா ஸ...எல்லாமே பாராயணம் தான் ..

அதனால் பாராயணம். ஏனெனில், மனது பல பிறவிகளில், உலகத்தோடு போய் பல விஷயங்க ளை உள் வாங்கிக்கொண்டு திரும்ப மாட்டேன் !!!! என்கிறது. அது திரும்பனும் என்றால் பாராயணம் மூலம் ஸ்திரப்படுத்தவேண்டும்.  

அடுத்தது ஜபம் – ஒரே மந்த்ரம். அதையே திருப்பி திருப்பிப் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். (உ.ம்)  ராம நாம ஜபம் பண்ணிக்கொண்டே இருப்போம் என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு 10 நிமிடம் கழித்து, ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்று ஆரம்பித்து.  இன்னுமொரு 30 நிமிடம் கழித்து, நமச் சிவாயா அன்று குழப்பிக்க கூடாது. இதில் இருந்தே என்ன தெரிகிறது, “மனது சஞ்சலப்படுகிறது” என்று. ஏனெனில், சஞ்சலம் இல்லாமல் இருக்கத்தானே ஜபம். ?!! ஒரு ஜபத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அதை எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். கோடி ராம நாமம் ஜபித்த, ஸத்குரு த்யாகராஜருக்கு, நேரே “வைதேஹி சஹிதம், ஆஞ்சநேயரோடு, ராம லக்ஷ்மணர்கள் காட்சி கொடுத்தார்கள். இது ஏதோ 1000 வருஷங்களுக்கு முன்பு இல்லை  200 வருடங்களுக்கு முன்பு, திருவையாறில்... 

அடுத்தது, த்யானம். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது. முருகப் பெருமான் அருணகிரிநாதரை காப்பற்றி, “சும்மா இரு, சொல் அற” என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். 

சும்மா இருப்பது அவ்வளவு எளிதா என்ன ? தவிக்கிறார். உருகுகிறார்.

அதை பாடலாகவே சொல்கிறார்:

சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில்

தவ முறை த்யானம் வைக்க அறியாத

சட கசட மூட மட்டி, பவ வினையிலே ஜெனித்த.

தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ !!!!

என்று திருப்புகழில் பாடுகிறார்.

நமக்கும் அதுதான். மனது அடங்காது. சிந்தையை அடக்கியே சும்மா இருத்தல் மிக அரிது. என்று தாயுமானவர் கூறுகிறார்.

அடுத்தது ஆத்ம விசாரம். நாம் ஏன் பிறந்தோம்.: ? நல்ல கதி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தப்பான வழியில் போனவர்களின் கதி  என்ன ஆச்சு ? என்ற பல பேர்களின் மூலம் இந்த ஜென்மத்திலேயே நமக்கு பகவான் காண்பித்துக் கொடுக்கிறான். அதை வைத்து நாம் கற்றுக் கொண்டு இந்த ஜன்மம் கடைத்தேறுவதர்க்கு உண்டான உபாயங்கள். !!!

நாம் எதிரில் உள்ளவர்களைப் பற்றி அறிவதற்கு பெரும் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம். அதில் பல முறை தோல்விதான். ஆனால், முயற்சியை கை விடுவதில்லை. அதற்க்கு, முன்பு, உன்னை உள்ளே சுய பரிசோதனை செய்ய வேணும். நான் யார்.. என்று, !!!!

மேற்கூறியவற்றை, பண்ணிக் கொண்டே வா ?  உனக்கு ஜபம் வந்துவிட்டதா. ரொம்ப ஈசியாக ஜபம் உள்ளே உட்காருகிறதா ? அப்போ பாராயணத்தை விட்டுவிடு.

பிறகு, ஏகாக்ரமா, ஒரே நினைவோடு மனது இன்னும் ஒன்றிப் போய் ஒரு சமாதி நிலை போன்று மனது லயிக்கிறதா !! த்யானம் சித்திக்கத் தொடங்கி விட்டது. அப்போ ஜபத்தை விட்டுவிடு.

த்யானம் என்பது மூன்று வகை. த்யானம் பண்ணும் அந்த பொருள். த்யானம் பண்ணும் முறை, த்யானம் பண்ணும் நான்.......உதாரணம் – நான் கிருஷ்ணரை த்யானம் பண்ணுகிறேன். அதை பண்ணும் முறை (process)   பண்ணும் நான்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வதுதான் சமாதி. சகஜம். இந்த நிலை வந்துவிட்டதா. த்யானத்தை விட்டுவிடு.

இதுதான், நான்கையும் கட்டு, ஒவ்வொன்றாக அவிழ்த்து விடு.....

நான்கு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பகவன் ரமணர் சொன்ன உயர்ந்த விஷயம் இது. .......இதை விட எளிதாக விளக்கவே முடியாது.

இந்த நான்கில், பாதியில் நாம் இருந்தோமென்றால், அடுத்த ஜன்மத்தில் மற்றதை முடிப்போம். ஆக ஜன்மம் நிச்சயம்.

ஏன் இவ்வளவு வழி முறைகள், என்றால் நாம் LKG, UKG படிக்கும்போதே என்னவாக ஆக வேண்டும் என்று மனதில் ஒரு சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்....

அப்போ கோவிலுக்கு போக வேண்டாமா ? 

கோவில், சிலைகள் என்பது பக்தியின் ஆதாரம். ஒரு பிள்ளையார் இப்படி இருக்கிறார், முருகன் இப்படி, தக்ஷிணாமூர்த்தி, பெருமாள் இவர்கள் எல்லோரையும் பார்த்து, மனதில் அந்த சிலா ரூபத்தைப் பதித்தால் தான், மேற்கூறிய நான்கும் நமக்கு வரும்.  இது தான் எல்.கே.ஜீ, யூ கே ஜீ.

இல்லாவிட்டால், யாரை நினைத்து த்யானம் செய்வது ?

கோவிலில் போய் ஸ்வாமியே மனம் உருக பிரார்த்திக்கலாம். இந்த புடவை அம்பாளுக்கு அழகா இருக்கே ? எங்க வாங்கி இருப்பார்கள் என்று யோசிக்கலாம். வாசலில் போட்டு வந்த புது செருப்பு, பத்திரமாக இருக்குமா ? என்று யோசிக்கலாம். இல்லாவிட்டால், சுவாமியை கவனிக்காமல் யாருடனோடு அரட்டை அடிக்கலாம்......

இது தான் ஆரம்பம்.... நமக்கே தெரியாமல் பக்திக்கு அச்சாரம் கோவிலில் போடுகிறோம். அதனால் தான் கோவிலுக்குப் போகவேண்டும்.

குஞ்சு ஸ்வாமிகள் ஒரு முறை, பகவானுக்காக, சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தார். கொடுத்தவர், ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வரும்போது, சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தார். அவர், கேரளாவில் இந்த கிராமமா ?  கிடாரங்கா ஊறுகாயா ? 100 வயது, மோக்ஷம் கிட்டும்” என்று சொன்னார்.

குஞ்சு சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பகவானிடம் வந்து அந்த டப்பாவைத் திறந்தால், அதில் கிடாரங்காய் ஊறுகாய் இருந்தது. இவர் கேரளாவில் இருந்த ஊரையும் சரியாகச் சொன்னார்.  இதை பகவானிடம் கேட்டபோது, சேஷாத்ரி சுவாமிகளுக்கு “தெரியாதது ஒன்றுமில்லை” என்றார் பகவான். குஞ்சு ஸ்வாமிகள் 100 வயது வரை வாழ்ந்தார் ..

கடைசியில்”

ஒருவர் ரமணரிடம், நான் சரீரத்தை போஷிக்க வேண்டாமா ? என்று கேட்டார். அதற்க்கு ரமணர் சொன்னார். “நீ ஒன்னும் போஷிக்க வேண்டாம். உன்னுடைய பிராரப்தம் அதைச் செய்யும். இந்த ஜன்மமே நீ போன ஜனமத்தில் செய்த பாபம் புண்ணியத்தில் பலன் தான். நீ இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய். அது போதும் என்றார்.