Friday 21 January 2022

சொல்லின் செல்வன்

 

அனுமான்

அனுமான் முதன் முதலாக ராம லக்ஷமணர்களை சந்திக்க வருகிறார். இந்த நிகழ்ச்சியை சற்று சிந்திப்போம்.

அனுமான் நமக்கு management கிளாஸ் எடுக்கிறார் !!!!

நாம் முதலில் ஒருவரை, முதல் தடவையாக சந்திக்கும்போது என்ன செய்வோம்:

·         அவர்களை பற்றி யாராவது நமக்கு முன்பு சொல்லி இருப்பார். அதை மனதில் வைத்து அவரைப் பற்றி நமது மனதில் ஒரு ஐடியா கிடைக்கும்.

·         அவரை பார்த்த ஐந்து நிமிடத்திலேயே அவரைப் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும்.

·         அவருடைய நண்பர்களின் மூலமும் அவரை பற்றித் தெரியும்.

இப்படி ஒரு preparation உடன் செல்லும்போதே, சில சமயங்களில் சொதப்புவோம். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்போம். அவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்.... இப்படி பல சத்திய சோதனைகள் !!!!

 

ஆஞ்சநேயரைப் பற்றி, எவ்வளவு எழுதினாலும், இன்று முழுவதும், என்றும் ரசிக்கலாம். அவர் சத்குருநாதர். ஒரு குரு தான், நம்மையும், இறைவனையும் இணைக்கிறார். அவர் ஒரு பாலம். சீதா என்ற ஜீவாத்மாவை, ராமன் என்ற பரமாத்மாவுடன் இணைத்தவர் அவர்தானே. அதால் தான் அந்த காண்டத்திற்க்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார்கள் !!!!  வீட்டில் சுந்தர காண்டம் பாராயணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். ஆஞ்சநேயர் நம் கூடவே இருப்பார்.

நாமும், நித்யம் பரமாத்மாவுடன் இணைவதற்க்கு படாத பாடு படுகிறோம். குருவைத்தேடி துவண்டு போகிறோம். சுந்தர காண்டம் படித்தால், ஆஞ்சநேயர் வந்து நம்மை குருநாதரிடம் அழைத்துப் போவார். அவரே குருநாதராகவும் வருவார்.

கமபன் சொல்லும்போது- சீதை, அனுமானை, “அருளின் வாழ்வே” என்கிறாள். இதற்க்கு “அருளை வாழ வைப்பவனே (அ) அருளே வாழாக இருப்பவனே (அ) அருளுக்கு வாழ்வு தருபவனே- என்று பல பொருள்களை கூறலாம்.

செய்யுள் நடை - “அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே, அருளின் வாழ்வே” என்று போகிறது.

சீதை தற்கொலைக்கு முயன்றால். அதை தடுத்து நிறுத்தியதால், அனுமன் தாய் தந்தை ஆனான்- என்றும் கொள்ளலாம்.

சீதை- “நீ சிரஞ்சீவியாக இருப்பாய்.” என்கிறாள். “நான் குற்றமற்ற குணம் உள்ளவள் என்பது உண்மையானால். ஒர் ஊழிக்காலம் பகலாக மாறி, இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும், இன்று போல் நீ இருப்பாய்” என்கிறாள். 
இங்கு குரு பரமாத்மாவை தேடி வரும் அறிய காட்சியை
, வால்மீகி எப்படி எடுத்துக் காட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.

சொல்லின் செல்வன் என்று கம்பன் காட்டும் அனுமான் (கிஷ்கிந்தா காண்டம் ஆரம்பம்) எப்படி ஒரு அந்தணர் வேஷம் பூண்டு ராம லக்ஷ்மணர்களிடம் வந்து பேச ஆராம்பிக்கிறார். (முதலில் முன் பின் தெரியாதவர்களிடம் பேசும்போது எப்படி “பாசிடிவ்” ஆக பேச வேண்டும் என்பதை ஒரு வானரம் நமக்குக் காட்டுகிறது)

வால்மீகி சொல்கிறார்- “அனுஷ்டானத்தில் உள்ளபடி வரவேற்று பிறகு பேசுகிறார். (பிராமணர் வேஷம் பூண்டு இருக்கிறார் இல்லையா) – அதனால் வேதம் இங்கு வருகிறது.

முதலில் அவர்களுடைய குணாதிசயங்களை புகழ்ந்து பேசுகிறான், பிறகு அவர்களின் நோக்கத்தைக் கேட்கிறான் ....

·         அபூர்வமான உடல் வண்ணம் பெற்றுள்ள தாங்கள் இருவரும் இந்த இடத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?

·         மிகவும் மன உறுதி படைத்தவர்கள் போல காணப் படுகிறீர்கள். சிங்கத்தைப் போன்ற பார்வை. சிங்கத்தைக் காட்டிலும் அதிக பாராக்ரமம். இந்திரனுடைய வில்லைப் போன்ற ஒரு வில் வைத்திருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் எதிரிகளை அடக்க வல்லவர்கள் என்று தெரிகிறது.

·         தாமரையிதழ் போன்ற கண்களை உடையவர்கள், தற்செயலாக தேவ லோகத்தில் இருந்து இந்தப் பிரதேசத்திற்க்கு வந்து விட்டவர்கள் போலத் தோன்றுகிறீர்கள்.

·         எதிர் பாராத விதமாக பூமிக்குள் வந்துவிட்ட சூரிய சந்திரர் போல இருக்கிறீர்கள்.

·         எல்லா அணிகலன்கள் அணியத்தக்க உடல் உறுப்புகளை கொண்ட நீங்கள் ஒரு அணிகலன் கூட அணியவில்லை !!

·         அம்பு, வில் இவர்களைப் பற்றியும் அனுமான் புகழ்ந்து தள்ளுகிறார்.

அனுமனின் முதல் சந்திப்பில், அவன் சொன்ன வார்தைகளை கவனித்தால் தெரியும். ஒரு பெரிய அறிவு ஜீவி, ஆனால் அதை எவ்வளவு அடக்கமாக பேசுகிறான் என்று மேலே பார்த்தோம்.

இதற்க்கு ராமன், இலக்குவனிடம் சொல்லும் பதில் “இவன் மகாபலம் பொருந்திய சுக்ரீவனின் அமைச்சன். தங்களுக்கு க்ஷேமம் உண்டாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் வந்திருக்கிறான். சுமித்திரை செல்வனே, இனிய நட்பு தோன்றும் சொற்களால் பதில் கூறுவாயாக !    ரிக் வேதம் படிக்காத, யஜுர் வேதம் பயிற்சி பெறாத, சாம வேதம் பயிலாத ஒருவனால், இவ்வளவு உயர்தரமான சொற்களை கொண்டு பேச முடியாது”

ராமனின் கணிப்பைப் பாருங்கள்.

எப்படி ராமன், ஒரு சராசரி மனிதனிடம் இருந்து விலகி, ஓர் தனித்துவமிக்க, ஒரு உதாரண புருஷனாக இருக்கிறான் என்பதைப் பர்ர்ப்போம்:

நம்மைப் பற்றி ஒருவர் புகழ்ந்து பேசினார் என்றால் நாம், “என்ன சார், ரொம்ப புகழாதீங்க, இதற்கெல்லாம் நான் லாயக்கே இல்லை என்று ஒரு பதில் சொல்லுவோம்.  இல்லாவிடில், “சார் நான் அதுவும் பண்ணி இருக்கேன், இங்கேயும் பண்ணியிருக்கேன், என்று அவர் மறந்ததை எல்லாம் சுட்டிக் காட்டி “தற்பெருமை” யை பறை சாற்றிக் கொள்வோம். மூன்றாவதாக, “இவன் நம்மிடையே ஏதோ காசோ, பணமோ, வேறு ஊதவியோ எதிர் பார்த்து வந்திருக்கிறான்” என்று ஜாக்கிரதையாக இருப்போம்.

சத்தியமாக, எதிராளியை புகழ்ந்து பேசவே மாட்டோம். ஆனால், ராமன் எப்படி மாறுபட்டு, தன்னைப் பற்றிப் பேசியதை லட்சியம் செய்யாமல், எதிராளியை புகழ்ந்து தள்ளுகிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

  

No comments: