இன்று 12.11.2019
அன்னாபிஷேகம்.
மயிலாப்பூரில் இருக்கும் எனக்கு, சுற்றி வர இருக்கும் நிறைய சிவன் கோவிலில்
அன்னாபிஷேகம் பார்க்கும் பாக்கியம் உண்டு. சிகரம் வைத்தால் போல் இருக்கும் கபாலி
கோவிலில் கேட்கவே வேண்டாம். இன்று முழுவதும் திமிலோகப்படும். கூட்ட்டம் நெறியும்.
இருந்தாலும் என் மனசில் என்னால் என்றுமே மறக்க முடியாத செம்மங்குடியில்
உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்றும் பசுமையாக
நினைவிருக்கிறது.
பாரதி வார்த்தையை சற்று
மாற்றிப் பாடினால், “அன்னாபிஷேகம் என்ற போதினிலே, செம்மங்குடி சிவன் கோவில்
பிரசாதம் சுவை வந்து “மோதுது” நாக்கினிலே”. என்று சொல்லலாம்.
ஐப்பசி என்றால் எங்கள் செம்மங்குடி வீட்டில் கவலை வந்து விடும், “ஐப்பசி
என்றால அடை மழை” எனற வார்த்தையை சற்றும் பொய்க்காமல் மழை கொட்டும். மழைக்காலம்
என்பதால், பத்தாயத்தில் (பத்தாயம் என்பது என்ன என்று தெரியாதவர்கள், செம்மங்குடி product அல்லர், அதனால் அவர்களுக்கு தெரிய வேண்டாம் பத்தாயம், சப்பரம்,
முத்தாலத்தி- இவையல்லாம் எங்கள் ஊரில் பிரசித்தம்). நெல் கொட்டி வைக்கவேண்டும், வீட்டில் மழை ஒழுகாமல்,
கூரையை சரி செய்ய வேண்டும். சாக்கு தைத்து பெரியதாக பண்ணி அதை தரையில்போட்டு
ஈரப்பசையை சரி செய்ய வேண்டும், மாடு, கன்று, வைக்கோல் போர், என்ற பல கவலைகள்.
ஆனால் எனக்கு ஐப்பசி பௌர்ணமி அன்று வரும் அன்னாபிஷேகம் மிக முக்கியம்.
எனக்கு என்றால், நான், நாகராஜன், எதுத்த வீட்டு கணக்கு பிள்ளை அவர்களின் பையன்,
வாசு, அய்யங்கார் சார் வீட்டுப் பையன், (பல பெயர் மறந்து விட்டது) தட்டாத்தி மூலை வெங்குட்டு,
பிச்சை சாராத்து (சேங்காலிபுரம்) சுந்தரராமன் இவர்கள் மல்லையா, நிரவ் மோடி மாதிரி,
திடீரென்று வந்து காணாமற் போய் விடுவார்கள்.)
எங்களுக்கு சீனியர், என் மாமா, அப்புவாது ராமதுரை, போஸ்ட் மாஸ்டர்
ஆத்து கோபால கிருஷ்ணன், பக்கத்தாத்து எக்கு. ராமமூர்த்தி, சுப்பய்யன், சீனு, மில்
காராத்து ஜெயராமன், பிச்சை சார் பையன், ஹெட் மாஸ்டர் வீட்டு ராமமூர்த்தி மற்றும்
பலர்- இவர்கள் அன்னாபிஷேக volunteers – (இவர்கள்
என் மரியாதைக் குரியவர்கள்)
மண்டகப்படி, - ஹெட் மாஸ்டரோ, கரெஸ்பாண்டெனடோ, பட்டாமனியக்காரரோ –
தெரியாது. தெரிந்து என்னமோ சாப்பாடு தான்
என் வீட்டில் சாப்பாட்டு மெனு என்பது சிறிய வட்டம். ஒரு சாஸ்த்ரிகள்
குடும்பத்தில் 10 பேர் இருந்து கொண்டு, (இதில் அடிக்கடி வரும் கெஸ்ட் வேறு) தனக்கு இல்லாவிட்டாலும், தன் குழந்தைகள் வயிறு
நிறைய சாப்பிடவேண்டும் என்று பார்த்து பார்த்து சமைத்து என்னை வாழ வைத்த என்
தாத்தா பாட்டி வாழ்ந்து என் மனதில் நிறைந்த இடம்
சாம்பார், ரசம், கறிகாய் வகைகள் வாரத்திற்கு
இரண்டு நாள் (அ) ஐந்து நாள் தான். மோர் சாதம்,,
வெத்தகுழம்பு, மாவடு, கடாரங்காய் ஊறுகாய்.. இவைகளுடன் சந்தோஷமாக இருந்தாலும்,
அன்னாபிஷேகம் என்றால் எங்களுக்கு சாப்பிட “வடை, சக்கரைபொங்கல், தேங்காய் சாதம்,
புளி சாதம் போன்ற “சித்ரான்னங்கள்” இத்யாதி – கிடைக்கும் என்பதால் இந்த
எதிர்பார்ப்பு.
வைகுண்டம் வருகிறாயா என்று யாராவது கூப்பிட்டால் ”இருங்கோ, அன்னாபிஷேகம்
அன்று சிவன் கோவிலில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்வது போல்
இருந்தது என் வாழ்க்கை “
செம்மகுடியில்
சிவன் கோவில் அன்னத்தால் அபிஷேகம் செய்வது என்பதோ, அம்பாளுக்கு அபிஷேக ஸகிதம்,
அன்னத்தால் பட்டுப் பாவாடை போல, ஏகாம்பர சிவாச்சாரியார் அற்புதமாக அலங்காரம்
செய்கிறார் என்பதோ, போஸ்ட் மாஸ்டர் மாமா. “மகாதேவா” என்று மனமுருக அழைக்கும் போது
கிடைக்கும் அற்புத சுகமும், ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகளும், சிவகுரு மாமா,
குமாரு தீட்சிதர் மாமா மற்றும் பல சாஸ்திர பண்டிதர்கள் சொல்லும் மகான்யாசம், ருத்ரம்,
சமகம் அதில் ஜ்வலிக்கும் அகஸ்தீச்வர், பாவாடை கட்டிய பெண்கள்
“ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி” என்று “செஞ்சுருட்டி” ராகத்தில்
பாடுவதோ -– எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. எனக்கு வேண்டியது அன்றைய தினம் இரவு
கிடைக்கும் சர்க்கரைப்பொங்கல் தான்.
இந்த scnene
ஐ சொல்லியே ஆக
வேண்டும். சிவன் கோவிலில் தீபாராதனை முடிந்தவுடன், பிரகாரத்தை சுற்றி வாழை இல்லை
போட்டு உட்கார வைத்து விடுவார்கள். கொஞ்சம் லேட் ஆக வந்தால் உங்கள் இடம், துர்க்கை
அம்மன் சன்னதிக்கு எதிரே போய் விடும். எனக்கே நடந்து இருக்கிறது. ஒவ்வொரு
பதார்த்தமாக வரும்போது, திகில் படம் பார்க்கும் பயம் இருக்கும். நம் இலைக்கு வரும்போது, பதார்த்தங்கள்
இருக்குமா, நமக்கு பக்கத்தது இலையை விட “நிறைய போடுவார்களா”. குறைத்துப் போடுபவரை
கேட்டால் “கம்......டி. எல்லோருக்கும் போடா வேண்டாமாடா ?” – என்று திட்டு
கிடைக்கும். ஸ்வீட் வந்தால், ஜாக்கிரதையாக இடது கையில் வாங்கி, பத்திரப்படுத்திக்
கொள்வேன். அடுத்த நாளைக்கு, அதுதான் என் சொர்க்கம்
இலையில் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட்டு, குளத்தில் கையை அலம்பி,
ஒரு வாய் ஜலம் குடிக்கும்போது, வரும் அந்த சுகம் இருக்கிறதே.............அந்த சுகம் -ஆள்காட்டி
விரலையும், ஒரு மொபைலையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே விலை பேச முடியும் என்றாலும்
இன்று எனக்கு வீட்டில் ஸ்வீட் பண்ணி சாப்பிடும்போதும், வலது பக்கம் Swiggy, இடது பக்கம் zomato, கபாலி கோவிலை சுற்றி இருக்கும் சரவண பவன் முதல், போன மாதம் திறந்த “வெற்றி
விலாஸ் – இவ்வளவு இருந்தும் – - வரவில்லை
எனக்குத் தெரிந்து, பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்று எங்கள் தாத்தா மண்டகப்படியில், மிகவும் பிரமாதமாக நடக்கும். அது இன்றும் அடுத்த ஜெனரேஷனிலும் தொடருகிறது
ராம நவமி அன்று, நீர் மோர், பானகமும், விசிறியும் கொடுப்பார்கள். அதுவும் எனக்கு பானகம் வரும்போது “உத்தரிணி” பானகமும், கொஞ்சம் கரையாத வெல்லமும் கிடைக்கும். கலரே இல்லாத மோர் தான்.....
ராம நவமி அன்று, நீர் மோர், பானகமும், விசிறியும் கொடுப்பார்கள். அதுவும் எனக்கு பானகம் வரும்போது “உத்தரிணி” பானகமும், கொஞ்சம் கரையாத வெல்லமும் கிடைக்கும். கலரே இல்லாத மோர் தான்.....
.
No comments:
Post a Comment