Wednesday 30 January 2019

காற்றில் கலந்து என் மனதில் நிறைந்த அம்மம்மா:


நான் அம்மா என்று அழைக்கும் எனது மாமியாரின் தாயார்,   ஸ்ரீமதி பிரகதாம்பாள்  என்ற “அம்மம்மா” 28.1.2019 அன்று கும்பகோணத்தில், சிவலோகப் ப்ராப்தி அடைந்தார். அவருக்கு வயது சுமார் 95. 

அம்மம்மா இறப்பதற்கு சற்று முன்/ இறந்த பிறகு என்ன என்ன நடந்தது என்று நினைத்தால் மிகவும் ஆச்ச்சர்யமாக இருக்கும்:

28.1.19 அன்று மதியம், அம்மம்மாவிற்கு பணிவிடை செய்யும் லக்ஷ்மி, (இவரைப் பற்றி கடைசியில் எழுதி இருக்கிறேன்) அம்மாவிடம் “இன்று இரவு தாண்டாது” என்று சொல்ல, மதியமே, கொஞ்சம் மண், துளசி, தீர்த்தம் சேர்த்து பிசைந்து  மண்ணாசை, பொன்னாசை “போகவேண்டும்“ என்ற ஐதீகத்தில் சாப்பிட கொடுக்கப்பட்டது. இது லக்ஷ்மி ஐடியா.

இரவு, உயிர் பிரியும் நேரத்தில், மூச்சு இறைக்க, கண் விழித்துப் பார்த்த அம்மம்மா, தனக்குத் தாயாய் இருந்து பணிவிடை செய்த அம்மாவையும், தனக்குப் பெண்ணாய் இருந்து பணிவிடை செய்த லக்ஷ்மியையும் “நன்றாகப்” பார்த்து கண்ணை மூடிக்கொண்டு விட்டாள். எல்லாம் முடிந்தது.

விட்டல் போட்டுக்கொண்டிருந்த சட்டை (பேரனின் சீதனாமாக) இருக்க, தன் உயிரினும் மேலாக அன்பு வைத்திருந்த கணேசனின் வீட்டில் இருந்து “புதுப் புடவை” எடுத்து வந்து கட்டி விட, மகேஷ் என்கிற “செல்ல” பேரன் கடைசி கார்யங்கள் செய்ய, மோகன் அண்ணாவின் மேற்பார்வையில், ஜாம் ஜாம் என்று இறுதி யாத்திரை.

மிகவும் ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம், செய்தி கேட்டு மகேஷ், சென்னையில் இருந்து கும்பகோணம் கிளம்பிய காரின் driver பெயர், நீலகண்டன்.  அம்மம்மா அந்த நீலகண்டனை அடைவதற்கு, இந்த நீலகண்டன் உதவி  செய்தார். என்ன ஒற்றுமை ?

நான் வருத்தப்படப்போகிறேனே என்று, முதல் நாள் என்னை வரவழைத்து, என் கையால் ஒரு ஸ்பூன் பால் வாங்கியும் குடித்துவிட்டாள். அதைப் பற்றி அடுத்த பாராவில்:

27.1.2019 அன்று என்ன நடந்தது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்

நான் தரங்கிணி மஹோத்ஸவத்திற்காக வரகூர் சென்றிருந்தேன் (25-27) அங்கிருந்து கும்பகோணம் சென்று, “உடம்பு முடியாமல்” இருக்கும் அம்மம்மாவைப் பார்த்துவிட்டு சென்னை செல்லலாம் என்று நானும் நிஷாவும் 27.1.2019 அன்று சுமார் மாலை 5 மணிக்குச் கும்பகோணம் சென்றோம்.

கால்கள் மட்டும் லேசாக ஆட, நினைவு தப்பி, 4 நாடகள் அன்ன ஆகாரமின்றி, கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அம்மம்மாவைப் பார்க்க மனசு கனத்துப் போனது. குடும்பத்தில் எல்லோரையும் அரவணைத்து, ஒரு பெரிய வழிகாட்டியாக இருந்தவர், அவர் நடையின் வேகத்துக்கு யாருமே ஈடு கொடுக்க முடியாது.  ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தை, சர்வ சாதாரணமாக நிர்வகித்தவர், இப்போது கடைசி தருணங்களில்...

நான் மிக அருகில் உட்கார்ந்து 2-3 spoon பால் வாயில் விட்டேன். பால் கொஞ்சம் வெளியில் வந்தது. கூப்பிட்டுப் பார்த்தேன், உணர்ச்சியே இல்லாமல் கண்கள் மூடி இருந்தார். சாயம் ஸந்த்யாவந்தனம் செய்யும்போது, அம்மம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து “காயத்ரி மந்த்ரம்” ஜபித்தேன். கும்பேஸ்வரன், கோவிலுக்குச் சென்று பிரசாதம், வீபூதி, நெற்றியில் இட்டு விட்டேன், கடந்த 1 வருடங்களாக அந்த ஜீவன் பட்ட பாடு நினைவுக்கு வந்து, கொஞ்சம் அழுகை வந்தது. குருநாதரிடம் வேண்டிக் கொண்டேன், “போறும், இந்த ஜீவனை “தாத்தப்பாவிடம்” சேர்த்து விடு” என்று லலிதா நவரத்தின மாலை, அம்மம்மாவின் காது அருகில் சொன்னேன்..

நேற்று காலை, சென்னை வந்து, ஆபீஸ் சென்று,  இரவு 7 மணிக்கு வித்வத் சமாஜத்தில், வர்ஷிணி பாடி முடிக்கும்போது, SMS வந்தது மகேஷிடம் இருந்து...........

இதை நான் என்ன என்று சொல்ல ? நான் பார்க்க வேண்டும் என்பதற்காக, உயிரை வைத்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.  கடைசி நாட்களில், யாரையும் ஸ்ரமப்படுத்தாமல், ICU என்று உடல் முழுவதும் ஊசியால் குத்திக்கொள்ளாமல், மெதுவாக குருநாதரிடம் ஐக்கியமானது அந்த ஜீவன்.

“சிந்து: ஸரித் வல்லபம்” என்று சிவானந்தலஹரியில், ஒரு ஸ்லோகம் உண்டு.  பக்தி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்போது, ஆதி சங்கரர், “நதி உற்பத்தி ஆகும் இடத்திற்கு சென்று பார்த்தால், அது “ஹோ” என்ற பேரிரைச்சலுடன், மலையிலிருந்து உற்பத்தி ஆகும், அது, பல இடங்களுக்க்குச் சென்று கடைசியில் கடலுக்கு வரும்போது அமைதியாக வந்து கடலில் சேர்ந்து விடும், (ஏனெனில் நாம் கடைசி கட்டத்தில் இருக்கிறோம்- என்று தெரிவதால்)”- என்று சொல்கிறார்.
அம்மம்மாவில் அந்த அமைதியை, நான் அப்படித்தான் பார்த்தேன்.

இது கல்யாண இறப்பு (மரணம்} என்பதால், ரொம்ப உணர்ச்சி “கொப்பளிக்க” எழுதப் போவதில்லை. நான் பார்த்த அந்த ஒரு உன்னதமான பெண்மணியப் பற்றி சில வரிகள்:

இந்த அம்மம்மா, அப்பப்பா போன்ற வார்த்தைகள், சிலோன் வானொலியில் கேட்டாற்போல் இருந்தாலும், இந்த உறவுகள் நம்மை விட்டு போய், அம்மா அப்பாவையும் மதிக்காது, இந்தக் காலத்து குழந்தைகள் வாழும் “வாட்ஸ்அப்” வாழ்க்கையை நினைத்தால், பாவமாக இருக்கிறது. அத்தங்கா, அத்தா மன்னி போன்ற பல உறவுகளுடன் எனக்கு பழக்கம் உண்டு.

எனக்கு சின்ன வயதில் செம்மங்குடியில் என்  பாட்டியோடு (அம்மாவின் அம்மா) இருந்ததால் (நான் என் பாட்டியை அம்மா என்றுதான் கடைசி வரையில் கூப்பிட்டேன்), பாட்டியின் “அளப்பரிய” அன்பு என்றால் என்ன என்று தெரியும். எனக்கு கல்யாணம் ஆன பிறகு, அம்மம்மா ரூபத்தில் இன்னொரு பாட்டி என் வாழ்க்கையில் வந்து, அதே அ.அ காண்பித்தது நான் செய்த பாக்கியம்.

மாப்பிள்ளை என்று என் மேல், ஒரு மரியாதை இருந்தாலும், ஒரு மகனுக்கு சமமான அன்பை என் மீது பொழிந்தவர் அம்மம்மா.

நான் மடிசார் கட்டி நிறைய பேர் பார்த்திருக்கிறேன்.  மடிசார்  கட்டிக்கொண்ட, அம்மம்மாவைப் பார்க்கவேண்டும். மிகவும் அழகாக, தெய்வீகமாக இருக்கும். மடிசாருக்கு பெருமை என்று கூட சொல்லலாம். இதை என் அம்மாவே சொல்லி பெருமைப் படுவாள். நான் நினைப்பதுண்டு, யாராவது, மடிசார் கட்டிய மங்களாம்பாளைப் பார்க்க வேண்டும் என்றால், “சரக்” என்று திரும்பி அம்மம்மாவைப் பார்த்தால் போறும். வைர மூக்குத்தி மின்ன, இரண்டு மூக்கும் குத்திய அம்மம்மா, மங்களாம்பாளாக, ஜொலிப்பாள்.

கிராமத்துப் பாட்டி (களிடம்) யிடம் சில குணங்கள் உண்டு:
வீட்டையே தன் Control ல் வைத்திருப்பாள். எது எது எங்கே இருக்கிறது. வேலைக்காரர்களை, எப்படி வேலை வாங்க வேண்டும், கொல்லையில் மாடு பால் கறப்பதில் இருந்து, மச்சிலில், எத்தனை பித்தளை பாத்திரங்கள் இருப்பது வரை. ஏதன் மத்தியில்,  கிராமத்து மகளிர் பஞ்சாயத்து வேறு.

குழந்தைகளை எப்படி அரவணைக்க வேண்டும், அதே சமயத்தில் “வெளுக்கும்” சமயத்தில் எப்படி அடிக்க வேண்டும். – எல்லாம்  அத்துப்படி. 2 குழந்தைகளை வைத்து சமாளிக்க முடியாமல் திணறும் இந்தக் காலத்தில், சர்வ சாதாரணமாக 5-6  குழந்தைகளை வளர்த்து, (கோடை விடுமுறை என்றால் 5, 10 ஆக உயர்ந்து விடும்), வெற்றி கண்டவர். தினமும் பெரிய விருந்தோ, தடல் புடல் எதுவும் இல்லை. வெறும் பழேது தான், அதை எதோ “பண்ணி”- அறு சுவை விருந்தாக கொடுத்தவர். – இப்போது அந்தப் பழேதுக்கு ஏங்குகிறோம், அதுதான் அவர்களின் வெற்றி.

சாதாரணமாக, எல்லா வீட்டிலும் தாத்தா என்பவர் ஒன்றுமே தெரியாமல் இருப்பார், பூஜை செய்வார், வயலுக்குப் போய் அறுவடையை கவனிப்பார்.  சாஸ்த்ரிகளாக இருந்தால், பெரிய மனிதர்கள் வீட்டுக்குப் போய் பூஜை செய்துவிட்டு, வாழைப்பழமும், தக்ஷிணையும் வாங்கி வருவார். வந்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார். ஆனால், தவறாமல் வீட்டுக் கணக்கு எழுதி, நிறைய செலவு ஆகிறது என்று புலம்புவார். அடுத்த நாளே 4 பேரை அழைத்துக் கொண்டு சாப்பாடு போடச் சொல்லுவார். மடிப்பு கலையாமல் சட்டை போட்டுக் கொண்டு வெளியில் போவார்.

அப்பளம் இட்டாளா ? மாவடு போட்டாளா ?  மாகாளிக் கிழங்கு 
கிடைத்ததா ? கொல்லையில் மாட்டுக்கு வைக்கல்/புல்லு இருக்கிறதா ?  ம்ஹூம், கவலையே கிடையாது- இது எல்லாம், சர்வ சாதாரணமாக செய்வாள், பாட்டி.

இந்த அம்மம்மாவும் அப்படித்தான்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். எதோ படிப்பு படித்து, தினமும் ஆபீசில் ஒரு 100 பேரையும், 50 e-mail ம் சமாளிக்க முடியாமல் திணறி, எப்படா Sunday வரும் என்று நினைக்கின்ற எனக்கு, சுமாராக படித்து, 365 நாளும், தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்து வெற்றி கண்ட, அம்மம்மா, சத்தியமாக என் Management Guru.

மனமேற்குடியில், (“நிஷா சொல்வாள்) தினமும் வீட்டில் சமாராதனை போன்று தினமும் சாப்பாடு, தாத்தப்பா “கர்ணம்” (அந்த காலத்து VAO range) பதவியில் இருந்ததால், வீட்டிற்கு வருபவர், நிறைய உண்டு. அவர்கள் எல்லோருக்கு சாப்பாடு. அன்ன பூரணியாக வலம் வந்தவர்.  இந்த புண்ணியம் எப்படி அவருடைய கடைசி காலத்தில் உதவி செய்தது என்பதை நான் கண்கூடாகப்  பார்த்தேன்.  கடைசி பாராவில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

கடைசி காலத்தில், தன் பெண் வீட்டில் (என் மாமியார் வீட்டில்) தான் இருக்க வேண்டும் அம்மம்மா  முடிவு செய்து, கும்பகோணத்தில் தங்கி விட்டாள் உடம்பு முடியாமல், படுத்த படுக்கையாய் ஆன பிறகு, தன் “காரியங்கள்” கும்பகோணத்தில் தான் நடக்க வேண்டும் என்று திடமாக இருந்தாள்.

என் நினைவுகள் சற்று பின்னோக்கி விரிகிறது. கல்யாணம் ஆகி, முதலில் நிஷாவுடன், அம்மம்மாவை அழைத்துக் கொண்டு, மும்பை செல்கிறேன். தாதரில் இறங்கி, வாஷி சென்று (குடித்தனம்) வாழ்கையை ஆரம்பிக்கிறோம்.  நிஷாவுக்கும் கொஞ்சம் ஹிந்தி வரும் (கறிகாய் கடையில்- வெண்டைக்காயைக் காட்டி- ய கித்னா ஹை ? என்று கேட்பாள்), அம்மம்மாவுக்கு, தமிழை தவிர ஒன்றுமே தெரியாது. சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்தத் தெருவில் இருந்த மராட்டி, ஹிந்தி பேசும் எல்லா வீட்டிலும், ஒரு மாதத்தில் அம்மம்மா famous ஆகிவிட்டாள். என்ன பாஷை பேசினாள், என்ன செய்தாள் ? என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. மாதாஜி ! மாதாஜி !! என்று அவனவன் “அமிர்தாநந்தமயி” ரேஞ்சுக்கு அம்மம்மாவை உயர்த்தி விட்டார்கள். கறிகாய் தள்ளு வண்டிக்காரன், (இந்த அழகில் அவன் ஹிந்தி கூட இழுத்து இழுத்து பேசும் bhaiyaa வகுப்பைச் சேர்ந்தவன். அவன் பேசும் ஹிந்தி எனக்கே புரியாது) அம்மம்மா வாங்கிய பிறகுதான், (கருவேப்பலையாவது) மத்த வீட்டுக்குச் செல்வான் என்றதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது.

அந்த ஊர் மராட்டி பெண்கள், கட்டிக்கொள்ளும் மடிசார், கொஞ்சம் “எசகு பிசகாக” இருக்கும். தலையில் வேறு அரை தொப்பி மாதிரி இருக்கும். அம்மம்மா மடிசார், அங்கு மிகவும் famous.  அம்மம்மா மடிசாரில் மயங்கிய மகாராஷ்ட்ர மங்கையர் பலர். !!!

இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது, அன்பு என்ற மொழிக்கு, பாஷையே தேவையில்லை. (Ammaamma had “that”unconditional love).

அம்மம்மாவிடம் இருந்த அந்த focus, facing any situation head-on, determination, excellent attitude, equally loving every one she meets..  – It is a lesson.

எனக்கு பழைய சாதம் நிஷா போடுவது, அம்மம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. எனக்கு சாப்பாடு போடும்போது அம்மம்மா பார்த்துக் கொண்டே இருப்பாள். நிறைய சாப்பிடவேண்டும், “அந்த ஊறுகாயும் கொஞ்சம் போடு” – என்பாள். நல்ல சாப்பாடு, நாள் கிழமை என்றால், சம்படம் நிறைய பக்ஷணங்கள்- எல்லாக் குழந்தைகளும்நன்றாகச் சாப்பிடவேண்டும்- அது தான் அம்மம்மாவின் முதல் குறிக்கோள்..
விக்னேஷ் பிறக்கும்போது, குழந்தையை யார் முதலில் வாங்கிக் கொள்வது என்ற போது “ரிஷி பஞ்சமி’ விரதம் முடித்து இருந்ததால், என் அம்மா வாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில், சற்றும் யோசிக்காது, முந்தானையில், குழந்தையை அம்மம்மா வாங்கிக் கொண்டதை நினைக்கும் போது, என் மனது கனக்கிறது.  நான் வசித்த எல்லா இடத்திற்கும் அம்மம்மா வந்திருக்கிறாள். 

கையால், வாயை லேசாக மூடிக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு. “நிஷா எப்போதும் சமத்துதான்” என்று வக்காலத்து வாங்கும் அந்த லாவகமும், Present Generation விட்டல், ஞாநேஸ்வரி வரை அவர் காட்டிய அன்பு, இனிமேல் யாரும் காட்டவே முடியாது.

யாரையும் அவர் குறை சொல்லி நான் பார்த்ததே இல்லை. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த சோகங்கள் பல. பிறப்பிலேயே சில குழந்தைகளை பறி கொடுத்தவர். மேலும், தாத்தப்பாவின்  மரணம் அவரை மிகவும் உலுக்கியதை கண்ணால் கண்டவன் நான். என் மாமனார், திண்டுக்கல் மற்றும் முத்து சித்தப்பாவின் மரணங்கள், அவர் மனதில் ஒரு வெறுமையைத் தோற்றுவித்தது.  இருந்தாலும், குழந்தைகளிடம் புலம்பி, அவர்களையும் வருத்தப் பட வைக்க வேண்டாம் என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்து, ஒரு “சித்தர்” போன்ற வாழ்கை வாழ்ந்தவர்.

நல்ல காலம் சுகந்தா சித்தி மரணத்தின் போது நினைவில்லை. இல்லாவிட்டால், மிகவும் ஒடிந்து போயிருப்பாள்.

இரண்டு பேரைப் பற்றி எழுதாமல் இந்த கட்டுரையை முடிக்கவே முடியாது.

முதலில் அவரது பெண்ணான என் அம்மா, கோகிலா அம்மாள். தன் தாயின் பணிவிடையே முக்கியம் என்று எல்லா சுகங்களையும் தியாகம் செய்து, அம்மம்மாவுடன் கடைசி வரை இருந்தவர்.  அவர் நினைத்திருந்தால், அம்மம்மாவை சென்னை கூட்டிச் சென்று, தன் மகன் வீட்டில் இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படிச் செய்யவில்லை. கும்பகோணத்தில் தான் இருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக கடைசி காலம் வரையிலும் கூடவே இருந்தவர்.  தனக்கே உடம்பு முடியாவிட்டாலும், பெற்ற தாய்க்காக, எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, இரவு பகல் என்று பாராமல் கவனித்துக் கொண்ட கோ.அ என் மனதில் எப்போதுமே உயர்ந்து இருக்கிறாள்.

இரண்டாவது, லக்ஷ்மி என்ற, அம்மம்மாவுக்கு கடைசி நிமிடம் வரை இருந்து கவனித்துகொண்ட மங்கை. ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 7 மணிக்கு வந்து, காலை செல்வாள். ஒவ்வொரு முறையும் பொறுமையாக உணவு ஊட்டி விட்டு, இரவு முழுவதும் அருகிலேயே படுத்துக் கொண்டு, முனகல் சத்தம் வந்தாலும் உடனே எழுந்து, புடவை மாற்றி, முகம் துடைத்து, ஒரு பர்சனல் நர்ஸ் ஆக இருந்தாள்.  அம்மம்மா செய்த அன்ன தானம், கடைசியில் லக்ஷ்மி உருவில் வந்து, சேவை செய்ததோ என்று தோன்றியது.  லக்ஷ்மயிடம் இருந்த “அமானுஷ்ய நெருக்கம்” – லக்ஷ்மி கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்க வைத்தது. இன்று இரவு தாண்டாது என்று 28.1.2018 அன்று மாலை சொல்ல வைத்தது. அதன் படியே நடந்தது.  லக்ஷ்மியிடம் பல கதைகள் இருக்கிறது.  பல நாட்கள் இரவு தன் பெண் “சுகந்தாவுடன்” (சுகந்தா சித்தி) பேசிக்கொண்டிருந்தாள், என்று லக்ஷ்மி  சொன்னதை நிஷா சொன்ன  போது ஆச்சர்யமாக இருந்தது

கடைசியில், காற்றில் கரைந்த உன்னதமான அம்மம்மாவிடம், நான் கையெடுத்து கும்பிட்டு, “எங்களை விழுதாக நிற்க வைத்து, ஆலமரமாக உயர்ந்து நிற்கும் நீங்கள், மறுபடியும் ஒரு விழுதாகப் பிறந்து, நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

3 comments:

Shreyas said...

Do you have any non-commercial TMK? Can you upload it on mediafire or drive?

Unknown said...

It touched our hearts really.
With tears flowing out of the eyes
ராதா

கோவை சுந்தர் said...

Very true...and I also felt the same.