Saturday, 19 January 2019

சிறகு விரித்து பறந்து செல்லத் துடிக்கும் என் கிராமம்- செம்மங்குடி


கு. ராமகிருஷ்ணன் (ராம்கி என்று எனக்கு இன்னொரு பெயர் உண்டு)
தினம்- 19-1-2019

அடுத்த மாதம் செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் என்று கேளிவிப்பட்ட உடனேயே, என் மனது, உடனே என் கிராமத்தைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டும், என்று துடித்தது. எனவே இந்த சிறு கட்டுரை.
செம்மங்குடியைப் பற்றி எழுத தொடங்கியவுடன் எனக்கு ராமாயணத்தில் வால்மீகியின் ஸ்லோகம் ஒன்று ஞாபகம் வருகிறது
अपि स्वर्णमयी लङ्का न मे लक्ष्मण रोचते |
जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ||
இதன் அர்த்தம்:
“லக்ஷ்மணா, எனக்கு இந்த தங்கமயமான ஸ்வர்க்கம் போல இருக்கும் இலங்கை கொஞ்சம் கூட ஆச்சர்யத்தையோ, ஒரு பிடிப்பையோ ஏற்படுத்தவில்லை. என்னுடைய தாயும், தாய் நாடும் சுவர்க்கத்தை விட உயர்ந்ததாக கருதுகிறேன்” என்று .ராமர் சொல்வதுபோல்...
என்னைக் கேட்டால், என் தாயும், செம்மங்குடியும் என்று சொல்லி இருப்பேன்.

செம்மங்குடி சிவன் கோவில் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது இளம் வயதில் நான் சந்தித்த ஏகாம்பரம் குருக்கள் மாமா. எனக்கு பக்தி மார்க்கத்தைக் காண்பித்த முதல் குரு. இவரிடம் இரண்டு விஷயங்கள் எனக்கு மறக்க முடியாது.

நான் போதாயனம் (சூத்ரம்) என்பதால், எனக்கு ஆவணி அவிட்டம் போது பிரம்ம யக்ஞம், ஏகாம்பர மாமா தான் பண்ணி வைப்பார். (என் தாத்தா ஆபஸ்தம்பம் என்பதால்). இன்றும் நான் பிரம்ம யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பது இவரின் ஆசீர்வாதம்தான்

இரண்டாவது, அவர் கோபப்பட்டு தலையில் ஒரு குட்டு வைப்பார்- பாருங்கள். உயிரே போய் விடும். இதுவும் நான் வாங்கியிருக்கிறேன்.

செம்மங்குடியில் ஸ்ரீ.ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீமதி அலமேலு அம்மாள் என்ற ஒரு உன்னதமான தம்பதிகளின் பெண் வயிற்றுப் பேரனான நான், இங்கேயே பிறந்து 10 வது வரை படித்தேன். இவர்கள், எனக்கு சாப்பாடு ஊட்டிய நாட்களை விட, பக்தியை ஊட்டிய நாட்கள் தான் அதிகம். பாட்டி என்னைக் கொஞ்சியதை விட, “வெளுத்ததுதான்” அதிகம். (கடைசி காலத்தில் பாட்டி “உடலை” வண்டியில் ஏற்றிக் கொண்டு, இடுகாடு செலும்போது, “என்னை ஒரு அடி அடிக்க மாட்டாளா” என்று மனது ஏங்கி, அவரது கையப் பிடித்து அழுதேன்)

எல்லோருக்கும் தன இளமைப் பருவம் மறக்க முடியாது.  கடவுள், யாரையாவது,  “நீங்கள் கழித்த வாழ்க்கையில், ஒரு 10 நாட்கள் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன், “எந்த நாட்கள்” வேண்டும்” என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல், பள்ளி நாட்கள்” என்று சொல்லுவோம்

கிராமத்து அனுபவம் சுகம். அதிலும் இளமைக் காலத்தை கிராமத்தில் கழித்து இருந்தால் பரம சுகம்.  நான் சொல்வது, கோடை விடுமுறைக்காக கிராமம் செல்வது இல்லை. அங்கேயே இருந்து, படித்து,  கிராமத்து சூழல்களை அணு அணுவாக ரசித்து வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. அங்கு சண்டை போட்டு பறித்த நெல்லிக்காய், நாவல் பழம், விளையாடிய, கிட்டிப் புல், பம்பரம் போன்ற விளையாட்டுக்கள். போட்ட சண்டைகள், ஏறிய கூரைகள், எந்த வித கவலையும் இல்லாமல் வலம் வந்த பொற்காலம்.

பாத்திரம் எடுத்துக்கொண்து (சுண்டலுக்காக) சகோதரிகளுடன் சென்ற நவராத்திரி கொலு, (ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி, ஹிமகிரி தனயே, கற்பக வல்லி நின்” போன்ற பல பாடல்கள்), நண்பர்களுடன், மணக்கால் அய்யம்பேட்டை சென்று பார்த்த திருட்டு சினிமா போன்ற பல (சாதனைகள்) !!!

நவராத்திரி என்று நினைக்கிறேன். என் வீட்டுப் பெண்களும் சரி, கிராமத்தில் உள்ள மற்ற பெண்களும் சரி. “முத்தாலத்தி” என்று ஒன்று செய்வார்கள். அதாவது ஒரு தட்டில், கலரில் கோலம் போட்டு, அதன் கோட்டில் லேசாக மைதாவினால் தயாரிக்கப்பட்ட கோந்து வைத்து, அதன் மேல் அரிசி, ஜவ்வரிசி வைப்பார்கள்.  அந்தக் கலர் கோலத்திறக்கும், நடுவில் தண்டு போல இருக்கும் இந்த தான்யங்களும், மிகவும் நேர்த்தியாக இருக்கும். என் வேலை, இந்தக் கோலத்தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு, சிவன் கோவில் சென்று, குருக்களிடம் கொடுக்க, அவர் நடுவில் சூடம் ஏற்றி, அம்பாளிடம், காண்மித்து விட்டு, வீபூதி, குங்குமம் கொடுத்து அனுப்புவார்.  அதை நான் திருப்பி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தவுடன், அந்த முத்தாலத்தி அழிக்கப்படும், மறு நாள், புதுக் கோலம், புது முத்தாலத்தி.
என் வீட்டில் இருக்கும் பெண்கள் போடும் முத்தாலத்தி தான் மிகச் சிறந்தது என்று நான், மற்ற வீட்டு நண்பர்களுடன், “அடி தடியில்” இறங்கி இருக்கிறேன்.

பெருமாள் கோவிலில் அவ்வப்போது நடைபெறும், கோபால வாஜபேயாஜி மற்றும்  சேங்காலிபுரம் என்ற பக்கத்து கிராமத்திலில் இருந்த இங்கு வந்து உபன்யாசம் செய்த அனந்த ராம தீஷிதர் மற்றும் பெரிய பண்டிதர்கள் என் பக்தி மார்கத்திற்கு “ராஜ பாட்டை” போட்டுக் கொடுத்தவர்கள்.  பெருமாள் கோவிலில் நான் கேட்ட ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ மத் பாகவதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.

நான் 1௦ வது படிக்கும் வரை, ரயில் வண்டியில் பயணித்ததே இல்லை.  அதற்காக நான் இன்று வரை வருத்தப் படவும் இல்லை.   செம்மங்குடி போல ஒரு கிராமத்தில் இருந்திருந்தால், நீங்களும் வருத்தப் பட்டிருக்க மாட்டீர்கள்.  10 வது முழுப் பரீட்சையில், English Grammar, கேள்வித் தாளில், 3 tier, 2 tier என்ற கேள்விக்கு, பதில் தெரியாமல் முழித்து,  tyre க்கும் tier க்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்த சந்தோஷ நாட்கள் அவை.

நல்ல சாப்பாடு என்பது சில நாட்கள்:

அண்ணா அபிஷேகம் அன்று சிவன் கோவிலில் (ஹெட் மாஸ்டர் மண்டகப்படி) பிராகரத்தில் இல்லை போட்டு, பரிமாறப்படும், சுண்டல், சரக்கரைப் பொங்கல் மற்றும் இதர வகையறாக்கள்.

சபரி மலைக்குப் மாலை போட்டுக் கொண்டு, கோபால் சார் (செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின் புதல்வர்), வீட்டில் நடக்கும் ஐயப்ப பஜனை, தொடர்ந்து பல பதார்தங்களுடன் சாப்பாடு,

ஆவணி அவிட்டம் வந்தால் எனக்கு “பயங்கர ஜாலியாக” இருக்கும். ஏனெனில், சிவன் கோவில் குளத்தில் இரு முறை குளிக்கலாம். குளத்தில் குளிப்பது என்பது நீங்கள் நினைப்பது போல் கிடையாது, எத்தனை உயரத்தில் இருந்து, எத்தனை குட்டி கரணம் அடித்து குளத்தில் விழுவது என்பது தான் உசத்தி. எங்கள் உலகமே அது தான். அதன் பிறகு வீட்டுக்கு வந்து கிடைக்கும் வடை பாயச சாப்பாடு.

மகர சங்கராந்தி போன்ற நாட்களில் கிடைக்கும், வடை பாயச சாப்பாடு. குறிப்பாக கச்சட்டியில், சுட சுட சுண்ட வைத்து, ஒரு வாரம் 
கழித்து கூட அருமையாக இருக்கும் “எரிச்ச கறி.”

வெள்ளிக்கிழமை, என் பாட்டியின், ஆனந்தவல்லி அம்பாளுக்காக செய்யும், கொஞ்சம் பாயசம். எப்போவாவது செய்யும், ஆஞ்சநேயர் வடை.

தீபாவளி என்றால், ஒரு மாதம் முன்பிருந்தே எங்களுக்கு கனவுதான்.

ஆடி பதினெட்டு- விதம் விதமான சாதங்கள் . அப்போது ஆற்றங்கரையில் எங்களுக்கு சிறப்புக் குளியல். குளியல் என்றால், வளைந்து ஆற்றின் மேல் நிற்கும் மரத்தின் மீது ஏறி, “தொபுக்கடீர்” என்று குதிக்க வேண்டும்.

சப்பரம் கட்டி (சப்பரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்,--- தெரியாமல் இருப்பதே நல்லது) அந்தத் “தேரை” உருட்டிக் கொண்டு போய், ஆற்றங்கரையில் வைத்து அழகு பார்ப்போம்.- அதில் உள்ள சந்தோஷம் தனி.

“வந்துத் தொலைடா, ராம்கி, ரொம்ப  குளிக்காதேடா, குதிக்காதேடா, சனியனே !!! ஜலதோஷம் பிடிக்கும், இரு இரு அப்பாவிடம் சொல்றேன்.” – போன்ற பல சம்பாஷனைகளை இப்போது நினைத்தாலும், நெஞ்சு நெகிழ்கிறது.

மார்கழி மாதத்தில், விடியற்காலை, ஆசாரி விஸ்வநாதன் மற்றும் சைவ அன்பர்களின் “தோடுடைய செவியன்” என்று வாசலில், தேவாரம் பாடிக்கொண்டு” பெருமாள் கோவிலில் இருந்து விடியற்காலை 5 மணிக்கே (சே, பாட்டை போட்டான்டா, தூங்கவிடாமல் !!! என்று திட்டிக்கொண்டே, போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கும் அந்த மார்கழி விடியற்காலை- மகோன்னதம்) ஒலிக்கும் (Gramaphone record ல் இருந்து), சூலமங்கலம் சகோதரிகளின், சியாமளா தண்டகம், அனந்த ராம தீட்சிதர் அவர்களின், ஆனந்த லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம். T M சௌந்தரராஜனின், “திருப்பதி மலை வாசா” மற்றும் முருகன் பாடல்கள். என் இசை ஞானத்திற்கு வித்திட்ட அருமையான நாட்கள் அவை. மார்கழி மாதத்தின் கடைசி நாளில், சினிமா பாட்டு போடுவார்கள்- பாருங்கள்.. அதற்காக நாங்கள் “முழு மார்கழியின்” “ஸ்ரமங்களைப்” பொறுத்துக் கொள்வோம்.

எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது.  மகா பெரியவா ஒரு தடவை செம்மங்குடி விஜயம் செய்யும் போது, அம்மை போட்டு விட்டதால், 2 மாதம் "பெரிய மாடி" மாமாவாத்தில் தங்கிஇருந்தாராம்.  அப்போதுதான், மகமாயி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யச் சொன்னாராம்.  (என் அம்மா சொன்ன செய்தி).

எங்கள் தெருவில் சுமார்  100 வீடுகள் இருந்தது என்றால், அதில் குறிப்பிடும் படியாக சொல்வது

ஹெட் மாஸ்டர் வீடு

கரஸ்பாண்டன்ட் வீடு (Correspondent house),  சீனி மாமா என்று மிகவும் மரியாதையாக அழைக்கப்பட்டவர். என் தாத்தா மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தவர். நான் வசித்த செம்மங்குடி நாட்களில், இவர் வீட்டுக்கு, மற்றும் ஹெட் மாஸ்டர் வீடு, மற்றும் பட்டாமணியார் வீட்டுக்குப் போவதற்கே பயப்படுவேன்/வோம்.

எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்த, சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் வீடு (பாட்டுக்கார அய்யா)

என்னால் மறக்க முடியாத செம்மங்குடி மாந்தர்கள்:

எனக்கு, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்த, சம்ஸ்க்ருத பண்டிதர், தேதியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்.

நான் எப்போதும் "மோர்" வாங்க பருத்தியூர் பருத்தியூர் ராமமுர்த்தி அய்யர் ஆத்துக்குப் போகும்போது,  குடிக்க ஏதாவது கொடுத்த, மாமி. அது போல் ஒரு அழகான முகத்தை நான் இன்று வரை பார்க்க வில்லை

"வாடா குழந்தை" என்று வாய் நிறைய கூப்பிடும் ஜெயா மாமி.

அப்புவாத்து மாமா, மாமி

ஐயங்கார் மாமா, எனக்கு பெருமாள் பக்தியை உண்டு பண்ணியவர். எத்தனை முறை கோவிலில் பிரகாரத்தில் ஓடி ஓடி, விளையாடி இருப்பேன். எத்தனை முறை கோவில் மணி அடித்திருப்பேன். ?!

சிவன் கோவில் குருக்களும் அவர் ஆனந்தவல்லிக்கு செய்யும் அழகான அலங்காரமும்.

கணக்குப்பிள்ளை- எதிர் வீடு. அவர் வீட்டில் யாரும் எங்கள் கூட பேசமாட்டார்கள். ஏன் என்று இன்று வரை தெரியவில்லை

மில் காராத்து ஜெயராமன்- எப்படி மறக்கமுடியும். கர்லா கட்டையை சுற்றிக் கொண்டு, எங்கள் "Mr. செம்மங்குடியாக்கும்". ஜெயராமன் என்ற "கண்ணனை" மிகவும் நேசித்த ராதை. நான் கன்னித் தீவின் மீது காதல் கொண்டதே, ஜெயராமன் ஆத்துக்கு தினம் வரும் "தினத் தந்தி" பார்த்துதான் !!

"மகாதேவா" என்று எப்போதும் சொல்லிக்கொண்டு, இந்த வார்த்தையை என் மனதில் ஆழமாக பதித்த, post master mama.  அவர்களுடைய குமாரர்களும், நான் மிகவும் மரியாதை வைத்து இருக்கும், கோபாலக்ருஷ்ணன், ராமமூர்த்தி.

நான் மிகவும் மரியாதை வைத்திருந்த/க்கும்  Head master மாமா

வெங்குட்டு (அய்யா சாமி அவர்களது மகன்)  பக்கத்துக்கு வீட்டுக்கு வரும்போது என்னையும் கூப்பிட்டு, அவனுடன் உட்கார வைத்து தோசை போடும் மங்களாம்பா மாமி.

ஒரு தடவை ஒளிந்து பிடித்து விளையாடுகிறேன் என்று "சொக்கபானை" உள்ளே ஒளிந்து கொள்ள, என் "உயிரை" காப்பாற்றிய மகாலிங்க மாமா

எனக்கு கல்வி போதித்த செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியில் பணி புரிந்த, என் ஆசான்கள்:

பாடம் எடுத்ததை விட, நோட்ஸ் கொடுத்தே கையை ஓடித்த கோபால் சார்

டியூஷன் சொல்லிக்கொடுத்த ஐயங்கார் சார். அவர் வீட்டுக்கு தினமும் காலை 7 மணிக்கு போய் விடுவேன்.

எல்லோரும், கிண்டலும் கேலியும் பண்ணினாலும், sincere ஆக பாடம் நடத்திய பி. எஸ் சார்

எல்லா பாடங்களும் எடுத்தாலும், அருமையான கதைகள் சொன்ன திருமலை சார்

கந்தக அமிலம், கந்தச அமிலம் என்பதற்கு, எனக்கு இன்று வரை வித்தியாசம் தெரியா விட்டாலும்,  தன்னுடைய சன்னமான குரலில், கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த லா லா சார்.

இங்க்லீஷ் பாடம் எடுத்த, என் குடும்பத்தில் இருந்து படித்த அத்தனை பேருக்கும் பிடித்த V G சார்

முத்து முத்தாக எழுதி, கணக்கை மிகவும் சுலபமாக சொல்லிக் கொடுத்த கே.என் சார்.  Sin theettaa, Cos theetta போன்ற சாதுர்யமான கணக்குகள்,  இவரிடமிருந்து, எளிமையாக பிரவாஹமாக வரும்.  "தீட்டா" என்று எழுதி அதன் பிறகு ஒரு  ? குறியை போட்டு, நக்கலாக சிரிப்பார்.  பெண்கள் வெட்கித் தலை குனிந்து கொள்வார்கள்

தமிழில் வல்லவர் என் பெரியப்பா சேங்காளிபுரம் - எஸ் எஸ். பி சார்

சேங்காளிபுரம் பிச்சை சார்

ஒரு Science டீச்சர் இருந்தார். அவரி பரீட்சைக்கு முதல் நாள், கேள்வி தாளை வேகமாகப் படிதுவிடுவார்.  (அவுட் பண்ணி விடுவார்).  அந்தக் கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு. படித்து, நிறைய மார்க் வாங்க வேண்டும்  (அப்படியும், நான் தேற வில்லை என்பது வேறு விஷயம்)

தமிழ் இலக்கணத்தின், எழுவாய், பயனிலை, செயப்படு பொருள், என்பதை மக்கு மாணவர்களிடம்,  எழுவாய் (எழுந்திரு), பயனிலை (நீ பிரயோஜனமில்லை), செயப்படு பொருள் (செய்ய வேண்டிய காரியத்தை பார்- வெளியில் போ- என்று அழகாக சொல்லி வெளியில் அனுப்பிய - தமிழ் ஆசிரியர். 

இவர்களிடம் நான் கற்றுக் கொண்டதை விட, அடி வாங்கியது அதிகம்.  ஆனால என் வாழ்கையின், ஒவ்வொரு (முன்னேற்ற) அடியிலும், இவர்களது, “அடி.”, படியாக நின்று என்னை ஏற்றி விட்டு இருக்கிறது.

எல்லா ஓட்டப் போட்டியிலும் first வந்த மரிய ஜோசப் விக்டர் பிரட்ரிக், என்னை எப்போதும் பாட்டில், ஜெயித்த,  எதிர் வீட்டு பத்மா போன்ற பலர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.
நான் முடிப்பதற்கு முன்பு, நான் இன்றும் நினைவில் வைத்து இருக்கும், 

முருகன் (ம்) பாட்டி.

இவர் முருகனுக்கு நேவைத்யம் செய்து கொடுக்குக்கும் ஞானப் பால் குடித்த, பல “செம்மங்குடி திருஞான சம்பந்தர்களில்” நானும் ஒருவன். என்னுடைய பேனா, பென்சிலை முருகன் பாதத்தில் உருட்டி, என்னிடம் திருப்பி கொடுப்பார்.  அவருடைய முருகன் மற்றும் ஆஞ்சநேய ஸ்லோகங்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறது. 

நான்  பள்ளியில் வாங்கிய மதிப்பெண்களில், முருகன் பாட்டியின் பங்கு மிக அதிகம்.

என் உயிரின் உயிராய் கலந்த, என் சித்திகள், ஸ்ரீtமதி கோமதி, எப்போதும் பலாப்பழத்தை தூக்க முடியாமல் தூக்கி வரும் என் மைதிலி சித்தி.  நான் லூட்டி அடித்ததற்கு உறு துணையாக இருந்த சசி. வேலைக்காரர்கள், கந்தப்பூ, உத்திராபதி  மற்றும் பலர்.

செம்மங்குடி அப்பா அம்மா இருவரின் முழு வடிவமாக இன்றும், செம்மங்குடி குடும்பத்திற்கே வழி காட்டியாக இருக்கும், என் பெரியம்மா மற்றும் என் ஆருயிர் அம்மா.

5 பெண்களைப் பெற்று, மானம் அவமானம், கிராமத்திற்க்கே உண்டான கேலிப் பேச்சு,  (பெண்ணை பெத்தியோன்னோ, கல்யாணத்திற்கு சேத்து வைக்கத் தெரியவேண்டாமா சாஸ்திரிகளே?) பெண் கல்யாணத்திற்காக ஆருயிராய்  வைத்து இருந்த நிலத்தை அடகு வைத்து  கல்யாணத்தை நடத்திய, தனக்கென்று ஒரு கல்கண்டுக்கு கூட ஆசைப்படாமல்,  சிவ பூஜை ஒன்றையே நம்பி ஒரு பெரிய குடுமபத்தை கரையேற்றிய, நான் அப்பா என்று வாய் நிறைய கூப்பிட்ட, என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், அவரின் நிழலாய் இருந்து, கடைசி காலம் வரை கணவர், குழந்தைகளுக்காகவே வாழ்ந்த அவர் பத்னி, எனாக்கு எப்போதும் அம்மாவான, பாட்டி ஸ்ரீமதி. அலமேலு அம்மாள். 

கடைசியில் இவர்கள் இருவரையும், கடைசி காலம் வரையிலும் ராஜ வாழ்க்கை வாழ வைத்து, சிவ சாயுஜ்ய பதவி அடைய வைத்த, சஷ்டி அப்த பூர்த்தி காண இருக்கும், என் மாமா மற்றும் மாமி.

இவர்களை நான் எப்படி மறக்க முடியும்

என் செம்மங்குடி நண்பர்கள், பக்கத்தாத்து நாகராஜன், இந்தப் பக்க வெங்குட்டு, பிச்சை சார் பையன் சுந்தரராமன் மற்றும் மில் காராத்து கணேஷ், என் தாத்தாவின் "வைதீகத் தொழிலை" சற்று அவதூறாகப் பேசி, நான் குளத்தில் முக்கிய வாசு. மற்றும் பெயர் தெரியாதவர்கள், 

Girls என்று 4 அடி தள்ளியே நடக்கும், என்றும் மறக்கமுடியாத கோபால் சார் அவர்களது பெண்கள், P.T சார் ஆத்துப் பெண் மற்றும் பலர்.  இன்றும் இவர்களோடு தொடர்பில் இருப்பது நான் செய்த புண்ணியம்.

கடைசியாக, எனக்கு பக்தி என்ற பதத்தின் அர்த்தத்தை விளக்கிய, ஸ்ரீ தேவி பூ தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலும், (இன்றும், இந்தக் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை மானசீகமாக வணங்காமல் நான் ஒரு நாளும் வெளியே கிளம்புவது இல்லை) ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோவிலும், (நான் தினமும் செய்யும் "சால்யான்னம்" நேவைத்யத்தில், முதலில் சொல்வது இவரைத்தான்) பெரிய பள்ளிக் கூடத்திற்கு அருகில் உள்ள மகமாயி கோவிலும், என் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரும்பாயிரம் ஸ்வாமி கோவிலும் இன்று வரை எனக்குத் துணை இருக்கிறார்கள் என்பது சத்தியம்


No comments: