Wednesday 13 May 2020

முக பஞ்ச ஷதியில் கர்ணன்


கர்ணன் பிறப்பு, மகாபாரதத்தில் அவனின் பாத்திரப் படைப்பு ஒரு புறம் இருக்கட்டும்.  மூக பஞ்ச சதியில், மூக கவி, கர்ணனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யம்.  காமாக்ஷியின் பெருமைகளை வாரி வாரிக் கொடுத்த கவி,  கடாக்ஷ சதகத்தில் 5 வது பாடலில். கர்ணனைக் குறிப்பிடுகிறார். பாண்டவர்களையும் குறிப்பிடுகிறார். அந்தப் பாடலின் அர்த்தத்தைப் பார்ப்போம், முடிந்தால் சம்ஸ்கருத்தையும் பார்ப்போம்

கடைக்கண் பார்வையை மட்டும் வைத்து 100 ஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார். காஞ்சி மகான் அடிக்கடி மேற் கோள் காட்டும் அற்புதமான புத்தகம் இது.

1944 ல், காஞ்சீபுரம் காமாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூக பஞ்ச சதி, புத்தகம் ஒன்று வெளிவந்து, அது என் கைக்குக் கிடத்தது. அதிலிருந்து. இந்த பதத்துக்கு விளக்கம்:

“காமாக்ஷியே ! அடிக்கடி வெண்ணிறமுடைய புன்முறுவலின் உதவியைப் பெற்றதாகினும், பயங்கர மூர்த்தியாகிய பரமசிவனின் மனத்தைக் களிப்பிப்ப்பதும் ஆகிய உம்முடைய கடைக்கண் ஒளியானது, அடிக்கடி புன் முறுவலை உடைய அர்ஜுனனின் உதவியைப் பெற்றதாகியும், பீமசேனனுடைய மனதை களிப்பிப்பதுமாகியுள்ள பாண்டவர்களின் சேனையைப் போன்றதாகியும் இருந்த அது .. “ஐயோ, கர்ணனுடைய பக்கத்திலே போய்ச் சேர்வதைப் போல், காதுகளின் அருகே செல்கின்றதே ?!!”  என்ற அர்த்தத்துடன் அமைந்து இருக்கிறது.

தேவியின் கண்கள் காது வரை நீண்டு இருக்கிறது. கடைக்கண்ணோக்குகள் காதுகளின் பக்கமாகச் செல்கின்றன என்று கூறி, கர்ணனின் பக்கம் சேர்ந்து கொண்டு விட்டாயே = என்று சிலேடையும், ஆச்சர்யமும் வருத்தமும் தோன்றக் கூறுகிறார்.
இப்படி ஒரு “Comparison” நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. அபாரம். அம்பாளின் அருள் பெற்றால் எது தான் சாத்தியமாகாது  ??

வைத்ய ஸ்ரீ S.V.ராதா கிருஷ்ண சாஸ்த்ரிகள் தான் எழுதிய முக பஞ்ச ஷதி பாஷ்யத்தில், இப்படிக் கொண்டாடுகிறார்

உன் கடாக்ஷத்தின் அழகாகிய லக்ஷ்மீ, புன்சிரிப்பாகிற அர்ஜுனனுக்கு உதவுவதாக, பீமனாகிற சிவனின் மனத்தை மகிழ்விப்பதாக, பாண்டவரின் சேனை போல், கர்ணனாகிய காதின் அருகே செல்கிறது.
அர்ஜுனன் பீமன் கர்ணன் என்பவை இரு பொருள் உள்ள சொற்கள். புன் சிரிப்பு வெள்ளை, அர்ஜுனனும் வெள்ளை.  பீமன்-பீமசேனனும் சிவ பெருமானும். பீம சங்கரர் என்ற ஜோதிர் லிங்கம் புகழ் பெற்றது. பதினொரு ருத்ரர்களில் ஒருவர் பீமர். கர்ணன் குந்தியின் பிள்ளையாக இருந்தும், பாண்டவர்களின் விரோதி.  பண்டவ சேனை, கர்ணனை வெல்ல, அவன் அருகே செல்கிறது. கடாக்ஷம் காதின் அருகே செல்கிறது. பாண்டவர் சேனை போன்று தேவியின் கடாக்ஷ அழகு
பாண்டவர் சேனை, அர்ஜுனனுக்கு உதவ, பீமனை மகிழ்விக்க, கர்ணனை நோக்கி செலவது போல், தேவியின் கடாக்ஷ அழகு, வெண்ணிறமுள்ள புன் சிரிப்புக்கு உதவ, சிவனின் மனம் குளிர, காதின் அருகே செல்கிறது.

“......காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீணா..” என்கிறார், முக கவி.
கவிகளின் உலகம், எல்லையற்ற சுகம்.



No comments: