Thursday, 21 May 2020

நான் புரிந்து கொண்ட இராமாயணம்- 2 - தாடகை வதம்


இராமாயணத்தில் 2 சம்பவங்கள், சரியா, தவறா என்ற சர்ச்சைக்குள் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றன. அன்று ஸ்ரீ.கி.வா.ஜெகந்நாதன் முதற்கொண்டு, எம்பார், கீரன், சேங்காலிபுரம் தீக்ஷிதர் பரம்பரையச் சேர்ந்தவர்கள் முதற்கொண்டு இன்று இலங்கை ஜெயராஜ் வரை இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்

.“மெகா டிவி” போன்ற சில டிவி க்களில், கம்ப ரசம் என்ற பெயரில், இலங்கை ஜெயராஜ் அல்லது கற்றுத் தேர்ந்த பலர் ராமாயண காவியத்தை இன்றும் அலசுகிறார்கள்.

சந்தேஹமே இல்லாமல் கம்பனின் இராமாயண காவியம் மிக அழகு. அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், அந்த எழுத்தின் வீர்யம் புரியும். ஆச்சர்யமாக இருக்கும் அதன் உள்ளர்த்தம்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று தாடகை வதம், மற்றொன்று, வாலி வதம்.

தாடகை என்ற பெண்ணைக் கொல்லலாமா ?  என்ற ஒரு வாதம். தாடகை பெண் அல்ல அரக்கி, ராக்ஷஷி என்று கூறினால், (எங்கள் வீட்டிலும் தான் ராக்ஷஷி இருக்கிறாள் அவள் பெண் இல்லையா என்று, “திருப்பி போட்டு வாங்கும்” அதிரடி சர்ச்சைகள் !!! ), அது தவறு, முனிவர்களுக்கு யாக சாலையில் இன்னல் விளைவித்த அரக்கியை “போட்டுத் தள்ளுவது” தான் நீதி என்று இன்னொரு சாரார்- - வாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

வாலி வதமும் அப்படித்தான். மறைந்திருந்து “பார்க்கலாம்” (அதில் மர்மம் இல்லை). ஆனால். மறைந்திருந்து கொல்வது தவறு. என்று ஒரு சாரார். எதிரணியில் ராமன் செய்தது சரிதான் என்று பேசும் தேர்ந்த பேச்சாளர்கள்

இப்போது தாடகை கதைக்கு வருவோம். விஸ்வாமித்ரர், ராம லஷ்மணரகளை அழைத்துக்கொண்டு கானகம் செல்கிறார்.  இதில் ஒரு ஸ்வாரச்யமான விஷயம் ஒன்று உண்டு.  விஸ்வாமித்ரர் ராமனை மட்டும் தான் கேட்டார். ஆனால் தசரதன் லக்ஷ்மணனையும் சேர்ந்து அனுப்புகிறான். அதனால், ராமன், லக்ஷ்மணனை ஒரு அம்பு விடக் கூட பணிக்கவில்லை. எல்லா அரக்கக் கூட்டத்தையும் ராமன் ஒருவனே கொன்றான். தாடகை உட்பட. (ராமானந்த சாகர்-ராமாயணம் பார்த்து குழப்பம் அடைய வேண்டாம்)  பின்னால் லக்ஷ்மணன், இந்திரஜீத் போன்ற பல அரக்கர்களைக் கொல்லப் போகிறான். ஆனால், இங்கு விஸ்வாமித்ரர் கேட்டதை, ராமன் கொடுத்தான்.  (ராமன் ரோஷக்காரன். லக்ஷமணனை கேட்காதபோது என்னத்துக்கு ல்க்ஷமணனுக்கு வேலை கொடுக்க வேண்டும் ? - delegation of authority)

மாதரையும், தூதரையும் கொல்வது க்ஷத்ரிய தர்மம் அல்ல என்று ராமன் வாதம் செய்கிறான். நாளை என் மேல் பழிச் சொல் வந்துவிடும் என்று கவனமாக இருக்கிறான்

கம்பனுக்கு, இப்போது ஒரு சிக்கல் வருகிறது, படிப்பவருக்கு, தாடகை ஒரு பெண்ணே அல்ல, கொடூரமான அரக்கி என்ற எண்ணமும், அவள் மேல் வெறுப்பும் வர வேண்டும். அதனால் அவன் வார்த்தைகளை கவனமாகக் கையாளுகிறான்

இப்படிச் சொல்கிறான்

தாடகை நடந்து வருகிறாள். அவள் கால்களில் உள்ள சிலம்பில், மலையைப் பெயர்த்து அதை மணிகள் போல் சிலம்பில் கோத்துக் கொண்டு வருகிறாள். (அப்படி என்றால் எவ்வளவு பெரிய கால், எ.பெ. சிலம்பு !!!) அவள் எப்படி இருப்பாள் என்று நமது கற்பனைக்கு விடுகிறார்.

அவள் தரையை மிதித்து நடக்கிறாள். அவள் நடக்கும் போது பள்ளம் விழுகிறது. அந்தப் பள்ளத்தின் ஆழத்தில் கடல் தண்ணீர் வந்து நிறைந்து கொள்கிறது. (வேலை சலம் புக) (வேலை என்றால் கடல் தண்ணீர்)  கடல் தண்ணீர் காட்டுக்குள் வந்து. தாடகையின் பாதப் பள்ளத்தில் வந்து நிரம்புகிறது என்றால், எவ்வளவு பள்ளமாக இருக்க வேண்டும் ??

அவள் வரும்போது, எமன் கூட எதாவது ஒரு குகைக்கும் ஓடி ஒளிந்து கொள்வானாம்.  தாடகையின் கண்கள் அனல் கக்குமாம். பார்க்க முடியாதாம்.

அவள் நடந்து வரும்போது, அவள் பின்னால் மலைகள் எல்லாம் பெயர்ந்து உருண்டு வருமாம். (நிலக் கிரிகள் பின் தொடர) அவ்வளவு force.  (நம்மூரில், பஸ், ரயில் வண்டி வேகமாகப் போனால், பின்னே குப்பைகள் பறந்து வண்டியின் பின்னால் போவது போல்)

இப்படி ஒரு உருவத்தைக் கற்பனை செய்து பார்த்து, அவளை பெண் என்று சொல்ல யாருக்காவது தைர்யம் வருமா ??

இப்படி ஒரு உருவத்தை வர்ணிப்பதன் மூலம். விஸ்வாமித்ரர்- “இவள் பெண் போல் இருந்தாலும், பெண்களின் ஒரு லக்ஷணம் கூட இல்லாதவள். அதனால் நீ இவளை தாராளமாகக் கொல்லலாம்” என்கிறார்.

பின் நடந்த கதை தான் நமக்குத் தெரியுமே

No comments: