Wednesday 5 July 2017

.....சங்கரா ஆர் கொலோ சதுரர்.....

இந்த வாசகம் தேவாரம், திருவாசகம் போன்ற திருமறைகளைக் கேட்டவர்களுக்கு, படித்தவர்களுக்கு - அறிந்து கொள்ள முடியும்.

இதை முதலில் படிக்கும்போது, ஏதோ சிவபெருமான் கொலை செய்ய வருவது போலத் தோன்றும்,  மிக அருமையான ஒரு விளக்கத்தை மாணிக்கவாசகப் பெருமான் நமக்குச் சொல்ல வருகிறார்.

எனக்கு இந்த வார்த்தை ஏனோ பிடித்துப் போனது.  அதைப் பற்றி நாலு வரிகள் என் “BLOG”  எழுத நினைத்ததின் விளைவுதான் இது.
மாணிக்கவாசகர் சொல்கிறார்,

அல்பமான என்னை நீ எடுத்துக் கொண்டாய். ஆனந்த வடிவான உன்னை எனக்கு தந்து விட்டாய்”

“இதில் யார் கெட்டிக்காரர்” – “சங்கரா நீயே சொல்” – என்கிறார்.

இந்து மதம் என்பது தான் மனிதனை தெய்வமாகப் பார்க்கும் மதம் என்பது கீரன் ஒரு சொற்பொழிவில், சொல்லி இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறது.  அவர் சொல்லும்போது,

“மனிதனை மனிதனாகப் பார்க்கச் சொல்லும் “கார்ல் மார்க்ஸ்” காலத்திற்கு முன்பே மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தால் போதாது, மனிதனை தெய்வமாகப் பார்க்கச் சொல்லும் மதம் இந்து மதம்”

இதையே அபிராமி பட்டர், தன்னுடைய, அபிராமி அந்தாதியில், “ஆனந்தமுமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்” என்கிறார்.

நிறைகுடமாய் இருப்பவர்கள், கடவுளை உள்ளே கண்டவர்கள், ஆனந்தமாக இருப்பார்கள் என்பது திண்ணம். 

ராமகிருஷ்ண பரமஹம்சர், காளி கோவிலில், பைத்தியம் பிடித்தார் போல் நடந்து கொண்டது,  “வெட்ட வெளி தன்னில், மெய் என்று, இருப்போர்க்கு, பட்டயம் எதுக்கடி, குதம்பாய்” என்று பாடிய குதம்பை சித்தர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்.- பல மகான்கள் வாழ்ந்த பூமி இது.
மனிதராய் பிறந்த மாணிக்கவாசகர், தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு, திருப்பெருந்துறையில், உற்சவ மூர்த்தியாக திகழ்கிறார்.

சித்சபேசனாக இருக்கும், சிதம்பரத்தில், மார்கழி மாத திருவாதிரை திருநாளில், சிவன் சந்நிதியில், மாணிக்கவாசகர் எழுந்து அருளுவார். திருவெம்பாவை பாடி, ஒரே நேரத்தில், சிவனுக்கும், மாணிக்கவாசகர்க்கும், தீபாராதனை நடை பெறும்.  கண் கொள்ளா காக்ஷி அது.

விரும்பிய உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது, தேனும் புளித்ததே- திருமூலர்

திருமூலர் சொல்கிறார்.  “உடல் முழுவதும், கரும்பும் தேனும் கலந்து, சந்தோஷங்களின் முழுப் பரிமாணம். ஆனால் அவற்றைவிட மேலான இன்பம் ஒன்று இருக்கிறது.  அது சிவ பரம்பொருளாகும். அந்த சுவை வந்துவிட்டால், கரும்பும் கசக்கும், தேனும் புளிக்கும்.”

இது எப்படி சாத்தியம், என்பதற்கு, சம்பந்தப் பெருமான் சொல்கிறார்.

“தெளிந்த சிந்தனையுடன்” இருக்க வேண்டும்.
மாசு மறு நீங்கி இருக்க வேண்டும்

ஆசைகளாலும் தீய குணங்களாலும், அழுக்கடைந்து கலங்காமல் இருக்க வேண்டும்.”
இப்படிச் செய்தால், “தேனுமாய். அமுதாகி நின்றான்” என்று முடிக்கிறார், சம்பந்தர்.

“தேனுமாய், அமுதாகி நின்றான், தெளி சிந்தையுள்” என்று பாடுகிறார்.

இவ்வாறாக. மாணிக்கவாசகப் பெருமான், சொல்லும்போது
என்னுடைய உடலில் குடியிருந்தாய். நானல்லவா பாக்கியசாலி. c இவ்வாறு உன்னை எனக்குத் தந்து கொண்டதற்கு நான் எவ்வாறு உனக்குக் கைம்மாறு செய்யப்போகிறேன்" என்கிறார்.

மணிவாசகப் பெருமான். ஒரு ஒப்பற்ற அருளாளர். அவருடைய திருவாக்கு இந்தப் பூவுலகில் வாழும் எல்லா மக்களின் உள்ளங்களில் இறைவன்பால் எழும் நன்றி உணர்விற்கு இலக்கணமாக அமைகின்றது.

“திருவாசகத்திற்கு உருகாதவர், ஒரு வாசகத்திற்கு உருகார்” – என்று சும்மாவா சொன்னார்கள் !!!!



No comments: