Wednesday 29 June 2022

காலைத் தூக்கி நின்று....

 

ஆனித் திருமஞ்சனம் அடுத்த சில நாட்களில் வர இருக்க, கொஞ்சம் நடராஜர் தியானம்:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

சிதம்பரேசனைப் பற்றிப் பாடிய பல பாடல்கள் அற்புதம். 

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம் என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.

மாரி முத்தாப் பிள்ளையின் இந்தப்  பாடலில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உண்டு: 

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

பிறகு, கண்ணை மூடிக் கொண்டு ஒரு 5 நிமிடம் இந்த இன்ப நிலையை அனுபவிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பல்லவியில், சோமாஸ்கந்தராக முருகனையும் கூப்பிடுகிறார்.

'காலைத் தூக்கி' பட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி

திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

கண்ணை மூடிக்கொண்டு, இந்த வரிகளை கேளுங்கள். உங்களுக்கு சிவனின் உருவம் மனதில் படியும். மேற் சொன்ன வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க

நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று அய்யனும் ஸ்ருதியும் தாளமும் தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.

ஆனால், எனக்கு சஞ்சய் சுப்ரமணியம் ஒரு தரம் இந்தப் பாட்டை பாட, அதில் விழுந்தேன். மகாராஜபுரம் சந்தானத்திற்க்குப் பிறகு, நான் பாடலை கற்றுக் கொண்டேன் என்றால் அது சஞ்சய் பாடிதான்.  அதுவும் யதுகுல காம்போதி. ..ம். தனிச்சுவை. ராமரை, “ஹெச்சரிக்க கா ராமா” என்று கூப்பிட்ட ராகம்.

இந்தப் பாட்டெல்லாம், கோவிலுக்குப் போக முடியாமல், வீட்டில் இருப்பவர்களுக்கு, சிவ சாயுஜ்யம் கிடைப்பதற்காக, இறையருள் பெற்ற, கோபால கிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, பாபநாசம் சிவன், போன்றவர்கள் போட்ட ராஜா பாட்டை.

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-

“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்

அதனை சொன்னேனா.

ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..

தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா

பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா

எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)

சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா

இப்படிப் போகிறது, .....

“நிறைய பேர் கோவிலுக்குப் போயே ஆக வேண்டுமா  ? என்று கேட்கிறார்கள்”

நாவுக்கரசர் திருமறைக்காடு பதிகத்தில் இப்படிப் பாடுகிறார் “விரதமெல்லாம் மாண்ட மனத்தான் மனத்தார் தன்னை”.

அதனால் கோவிலுக்குப் போவது என்பது ஒரு விரதம், மெதுவாக அதிலிருந்து விலகி,

“சும்மா இரு சொல் அற – என்றலுமே

அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே”

என்று கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் பாடுபவதைப் போல்.

இருக்கவேண்டும்

அது எப்படி முடியும்  ?

வீட்டில் உட்கார்ந்து இது போன்ற பாடல்களை கேட்டு, உள் வாங்கி ரசித்தாலே போதும். கோவிலுக்குப் போகவேண்டும் என்ற அவசியமே இல்லை

தியாகராஜ ஸ்வாமி, ராமனை நினைத்துக் கொண்டே அற்புதமான கிருதிகளை, கண்ணீர் மல்க பாடினார். அவர் திருவையாறிலேயே இருக்கும் தர்ம சம்வர்தினி கோவிலுக்குக் கூட எத்தனை முறை சென்றிருப்பார் எனத் தெரியாது.  இவரின் பக்திக்கு ராம பிரான், தன் புடை சூழ அவர் வீட்டுக்கு வந்தார்

ராமாயணத்தில் சபரி எந்த கோவிலுக்குப் போனாள். கீழ் ஜாதியில் பிறந்து, பூ பறித்து கொடுத்து, யாக சாலையை சுற்றி கூட்டி, மெழுகி, மற்ற நேரங்களில் ராம நாமாவைத்தான் சொன்னாள். எது பறித்தாலும், அதை ராமனுக்கே அர்ப்பணம் பண்ணினாள். எல்லா முனிவர்களும் ஒன்றாக, மேலோகம் செல்லும்போது, சபரியை அழைத்துக் கொண்டு போகவில்லை,

கண்ணீர் மல்க கேட்கிறாள். “நான் என்ன பாவம் செய்தேன், என்னை ஏன் அழைத்துக் கொண்டு போக மாட்டீர்கள்” என்று. அதற்க்கு அவர்கள் சொல்கிறார்கள். நாங்களாவது ஸ்வர்கத்தை, அவரின் பாத கமலங்களில் ஐக்கியமாக சென்று கொண்டு இருக்கிறோம். எந்த பாதத்தை நோக்கி நாங்கள் போகிறோமோ, அந்தப் பாதம் உன்னை தேடி வரும்”.

அப்படியே ராம லக்ஷ்மணர்கள், சபாரியை தேடி வருகிறார்கள்.

நான் துபாயில் இருக்கும்போது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், குரு, வெங்கி அண்ணா அவர்களின் தலைமையில் பண்ணுவோம். அந்த ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம். கண்ணை மூடிக் கொண்டு, அம்பாள் பிரார்தனை. அற்புதமான தருணங்கள்.

இது ஒரு சக்ர வியூகம், வெளியே வருவது கஷ்டம். அபிமன்யு க்கு வேறு விதமான முடிவு. நமக்கு வேறு விதமான அனுபவம்.

இப்படியே பகவத் ஸ்மரணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.