Saturday, 18 June 2022

தகப்பன் (குரு) சாமி

 

இன்றைக்கு தகப்பர் தினம்.  (Father’s day).  ஒவ்வொரு ஆணும் ஒரு வகையில் தகப்பனே, அவரு(னு)க்கு திருமணம் ஆனால் தான் என்பது இல்லை ! குழந்தை பிறந்தால் தான் என்பதும் இல்லை.  !!

ஒவ்வொருவரும் தம்மை ஒரு தந்தையாக பாவித்து, இந்த உலகை பார்த்தால், பொறுப்பு உணர்ச்சி தானாகவே வரும். பொறுப்பு என்று வந்து விட்டால் பயம் தானாகவே வரும். பயம் வந்தால், அந்த பயத்தைப் போக்க பக்தியின் உதவியை நாடுவோம். நாம் பக்தியை நோக்கி போக நினைக்கும்போது, ஒரு குரு உடனே நம்மிடம் தோன்றி, வழி நடத்திச் செல்வார்.  குரு நம்மிடம் வந்தவுடன் நாம் கவலை இல்லாமல் நாம் பாட்டுக்கு நம் வழியில் செல்லலாம்.  எப்படி, ஒரு குழந்தை, தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு பெரிய கூட்டதில், போகும்போது, ஏதாவது கவலைப் படுகிறதா ? இல்லை. ! காரணம் அப்பா இருக்கிறார் என்பது தான். அது போலத் தான் குரு இருக்க கவலை இல்லை.

பரமாத்மா ஜீவாத்மா ஒன்று சேருவதற்க்கு காரணம் குரு. ஆன்மீகத்தில் குரு என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஆஞ்சநேய ஸ்வாமி. அவர் தான் ராமன் என்ற பரமாத்வாவையும், சீதை என்ற ஜீவாத்மாவாவையும் இணைக்கிறார். அதனால் தான் ராமாயணத்தில், இந்தப் பகுதியை சுந்தர காண்டம் என்கிறோம்.

ஒரு குரு தகப்பனார் ஆக முடியுமா என்ற கேள்விக்கு, ராமாயணத்தில் அற்புதமாக விளக்கப் பட்டிருக்கிறது

“விஸ்வாமித்ரர். மிதிலைக்குச் சென்று ராமனை அறிமுகப்படுத்துகிறார். அவர் சொல்கிறார்- இக்ஷ்வாகு குலத்திற்க்கு, பெருமை சேர்த்த பல பெயர்களை சொல்லிக் கொண்டு வந்த அவர், புத்திர காமேஷ்டி யாகத்தால் ராமன் பிறந்ததைச் சொன்னார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசாரதனுக்குப் பெயரளவில் மட்டும் தான் புத்திரன், ராமனை வளர்த்த பெருமை அவரின் குரு வசிஷ்டரையே சாரும்” என்று கூறினார்.

அது போல் தான் நம் குருசாமியும்.

என் தகப்பனார் எனக்கும் என் சகோதர்களுக்கும் தகப்பனார் என்பது விட, திருச்சியில் பல இளைஞர்களுக்கு, பல குடும்பங்களுக்கு, பல மாந்தர்களுக்கும் ஒரு சிறந்த குருசாமி என்ற பெயரில் ஒரு சிறந்த தகப்பனாக இன்றும் இருக்கிறார் என்பது தான் பெருமை.

இது அவருக்கு, “சத்யமான பொன்னு பதினெட்டாம் படியில் இன்றும் கலியுக வரதனாய், கண் கண்ட தெய்வமாக இருக்கும் அய்யப்பன்” இட்ட கட்டளை என்று நான் நினைக்கிறேன்.

அதனாலோ என்னவோ, தாயும் தந்தையுமாய், தாயுமானவராய் எழுந்து அருளி, அருள் பாலிக்கும், மாத்ரு பூதேஸ்வரர் என்று நாம் கொண்டாடும், தாயுமானவ ஸ்வாமி இருக்கும் ஊரில் அவர் இருக்கிறார்.  

முத்து ஸ்வாமி தீக்ஷிதர், தாயுமானவர் ஸ்வாமியை பற்றி எழுதிய பாடலில் “தம் அடியார்களின் சந்தோஷத்திற்க்கு காரணமாக இருப்பவர். கருணையுள்ளம் படைத்தவர்” என்று எழுதுகிறார்.

அதே போலத்தான். நம் குருசாமியும். நம்மை சபரி மலைக்கு வழி நடத்துவதில், ஒரு தந்தையாக, ஆன்மீக விஷயங்கள் மட்டுமின்றி, வாழ்வியல் முறைகளிலும், குடும்ப பிரச்னைகளிலும வழி காட்டும், சிறந்த குருவாக. அன்னதானம் செய்வதில், எல்லோருக்கும் சரியான நேரத்தில், மலைப் பாதையிலும் சரி, சன்னிதானதிலும் சரி, மலைக்குப் புறப்படும்போதும் சரி, அய்யப்ப பஜனை முடிந்து உணவு எல்லோருக்கும் கிடைத்ததா, என்று பாசத்தோடு கேட்பதில் ஒரு தாயாக இருப்பது இப்படி. -இது எல்லோராலும் சாத்தியமே இல்லை.

தந்தை என்பவன் வீரனாக இருக்க வேண்டும். ஒரு படையை/குடும்பத்தை வழி நடத்திச் செல்வதில் ஒரு தனித் திறமை வேண்டும். இந்த தந்தை குணம் குருசாமியிடம் இருந்ததை பலர் பார்த்து இருக்கிறோம்.

சபரி மலை, போய் வந்த நம் ஒவ்வொருக்கருக்கும், ஒரு கதை இருக்கும், அந்தக் கதையில், ஏதோ ஒரு வகையில்,  நம் குருசாமி இருப்பார்.

நாம் தாயாக பல பேரை நினைக்கலாம். என் அதுதான் சிறந்த உறவு முறை. பாரத மாதா என்று, அதனால் தான் சொல்கிறோம். ஆனால் தந்தை முறை, எல்லோருக்கும் வராது. இன்னொரு ஆண் மகனை என் தந்தை என்று ஒப்புக்கொள்ள மனம் வராது. ஆனால், நம் குருசாமி, நிறைய பேருக்கு “ஆன்மீக ஒளி” காட்டும் ஒரு ஆசானாக, தந்தையாக, தாயாக இருக்கிறார். இந்தப் பேறு எல்லாருக்கும் கிடப்பதில்லை.

மூக்கில் மேல் விரல் வைத்த அய்யப்பனுக்கே, அம்மை அப்பன் குழப்பம் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யமான கதை. அதையும் கொஞ்சம் கீழே பார்ப்போம்:

ஒரு சமயம் தஞ்சை ஸ்ரீ பிருஹதீஸ்வரர் ஆலய பிரஹ்மோத்சவம் நடைபெற்றது.

விழா முடிந்து அனைத்து வித்வான்கள் அவரவர்கள் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் அரசன் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்களையும், தாதாசார்யார் அவர்களியும் தன்னுடன் சிலகாலம் இருக்கும்படி வேண்டுகிறான். பல க்ஷேத்ரங்களை தர்சித்து வரும்போது மூக்கின் மேல் வலது கை விரலை வைத்துக்கொண்டு யோசனையில் இருப்பதுபோல் விக்ரஹமுடைய ஸ்ரீ ஐயப்பனை ஒரு ஊரில் தர்ஸிக்க நேரிடுகின்றது.

இதை பார்த்து அதிசயித்த ராஜா கேட்டார்: இந்த விக்ரஹம் ஏன் இப்படி யோசிக்கின்ற பாவனையில் உள்ளது?”

அந்த ஊரில் இருக்கும் வயதானவர்களில் சிலர் முன் வந்து பவ்யத்தோடு அரசினிடம் சொன்னது:

அரசனே, இந்த விக்ரஹத்தை வடித்த ஸ்தபதிக்கு ஐயப்ப சாஸ்தா இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பதுபோல் தர்ஸனம் தந்துள்ளார். தமக்கு தர்ஸனம் கிடைத்த அந்த காட்சியின்ப்படியே அந்த ஸ்தபதி மூர்த்தியை வடித்துவிட்டார். பிற்காலத்தில் ஸர்வ சாஸ்திர நிபுணரும், மஹா ஞானியுமான ஒரு மஹான் இங்கு வருவார். அவர் இதன் ரஹஸ்யத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லுவார். அந்த க்ஷணமே ஐய்யப்பனும் மூக்கிலிருந்து விரலை எடுத்து விடுவார்.

 

ராஜா தாதாசார்யாரை நோக்கி இதன் ரஹஸ்யத்தைச் சொல்லமுடியுமா என கேட்க, தனது மனதில் தோன்றிய கருத்தை கீழ்கண்ட ஸ்லோகம் மூலம் தெரிவிக்கிறார்:

 

விஷ்ணோ: ஸுதோஹம் விதிநா ஸமோஹம்
தந்யஸ் - ததோஹம் ஸுரஸேவிதோஹம் |
ததாபி பூதோச ஸுதோஹம் ஏதைர்
பூதைர் - வ்ருதச் சிந்த்யதீஹ சாஸ்தா ​​||

 

பொருள்:

 
மோஹினி ருபமாய் விஷ்ணு இருந்தபோதுதான் நான் பிறந்தேன். ஆதலால் நான் விஷ்ணுவுக்கு மகன். பிரஹ்மாவுக்கு சமானமானவன். நான் மிக சிறந்தவனும்கூட. ஆதலால்தான் தேவர்கள் என்னை வாழ்த்தி போற்றுகின்றார்கள். விஷயம் இப்படி இருக்கும்போது, சுடுகாட்டில் பூத கணங்களால் சூழப்பட்டு வாழ்ந்துவரும் சிவனின் மகன் நான் என்று ஒரு சிலர் என்னை சொல்லுவதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சாஸ்தா நினைக்கின்றார்.

 

இதை கேட்ட ஐயப்பன் மூக்கிலிருந்து விரலை எடுக்கவில்லை. பிம்பம் அப்படியே இருந்தது. எந்த சலனமும் விக்ரஹத்தில் இல்லை.

 

உடனே அரசன் அப்பய்ய  தீக்ஷிதர் அவர்களை வணங்கி இந்த ஹரிஹரபுத்ரனின் கோலத்தின் வாஸ்தவமான அபிப்ராயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பிரார்த்திக்கின்றான்.

 

தீக்ஷிதர்வாளும் தனது அபிப்ராயத்தை ஒரு ஸ்லோகம் மூலம் சமர்ப்பிக்கின்ரார். இதோ அந்த ஸ்லோகம்:


அம்பேதி கெளரீம் அஹம் ஆஹ்வயாமி
பத்ந்ய பிதுர் - மாதர ஏவ ஸர்வா : |
கதம் நு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்த ஸித்த்யை ​​||

 

ஸ்லோகத்தின் அர்த்தம்:

விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் செய்த சமயத்தில் பரமசிவனுக்கு குமாரனாக பிறந்தேன் நான். ஆகையால் கைலாசம் சென்று தந்தையான பரமசிவனை தர்ஸிக்கும்போது பார்வதி தேவியை அம்மா என்று அழைப்பேன். தகப்பனாரின் பத்னிகள் அனைவரும் குழந்தைக்கு அம்மாதானே. ஆனால் வைகுண்டம் செல்லும்போதுதான் குழப்பம் வருகின்றது. அங்கு என் தாயான மஹாலக்ஷ்மியை- விஷ்ணுவின் மனைவியை - நான் என்ன முறை சொல்லி அழைப்பது என்று புரியவில்லை.

 

இம்மாதிரி அர்த்த புஷ்டியுள்ள ஸ்லோகத்தை பக்தியுடன் தீக்ஷிதர் அவர்கள் கூறிய அந்த க்ஷணம் சாஸ்தா தனது வலக்கரத்தின் விரலை மூக்கிலிருந்து விலக்கி விடுகிறார்

ஜீனி கண்ட் – என்ற ஒரு அறிஞர், தந்தையைப் பற்றி இப்படி எழுதுகிறார்

“ஒரு தந்தையின் நம்பிக்கை என்பது அந்தக் குடும்பத்தை வழி நடத்திச் செல்லும், அணையா விளக்கு”

அந்த நம்பிக்கையை சபரி மலை செல்லும் ஒவ்வொரு சாமியிடம் அந்த சாமியை சார்ந்த குடும்பத்திடம், விதைதது தான் ஒரு பெரிய ஆச்சர்யம்.

சபரிமலைக்கு. குருசாமியின் கீழ், சென்ற நம் எல்லோரும் அவர் குழந்தைகள். அவரையும், அவரது நிழலாக அவர் கூடவே இருக்கும் அவரது துணைவியார், என் தாய், அவர்களுக்கும்,  நாம் எல்லோரும் இந்த ஜன்மத்தில் நன்றி சொல்லி அவர் நீடூழி வாழ பிரார்தனை செய்வோம். 

 

No comments: