Sunday 26 June 2022

திருப்பைஞ்சீலி

 

திருச்சியில் மேற் படிப்பு படித்தும், 6 வருடங்கள் இருந்த போதிலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல கோவில்களைப் பார்ததில்லை.  வயதானபிறகு, கொஞ்சம் புத்தி வந்து, ஒரு பிரார்த்தனைக்காக, திருப்பைஞ்சீலி என்ற ஒரு க்ஷேத்ரத்திர்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் பெருமமையைச் சொல்லும்போது “அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே” என்கிறார் திருநாவுக்கரசர்

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இப்பவும் வாழை மரத்தையோ, கன்றையோ கொடுத்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தல விருட்சம் என்போம். மருந்துக்கு ஒரு மரம் இருக்கும்.  இந்த இடம் வளமாக இருந்தது என்போம் ! இப்போது, கட்டிடங்கள், மக்கள், என்று அங்கலாய்ப்போம் !!

ஆனால் இதற்க்கு மாறாக, மண்ணச்ச்நல்லூரில் இருந்து, திருப்பைஞ்சீலி செல்லும் அந்த 1 கிலோமீட்டர் முழுவதும் வாழை மரங்கள் தான். ஒரு 10 தோப்பு பார்த்திருப்பேன். ஒரு 5000 மரங்கள. பச்சை பசேலென்று, குலை தள்ளி எத்தனை மரங்கள். இப்படி ஒரு இயற்க்கை சூழலை, திருச்சிக்கு மிக அருகே எதிர்பார்க்க வில்லை.

தாதாசார்யார் தோட்டமாக இருந்து இப்போது கட்டிடங்களாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்கத்தில் இப்படியும் ஒரு இடம் !!! 

ஸ்தல புராணத்தில், நாவுக்கரசர்,  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரரையும், தாய்மானஸ்வாமியையும், தரிசனம் செய்து விட்டு, நடந்து வர, களைப்பால் பசியெடுத்து, ஒரு மரத்தின் கீழ் அமர, வயோதிக வேடத்தில், சிவ பெருமான், கட்டுச் சோறு, கொண்டு கொடுத்தாராம். அதை சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஞீலீஸ்வரர் கோவிலைப் பற்றி, வினவ, அவரை அழைத்துக் கொண்டு சென்று, ரிஷபரூடராக, ஊமையம்மையுடன் காக்ஷி கொடுத்தாராம்.

இப்பவும் இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, இடது புறத்தில், சிவன், நாவுக்கரசருக்கு, ஒரு மூட்டையில் சாப்பாடு கொடுப்பதுபோல், விக்ரகம், அதன் எதிரில், பெரிய நந்தி தான் ஆச்சர்யம். ஏனெனில் உள்ளே இருக்கும் ஞீலீஸ்வரருக்குக் கூட அவ்வளவு பெரிய நந்தி இல்லை. பக்தனோடு சேர்ந்து இருக்கும் ஸ்வாமிக்கு “ஸ்பெஷல்” நந்தி.

மூன்றாம் திருமுறை- தேவாரத்தில்

“தொத்தின தோள் முடியுடைய வன்றலை பத்தினை நெறித்த பைஞ்சீலி மேவலான்” என்கிறார்.

““கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்” என்று அர்த்தம்.

ராமன் ராவணனை அழிப்பதற்க்கு முன்பு, சிவனும், கொஞ்சம் பயம் காட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில், நாவுக்கரசர், பைஞ்சீலியில், தொண்டு செய்து காலத்தைக் கழித்ததை, எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்:  !!!!

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி

மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து

மெய்ஞ்ஞீலிர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள்பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்   5.1.31

 இதை ஒரு முறை, தவறில்லாமல் பார்த்துப் படித்தாலே, அவருக்கு, சிவபெருமானை விட்டு, இன்னொரு மூட்டை சாப்பாடு கொடுக்கச் சொல்லலாம்  !!!!!

 சிவ பெருமான், நாவுக்கரசரை, கூட்டிக்கொண்டு போய் இந்தக் கோவிலில் சென்று மறைந்து போக, உள்ளம் உருகுகிறார். தன்னுடன் வந்து நீயா ?  என்று

 “அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து, விழுந்து விழுந்து, கண்ணீர் மாரி பயில் வித்தார்” என்கிறார்.

 திருப்பள்ளி எழுச்சியில் – “தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒரு பால்” (பால் என்றால் புறம்) என்கிறார் மணி வாசகப் பெருமான். கடவுளை நேரில் பார்க்காத பக்தனே இப்படி துவளும்போது, கூட இருந்தவர்- அந்த பெருமான் என்று அறிந்த பின் உள்ளம் எவ்வளவு பூரிக்கும் !!!

 என்ன ஒரு அற்புதமான் தமிழ். அந்தக் காலத்தில் எப்படி தமிழின் மூலம் இறையை அனுபவித்து இருக்கிறார்கள் ?

 விசாலாக்ஷி தாயார் சன்னதி தனியே இருக்கிறது. இதிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு. இங்கே  நீல நெடுங் கண் நாயகி என்ற பெயரிலும் ஒரு அம்பாள் விக்ரஹம் இங்கு உண்டு.  கும்பகோணம் மங்களாம்ம்பாள் மாதிரி கொஞ்சம் பெரிய விக்ரஹமாக இருக்கும்,  விசாலக்ஷி க்குத் தான் அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. நீல.நாயகிக்குக் கிடையாது. ஆனால் த்வஜஸ்தம்பம் நீல. நாயகிக்குத்தான் இருக்கிறது.

இந்த ஆச்சர்யத்தை, அங்கு இருத ஷண்முக குருக்களிடம் கேட்டபோது, அவர் “விசாலக்ஷி” அம்மன் சற்று “பின்னப்பட்டு விட்ட படியால், தோஷ நிவர்த்திக்காக, நீல நெடுங்கண் நாயகியை பிரதிஷ்டை பண்ணினோம்”.  ஆனால் புராதானமாக இருக்கிற அம்பாளைத் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆகமப்படி, பூஜை நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

அடுத்தது, நாம் இந்த்க் கோவிலில் முக்கியமான எமன் சன்னதிக்கு வருவோம். திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்காக எமன் சம்ஹாரம் பண்ணப் பட்ட பிறகு, அழிக்கும் தொழில் ஸ்தம்பித்துப் போக, ப்ரம்மா, விஷ்ணு எல்லோரும் சென்று முறையிட, திருப்பைஞ்சீலி வந்து பல ரிஷிகள், கடும் தவம் புரிய, மனமிரங்கிசிவன், எம தர்மராஜரை உயிர்பித்த இடம் இது.

இது பூமி மட்டத்தின் கீழே இருக்கிறது, குடவரை கோவில் போல். பூமியில் இருந்து உயிர்பித்தார் என்பதை காட்டுவது போலே. சோமாஸ்கந்தர் என்று சொல்வது போல், தாக்ஷயானி யோடு, மிருத்யுஞ்சய மூர்த்தியும் மடியில் முருகனும், கீழே காலுக்கடியில் எமன், - ஸ்வ்யும்பாக தோன்றிய உருவம்.

சட்டென்று, ஸ்வயம்புவாகத் தோன்றியது, என்றால் எனக்கு உடனே ஞாபகம் வருவது, வேதாரண்யத்தில், திருமறைக்காடர் என்று போற்றப்படும் சிவனின்  பின்னால், திருமணக் கோலத்தில், பார்வதி சிவனோடு அற்புதமாகக் காட்சி அளிப்பார். இது அகத்தியருக்காக காண்பிக்கப்பட்ட கல்யாண கோலம். அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி.

இங்கு திருக்கடையூரில் சென்று 60 வது 80 வது கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள், இங்கு செய்து கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு, இப்படி பல பரிகாரங்கள் இந்தக் கோவிலில் செய்து வருகிறார்கள்.

நவக்ரஹத்துக்கு சன்னதி இல்லை, எமன் சனீஸ்வரருக்கு அதிபதி என்பதால். ஆனால் நவக்ரஹம், 9 படிகளாக இருக்கிறது, நாம் இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும்.

 வேறு கோவில்:

கும்பகோணம் செல்லும் வழியில், திருக்கோடீஸ்வரர் என்று ஒரு ஸ்தலமும் உண்டு. அங்கே ஒரு பக்தனுக்கு இரங்கி, சிவன் கட்டளையிட, எமன் இந்தக் கோவிலுக்கு வருபவர்களை எமன் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் -  என்பது.

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஸ்ரீ வாஞ்சியத்திலும் எமனுக்கு ஒரு சன்னதி  உண்டு.

அற்புதமான கோவில், அழகான தரிசனம், அமைதியானது மனசு.

 



No comments: