Monday, 4 July 2022

ஆனந்த நடன பிரகாஸம்.......

 ஆனித் திருமஞ்சனம் - 2

இன்று ஆனித் திருமஞ்சனம், சிதம்பரம் தேர். கொஞ்சம் நடராஜர் பாடல்களை அலசுவோம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றி நிறைய பேர் பாட்டு எழுதி இருக்கிறார்கள்.  எனக்கு என்னவோ மத்த கோவிலை விட, சிதம்பரத்தில் தான் நிறைய பேர் நிறைய பாட்டுகள் எழுதி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தவிர, தேவாரம், நடராஜர் பத்து போன்ற பல.

கோபால கிருஷ்ண பாரதி, மாரி முத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன், பாப விநாச முதலியார் போன்ற பலர்- (நான் தமிழ் பாடல்களை மட்டும் சொல்கிறேன்.)

இவர்கள் மூன்று விதமான ரசனையுடன்” பாடல்களைக் கொடுத்து இருக்கிறார்கள்:

முதல் வகை - ஸ்வாமியின் வர்ணனை மற்றும் அடியார்களின் பெருமை

இரண்டாம் வகை- கேலியும், நையாண்டியுமாக – உரிமையுடன் பாடிய பாடல்கள்.

கொஞ்சம் கடுமையாக- மானிடர்களை,  மிரட்டும் தொனியில..

முதலாவது:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. எல்லா வரிகளின் முடிவில் “தூக்கி என்பதால் கூட இருக்கலாம்”

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

ஆரம்பத்தில் பல்லவியில், “வேலைத்தூக்கும் பிள்ளை, தனைப் பெற்ற தெய்வமே” என்று முருகனையும் கூப்பிடுகிறார்.

காலைத் தூக்கி, பாட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி

திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க

நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று அய்யன் ஸ்ருதியும் தாளமும் தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.

இதே மாதிரி, பாபநாசம் சிவன் பாட்டு ஒன்று இருக்கிறது

முதல் சரணம்

“மானும் மழுவும் பிஞ்சு, மதியும் நதியும் தவழ்

செவ்வானம் நிகர் சடையாட, இள நாகை தழுவும்

மதி முகமும் திரு விழி அழகுமாய் – (ஞான சபை)

இரண்டாவது சரணம்:\

நேமியுடன் முழங்காழி அணி, சாரங்கபாணி மிருதங்கமும்,

நி ச த நி ப ம ரி க ம ரி ஸ்வர நாரதர் வீணையும்.

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

சேரன், சோழன், ஹிரண்யவர்மன் கோபுரமும்

சூர வீரப்பன் செய்த திரு மதில்களும்

பாருலகும் போற்றுகின்ற பஞ்சாக்ஷர படிகளும்,

ஹாரங்கள் சூழ்ந்த திரு ஆயிரங்கால் மண்டபமும்

இன்னும் இரண்டு அற்புத சரணங்கள் உண்டு இந்தப் பாட்டில்

“சேவிக்க வேண்டுமையா” என்ற இன்னொரு ஆந்தோளிகா” ராக கீர்த்தனையில், கடைசி சரணம் இப்படி முடிகிறது.

“நல்ல திருவிழா ஆனித் தேரும், நாடெங்குமே புகழ் நற்கோபுரம் நான்கும்,

தில்லை மூவாயிரவர் வளர் வீதியும், திருமஞ்சனமும், மார்கழி தரிசனமும்”

இன்னொரு இடத்தில், இதே பாடலில் - சிற்றம்பலம் என்னும் பேரம்பலத்தானை” என்கிறார்

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம், சிவகாமி தரிசனம்- என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.

சிதம்பரத்தில் உற்சவ நாள், கிழமையெல்லாம் சரியாகச் சொல்கிறார் கோ.கி.பாரதி.

நாடும் தைப்பூரண பூசத்திலே, தில்லை நாயகனார் குரு வாரத்திலே-மன்றுள் – ஆடிய பாதத்தைக் காணாரே, ஆனந்தம் பூணாரே” என்கிறார் கோ.கி.பாரதி.

இவர்களெல்லாம், தில்லை அம்பலத்தானை அணு அணுவாக ரசித்து இருக்கிறார்கள்.  அந்த இன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், நமக்கும் பாடல்கள் மூலம் வாரி வழங்கி இருக்கிறார்கள். !!

நமக்கு மிகவும் தெரிந்த = “கிருபாநிதி, இவரை போல கிடைக்குமோ” பாடல்

இரண்டாவது

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-

“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்

அதனை சொன்னேனா.

ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..

தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா

பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா

எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)

சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா

இப்படிப் போகிறது, .....

பாப விநாச முதலியாரின், மிகவும் பிரசித்தமான – நடமாடித் திரிந்த+ பாடலில் இப்படி வரியின் அர்த்தம் இப்படிப் போகிறது.

“திருநீறைப் பூசியதால் வாதம் வந்துடுத்தா ?

மார்கண்டேயனுக்காக, யமனை உதைத்ததில், கால் சுளுக்கிண்டுடுத்தா..!

சுந்தரருக்காக, பரவை நாச்சியாருக்காக, தூது நடந்தாயே – அதனாலோ,   . என்று சொல்லிவிட்டு

 

“நான் பண்ணின பாபம், இப்படியெல்லாம் எனக்கு மனக் கஷ்டம் தர வேண்டும் என்று காலை முடமாக்கிக் கொண்டாயோ” – என்கிறார்.

 

மூன்றாவது:

அழியும் இந்த உடலை, மெய் என்று நினைக்காதே. உடம்பை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே” என்று இருக்காமல், உடனே இறைவனை நினைத்துக் கொண்டே இரு.

 

 

பாபநாசம் சிவன் பற்றி கேட்கவே வேண்டாம்.

“வையத்திலே கருப்பையுள் கிடந்துள்ளம், நையப் பிறவாமல்

அய்யன் திரு நடம் காண வேண்டாமோ.

ஓடைச் சடலம் ஒடுங்க் வெற்றுடம்பு, கூட்டினில் இருந்து உயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ”

என்று, கிறு கிறுக்க வைக்கிறார்.

கோபால கிருஷ்ண பாரதி – இப்படிச் சொல்கிறார்:

“கொட்டமடிக்கும் புலந்தொழில் நீக்கி

கோடி காலம் செய்த பாவங்கள் போக்கி

வெட்ட வெளியிலே, நெட்டென தூக்கி,

வேதம் பணிந்திட தென் முகம் நோக்கி (ஆடிய பாதத்தை)

இல்லோரு பாடலில் – இருவினைப் பிணிகளை கருவறுத்திடுகிறேன்-பயப்படாதே !!! (வருவாரோ)

என்கிறார்

இந்த மூன்றாவது விஷயத்தில்.... சிதம்பரம் இல்லாது, அருணகிரிநாதரும் பல பாடகளின், நம் பேதமையை வெளிப்படுத்துகிறார்:

அவர் செவிட்டில் அறைந்து போல பல பாடல்களில் சொல்லி இருக்கிறார். ஒரே ஒரு உதாரணம்:

சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் - “சுருதி முடி” என்று “ஹரி காம்போதியில்” ஒரு திருப்புகழ் பாடி இருக்கிறார். அது யூ ட்யூப் ல் இன்று கூட பார்க்கலாம். அதில் அவர் முதல் சரணத்தையும், கடைசி சரணத்தையும் பாடி முடித்திருப்பார். நடுவில் ஒரு சரணம் இப்படிப் போகிறது

 

“கலகமிடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் – என

உழலு மாயஞ் செனித்த குகையே உறுதி – கருது அசுழம் ஆம்

இத்த மட்டை தனை ஆள உனதருள் தாராய்”

“அசுழம் – நாய்” – மட்டை – மூடன்

உற்றுப் படித்தால், அர்த்தம் புரியும். “பகீர்” என்று இருக்கும்

இதற்கெல்லாம் நாம் அசறுவோமா என்ன.  அதுவும் கலி காலத்தில்.

ஆனால் இந்த ஸ்மரணை இருந்தாலே போதும்

No comments: