Monday, 13 April 2026

அப்பைய தீக்ஷிதரின் கடைசி நிமிடங்கள்

 

இது ஏதோ ராஜேஷ் குமார் மர்ம நாவல் தலைப்பு என்று எண்ண வேண்டாம்

அப்பைய தீட்சிதர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சுமார் 104 கிரந்தங்கள் எழுதி இருக்கிறார்.  அவருடைய சம்ஸ்க்ருத ஞானம் அபாரமானது. அவர் சிவ பரமாக நிறைய கிரந்தங்கள் செய்திருக்கிறார். தேவி மகாத்மியத்தை சுருக்கி “துர்கா சந்திர கலா ஸ்துதி” என்ற ஒரு படைப்பு மிகவும் விசேஷமானது.

மேலும்  हरि हर अभेद स्तुति: என்று “பேதமற்ற சிவா விஷ்ணு” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு கிரந்தம் எழுதி இருக்கிறார். அதில் ஆரம்பதில் “மா ரமணம் உமா ரமணம்” என்று ஆரம்பிக்கிறார். அதைதான் பாபநாசம் சிவன் பின்னால், ஹிந்தோள ரகத்தில் “மாரமணன் உமா ரமணன்-மலரடி” என்று பாடினார்.

எனக்கு, எங்கள் வரகூரில், பெருமாளுக்கு, ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் பண்ணுவதால், இது “பேத சமாசாரம்” ஒரு பெரிய விஷயமாக இல்லை என்றாலும், அப்பைய தீட்சிதரின்,  வாழ்க்கை,  பக்தி மற்றும்அவர் படைப்புக்களைப் பார்க்கும்போது  பிரமிப்பாக இருந்தது.

இரண்டு உதாரணங்கள்- இவர் எவ்வளவு பெரிய மகான் என்பதற்கு:

அவர் எண்ணுகிறார்  இப்போது நினைவு (ம) ஆரோக்கியம் இருக்கும்போது சிவ உபாசனை பண்ணுகிறேனே நாளை “ஒரு வேளை” பைத்தியம் ஆகி விட்டால் “பக்தி” பண்ணுவேணா என்று நினைத்து “ஊமத்தங்காயை அரைத்து குடித்து “பைத்தியம் ஆகிவிடுகிறார்” அப்போது அவர் சொல்லி அவர் சிஷ்யர்கள் எழுதிய “உன்மத்த பஞ்ச ஷதி” என்ற 50 ஸ்துதிகள் ரொம்பவும் உஸத்தியானது.  மஹா பெரியவா இதைப் பற்றி சொல்லும்போது “இது அவர் எழுதிய மற்ற நூல்களை ஒத்தது” என்கிறார். (பிறகு மாற்று மருந்து கொடுத்து சாதாரணமாக ஆகிவிட்டார்).

இதில் ஒரு பாடல் அர்த்தம் இப்படிப் போகிறது.  “நான் உனக்கு என்னமோ, எருக்கம்பூ, தும்பைப் பூ என்று அர்ச்சனை செய்கிறேன். நீ என்னமோ எனக்கு
சாயுஜ்யம் என்கிற மோக்ஷ பதவி கொடுக்கிறாய். இது தெரியாமல் என் ஜன்மாவை வீணடிக்கிறேனே. நான் எவ்வளவு பெரிய முட்டாள் ?”

 இரண்டாவது, இவர் அந்திமக் காலத்தில் மிகவும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார், அதுவும் சிவ பூஜை பண்ணும்போது வலி இருக்கிறதே என்று மிகவும் வருந்தி, “சிவன் அருளால்” வயிற்றில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு, அந்த வலியை ஒரு உருண்டையாக வெளியில் எடுத்து, ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மிதக்க விடுகிறார்.  பூஜை முடிந்தவுடன் அதை உள்ளே அனுப்பி விடுவார். இப்படி தன்னுடைய ப்ராரப்த்ததை தான் அனுபவிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லும் பாணியில்....

இப்படி நினைத்தே பார்க்கமுடியாத மகான்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

சிதம்பரத்தை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்தோம் என்றால், பெருமாளின் 108 திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்று இருப்பது தான் ஆச்சர்யம் சிதம்பர நடராஜ மூர்த்தியை நேரில் பார்க்கும் நாம். இடது புறம் பார்த்தால், கோவிந்தராஜப் பெருமாள் இருப்பார். இப்படி பக்கத்தில் இருவரையும் வைத்துக்கொண்டு, தீட்சிதர் “ஹரி ஹர அபேத ஸ்துதி”  என்று சில ஸ்லோகங்கள் எழுதாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். !!! 

முத்துஸ்வாமி தீட்சிதர் சிதம்பர க்ஷேத்ரத்தில் உள்ள கோவிந்தராஜரைப் பற்றி பாடும்போது, भासमान चिदम्बर पुरि विलसितेन – one giving darshan in the Glorious city of Chidambaram  என்கிறார்.

அப்பைய தீட்சிதர் காசிக்குப் போய் தான், தன் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று ஒரு வைராக்யத்தோடு இருக்க, ஏனோ சிதம்பர க்ஷேத்ரத்தில் இருந்து அவருக்கு நடராஜரை விட்டு மனம் வராமல் தவிக்கிறார். தன் கடைசி காலத்தில் ஒரு சுலோகம் எழுதுகிறார்.

चिदम्बरमिदं पुरं प्रथितमेव पुण्यस्थलं

सुताश्च विनयोज्ज्वला: सुकृतयश्च काश्चित्कृता:

वयश्च मम सप्ततेरुपरि नैवे भोगे स्पृहा

न किञ्चित् अहमर्थये  शिवपदं दिदृक्षे परम् 

அர்த்தம்:  சிதம்பரம் என்கிற க்ஷேத்ரம் புன்யஸ்தலம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுதான் உண்மை கூட. என்னுடைய வம்சாவளியினர் குழந்தைகளும் அதே வினயத்தோட இருக்கிறார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த சில கிருதிகள்/ஸ்லோகங்கள் பண்ணி இருக்கிறேன் என்கிறார். !!!

என்ன ஒரு பவ்யம் பாருங்கள் !!!. 

மேலும் சொல்கிறார்.- எனக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு பெரிய ஆசை ஒன்றும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு சின்ன “கடைசி ஆசை” இருக்கிறது.  அந்த நடராஜருடைய பாத பத்மம் மட்டும் பார்க்க வேண்டும். அது கிடைக்குமா  !!!” என்று ஏங்குகிறார்.

கண்டிப்பாக நடராஜ மூர்த்தி நடனம் பண்ணி இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்பும் தீட்சிதர், அடுத்த ஸ்லோகத்தில் நம் கண் முன்னே அந்த நடராஜர் இருக்கும் காட்சியை விளக்கி “மெய் சிலிர்க்க வைக்கிறார்”

आभाति  हाटकसभानटपादपद्म

ज्योतिर्मयं मनसि मे तरुणारुणोअयं

என் கண் முன்னே “கனக சபையில் வீற்றிருக்கும்” நடராஜருடைய  அந்த பாத பதமம் ஜொலிக்கிறதே -ஆஹா என்ன அழகு ! என்ன அழகு !!

என் மனசிலே “ஜ்யோதிர் மயமான “இளம் சூரியன்” போன்ற அந்த பாதங்கள்  தெரிகிறதே” என்று புளகாங்கிதம் அடைகிறார்.. “ஆஹா” என்று கதறுகிறார்

அப்பைய்ய தீட்சிதர் உயிர் பிரிந்து விடுகிறது. அப்படியே அந்த ஜோதியுடன் கலந்து விடுகிறார்

அதற்குப் பிறகு வரும் இரண்டு ஸ்லோகங்கள் அவர் சிஷ்யர்கள் என்றும் சொல்கிறார்கள், நீலகண்டதீட்சிதர் என்றும் சொல்கிறார்கள். அவர் அந்த ஸ்லோகத்தை முடிக்கிறார்.

नूनं जरiमरण घोर पिशाच कीर्णा

संसार मोह रजनी विरतिं प्रयाता

நிச்சயம் அப்பைய தீட்சிதர், கோர சம்சார துக்கங்கள், கிழடு  என்ற இருட்டில்  இருந்து விடுபட்டு சூரியன் போன்ற அந்த பாதத்தில் இரண்டற கலந்து விட்டார்.

இப்படி பாதி ஸ்லோகம் இவர் சொல்ல, மற்ற பாதி சுலோகம் மற்றவர் முடிக்க, நடுவில் அந்த சபாபதியுடன் ஒன்றாக கலந்தது, ஒரு பிரமிக்கத்தக்க விஷயம்.

நூனம் - என்ற பதத்திற்கு நிச்சயம் என்று பொருள்

நாராயண தீர்த்தர் – தரங்கத்தில் அகரூரர், கம்சன் கிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி” கிளம்பும்போது, நான் கிருஷ்ணனை நிச்சயம் பார்ப்பேன் என்ற கருத்தில் – த்ரஷ்யாமி கோகுல நிலையம்- நூனம் ” என்ற கிருதியில்
“நிச்சயம் அந்த கிருஷ்ணனைப் பார்ப்பேன்: என்ற அர்த்தத்தில் எழுதிகிறார்.

ஆலயம் ஆயிரத்து எட்டினில் நேத்ரம் என்கிறார், சிதம்பரத்தைப் பற்றி, கோபாலக்ருஷ்ண பாரதி. நாம் பிறப்பது எங்கே (திருவாரூரா ?) என்பது நம் கையில் இல்லை. கடைசில் காலம் எங்கே (காசியா ?)  என்பது நம் கையில் இல்லை, அண்ணாமலையாரை நினைப்போமா கடைசி காலத்தில், - உத்திரவாதம் இல்லை. ஆனால் நிச்சயமாக ஒரு தடவை அந்த “கிருபாநிதியை” தரித்தளவில் முக்தி என்று நிச்சயமாக பல மகான்கள் சொல்லி/பாடி -, போய் பார்க்க முடியும்.

“தரிசித்தளவில் முக்தி பெறலாம்” என முத்து தாண்டவரும், இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயிர் கோபுரம் காண வேண்டாமா என பாபநாசம் சிவனும், பரந்தனை அடைய வேண்டுமென்றால், சிதம்பரம் தனை அடையுங்கள் என்று மாரிமுத்தாப் பிள்ளையும்.  -பாடிய ஸ்தலம்.

என் தந்தை பிறந்த ஸ்தலம். என் தாய் அஞ்சல் துறையில் பணி புரிந்தபோது, தபால் ஆபிஸ் எதிர் புரம் இருக்க, தினமும் கோவில் வழியே சென்று "கண் குளிர" தரிசனம் செய்த ஸ்தலம். என் குடும்பத்தில் எல்லோருக்கும் அழியாத பல கதைகளை சொல்லும் ஸ்தலம். 

சிற்சபேசா,  சிவ சிதம்பரம்.....

 


No comments: