செம்மங்குடியில் சென்ற பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை 28 ம் ஆண்டு, கும்பாபிஷேக தினமான, சம்வத்ஸராபிஷேக மகோற்சவம்
இனிதே நிறைவேறியது.
செம்மங்குடி ஆனந்தவல்லி எங்கள் கிராமத்து ஜனங்களுக்கு மிகவும்
ஸ்பெஷல். அபிராமி பட்டர் சொன்னது போல்,
“பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இதத்தே
ஒழுக அடிமை கொண்டாய்”
அவளை பார்த்துக் கொண்டிருதால் போதும், அப்படியே உருகிப்
போய்விடுவோம்.
ஆனந்தவல்லி க்கு ஒரு சிறப்பு பூஜை என்றால் அது
நிஜமாகவே கோலாகலமாக கொண்டாடப்படும்.
நவாவர்ண பூஜை என்ன ! ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர், திருக்கல்யாணம் என்ன,
வீதி உலா என்று ஸ்ரீ வித்யா உபாஸகர்களால் மிகவும் பக்தி பரவசத்துடன்
கொண்டாடப்பட்டது. மொத்த சிலவே ஏறக்குறைய 10.00 லட்சம். !!
எல்லாவற்றிர்க்கும், மேலாக, வரும் எல்லாருக்கும்
மூன்று வேளையும் வயிறார சாப்பாடு.
செம்மங்குடி என்ற சிகரத்தின் மகுடமாக, எங்கள்
ஏகாம்பர மாமாவும், சிவஸ்ரீ ஹரிஹர சிவம் அவர்களும் சேர்ந்து, அசேஷ கிராமத்து
ஜனங்களோடு, மற்றும் பல பக்தர்களுடன் சேர்ந்து நடத்திய மிகச் சிறந்த வைபவம் அது.
இதில் 4.3.26 அன்று நடந்த் ஸுவாசினி பூஜை
பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்பதுதான் இந்த பதிவு:
சுவாஸினி (அ) சுமங்கலி பிரார்த்தனை என்பது
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மங்களகரமான விசேஷங்கள் வருவதற்கு முன்பு செய்யும் நிகழ்வு.
காஞ்சி மகான் பல சந்தப்பங்களில் இதன் பெருமையை சொல்லி இருக்கிறார்.
ஸுவாஸின்யர்ச்சனா ப்ரீதா.. என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது. அதாவது ஸுமங்கலிகளின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைபவள் என்று பொருள். செம்மங்குடியில் அன்று இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்தவர்கள், பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்.
வேதமே, சுமங்கலிகளை கொண்டாடுகிறது.
"ஸுமங்கலீரியம்
வதூரிமாம் ஸமேத பஸ்யத I
சௌபாக்யமஸ்மை
தத்வா யா தாஸ்தம் விபரேதன" II
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த ஸுவாசினி
பூஜை என்பது மற்ற பூஜைகளுடன் ஒப்பிடும்போது சற்றே மாறுபட்டது. ஒரு கிராமத்தில், 300 சுமங்கலிப்
பெண்களோ அல்லது 100 பேரையோ,
அழைத்து வந்து, அவர்களை ஒரு மூன்று மணி நேரம் உட்கார வைத்து, அம்பாளாக வரித்து,
அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூரம் காண்பித்து, எல்லாம் முடிந்தவுடன், அவர்களுக்கு
வாழை இல்லை போட்டு, விருந்தோம்பல் செய்து,, நலங்கு இட்டு, திருப்பி அனுப்பி
வைக்கும் வைபவம் இது
இந்த முறை 108 சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மேற்சொன்னாபடி, எல்லா உபசாரங்கள் செய்து
அனுப்பி வைத்தார்கள். இதற்க்கு முந்திய வருடம் 300 சுமங்கலிகளை அழைத்து வந்து பூஜை செய்தார்கள்.
முதலில் செம்மங்குடி கிராமத்தில் பிறந்த
சுமங்கலிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு வெளியில் இருந்து. இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், இதில் பங்கு
பெறுவதற்கு, எதிர்பார்த்ததற்கு மேலாக பெண்கள் பேர் கொடுக்க, மிகவும் திண்டாடி இந்த
பைனல் லிஸ்டை, ரெடி பண்னியது என்பதே, ஒரு மிகப்பெரிய சவால்.
நகரத்தில் என்றால் கூட பரவாயில்லை. கிராமத்தில்
இவர்களை முதலில் பதிவு செய்து, அழைத்து
வருவது, தங்க வைப்பது, மற்ற
உபசாரங்கள், எல்லாம் முடிந்து, திருப்பி ஜாகிரதையாக அனுப்பி வைப்பது என்பது
மிகவும் கடினம்.
ஒரு குழு இரவு பகலாக வேலை செய்து, ஒவ்வொரு
சுமங்கலிக்கும் சகல வசதிகளும் செய்து கொடுத்து, அவர்கள் முகம் கோணாமல், வெற்றிகரமாக
நடத்தியது தான் ஒரு பெரிய சாதனை. இதை
நகரத்தில் கூட நினைத்தே பார்க்க முடியாது.
இதில் சொல்லப்பட்ட அஷ்டோத்ரம், எங்கள் ஊரின்
மிகவும் பிரஸித்தி பெற்ற வரகூர் ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய ஓலைச்சுவடியில் இருந்து
எடுக்கப்பட்டது
கோலாட்டம் என்பது எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதற்கு
ஒரு குறிப்பு எனக்குக் கிடைத்தது
“ஹல்லீச லாஸ்ய சந்துஷ்டாயை நமஹா.... என்று லலிதா
திரிஷதியில் ஒரு நாமம் உண்டு. ஹல்லீசம்
என்பது கோலாட்டம். லாஸ்யம் என்பது
ஆட்டம். விசித்ரமான கோலாட்டக் குச்சிகளைக்
கொண்டு பெண்கள் ஆடும் இந்த அற்புத நடனத்தை செம்மங்குடியில் பார்க்க வேண்டும்”
சௌந்தர்ய லஹரியில், பகவத்பாதாள் “உன் கருணையை என் மேல்
கொஞ்சம் தெளி” என்கிறார் (ஸ்நபய க்ருபயா மாமபி ஷிவே). செம்மங்குடிக்கு நீங்கள்
வந்தால், அந்த கருணை சுமுத்திரத்தில் நீங்கள் நனையலாம்.
எங்கள் ஆனந்தவல்லி யைப் பற்றி எழுதுவதென்றால்
எனக்கு மிகவும் குஷி யாகிவிடும். நான் பிறந்த செம்மங்குடியில், “இதுதான் அம்பாள்,
இவளை இறுக்கிப் பிடிச்சுக்கோ” என்று எனக்கு காட்டப்பட்டு, அவளுடனேயே வாழ்ந்த பள்ளி
நாட்கள். வெள்ளிக்கிழமை வராதா என்று ஏங்கி, என் அம்மா குமுட்டியில் வைத்த பயத்தம்
பருப்பு பாயசத்தை எடுத்து ஆனந்தவல்லிக்கு நைவேத்யம் பண்ணி, அதில் கொஞ்சம்
சாப்பிட்டப்போது நான் அடைந்த இன்பம், இப்போதும்
அடைகிறேன் என்றால் “அவள்” என்னிடம் காட்டும் கருணைதான்.
ஒவ்வொரு வருடமும் மிகுந்த ஸ்ரத்தையுடன், மிகுந்த பக்தியுடன்
செய்யப்படும் இந்த சம்வத்ஸர அபிஷேகம், எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.
No comments:
Post a Comment