Sunday, 12 April 2026

என் பள்ளி நாட்கள் – ஸ்ரீமதி வஸந்தா

 

இதை நான் எழுதுவதற்கு முன்பு, எனக்கு கல்வி அறிவு புகட்டிய செம்மங்குடியின், ஆரம்ப நிலைப்பள்ளியில் இருந்து, உயர் நிலைப்பள்ளி வரை இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் காலத்தில் படிப்பு என்பது பெண்களுக்கு எட்டாக் கனிதான். “வயத்தில நெருப்பு” கதைதான். இருந்தாலும், தன் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று “மல்லு கட்டி” என்னையும் பள்ளியில் சேர்த்து அழகு பார்த்த, ஏன் அப்பா  கோ.ராமமூர்த்தி சாஸ்திரிகளையும், எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தும், துளி கூட அதை தன் அடுத்த தலைமுறைக்குத் தள்ளாமல், என் தந்தைக்கு நிழலாக இருந்த ஸ்ரீமதி, அலமேலு அம்மாள்.. . எப்போதும் ஏன் சிந்தையில்..

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவது என்பதே மிகவும் கஷ்டம். ஏதோ நவராத்திரி, கோவில் திருவிழா என்றால் தான் அனுமதி.

1953-54 Batch மாணவி நான்.  நான் படிக்கும்போது 6 ம் வகுப்ப இந்தப் பள்ளியில் தான் இருந்தது.  பிறகுதான் செம்மங்குடி உயர்நிலைப்பள்ளிக்கு மாறியது.

நான் ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும்போது சீனி சார் தான் ஹெட் மாஸ்டர். அவர் ஒரே வாத்யார் தான்.

பிறகு, கம்பௌண்டர் பெண் சரோஜா அவர்கள் டீச்சர் ஆக சேர்ந்தார்கள்

இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. கரும்பலகையில் “ஜெய விஜய” என்று தமிழ் புத்தாண்டின் பெயர் எழுதி இருக்கும்.

வானமே எல்லை. SKY is the Limit. என்று ஆயிரம் வார்த்தையில் விளையாடினாலும், எங்கள் தமிழ் ஆசிரியர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

என்று அர்த்தத்துடன் சொன்ன அந்த குறள், எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்த என்னை, SSLC யில் முதல் மார்க் வாங்க வைத்து,

 நான் பணி புரிந்த அஞ்சல் துறையில், அகில இந்திய அளவில் சிறந்த அதிகாரி என்று விருது வாங்கியது எல்லாவற்றிற்கும் காரணம் இந்தப் பள்ளியில் நான் முதலில் எழுதிய “அ” தான்.

நான் SSLC முழுப் பரிசை, குடவாசல் அருகில் உள்ள “ஓகை” என்ற இடத்தில் உள்ள பள்ளியில் எழுதினேன். நான் குடவாசல் வரை அந்த வயதில் போனதே, பெரிய சாதனை என்றே கூறலாம்.

நான் 1962-63 SSLC முடித்தேன்.  அடுத்த வருடம் திருமணம் ஆகிவிட்டதால், நான் முதல் மாணவியாக வந்த அந்த பரிசை என் தங்கை வாங்கினாள்

கற்க கசடற என்ற அந்த வள்ளுவனின் வார்த்தையை மெய்யாக்கிய பள்ளி இது, எப்படி மறக்க முடியும் ?

நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்காத  நினைவுள்ள பள்ளி இது. 

என் பையனும் இங்கு படித்தான் என்பது இரட்டிப்புப் பெருமை.

எங்கள் வீடு என்ற சொர்க்கம்- பத்தாயம் முழுவதும் நெல், பின் கட்டில் முழுவதும், தேங்காய், பலாப்பழம், ரூம் முழுவதும் பட்சணங்கள், ஒரு 10 பேருக்குக் குறையாமல் தினமும் சாப்பாடு. உறவுகள் பொக்கிஷமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது.

எங்கள் பள்ளி என்ற போதிமரம் மூலம் எனக்குக் கிடைத்த ஞானம் அளப்பரியது.

ஒரு வருடம் முன்பு உயர் நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு இப்போது இருக்கும் தலைமை ஆசிரியருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது மிகவும் மகிச்சியாக இருந்தது.

நூறாவது ஆண்டு கொண்டாடும் இந்தப் பள்ளிக்கு எனது மனப்பூர்வமான ஆசிகளும், ஏன் சிரம் தாழ்ந்த நன்றிகளும் உரித்தாகுக  இதைக் கொண்டாடும் இந்த வருடத்தில் என்னையும் பங்கு கொள்ள வைத்தமைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

No comments: