Sunday, 12 April 2026

அப்பைய தீக்ஷிதரின் கடைசி நிமிடங்கள்”

 

இது ஏதோ ராஜேஷ் குமார் மர்ம நாவல் தலைப்பு என்று எண்ண வேண்டாம்

அப்பைய தீட்சிதர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சுமார் 104 கிரந்தங்கள் எழுதி இருக்கிறார்.  அவருடைய சம்ஸ்க்ருத ஞானம் அபாரமானது. அவர் சிவ பரமாக நிறைய கிரந்தங்கள் செய்திருக்கிறார். தேவி மகாத்மியத்தை சுருக்கி “துர்கா சந்திர கலா ஸ்துதி” என்ற ஒரு படைப்பு மிகவும் விசேஷமானது.

மேலும்  हरि हर अभेद स्तुति: என்று “பேதமற்ற சிவா விஷ்ணு” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு கிரந்தம் எழுதி இருக்கிறார். அதில் ஆரம்பதில் “மா ரமணம் உமா ரமணம்” என்று ஆரம்பிக்கிறார். அதைதான் பாபநாசம் சிவன் பின்னால், ஹிந்தோள ரகத்தில் “மாரமணன் உமா ரமணன்-மலரடி” என்று பாடினார்.

எனக்கு, எங்கள் வரகூரில், பெருமாளுக்கு, ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் பண்ணுவதால், இது “பேத சமாசாரம்” ஒரு பெரிய விஷயமாக இல்லை என்றாலும், அப்பைய தீட்சிதரின்,  வாழ்க்கை,  பக்தி அவர் படைப்புக்களைப் பார்க்கும்போது  பிரமிப்பாக இருந்தது.

ஒரு சின்ன உதாரணம்:

அவர் எண்ணுகிறார்  இப்போது நினைவு (ம) ஆரோக்கியம் இருக்கும்போது சிவ உபாசனை பண்ணுகிறேனே நாளை “ஒரு வேளை” பைத்தியம் ஆகி விட்டால் “பக்தி” பண்ணுவேணா என்று நினைத்து “ஊமத்தங்காயை அரைத்து குடித்து “பைத்தியம் ஆகிவிடுகிறார்” அப்போது அவர் சொல்லி அவர் சிஷ்யர்கள் எழுதிய “உன்மத்த பஞ்ச ஷதி” என்ற 50 ஸதுதிகள் ரொம்பவும் உஸத்தியானது.  மஹா பெரியவா இதைப் பற்றி சொல்லும்போது “இது அவர் எழுதிய மற்ற நூல்களை விட சிறந்தது” என்கிறார். (பிறகு  மருந்து கொடுத்து சாதாரணமாக ஆகிவிட்டார்).

இப்படியும் மகான்கள் நம் தேசத்தில் இருந்திருக்கிறார்கள் !!!!!

சிதம்பரத்தை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்தோம் என்றால், பெருமாளின் 108 திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்று இருப்பது தான் ஆச்சர்யம் சிதம்பர நடராஜ மூர்த்தியை நேரில் பார்க்கும் நாம். இடது புறம் பார்த்தால், கோவிந்தராஜப் பெருமாள் இருப்பார். இப்படி பக்கத்தில் இருவரையும் வைத்துக்கொண்டு, தீட்சிதர் “ஹரி ஹர அபேத ஸ்துதி”  என்று சில ஸ்லோகங்கள் எழுதாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். !!! 

முத்துஸ்வாமி தீட்சிதர் சிதம்பர க்ஷேத்ரத்தில் உள்ள கோவிந்தராஜரைப் பற்றி பாடும்போது, भासमान चिदम्बर पुरि विलसितेन – one giving darshan in the Glorious city of Chidambaram  என்கிறார்.

 அ.தீ  காசிக்குப் போய் தான் தன் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று ஒரு வைராக்யத்தோடு இருக்க, ஏனோ சிதம்பர க்ஷேத்ரத்தில் இருந்து அவருக்கு நடராஜரை விட்டு மனம் வராமல் தவிக்கிறார். தன் கடைசி காலத்தில் ஒரு சுலோகம் எழுதுகிறார்.

चिदम्बरमिदं पुरं प्रथितमेव पुण्यस्थलं

सुताश्च विनयोज्ज्वला: सुकृतयश्च काश्चित्कृता:

वयश्च मम सप्ततेरुपरि नैवे भोगे स्पृहा

न किञ्चित् अहमर्थये  शिवपदं दिदृक्षे परम्

அர்த்தம்:  சிதம்பரம் என்கிற க்ஷேத்ரம் புன்யஸ்தலம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுதான் உண்மை கூட. என்னுடைய வம்சாவளியினர் குழந்தைகளும் அதே வினயத்தோட இருக்கிறார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த சில கிருதிகள்/ஸ்லோகங்கள் பண்ணி இருக்கிறேன் என்கிறார். !!!

என்ன ஒரு பவ்யம் பாருங்கள் !!!. 

மேலும் சொல்கிறார்.- எனக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு பெரிய ஆசை ஒன்றும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு சின்ன “கடைசி ஆசை” இருக்கிறது.  அந்த நடராஜருடைய பாத பதமம் மட்டும் பார்க்க மாட்டேனா !!!” என்று ஏங்குகிறார்.

கண்டிப்பாக நடராஜ மூர்த்தி நடனம் பண்ணி இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்பும் தீட்சிதர், அடுத்த ஸ்லோகத்தில் நம் கண் முன்னே அந்த நடராஜர் இருக்கும் காட்சியை விளக்கி “மெய் சிலிர்க்க வைக்கிறார்”

आभाति  हाटकसभानटपादपद्म

ज्योतिर्मयं मनसि मे तरुणारुणोअयं

என் கண் முன்னே “கனக சபையில் வீற்றிருக்கும்” நடராஜருடைய  அந்த பாத பதமம் ஜொலிக்கிறதே -ஆஹா என்ன அழகு ! என்ன அழகு !!

 என் மனசிலே “ஜ்யோதிர் மயமான “இளம் சூரியன்” போன்ற அந்த பாதங்கள்  தெரிகிறதே” என்று புளகாங்கிதம் அடைகிறார்.. “ஆஹா” என்று கதறுகிறார்

அப்பைய்ய தீட்சிதர் உயிர் பிரிந்து விடுகிறது

அப்படியே அந்த ஜோதியுடன் கலந்து விடுகிறார்

அதற்குப் பிறகு வரும் இரண்டு ஸ்லோகங்கள் அவர் பிள்ளைகள் என்றும் சொல்கிறார்கள், நீல கண்ட தீட்சிதர் என்றும் சொல்கிறார்கள். அவர் அந்த ஸ்லோகத்தை முடிக்கிறார்.

नूनं जरiमरण घोर पिशाच कीर्णा

संसार मोह रजनी विरतिं प्रयाता

நிச்சயம் அப்பைய தீட்சிதர், கோர சம்சார துக்கங்கள், கிழடு  என்ற இருட்டில்  இருந்து விடுபட்டு சூரியன் போன்ற அந்த பாதத்தில் இரண்டற கலந்து விட்டார்

நூனம் - என்ற பதத்திற்கு நிச்சயம் என்று பொருள்

நாராயண தீர்த்தர் – தரங்கத்தில் அகரூர், கம்சன் கிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி” கிளம்பும்போது, நான் கிருஷ்ணனை நிச்சயம் பார்ப்பேன் என்ற கருத்தில் – த்ரஷ்யாமி கோகுல நிலையம்- நூனம் ” என்ற கிருதியில்
“நிச்சயம் அந்த கிருஷ்ணனைப் பார்ப்பேன்: என்ற அர்த்தத்தில் எழுதிகிறார்.

 

 

 

No comments: