Monday, 20 March 2017

சஹானா கல்யாண வைபோகமே.... (16-3-17)

புரந்தரதாசர் எழுதிய ஒரு பாடலில், மகாலக்ஷ்மியிடம் யாருக்கு  நீ 

மனைவியாகப் போகிறாய் என்று கேட்டு ஒரு  “பட்டியல்” கொடுக்கிறார்.  அதில்

ஸ்ரீ ராமச்சந்தர மூர்த்திக்கா

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கா

ஸ்ரீ ஜநார்தனுக்கா

ஸ்ரீ ஸ்ரீ ரங்கனாதருக்கா..   என்று பட்டியல் நீண்டுகொண்டே  போய், 

கடைசியில், தன்னுடைய, முத்திரை சரணமான, “புரந்தர விட்டலருக்கா” என்று முடிக்கிறார்.  இந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடித்த “மகாராஜபுரம் சந்தானம்”,  பெங்களூரில்,  சாம்ராஜ்பேட் என்ற இடத்தில், ஒரு கச்சேரியில் ராக மாலிகையில் பாட,  எனக்கு பக்கத்தில் இருந்த பெண்மணி  தாரை தாரை யாக கண்ணீர் விட்ட காட்சி என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

பத்மாவதி என்ற சஹானா, கல்யாணத்தை பார்த்திருந்தால், புரந்தர தாசர்
சிரஞ்சீவி. கீலகேஸ்வரனையும் சேர்த்திருப்பார்.

மிகவும் அருமையான ஒரு திருமண வைபவமாக அமைந்தது இது.  என் வாழ்க்கையில் நான் இழந்த ஒரு பெரிய பொக்கிஷம் என் தாத்தா, பாட்டி (நான் கூப்பிடுவது, அம்மா,  அப்பா )  அவர்களின் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் வைபவம் என்பதால்,  அவர்களுடைய பிரிவு என்ற ஒரு சோகம், அவர்கள் ஆசீர்வாதம் என்ற ஒரு சந்தோஷமாக மாறி, எங்களை வாழ்த்தியது

இவர்கள்  பல சமயங்களில், எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து என்னை நடத்திச் செல்கின்றனர். அவர்கள் தங்களுடைய பேத்தி கல்யாணத்தையும் மிகவும் சிறப்பாக நடத்தி ஆசீர்வாதம் செய்தது, நிதர்சன உண்மை.  இது உணர்வு பூர்வமான விஷயம்.  எங்கள் செம்மங்குடி குடும்பத்திற்கே தெரிந்த, அறிந்த ஒரு சொத்து.  

இன்னும் “அசோக வனத்து” சீதை போல், அப்பா வரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்- என்றாலும் சூக்ஷ்மமாக, பல ரூபத்தில் எங்களுடன் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்

கல்யாணத்தில் நாங்கள் கண்ட, ஒரு உண்மை, வைதீகர்கள் “ஒருமித்த கருத்துடன்” திருமணத்தை நடத்திக்கொண்டு போவதில்லை என்பதுதான்.  “professional jealousy” என்பது எங்களைப்போன்ற “வேலை செய்பவர்களுக்கு” இருக்கும்.  வைதீகர்களுக்கும் இருந்து, மிகவும் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.  சம்பந்திமார்களுக்கு பயந்த காலம் போய், வைதீகர்களுக்கு பயப்படும் காலம் வந்திருப்பது,  மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். 

சட்டத்தைப் (law) பற்றிப் பேசும்போது, “landmark judgement” என்று சொல்லுவார்கள். நாங்கள் ஒவ்வொரு வைதீக கார்யத்திலும் எங்கள் அப்பா கொடுத்த “landmark judgement” ஐ புரிந்து கொள்ளாமல், எழுதியும் வைத்துக் கொள்ளாமல், இப்போது இருக்கும் வைதீகர்களிடம், சரியான தெளிவு இல்லாமல், நாங்கள் பட்ட அவஸ்தையை ஒரு 100 episode ல்  SUN TV ல் serial ஆக எடுக்கலாம்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், இப்போது இது ஏதோ என்று ஆகிவிட்டாலும்,  மிகவும் சிறப்பாக,  சிறந்த வைதீக முறைப்படி,  பத்திரிக்கை முதற்கொண்டு சம்ஸ்க்ருத்திலும் அடித்து,  பார்த்து, பார்த்து, ரசித்து, திருமணம் செய்து கொடுத்தின் மூலம், என் மாமாவும்,மாமியும், புண்ணியம் கட்டிக்கொண்டனர்.  இதில் என் பங்களிப்பு இல்லாததால் இன்னும் சிறப்பாக இருந்தது !!!!

முருகப்பா குழுமத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும்,  என் மாமா, தலை சிறந்த பாடகரின் சந்ததியில் வந்த என் மாமி, என்பதால்,  reception என்னமோ ஒரு மகாமக கூட்டமாக இருந்தது.

கல்யாணத்தில், உஞ்சல் ஏனோ தானோ என்று இல்லாலாமல்,  சேங்காலிபுரம் 
சிஸ்டர்ஸ் ஒரு புறம் வெளுத்து (பாட்டுதான்), வாங்க, நாராயண தீர்த்த பஜனை மண்டலி இன்னொரு புறம்.  அவாத்தில் ஒரு மாமி ஒரு “நீண்ட” LP லாலியைப் பாட திடீரென்று மடிசார் மாமிகள், உஞ்சலை சுற்றி ஆட,  பஞ்சகச்சம், கொஞ்சகச்சம் மாமாக்களும் ஒரு “round”  ஆட,  (சிதம்பரம் நடராஜர் தான் பாக்கி, ஆடுவதற்கு) மணமக்களுக்கே வெட்கம் வந்து தலை குனிந்து உட்கார வைத்துவிட்டார்கள்.

சதஸ், என்று ஒன்று வைத்து,  வேத பண்டிதர்கள் ஒரு 40-50 பேரை அழைத்து வந்து, கன பாடம் சொல்லச் சொல்லி, “உண்டு” என்று சம்பாவனை செய்ததன் மூலம், எங்கள் அப்பா “தன்” வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதிய “வைதீகம்” என்ற ஒரு சிகரத்திற்கு, வைர கிரீடம்  சூட்டிவிட்டார் என் மாமா.

நலங்கு என்ற ஒரு “ஜாலியான” ஒரு வைபவத்திலும், மலரும் நினைவாக, பல வயது முதிர்ந்த, “பெருசுகள்”  - பழைய பாடலை “எடுத்து விட”,  மாப்பிள்ளை சார்பாக,  ஜெயதேவரின் 19 வது அஷ்டபதியை, அஷ்டபாதியாக  பாடி அசத்தினார்.  இதில் காளிதசனைப் பற்றி “உபன்யாசம்” வேறு.

எனக்கு தெரிந்து, நலங்கில் அஷ்டபதியைப் பாடிய, மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார்.

ஒரு வைதீக முறைப்படி, திருமணம் என்பது, ஏதோ “கடமைக்கு” என்று இல்லாமல், மடி சமையல், நான்கு நாட்கள் திருமணம், என்று “சாஸ்த்ரோத்தமாக” இருந்தது மிகவும் அழகு.  செம்மங்குடியில், எங்கள் கிராமத்தில் வீட்டில், எனது சித்திகளுக்கு  கல்யாணம் நடந்தது “flash back” ஆக வந்து போனது.

செம்மங்குடியில் இருந்து, இப்போது எங்கெங்கோ இருக்கும்,  பல பேர் கல்யாணத்தில் பார்த்தது, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  

இந்த தம்பதிகள் “சொல்லும் பொருளும்” போல இருந்து வாழ்கையை “ஜாம் ஜாம்” என்று நடத்திட, எல்லாம் வல்ல “வரகூர் பெருமாளை’  கை கூப்பி பிரார்த்திக்கிறேன்.




Wednesday, 8 March 2017

மங்கையர் தினம்- இன்று - பெண்மையை போற்றுவோம் (கிறோமா ?)

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா- என்ற பாரதியின் வரிகளுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  நாம் உணர்ச்சி பூர்வமான எந்த ஒரு விஷயத்தையும் பெண்மையோடு ஒப்பிட்டுப் பேசினால் அதன் தன்மை பல மடங்கு கூடும். ஆகவே பாரதி, “தமிழ்த் திரு நாடு, தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா” என்றான்.

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொது, என் மகள், அவளுடைய எதிராஜ் காலேஜில், “ woman empowerment என்ற தலைப்பின், பாரதியின் பாடலை பாடிக்கொண்டிருக்கிறாள், என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.

காலையில் எழுந்தவுடன்  “What Sapp என்ற ஒரு “சித்திரவதையான”  மென் பொருளில் இருந்து “message” வர ஆரம்பித்து விட்டது.

மகளிர் தினம் கொண்டாடுகிறோமோ இல்லையோ, இதை வைத்துக்கொண்டு, மக்கள் “what Sapp”  மூலம் அனுப்பும் விஷயங்களுக்கு “எல்லையே இல்லாமல் போய் விட்டது.  அலுப்பு தட்டும் அளவுக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, ஒரு தாரமாக என்று பல விதங்களில் ஒரு ஆணுக்கு, பெண்ணின் துணை வேண்டி இருக்கிறது.

சமீபத்தில், பால பெரியவாளின், பூர்வஸ்ராம தயார், “நற் கதி அடைந்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்டு, பால பெரியவாளின், மன நிலையை எண்ணி “மெய் சிலிர்த்தது”. மூன்று நாட்கள், யாருடன் பேசாமல் மௌன விரதம் இருந்ததாக கேள்விப்பட்டேன். உலகம் உய்ய “கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாகிய, மகா பெரியவாளின், கண் பார்வையில், வளர்ந்த, இந்த நடமாடும் கடவுள், நமக்காகத்தானே, தன தாயாரை, பார்க்க முடியாமல் போனது,  என்று ஒரு புறம் நினைத்து, வருத்தப்பட்டாலும், “லோகத்துக்கு மாதாவாகிய” காமாக்ஷியின் பர்பூர்ண குழந்தையாக “பால பெரியவாள்” மாறிய பிறகு, பெற்ற தாயைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் ? என்று ஒரு பெருமிதமும் கூடவே இருந்தது.

உண்மையில் நம் மதத்தில், சகோதரர்-சகோதரிகளின் உறவை கொண்டாடுவதற்கு ஒரு நாளே வைத்திருக்கிறார்கள். 

பொங்கல் நன்னாளிலே, பொங்கல் சீர் என்று ஒன்று உண்டு. பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு, சகோதரன், தன் சகோதரி வீட்டிற்குச் சென்று, பணம், பழ வகைகள் வைத்துக கொடுத்து, நமஸ்காரமோ, ஆசிர்வாதமோ, வாங்கி வருவார்.  இந்தக் காலத்தில் அது வழக்கொழிந்தால் கூட, சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

என் தாயார், என்னிடம், “உனக்கு சகோதரிகள் இல்லை என்றால் கூட, பெரியப்பாவின் பெண்களுக்கு, வருடா வருடம், பொங்கல் சீர் கொடுக்க மறவாதே”, என்று சொல்ல நான், சென்னையில் இருக்கும், என்னுடைய பெரியப்பா சகோதரிகளுக்கு, பொங்கல் சீர் வருடம் தவறாமல் தருகிறேன்.  இதை என்னுள் ஊட்டிய, என் தாயாருக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து என்னை மேன் மேலும் நல்வழி படுத்த வேண்டும், என்பது என் விருப்பம்.
அதே போல் பொங்கல் முடிந்து “கனு” வைக்கும்பொது,  சகோதரிகள், தன்னுடைய பிறந்த வீட்டில் எல்லோரு “சௌக்கியமாக”  இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 

சகோதரத்துவத்தில் மகத்துவத்தை “தனியாக கொண்டாடச் சொன்னால், செய்ய மாட்டோம்” என்பதற்காக, ஒரு விழாவுடன், (பொங்கலோ, தீபாவளியோ, நோன்போ), சேர்ந்து வைப்பதன் மூலம், இந்து மதத்தில், எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள், என்பதை நினைக்கும் பொது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெண்மையை போற்ற வேண்டும், பெண்களை வேண்டாம் என்று சொன்னால் கூட”- இது ஒரு முக்கியமான “statement”.   மகாபாரதத்தில் ஒரு அருமையான பாத்திரத்தில் மூலம், இது விளக்கப் படுகிறது.

பாரதத்தில், பீஷமரைப் போல ஒரு கதாபாத்திரம், எங்கும் பார்க்க முடியாது.  புலவர் கீரன், பீஷமரைப் பற்றிச் சொல்லும்போதி சொல்வார் “நான் பல இலக்கியங்களை படித்தவன், கிரேக்க, லத்தீன் மொழிகளில் இருந்து, வட மொழிகள் பலவும் பார்த்திருக்கிறேன். பீஷ்மர் போன்று ஒரு கதாபாத்திரம் நான் எங்கும் பார்க்கவில்லை”  என்று கூறுவார்.
தான் நினைத்தால் தான் மரணம் என்று ஒரு கதாபாத்திரம் இருப்பது என்பதும், அம்புப் படுக்கையில் இருந்த போதும் கூட, உத்தராயண புண்ய காலத்தில் தன் உயிர் போகவேண்டும் என்று முடிவு செய்து, அந்த நாளில் உயிர் விட்ட பீஷ்மர்- சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கதா பாத்திரம்.

இப்படி இருந்தும் கூட, “தான் நினைத்தால் தான் மரணம் என்று முடிவு செய்த அவர், கூடவே மரணத்தையும், “பெண்மையை போற்றாததின்” மூலம்” அவரே தேடிக் கொண்டார்” என்பதே உண்மை.  !!!!!!. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ?

இனி கதைக்கு வருவோம்

காசி தேசத்து மன்னன் தன் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா- இந்த மூவரின் சுயம்வரம், நடக்கும்போது, பீஷ்மர், நடுவில் புகுந்து, மூவரையும், கடத்திப் போக, அம்பிகா, அம்பாலிகாவுக்கு, திருமணம் நடக்க, அம்பா தனியே விடப்படுகிறாள்.

இவர் கடத்திப் போகும்போது, சுயம்வர ராஜாக்கள், பீஷ்மரோடு போர் புரிந்து தோற்று ஓடுகிறார்கள். அப்போது “சால்வ” தேசத்து மன்னன் அதிக வீரம் காட்டி போர் புரிய, அம்பா அவனை விரும்பிகிறாள். இதை கவனித்த பீஷ்மர் சால்வ தேசத்து மன்னனையும் தோற்கடித்து, அம்பாவிடம், “நீ சால்வ தேசத்து மன்னனை விரும்பியதை நான் பார்த்தேன். நீ அவனிடமே செல்வாயாக” என்று சொல்கிறார்

சால்வ தேசத்து மன்னனோ – “என்னை தோற்கடித்த பீஷமர் அனுப்பிய பெண் எனக்கு தேவையில்லை, போய் விடு” என்கிறான்

தன் தந்தையிடம் வருகிறாள் அம்பா.  தந்தையோ “எப்போது என் வீட்டைவிற்றுச் சென்றாயோ, பின்பு இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை” அதனால் சென்று விடு” என்கிறார்.

திரும்பவும், அம்பா, பீஷ்மரிடம் வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்.  பீஷம்ர், தன்னுடைய ‘”பிரம்மச்சர்ய” விரதத்தை சொல்லி திருமணம் செய்ய மறுக்கிறார்.

அம்பா, பீஷ்மரின் குருவான பரசுரமரைத் தேடி செல்கிறாள். பரசுராமரும், பீஷ்மருடன், போர் புரிந்து, தோற்று, “என்னால் முடியாது” என்கிறார்.

இப்போது அம்பா, கடும் கோபத்துடன், சிவ பெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். சிவ பெருமான் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்க, 

அவள்,  “என் வாழ்க்கையை சீரழித்த பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்கிறாள்.  சிவ பெருமான் “அது என்னால் இயலாது” என்று சொல்ல. 

திரும்பவும் அம்பா முருகப் பெருமானை நோக்கி கடும் தவம் புரிகிறாள்.
முருகனிடம், இதே கோரிக்கையை, அம்பா வைக்க, முருகப் பெருமான், ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அணிகிறார்களோ, அவர்கள் பீஷ்மரை கொல்வார்”  என்கிறார்.

யாரும் இந்த மாலையை அணிய முன் வராத போது, துருபத தேசத்து மன்னனின் மகள், விளையாட்டாக அந்த மாலையை அணிந்து கொள்ள, அவளை மன்னன் காட்டில் விடச் சொல்கிறான்.  அவள்தான், அடுத்த பிறவியில், சிகண்டி என்ற பேருடன், பீஷ்மரை, அம்பு படுக்கையில் சாய்க்கிறாள்

இதில் பீஷ்மர் செய்த குற்றமென்ன ?
-         அவர் அம்பைக்குக்கு நல் வாழ்கை கொடுத்திருக்க வேண்டும்
-          சால்வ தேசத்து மன்னனை வற்புறுத்தி, அம்பையை திருமணம் செய்து கொடுதிருக்க வேண்டும்
-         அல்லது வேறு ஒரு ராஜாவைப் பார்த்து திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்
-         அம்பையை, சபையில் இருந்து, கடத்தி வராமலாவது இருந்திருக்க வேண்டும்.

பீஷ்மர் திருமணம் செய்து கொள்வதில்லை என்று பெண் சமீபத்தை வெறுத்தார். ஆனால் பெண்மையை மதிக்கத் தவறினார்

பீஷ்மர், அம்பையின் திருமணதிற்கு தடையாக இருந்தார். அதனால், இறப்பே இல்லை என்று வரம் பெற்றிருந்தால் கூட, ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடினால், அவருக்கு மரணம் நிச்சயம்.

இந்து மதத்தில் தான் பெண் தெய்வத்தை, கொண்டாடும்போது, எப்படி வேணுமானாலும் கொண்டாடலாம் என்று இருக்கிறது..  தாயாக, மகளாக, தாரமாக, குழந்தையாக, கொனடாடுவதற்கு, நமக்கு உரிமை உண்டு.

கற்பகாம்பாள் அலங்காரம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். கற்பகம்பாளுக்கு ஒவ்வொரு நாளும், அலங்காரத்துக்கு வரும் புடவைகள் கணக்கில் அடங்கா.  ஒவ்வொரு தடவையும், திரை போட்டு, முப்பது வினாடிகளில், புடவையை மாற்றி, திரையை விலக்கி விடுவார்கள். எப்படி இவ்வளவு சீக்கிரமாக அலங்காரம் செய்கிறார்கள், என்று ஆச்சர்யமாக இருந்தாலும் கூட, பாவாடையில் அம்பாள் இருக்கும்போது, சிறிய கன்னிப் பெண்ணாக, புடவை கட்டிக்கொண்டு இருக்கும் பொது, மங்கையாக, மடிசார் கட்டிக்கொண்டு இருக்கும்போது, சுமங்கலியாக, காசு மாலை போட்டிருக்கும் பொது, “சர்வாலங்கார பூஷிதையாக”  காட்சி தருவது, எனக்கு மங்கையரின் பல “ரூபங்களை” நினைவு படுத்துகிறது.

பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு, ஸ்திரீ தர்மம் பற்றி சொல்கிறார், புருஷ தர்மம் பற்றி சொல்லவில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும், ஸ்திரீ இல்லையென்றால் ஒரு “கப்” நல்ல COFFEE கூட புருஷனுக்கு (மனிதனுக்கு) கிடைக்காது என்பது.

மாதர் தம்மை “இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”- என்றான் மீசை வைத்த மாமனிதன். இவரை நினைக்காமல் பெண்கள் முன்னேற்றம் இல்லை.

பாரதி பாஸ்கர், “கல்யாண மாலை” நிகழ்ச்சியில் “பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா” என்ற தலைப்பில் பேசும் போது, அற்புதமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.  நாம் எல்லோரும் வெட்கித் தலை குனியும் ஒரு விஷயம் அது. “பெண்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதைப் படிக்கவேண்டும்.  பாரதி பாஸ்கர கூறுகிறார்.

“சென்னையில் உள்ள IT COMPANY யில் நிறைய பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள், சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பல நகரங்களில் இருந்து, சென்னை வந்து, தனியாக ஒரு ரூம் எடுத்துக் கொண்டு, சம்பாதிப்பதற்காக, தங்கியுள்ளனர். 
அவர்கள் வார இறுதியில், தன் சொந்த ஊர் சென்று வருவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.  ரயில் ரிசர்வேஷன் என்பது, இயலாத நிலையில், அவர்கள் நம்பி இருப்பது பஸ் தான். நாம் வெள்ளி இரவு, கோயம்பேட்டிலோ, பெருங்குளத்தூரிலோ, பல பெண்கள் நின்று கொண்டு இருப்பதை, இப்போதும் பார்க்கலாம்.  இவர்கள் தன் ரூமில் இருந்து கிளம்பி, பஸ்சுக்காக நின்னு பஸ் பிடித்து தன ஊருக்கு செல்வதற்கு சுமார் 10 மணி நேரமாவது ஆகும். எல்லோருக்கும் இருப்பது போல் “இயற்கை உபாதைகள்” பெண்களுக்கும் உண்டு.  அதனால் பெண்கள், மதியம் 12 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இரவு சாபிடமாட்டார்கள். ஏனெனில் பஸ் பிரயாணம் செய்யும் போது, அவர்களுக்கு இயற்கை ச்ரமங்கள் ஏற்பட்டால், அவர்கள் இறங்கி, உபாதையை போக்குவதற்கு நல்ல இடம் கிடையாது.  நல்ல கழிப்பக வசதிகள் கிடையாது. !!!  இதனால், அவர்கள் பசியோ, தாகமோ, பொறுத்துக் கொண்டு பிரயாணம் செய்கிறார்கள்.

நம் நாட்டில், பெண்களுக்கு, ஒரு நல்ல சுகாதார வசதிகள் கூட செய்ய முடியாமல் இருக்கிறோமே, எங்கே நாம் பெண்கள் முன்னேற்றத்தை அடைவது ?”  என்று முடிக்கிறார்.

விவேகனந்தர் சொன்னது போல்- சீதை பிறந்த நாட்டில் பிறந்ததற்காக
பெருமைப் படுகிறேன். என் வாழ்க்கையில், என் ஏற்றமே, என் தாய், மனைவி, மகள் தான் என்று சொல்வதில் எனக்கு கர்வமுண்டு




Saturday, 4 March 2017

மயிலையே அழகு, ஆழகே மயிலை - சாய் பாபா கோவில்

. பகுதி 2

ராமகிருஷ்ண பரஹம்சர், கடவுள் வழிபாட்டைப் பற்றிச் சொல்லும்போது, “தெய்வத்தின் கோட்டையைப் பிடிக்க, அதை படையெடுக்க வேண்டும். முற்றுகையிட வேண்டும்.”  என்றார்.தாமே அவ்வாறு அந்த கோட்டையை பிடித்தும் விட்டார். அது போல் மைலாப்பூரில் இருப்பவர்கள், இரண்டு கோவில்களை முற்றுக் கையிட வேண்டும். 

ஒன்று, சாய் பாபா கோவில், மற்றொன்று, கற்பகாம்பாள் (கபாலி) கோவில். 

மைலாப்பூர்  பற்றிச் சொல்லும்பபோது, சாய் பாபா கோவிலைப் பற்றிச் சொல்ல வில்லைஎன்றால், திருச்சி என்றால், ஸ்ரீரங்கம் பற்றிச் சொல்லாமல் இருப்பது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு.
சாய் பாபா கோவிலில் எனக்குப் பிடித்தது அன்ன தானம் தான்.  “கொடிது கொடிது, இளமையில் வறுமை” என்கிறார் ஒளவையார்.  சாய் பாபா கோவிலில், வருபவர்க்கு ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல், வயிராற, உணவு கொடுத்து மகிழ்விப்பது என்பது மிகவும் போற்றத்தகுந்த விஷயம். 

“யாவர்க்குமாய், உண்ணும் பொது ஒரு கைப்பிடி”- என்கிறார் திருமூலர்.
திருமூலரின் இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த, அசர வைக்கும் ஒரு விளக்கம் உண்டு:

“ஏழை ஆனாலும் - பணக்காரன் ஆனாலும் ,
உயர்ந்தவன் ஆனாலும் - தாழ்ந்தவன் ஆனாலும்,
உள்ளவன் ஆனாலும் - இல்லாதவன் ஆனாலும் ,
அவன் உணவை உண்ண எடுக்கும் போது 
அவன் தன் கையின் அளவால் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் எடுக்க முடியும் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும்
ஒரு பிடி அளவுக்கு மேல் உணவை 
அள்ள முடியாது , எடுக்க முடியாது .
கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்தாலும் ,
எண்ணற்ற அளவில் செல்வங்களை குவித்து வைத்தாலும் ,
ஒன்றும் இல்லாத ஏழையாக இருந்தாலும் ,
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும் .
அதை உண்ணும் வகையில் தான் 
இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.
இது அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை 
ஒவ்வொருவரும் உணர வேண்டும் .
இந்த சிந்தனை வந்து விட்டால் ,
இறைவன் அனைவரையும் சமமாகப் படைத்திருக்கிறார்”

அதனால் சாய் பாபா கோவிலின் அன்னதானம் மிக உன்னதமானது. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பேறு, சாய் பாபா கோவிலின் பின் புறம் வீடு அமைந்தது தான்.  மிகவும் புகழ் பெற்ற ஆரத்தி, என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம். எஸ், சுப்புலட்சுமியின் “பஜ கோவிந்தம், விஷ்ணு சஹாஸ்ரநாமம், இரண்டும், காலையிலும், மாலையிலும், வீட்டில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இதை விட பக்தி பண்ண விரும்பும் என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு வேறு என்ன வேண்டும் ?

திரு. சுகி சிவம் அவர்கள் ஒரு அருமையான விளக்கத்தைச் சொன்னார்.  சாய் பாபா அவர்கள் எல்லோரிடமும் எதாவது பணம் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.  “ஒரு ருபாய் கொடு, இரண்டு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு”, என்று தன்னை நாடி வரும் பக்தர்களிடம், நச்சரிப்பாராம்,  இது சில பேருக்கு எரிச்சலாகக் கூட இருக்கும். “என்ன இவர் பிச்சைக்காரர் போல” பணம் கேட்கிறார், என்று கூட தோன்றும்.
இதன் பின் அடங்கிய அருமையான தத்துவத்தை அறிந்து கொண்டால், சாய் பாபா எவ்வளவு பெரிய மஹான் என்பது நமக்குத் தெரியும்.

அதற்கு முன்பு, சாய் பாபாவைப், இன்னொரு முக்கியமான கதையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை, சாய் பாபா இருந்த அந்த ஊரின் ராணி, ஒரு பல்லக்கில், சாய் பாபாவைப் பார்க்க வந்தாராம்.  மூடியிருந்த அந்தப் பல்லக்கில் இருந்து ஓரு தட்டு நிறைய தங்கக் கட்டிகள் இருந்தனவாம்.  அந்தத் தட்டை, பல்லக்கில் இருந்த படியே, ஒருவரிடம் கொடுத்து, சாய் பாபாவிடம் கொடுக்கச் சொன்னாராம். 

அப்போது, சாய் பாபா, தன்னுடைய சிஷ்யர்களுடன் இருந்தாராம். அவருக்குப் பிடித்த சிஷ்யர், சாய் பாபா பின்புறம் நின்று கொண்டு இருந்தாராம்.  அவர் இந்த தங்க கட்டிகளை பார்த்தவுடன், ஆசையாக அந்தத் தட்டை வாங்குவதற்கு சற்று முன்னே வந்தாராம்.
அப்போது, சாய் பாபா, அந்த சிஷ்யனை, நிறுத்தி, பார்த்து கேட்டாராம். “நான் தங்கமா, தட்டில் இருக்கும் இது தங்கமா” . அசந்து நின்ற அந்த சிஷ்யர், “நீங்கள்தான் தங்கம்” என்றாராம்.  “அப்போது அந்தத் தட்டில் இருந்த தங்கத்தை திருப்பிக் கொடுத்து விடு, வேண்டாம்” என்றாராம், சாய் பாபா.

இப்போது, நமக்கு ஒரு சந்தேஹம் வரும். தங்கப் பாளங்களை வேண்டாம் என்று சொன்ன சாய் பாபா, ஒரு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு என்று கேட்பானேன் ?

திரு சுகி சிவம், சொல்லும்போது, “அவர் அவர்கள் தன் வாழ்க்கையில், நிறைய பாவம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளனர்.  அதனால் அவர்கள் சம்பாதித்த பொருளில் பாவம் கலந்து இருக்கிறது. பாபா, அவர்களிடம் பணம் வாங்குவதின் மூலம், அவர்களின் பாபத்தைக் குறைக்கிறார்- என்பது தான் அதன் உள்ளர்த்தம்.
நமக்காக, நம் நலத்திற்காக, பாபா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

தொடரும்

Friday, 3 March 2017

அபிராமி அந்தாதி – கி. வா. ஜ. - கண்ணதாசன் - விளக்க உரை:

பாடல்:- 13

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளேபின் கரந்தவளே, கறைக கண்டனுக்கு மூத்தவளேமூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே, உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

இதன் பொருள் அநேகம் பேருக்குத் தெரிந்தாலும், சில வார்த்தைகள பார்க்கலாம்.

முதல் வரிகளின் அர்த்தம்:
பதினான்கு புவனங்களையும் பெறாது பெற்றவளே.  அவைகளைக் காக்கின்றவளே, பின் மாயை வடிவில் ஒடுக்குபவளே.

கறைக்கண்டனுக்கு மூத்தவள் என்றால் என்ன பொருள். ?
ஆல கால விஷத்தை உண்டதால் கறை என்று ஆயிற்று- என்று கண்ணாதாசன் கூறுகிறார்
“மூவா” என்பதற்கு “சீர் இளமை” என்றும் கூறுகிறார்.

கி. வா ஜகந்நாதன்:
பிரமன் முதலான மூவரிடத்தும் இருந்து, முத்தொழிலையும் இயற்றுபவள், அம்பிகை என்று சொல்வர்.  அதாவது, ஆதி சக்தியில் இருந்த சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள். லலிதா சஹாஸ்ரநாமத்தில், “ஸ்ருஷ்டி, கர்த்ரி, பிரஹ்மரூபா, கோப்த்ரி, கோவிந்தா ரூபிணி”  மேலும் “சம்ஹாரிணி, ருத்ர ரூபா” என்றும் வருகிறது.  “சக்தித் தத்துவத்திநின்றும்  சதாசிவ ததத்துவம் தோன்றலின் மூத்தவள்” என்றும் சொல்லலாம்.

மாத்தவளே- பெரிய தவத்தை உடையவளே என்று பொருள்