Monday 20 March 2017

சஹானா கல்யாண வைபோகமே.... (16-3-17)

புரந்தரதாசர் எழுதிய ஒரு பாடலில், மகாலக்ஷ்மியிடம் யாருக்கு  நீ 

மனைவியாகப் போகிறாய் என்று கேட்டு ஒரு  “பட்டியல்” கொடுக்கிறார்.  அதில்

ஸ்ரீ ராமச்சந்தர மூர்த்திக்கா

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கா

ஸ்ரீ ஜநார்தனுக்கா

ஸ்ரீ ஸ்ரீ ரங்கனாதருக்கா..   என்று பட்டியல் நீண்டுகொண்டே  போய், 

கடைசியில், தன்னுடைய, முத்திரை சரணமான, “புரந்தர விட்டலருக்கா” என்று முடிக்கிறார்.  இந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடித்த “மகாராஜபுரம் சந்தானம்”,  பெங்களூரில்,  சாம்ராஜ்பேட் என்ற இடத்தில், ஒரு கச்சேரியில் ராக மாலிகையில் பாட,  எனக்கு பக்கத்தில் இருந்த பெண்மணி  தாரை தாரை யாக கண்ணீர் விட்ட காட்சி என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

பத்மாவதி என்ற சஹானா, கல்யாணத்தை பார்த்திருந்தால், புரந்தர தாசர்
சிரஞ்சீவி. கீலகேஸ்வரனையும் சேர்த்திருப்பார்.

மிகவும் அருமையான ஒரு திருமண வைபவமாக அமைந்தது இது.  என் வாழ்க்கையில் நான் இழந்த ஒரு பெரிய பொக்கிஷம் என் தாத்தா, பாட்டி (நான் கூப்பிடுவது, அம்மா,  அப்பா )  அவர்களின் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் வைபவம் என்பதால்,  அவர்களுடைய பிரிவு என்ற ஒரு சோகம், அவர்கள் ஆசீர்வாதம் என்ற ஒரு சந்தோஷமாக மாறி, எங்களை வாழ்த்தியது

இவர்கள்  பல சமயங்களில், எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து என்னை நடத்திச் செல்கின்றனர். அவர்கள் தங்களுடைய பேத்தி கல்யாணத்தையும் மிகவும் சிறப்பாக நடத்தி ஆசீர்வாதம் செய்தது, நிதர்சன உண்மை.  இது உணர்வு பூர்வமான விஷயம்.  எங்கள் செம்மங்குடி குடும்பத்திற்கே தெரிந்த, அறிந்த ஒரு சொத்து.  

இன்னும் “அசோக வனத்து” சீதை போல், அப்பா வரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்- என்றாலும் சூக்ஷ்மமாக, பல ரூபத்தில் எங்களுடன் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்

கல்யாணத்தில் நாங்கள் கண்ட, ஒரு உண்மை, வைதீகர்கள் “ஒருமித்த கருத்துடன்” திருமணத்தை நடத்திக்கொண்டு போவதில்லை என்பதுதான்.  “professional jealousy” என்பது எங்களைப்போன்ற “வேலை செய்பவர்களுக்கு” இருக்கும்.  வைதீகர்களுக்கும் இருந்து, மிகவும் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.  சம்பந்திமார்களுக்கு பயந்த காலம் போய், வைதீகர்களுக்கு பயப்படும் காலம் வந்திருப்பது,  மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். 

சட்டத்தைப் (law) பற்றிப் பேசும்போது, “landmark judgement” என்று சொல்லுவார்கள். நாங்கள் ஒவ்வொரு வைதீக கார்யத்திலும் எங்கள் அப்பா கொடுத்த “landmark judgement” ஐ புரிந்து கொள்ளாமல், எழுதியும் வைத்துக் கொள்ளாமல், இப்போது இருக்கும் வைதீகர்களிடம், சரியான தெளிவு இல்லாமல், நாங்கள் பட்ட அவஸ்தையை ஒரு 100 episode ல்  SUN TV ல் serial ஆக எடுக்கலாம்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், இப்போது இது ஏதோ என்று ஆகிவிட்டாலும்,  மிகவும் சிறப்பாக,  சிறந்த வைதீக முறைப்படி,  பத்திரிக்கை முதற்கொண்டு சம்ஸ்க்ருத்திலும் அடித்து,  பார்த்து, பார்த்து, ரசித்து, திருமணம் செய்து கொடுத்தின் மூலம், என் மாமாவும்,மாமியும், புண்ணியம் கட்டிக்கொண்டனர்.  இதில் என் பங்களிப்பு இல்லாததால் இன்னும் சிறப்பாக இருந்தது !!!!

முருகப்பா குழுமத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும்,  என் மாமா, தலை சிறந்த பாடகரின் சந்ததியில் வந்த என் மாமி, என்பதால்,  reception என்னமோ ஒரு மகாமக கூட்டமாக இருந்தது.

கல்யாணத்தில், உஞ்சல் ஏனோ தானோ என்று இல்லாலாமல்,  சேங்காலிபுரம் 
சிஸ்டர்ஸ் ஒரு புறம் வெளுத்து (பாட்டுதான்), வாங்க, நாராயண தீர்த்த பஜனை மண்டலி இன்னொரு புறம்.  அவாத்தில் ஒரு மாமி ஒரு “நீண்ட” LP லாலியைப் பாட திடீரென்று மடிசார் மாமிகள், உஞ்சலை சுற்றி ஆட,  பஞ்சகச்சம், கொஞ்சகச்சம் மாமாக்களும் ஒரு “round”  ஆட,  (சிதம்பரம் நடராஜர் தான் பாக்கி, ஆடுவதற்கு) மணமக்களுக்கே வெட்கம் வந்து தலை குனிந்து உட்கார வைத்துவிட்டார்கள்.

சதஸ், என்று ஒன்று வைத்து,  வேத பண்டிதர்கள் ஒரு 40-50 பேரை அழைத்து வந்து, கன பாடம் சொல்லச் சொல்லி, “உண்டு” என்று சம்பாவனை செய்ததன் மூலம், எங்கள் அப்பா “தன்” வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதிய “வைதீகம்” என்ற ஒரு சிகரத்திற்கு, வைர கிரீடம்  சூட்டிவிட்டார் என் மாமா.

நலங்கு என்ற ஒரு “ஜாலியான” ஒரு வைபவத்திலும், மலரும் நினைவாக, பல வயது முதிர்ந்த, “பெருசுகள்”  - பழைய பாடலை “எடுத்து விட”,  மாப்பிள்ளை சார்பாக,  ஜெயதேவரின் 19 வது அஷ்டபதியை, அஷ்டபாதியாக  பாடி அசத்தினார்.  இதில் காளிதசனைப் பற்றி “உபன்யாசம்” வேறு.

எனக்கு தெரிந்து, நலங்கில் அஷ்டபதியைப் பாடிய, மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார்.

ஒரு வைதீக முறைப்படி, திருமணம் என்பது, ஏதோ “கடமைக்கு” என்று இல்லாமல், மடி சமையல், நான்கு நாட்கள் திருமணம், என்று “சாஸ்த்ரோத்தமாக” இருந்தது மிகவும் அழகு.  செம்மங்குடியில், எங்கள் கிராமத்தில் வீட்டில், எனது சித்திகளுக்கு  கல்யாணம் நடந்தது “flash back” ஆக வந்து போனது.

செம்மங்குடியில் இருந்து, இப்போது எங்கெங்கோ இருக்கும்,  பல பேர் கல்யாணத்தில் பார்த்தது, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  

இந்த தம்பதிகள் “சொல்லும் பொருளும்” போல இருந்து வாழ்கையை “ஜாம் ஜாம்” என்று நடத்திட, எல்லாம் வல்ல “வரகூர் பெருமாளை’  கை கூப்பி பிரார்த்திக்கிறேன்.




No comments: