Thursday 30 March 2017

கேட்டதும், பெற்றதும்- humour club- திருப்பூர் கிருஷ்ணன்

திருப்பூர் கிருஷ்ணன் ஒரு மிக சிறந்த பேச்சாளர்.  அவர் ஒரு முறை,  humour club என்ற ஒரு அமைப்புக்காக, சென்ற காந்தி ஜெயந்தி அன்று,  பாரதிய வித்யா பவனில், பேச வந்திருந்த போது, நகைச்சுவையுடன் பல அருமையான விஷயங்களை சொன்னார்.  அதில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். எப்படியாவது அவருடைய, சொற்பொழிவை பதிவு செய்ய எண்ணினேன்.  அதனால் தான் “better late than never”

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போது, அவர் உடல் நலத்தைப் பேணிக் காப்பதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அதில்

கொயாப்பழத்தின், விதையை அப்படியே முழுங்கினால், அது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது,  அதே விதையை கடித்துச் சாப்பிட்டால், அதில் ஒரு அமிலம் இருக்கிறது.  அது இதயத்திற்கு மிகவும் நல்லது.  Heart attack  வராமல் தடுக்கும்.

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போதி. “காந்திஜியின், மனைவி இறந்த பிறகு, அவர் உடல் எரியூட்டப் படுகிறது.  திரும்பி வந்தபிறகு, ஒருவர் வந்து காந்தியிடம் “கஸ்தூரிபா காந்தி  தகனமான பின்பும் கூட, அவருடைய கையில் இருந்த கண்ணாடி வளையல்,  அப்படியே இருக்கிறது” என்று கொடுத்தாராம்.  அதப் பார்த்து, காந்திஜி நெகிழ்ந்து போய், கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னாரம்.  “உயர்ந்த பத்தினிப் பெண்களின் அடையாளம் இது” என்றாராம்.
வள்ளலாரைப் பற்றிச் சொல்லும்போது, “மனித வாழ்க்கையில், நோய் வருவதற்க்கு, முக்கிய காரணம்,  சிறுநீர், மலம், ஒழுங்காகப் போகாமல் அடக்கி வைத்திருப்பதால் தான். அந்தக் காலத்தில், ஆண்களை விட பெண்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு பொதுக் கழிப்பிடம், கிராமங்களில் இல்லாதது தான்.

தற்போது பாரதப் பிரதமர் மோடி அவர்களின், கழிவறை திட்டத்தின், முக்கியத்துவம் புரிகிறதல்லவா ?

காமராஜரைப் பற்றி, அருமையான ஒரு விஷயம் சொன்னார்- ஒரு முறை காமராஜர் டெல்லி சென்றிருந்தார்.  அப்போது “எடை பார்க்கும் இயந்திரம்” வந்திருந்த காலம் அது.  புதியதாக ஒரு Machine  வந்திருந்தது. எல்லோரும் ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காமராஜர் பக்கத்தில் இருந்த ஒருவர் “நீங்களும் எடை பாருங்களேன்” என்று கூற அவர் “இருக்கட்டும், இருக்கட்டும், பிறகு பார்க்கிறேன்” என்றாராம்.  அவர், திரும்ப திரும்ப காமராஜரை வற்புறுத்த, பக்கத்தில் இருந்த நேரு “காமராஜரை விட்டு விடுங்கள், அவரிடம் சட்டைப் பையில் ஒரு ரூபாய் கூட இருக்காது, போடுவதற்கு” என்றாராம்

(என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை- இப்படியும் ஒரு தலைவர் தமிழ் நாட்டில் இருந்தார் என்று.)

 தமிழில் நகைச்சுவை என்பது “சொற்களை மாற்றிப் போடுவதன் மூலம், சிறிய ஆங்கில வார்த்தைகள் மூலம்” கொண்டு வரலாம் என்பதை அழகாக விளக்கினார்
·        
     ஒருவர், மளிகை கடைக்காரருக்கு, கடிதம் எழுதுகிறார்- “எனக்கு ரவா வேணும்,  இது தான் என் பேரவா. நானே வரவா, என் பையனை அனுப்பித் தரவா ?”
    கடைகாரர்- “இது என்ன பெரிய தொந்தரவாப் போச்சு”

·        ஒருவர்- அருவி இருக்கு, நீர் வீழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி இங்கு வந்து பார்த்தால், ஒன்றுமே இல்லையே-
பதில்- சார், உங்களுக்கு யாரோ False (falls) information கொடுத்திருக்கிறார்கள்.

·        அப்பா, மகனிடம்- மகனே, உன்னை  “உளுந்து, பெருங்காயம் வாங்கச்சொன்னால், நீ கீழே உளுந்து  (விழுந்து), பெருங்காயப்பட்டு, வந்திருக்கிறாயே ?!”

·        ருத்தி, இன்னொருத்தியிடம்- “அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 10 வது மாடியிலில் இருந்து, மாமியார், மருமகளைக் கீழே தள்ளி விட்டாளாமே, இது அடுக்குமாடி ?

 திலகரைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார்
திலகர் சிறையில் தள்ளப்பட்டார்.  அது அவரது மனைவிக்கு ரேடியோ மூலம் தெரிய வந்தது.  அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அழகு அழகாக மூண்று பெண் குழந்தைகள்.  அப்போது பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடையாது. 

திலகரின் மனைவி, சத்தியபாமா,  சேதி கேட்ட அன்றே, இறந்து விட்டார்கள்.   சுதந்தர இந்தியா பெறுவதற்காக  இவர்கள் செய்த உயிர் தியாகத்தை  நாம் மறந்து விட்டது கொடுமை.  சுதந்திரக் கொடி, எத்தனை தாலிக் கொடியின் வலிமையில் பின்னப் பட்டது என்பதை மிகவும் ஆழமாக நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

திருப்பூர் குமரன்:   திருப்பூர் குமரன் தம் கையில் கொடி பிடித்துக்கொண்டு போராடும் போது,  ஆங்கிலேயர்களால் தலையில் “லத்தி அடி” வாங்கினார்.  அந்த அடி, அவரின் தலையின் “சில்லை” 2 cm பெயர்த்து விட்டது.  உடனே அவரை hospital லில் சேர்க்க, யாருமே வைத்தியம் பார்க்க முன் வரவில்லை.  ஆங்கிலேயர் பயம்.  கடைசியில் ரங்கநாதன் என்ற ஒரு மருத்துவர் வைத்தியம் பார்த்தார்.  (இப்பொழுதும் அவர் பெயரில் ரங்கநாதபுரம் என்ற ஒரு ஊர் திருப்பூரில் உள்ளது.). மருத்துவ சிகிச்சை பயனில்லாமல்,  குமரன் மரணமடைந்து விட்டார்.

ராமாயி என்ற அவரது மனைவிக்கு அப்போது 12 வயது. புஷ்பவதி ஆவதற்கு முன்பு விதவைக் கோலம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று. வறுமை. அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லை. பத்து பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தலாம் என்றால், பயந்து கொண்டு (வெள்ளைக்காரர்களை எதிர்த்த குடும்பம்) வேலை கொடுக்கக் கூட ஆளில்லை. 

அப்போது காந்தி மகான் திருப்பூருக்கு விஜயம் செய்தார்.  அவர்  வந்து முதலில் கேட்ட கேள்வி, குமரனின் மனைவி எப்படி இருக்கிறார் ? என்பதுதான் ? அவர் மகாத்மா,  சுதந்தரத்தின் வலி அவருக்குத் தெரியும். உடனே அவர் நடந்து வந்து ராமாயியைப் பார்க்க, பிறகுதான் பலரின் கவனம் ராமாயி மேல் திரும்பியது. 
ஓடக் காட்டில் ஒரு வீட்டில் ராமாயி குடியிருந்த பொது, திருப்பூர் கிருஷ்ணன் (தான்)  அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்ததை நினைவ கூர்ந்தார்.

ஒரு முறை,  ராமாயி வீட்டுக்கு ஒரு நடிகர் வந்திருந்தார்.  அவர் மிகப் பெரிய நடிகர்.  ராமாயி அம்மாள், சினிமா பார்ப்பதில்லை என்பதால் அவருக்கு யார் வந்திருக்கிறார் என்று தெரிய வில்லை. உங்கள் பெயர் என்ன என்று ராமாயி அம்மாள் கேட்க அவர்  எம். ஜி . ராமச்சந்திரன் என்றார். உடனே, நன்கு சாப்பிடுகிறாயா ? என்று கேட்டார். அசந்து போன எம். ஜி, ஆர், தான் வறுமையில் இருந்த பொது கூட, விருந்தோம்பலில் எந்தக் குறையும் வைக்காத ராமாயி அம்மாளின் உயர்ந்த குணத்தைப் பார்த்து, போகும் பொது ரூபாய் 25,000 கொடுத்து விட்டுச் சென்றார்.

தலைமை செயலகம் திரும்பியவுடன், எம்.ஜி, ஆர் செய்த முதல் வேலை, அதுவரை “சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு” என்று இருந்த பென்ஷனை,  முதியவர்கள் என்ற வகையில், அவர்களுடைய மனைவிகளுக்கும் உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்.

எம்.ஜி,ஆர் மறந்த செய்தி கேட்டபோது, ராமாயி அம்மாள் மிகவும் வருத்தப்பட்டு “தன் பிள்ளை” இறந்து விட்டதாக எண்ணினார்.  “தாயாரை பொருளாதார ரீதியாக எவன் நன்றாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் பிள்ளை. மற்றவர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?” என்றார். தன்னையும் ஒரு தாயாக மதித்து, பென்ஷன் திட்டத்தைக் கொண்டு, என் வறுமையை ஒழித்த அவர் என் மகன்.  அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

ஒரு முறை ராமாயி அம்மாள், ஒரு சினிமா பார்க்க ஆசைப்பட்டார்கள். திருப்பூரில் “டைமண்ட்” டாக்கீஸில் அந்த படம் ஓடிக்கொண்டிருந்தது.  அது சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த “ராஜபார்ட் ரங்கதுரை”.  அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அதில் “திருப்பூர் குமரனாக” சிவாஜி நடிக்கும் ஒரு சீன் வந்தது.  அந்த சீனில், கடைசியில், குமரன், ஆங்கிலேயர்களால், அடி வாங்கும் காட்சியைப் பார்த்து, ராமாயி அம்மாள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள்.

பிறகு மயக்கம் தெளிவித்து, வீட்டிற்க்கு, அழைத்துச் சென்று, “ஏனம்மா,
 உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் ? என்று திருப்பூர் கிருஷ்ணன் வினவ, அவர், “நான் என் கணவரை சரியாகப் பார்த்தது கூட கிடையாது.  அவர். சுதந்தரப் போராட்டத்தில் இருந்ததால், வீட்டிற்கு வருவதே கிடையாது. அவர் மறைந்து விட்டார். இந்தப் படம் பார்க்கும்போது, என் கணவரையே, சிவாஜி கணேசன் அவர்களின் மூலம் பார்த்தேன்”  என்றார்.  இந்த விஷயத்தை, தான் இறக்கும் வரை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டார் (திருப்பூர் கிருஷ்ணனிடம்).  என்ன ஒரு பெண்மணி, என்ன ஒரு தூய வாழ்க்கை ?
இதை கேட்டப்போது அரங்கத்தில் எழுந்த கரகோஷம், அப்பப்பா....!!!
                                                                              (தொடரும்)



No comments: