Saturday 4 March 2017

மயிலையே அழகு, ஆழகே மயிலை - சாய் பாபா கோவில்

. பகுதி 2

ராமகிருஷ்ண பரஹம்சர், கடவுள் வழிபாட்டைப் பற்றிச் சொல்லும்போது, “தெய்வத்தின் கோட்டையைப் பிடிக்க, அதை படையெடுக்க வேண்டும். முற்றுகையிட வேண்டும்.”  என்றார்.தாமே அவ்வாறு அந்த கோட்டையை பிடித்தும் விட்டார். அது போல் மைலாப்பூரில் இருப்பவர்கள், இரண்டு கோவில்களை முற்றுக் கையிட வேண்டும். 

ஒன்று, சாய் பாபா கோவில், மற்றொன்று, கற்பகாம்பாள் (கபாலி) கோவில். 

மைலாப்பூர்  பற்றிச் சொல்லும்பபோது, சாய் பாபா கோவிலைப் பற்றிச் சொல்ல வில்லைஎன்றால், திருச்சி என்றால், ஸ்ரீரங்கம் பற்றிச் சொல்லாமல் இருப்பது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு.
சாய் பாபா கோவிலில் எனக்குப் பிடித்தது அன்ன தானம் தான்.  “கொடிது கொடிது, இளமையில் வறுமை” என்கிறார் ஒளவையார்.  சாய் பாபா கோவிலில், வருபவர்க்கு ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல், வயிராற, உணவு கொடுத்து மகிழ்விப்பது என்பது மிகவும் போற்றத்தகுந்த விஷயம். 

“யாவர்க்குமாய், உண்ணும் பொது ஒரு கைப்பிடி”- என்கிறார் திருமூலர்.
திருமூலரின் இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த, அசர வைக்கும் ஒரு விளக்கம் உண்டு:

“ஏழை ஆனாலும் - பணக்காரன் ஆனாலும் ,
உயர்ந்தவன் ஆனாலும் - தாழ்ந்தவன் ஆனாலும்,
உள்ளவன் ஆனாலும் - இல்லாதவன் ஆனாலும் ,
அவன் உணவை உண்ண எடுக்கும் போது 
அவன் தன் கையின் அளவால் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் எடுக்க முடியும் 
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும்
ஒரு பிடி அளவுக்கு மேல் உணவை 
அள்ள முடியாது , எடுக்க முடியாது .
கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்தாலும் ,
எண்ணற்ற அளவில் செல்வங்களை குவித்து வைத்தாலும் ,
ஒன்றும் இல்லாத ஏழையாக இருந்தாலும் ,
ஒரு பிடி அளவு கொண்ட உணவைத் தான் அள்ள முடியும் .
அதை உண்ணும் வகையில் தான் 
இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.
இது அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை 
ஒவ்வொருவரும் உணர வேண்டும் .
இந்த சிந்தனை வந்து விட்டால் ,
இறைவன் அனைவரையும் சமமாகப் படைத்திருக்கிறார்”

அதனால் சாய் பாபா கோவிலின் அன்னதானம் மிக உன்னதமானது. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பேறு, சாய் பாபா கோவிலின் பின் புறம் வீடு அமைந்தது தான்.  மிகவும் புகழ் பெற்ற ஆரத்தி, என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம். எஸ், சுப்புலட்சுமியின் “பஜ கோவிந்தம், விஷ்ணு சஹாஸ்ரநாமம், இரண்டும், காலையிலும், மாலையிலும், வீட்டில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இதை விட பக்தி பண்ண விரும்பும் என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு வேறு என்ன வேண்டும் ?

திரு. சுகி சிவம் அவர்கள் ஒரு அருமையான விளக்கத்தைச் சொன்னார்.  சாய் பாபா அவர்கள் எல்லோரிடமும் எதாவது பணம் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.  “ஒரு ருபாய் கொடு, இரண்டு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு”, என்று தன்னை நாடி வரும் பக்தர்களிடம், நச்சரிப்பாராம்,  இது சில பேருக்கு எரிச்சலாகக் கூட இருக்கும். “என்ன இவர் பிச்சைக்காரர் போல” பணம் கேட்கிறார், என்று கூட தோன்றும்.
இதன் பின் அடங்கிய அருமையான தத்துவத்தை அறிந்து கொண்டால், சாய் பாபா எவ்வளவு பெரிய மஹான் என்பது நமக்குத் தெரியும்.

அதற்கு முன்பு, சாய் பாபாவைப், இன்னொரு முக்கியமான கதையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை, சாய் பாபா இருந்த அந்த ஊரின் ராணி, ஒரு பல்லக்கில், சாய் பாபாவைப் பார்க்க வந்தாராம்.  மூடியிருந்த அந்தப் பல்லக்கில் இருந்து ஓரு தட்டு நிறைய தங்கக் கட்டிகள் இருந்தனவாம்.  அந்தத் தட்டை, பல்லக்கில் இருந்த படியே, ஒருவரிடம் கொடுத்து, சாய் பாபாவிடம் கொடுக்கச் சொன்னாராம். 

அப்போது, சாய் பாபா, தன்னுடைய சிஷ்யர்களுடன் இருந்தாராம். அவருக்குப் பிடித்த சிஷ்யர், சாய் பாபா பின்புறம் நின்று கொண்டு இருந்தாராம்.  அவர் இந்த தங்க கட்டிகளை பார்த்தவுடன், ஆசையாக அந்தத் தட்டை வாங்குவதற்கு சற்று முன்னே வந்தாராம்.
அப்போது, சாய் பாபா, அந்த சிஷ்யனை, நிறுத்தி, பார்த்து கேட்டாராம். “நான் தங்கமா, தட்டில் இருக்கும் இது தங்கமா” . அசந்து நின்ற அந்த சிஷ்யர், “நீங்கள்தான் தங்கம்” என்றாராம்.  “அப்போது அந்தத் தட்டில் இருந்த தங்கத்தை திருப்பிக் கொடுத்து விடு, வேண்டாம்” என்றாராம், சாய் பாபா.

இப்போது, நமக்கு ஒரு சந்தேஹம் வரும். தங்கப் பாளங்களை வேண்டாம் என்று சொன்ன சாய் பாபா, ஒரு ரூபாய் கொடு, ஐந்து ரூபாய் கொடு என்று கேட்பானேன் ?

திரு சுகி சிவம், சொல்லும்போது, “அவர் அவர்கள் தன் வாழ்க்கையில், நிறைய பாவம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளனர்.  அதனால் அவர்கள் சம்பாதித்த பொருளில் பாவம் கலந்து இருக்கிறது. பாபா, அவர்களிடம் பணம் வாங்குவதின் மூலம், அவர்களின் பாபத்தைக் குறைக்கிறார்- என்பது தான் அதன் உள்ளர்த்தம்.
நமக்காக, நம் நலத்திற்காக, பாபா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

தொடரும்

No comments: