Thursday, 28 January 2021

என் சினிமா ஆசையும் “சீன் கானரியும்”

 

ஹாலிவுட் நடிகரும், ஜேம்ஸ் பாண்ட் என்ற மிகவும் பிரபலமான பாத்திரத்தில் நடித்த, சீன கானரி, (சர் ஷான் கானரி) மறைந்த செய்தியைக் கேட்டு ஒரு இரண்டு நிமிடம் திகைத்துப் போனது உண்மை.

அமுல் நிறுவனம், தன்னுடைய அற்புதமான விளம்பரத்தில், இவரின் மறைவை மிகவும் நேர்த்தியாக அமைத்து இருந்தார்கள். அது இப்படி..

விளம்பரத்தின் மேலே

A Diamand Forever 

விளம்பரத்தின் கீழே

Connery, Sean Connery

இவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, மேலே சொல்லி இருப்பது அவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஒரு படம். (அது அமுல் products களுக்கும் பொருந்தும்) கீழே போட்டிருப்பது, அவருடைய மிகவும் பிரபலமான, அவர் சொல்லும் ஒரு வரி.

My name is Bond, James Bond ... அதை அப்படியே மாற்றி

My name is Connery, Sean connery  என்பது போல் “அமுல்” விளம்பரம்.

நான் மிகவும் ரசித்த விளம்பரம்.

எங்கேயோ தமிழ் நாட்டு குக்க்ரமாத்தில் பிறந்த எனக்கு, ஒரு ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஒருவர் பாதித்திருக்கிறார் என்றார் அதுதான் சினிமாவின் பலம்.

கொஞ்சம் பின்னே போவோம்.........

செம்மங்குடியில் படித்த எனக்கு சினிமா படம் என்பது ஒரு கானல் நீர். கரண்ட் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, பிறகு கரண்ட் வந்தபோது ஆச்சர்யத்த்துடன் பார்த்த நாட்கள் அவை.

எங்கள் செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியில் ஒரு முறை இப்போது இருக்கும் 32 inch டீ. வி போன்று ஒரு வெள்ளைத் திரையில், “வீதியின் விதிகள்” என்று “பின் புலத்தில் பேச” ஒரு 20 நிமிடம் படம் ஓடும். அது ஒவ்வொரு வகுப்பாக பிரித்து வரிசையில் நின்று உள்ளே (அந்த ரூமில்) விடுவார்கள். அது எங்களுக்கு பிரமிப்பான விஷயம். அதைப் பார்த்து விதிகளைக் கற்றுக் கொண்டேனோ என்னவோ, எனக்குப் பின்னே வட்டமாக ஒரு சக்கரம் சுழல, ஏதோ வெளிச்சத்துடன் எதோ ஒன்று வேகமாக அதனுள் செல்ல, படத்தை விட அந்த “சுற்றலை” ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களுக்கு, வலது புறம் 5 கிலோ மீட்டர் தொலைவில் குடவாசல் பிலிப்ஸ் என்று ஒரு தியேட்டர் உண்டு, மணக்கால் அய்யம்பேட்டை என்று இந்தப் பக்கம் ஒரு 5 கிலோ மீட்டரில் உள்ள உரில் ஒரு ஒரு தியேட்டர் உண்டு. எனக்கு திருட்டுத்தனமாக சினிமா ஆசையை வளர்த்தது என் பள்ளியில் காட்டிய “வீதியின் விதிகள்” தான்.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று நம்மூர் ஜெய்சங்கர் என்ற நடிகரை விளம்பரப்படுத்தி சில படங்கள் வந்தபோது, ஜேம்ஸ் பாண்ட் என்றால் என்ன/யார் என்ற குழப்பத்தில் இருந்தேன்.   அதற்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து, திருச்சி அருணா தியேட்டர் ல், ரோஜர் மூர் நடித்த “SPY WHO LOVED ME” என்ற படத்தில் முதல் சீனில் ஸ்கேடிங் சண்டை ஒன்று இருக்கும். அதை பார்த்து அசந்து போனேன்.

பிறகு மெதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்க்க ஆரம்பித்து, சீன கானரியில் வலையில் வீழ்ந்தேன்.

இரண்டு படங்கள், சீன் கானரியின் அற்புதப் படைப்பு. இப்போது கூட, இங்கிலீஷ் மூவி சானலில் போட்டால், ரிமொட் ஐ கீழே வைத்து விடுவேன்

1.     GOLD FINGER

2.     THUNDERBALL

நல்ல உயரம், ஸ்டைலிஷ் ஆக ஒரு டிரஸ். துப்பாக்கி எடுத்து சுடுவதிலும் அழகு. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கே உரித்தான
முத்தமிடும் காட்சிகளிலும் ஒரு நேரத்தி இருக்கும்.

அதக்குப் பிறகு, UNTOUCHABLE என்ற ஒரு படம் பார்த்தேன். அதில் ராபர்ட் டி நீரோ என்ற ஒரு அற்புதமான நடிகர் வில்லனாக நடித்து இருப்பார். அதில் கௌரவ வேடத்தில் சீ.கானரி நடித்து இருப்பார்.  பல முறை சீ. கானரிக்காக அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.

இவருக்கு முன்பும், பின்பும் பல ஜேம்ஸ் பாண்டுகள் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மாளிடம் இருந்த ஒரு அழகு... கண்களில் பல கதைகள் சொல்வார்.

அவருடைய பேச்சே, இஷ்க், புஷ்க் என்று இருக்கும். ஸ்காட்டிஷ் அச்சென்ட் (SCOTTISH ACCENT)  போலும்.

என்னவா இருந்தால் என்ன. ஒரு 2 மணி நேரம் இந்த சினிமா என்ற மாய வலையில் என்னை கட்டிப்போட்ட அந்த அற்புதமான சீன கானரிக்காக, அவரின் ஆத்மா சாந்தி அடைவதற்காக, பரந்தாமனிடம் ஸ்தோத்ரம் செய்கிறேன்.

 

 

 

 

 


Sunday, 24 January 2021

கொரோனாவும் ஸங்கீத சீசனும்

 

கொரேனாவால், இந்த சங்கீத சீசனில், என்னை மிகவும் பாதித்த விஷயம், பல உப பக்க வாத்தியக்காரர்கள், சுத்தமாக ஒரு கச்சேரியும் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதை நான் நேரின் பார்த்தேன். இந்த வருடம் வெளி வந்த கச்சேரிகளில் கூட, மிருதங்கம், வயலின் மட்டும் இருந்ததே தவிர, கஞ்சிரா, கடம், முகர்சிங் போன்ற வாத்தியங்கள் “மிஸ்ஸிங்”.

இன்றொன்று, நாதஸ்வர கலைஞர்கள். நாங்கள் சாதரணமாக, தஞ்சாவூரில், கிராமத்தில் உள்ள கோவில்களில், 10 நாட்கள் உதஸவமாகச் செய்யும் பொது, ஒவ்வொரு நாளும், ஒரு நாதஸ்வர கலைஞர்கள் குழுவை வைத்து, 10 நாளும் 10 வேறு விதமான கலைஞர்களை வைத்து, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அழகு பார்த்த “தஞ்சாவூர் ஜில்லா” இந்த முறை ஒரு கல்யாணக் கச்சேரி கூட இல்லாமல் அவதிப படுவது, பெரிய சோகம்.

மேலும், முக்கயமான ஒன்று,  நிறைய பேருக்குத் தெரியாதது, முதியோர் இல்லத்தில் இருக்கும்  மக்களுக்கு, இலவசமாக சங்கீத கச்சேரிகளை "பணம் கட்டி"  அவர்கள் பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்த  சில நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.  ஆச்சர்யப்பட்டேன்.   கொரோனாவால் விளைந்த நன்மை என்று நான் சொல்வேன்.   கோயம்புத்தூரிலும் சென்னையிலும் உள்ள பல மு.இ. அடக்கம்

நானும் மியூசிக் அகாடமி யும் தான் இன்னும் “ஸ” யூஸ் பண்ணுகிறோம் என்று நினைக்கிறேன். (ஸங்கீத வித்வத் சபை)

நான் எழுதும் இந்த பதிவு அரங்கேறும்போது, சங்கீத வித்வத் சபையில் “ஸதஸ்” நடந்து முன்டிண்டு இருக்கும். ஒரு- நான் எதிர்பார்த்த ரஞ்சனி காயத்ரியோ அல்லது வயதான இசைக் கலைஞர்களோ, யாருக்காவது, கலாநிதி விருது கிடைத்திருக்கும். சதஸ் முடிந்தவுடன் நல்ல சாப்பாடு கிடைத்து இருக்கும். டான்ஸ் (நடன நிகழ்சிகள் ஆரம்பித்து இருக்கும். அரிதாரம் பூசிய பெண்மணிகள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ் குருமார்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு இருப்பார்கள். வாணி மஹாலில், ட்ராமா ஆரம்பித்து, காத்தாடியும், எஸ். வீ. சேகரும், Y G மகேந்திராவும் ஜமாய்த்துக் கொண்டு இருப்பார்கள்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வராமலே, அரசியலில் இருந்து விலகியது போல், சங்கீத சீசன் ஆரம்பிக்காமலே முடிந்து விட்டது.

நான் சென்னை வந்து,  எல்லா வருடங்களிலும் சங்கீத சீசனில் கலந்து கொண்டு பல கச்சேரிகள் கேட்டு இருக்கிறேன். CA படித்த காலத்தில், படிப்பு, படிப்பு என்று இருந்ததனால், இந்த விஷயங்களுக்கு சான்ஸ் இல்லை. ஒரு ரவுண்டு, பெங்களூர், மும்பை, துபாய் என்று சுற்றி திரும்பவும் சென்னை வந்து முருகப்பா குழுமத்தில் வேலை கிடைத்து, அப்பாடா, என்று மூச்சு விட்டபிறகு, சங்கீதக் கச்சேரி பக்கம் என் காதுகளை அலைய விட்டேன். செம்மங்குடியில் பிறந்தது, ஸ்ரீனிவாச அய்யர் எதுத்தாதில் குடி இருந்தது,  என் அப்பாவின், அபார சங்கீத ஆர்வம், (மிக நன்றாகப் பாடுவார், சோமு என்றால் இன்றும் அவருக்கு கண்ணீர் வரும். மதுரை சோமுவின் சங்கீதத்தில் கரைந்ததவர். இன்றும் கரைந்து கொண்டு இருப்பவர்).

சென்னைக்கு குடி வந்தவுடன் எனக்கு மயிலாப்பூர், மந்தவெளிப்பாக்கம், மந்தவெளி சுற்றியே வாசம் செய்து வந்ததால், சங்கீதக் கடலை அள்ளி, அள்ளிக் குடிக்கும் பேறு பெற்றேன். சுற்றி வர சங்கீத சபாக்கள் நிறைந்து இருப்பதால், எப்படியாவது வாரத்திற்கு/மாதத்திற்க்கு என்று ஏதாவது ப்ரோக்ராம் நடந்து கொண்டே இருக்கும். உபன்யாசமா, நாம சந்கீர்த்தனமா, ராதா கல்யாணமா, திடீரென்று “தமிழும் நானும்” என்றும் சஞ்சய் ஆரம்பித்தால், “சஞ்சையும் நானும்” என்றும் கிளம்பி விடலாம்.. போதாதற்கு “ஹயுமர் க்ளப்” என்று எங்கள் ஊர் பக்கத்து “அரசவனங்காடு” ஸ்ரீ/ சேகர் ஒரு ப்ரோக்ராம் வைத்தால் அதிலும் ஆஜர். நாத இன்பம், ஆர்,கே கன்வென்ஷன் ஹால் எல்லாமே. “ஏழைகளின் சங்கீத வித்வத் சபை”. வாரா வாரம் யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள், இங்கே. சங்கீதம் தழைத்து ஓங்கும் இடம் என்றால் சத்தியமாக எங்கள் மயிலாப்பூர் தான்.

என்னதான், மைலாப்பூர் மக்கள் புலம் பெயர்ந்து, நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என்று போனாலும், மைலாப்பூரிலேயே இருக்கும் இசை ரசிகர்கள், கற்பகம், கபாலி ஆசி பெற்றவர்கள்.

கொரோனா புரட்டிப் போட்டதில், டிசம்பர் சங்கீதம் சத்தியமாக ஆடிப் போனது உண்மை. சுமார் 5௦௦௦ கச்சேரிகள் நடக்கும் டிசம்பர் மாதத்தில் 5௦ கச்சேரிகள் கூட, அதுவும் கம்பயூட்டரில், “லைவ்” வீடியோ என்றும், பணம் கட்டினால் “லைவ்” ஆகவும் பார்க்கலாம், பிறகும் பார்க்கலாம் என்ற “வீட்டுக்குள்ளேயே” சங்கீத நிகழ்சிகளை கொண்டு வந்தார்கள்.

சாதாரணமாக, பாரதீய வித்யா பவன் தான் முதலில் கச்சேரிகள் ஆரம்பிக்கும். அது இலவசம் என்பதாலும், சஞ்சய் தவிர எல்லா முன்னணி, பாடகர்கள் பாடுகிறார்கள் என்பதாலும், டி வீ எல்லாம் வைத்து, கூட்டத்தை சமாளிப்பதாலும், என்னுடைய வீட்டிலிருந்து 1௦ நிமிடம் என்பதாலும். முக்கால்வாசி எல்லா கச்சேரிகளிலும் நான் இருப்பேன்.

எனக்குப் பிடித்த இடம் பா.வி.பவனம்தான், ஏனெனில், மயிலாப்பூர் வாசிகளான நாங்கள், படி தாண்டா பதிகள். எங்களுக்கும், கிருஷ்ணா கான சபாவோ, தியாக பிரஹ்ம காண சபாவோ, டிசம்பரில் முளைக்கும் ஹபிபுல்லா ரோடு ஹால் கச்சேரியோ, இன்போசிஸ் ஹால் கச்சேரியோ, பாகிஸ்தான் போல. நாங்கள் போக மாட்டோம்.

மேலும், பா.வி.பவேனில் என்ன சௌகர்யம் என்றால், வாசல் வரை சேர் போட்டு இருப்பார்கள். நினைத்தால் ஒரு பாட்டு கேட்டு அப்படியே எழுந்து வந்து விடலாம். மெயின் உருப்படி ராகம் வாசித்து வயலின் வாசிக்கும்போது, கொஞ்சம் கறிகாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். தனி ஆவர்த்தனம் போது, கற்பகாம்பாளை போய் பார்த்து ஒருசுத்து சுத்திவிட்டு வந்து விடலாம்.

மற்றொரு இடம், NGS. நாரத கான சபாவின் “சான்னித்தியம்” எனக்கு ரொம்ப பிடிக்கும். சுவாமி ஹரிதாஸ் கிரி சுவாமி ஆரம்பித்ததினால் இருக்கலாம். சத்குரு ஞானாநந்தரின் பெரிய படம் இருப்பதினாலோ என்னவோ, ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் நம்மையே பார்ப்பது போல இருக்கும்.

அது இந்த தடவை, பா.வி.ப புலம் பெயர்ந்து, கீழ்பாககத்தில் அருகில் எதோ ஒரு பள்ளியில் நடத்தினார்கள். மயிலாப்பூர் இருந்து, பஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணுவதாகவும் சொன்னார்கள். கூட்டம் வந்ததா என்று தெரிய வில்லை.

அப்போ அப்போ, யூ டியூபில், சில கச்சேரிகளை கேட்க முடிந்தது. சங்கீத வித்வத் சபையும், 90 நிமிடங்களுக்கு ஒரு கச்சேரி என்று போட்டார்கள். அதற்கு ரூ 3௦0 என்று நிர்ணயம் செய்தார்கள். ஒரு நாளைக்கு இரு கச்சேரிகள் கேட்க 300 ரூபாய் போய், ஒரு கச்சேரிக்கு என்று வைத்தார்கள். நான் கிட்டகேயே போகவில்லை. அகாடமியில், விக்னேஷ் ஈஸ்வர் மற்றும் கேட்டேன். சஞ்சையின் “தமிழும் நானும்” கேட்டேன்.. என்னுடைய டி.சீ முடிந்து விட்டது.

ஆக மொத்தத்தில், எனக்கு ஒரு சங்கீதப் பிடிப்பு இல்லாத சங்கீத சீசனாகப் பொய் விட்டது.

இந்த கொரோனா டயத்தில், நிறைய கச்சேரிகள் அந்தக் காலத்து, பாடகர்கள், பாடியதை, (புதுசு, புதுசாக யூ டியூபில் “அப்லோட்” செய்து கொண்டே இருந்தார்கள். அதனால்) கேட்கும் பாக்கியம் கிடைத்தது. செம்மங்குடி முதல் எம். எஸ், ஜி.என்.பீ, சேஷகோபாலன், டி எஸ் கல்யாணராமன் என்று பல பாடகர்களின் அருமையான் கச்சேரிகள் கேட்கும் பேறு பெற்றேன். அதற்க்கு நான் “கொரோனாவுக்கு” நன்றி சொல்ல வேண்டும். திடீரெண்டு காலையில் மாலியின் “கீரவாணி” கேட்டேன். கண்களில் இரு சொட்டு கண்ணீர்.

வேறு ஒரு எண்ணமும் தோன்றியது. இந்த வருடம் இசைக் கலைஞ்சர்கள் என்ன சபதம் எடுத்துக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்ததன் விளைவு, கீழே

டி.எம் கிருஷ்ணா – “இந்த தடவையாவது, மெக்கா போய் “இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டை, ஹுசேன் (னி) ராகத்தில் பாட வேண்டும்.  கொரோனா ஒழிவதைப் பற்றி ஒரு பாட்டு எழுதி, அதை அமெரிக்காவில், கொரோனா இல்லாத ஒரு சர்ச்சில். தேவ மனோஹரியில் பாட வேண்டும்.

மகாதேவன் சங்கரநாராயணன் “  சொந்தமாக பாட்டு எழுதி பாடுவதை, நிறுத்திவிட்டு, அப்பா மாதிரி பாடாமல், நிறைய கச்சேரி செய்ய வேண்டும்

ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்:- சாரீரத்தை நன்கு வைத்துக் கொள்வது போல், சரீரத்தையும் கொஞ்சம் “நன்கு” கவனிக்க வேண்டும்

ரஞ்சனி காயத்ரி: சங்கீத கலாநிதி வாங்கும் வயது வந்துவிட்டது. இனிமேலாவது புஸ்தகத்தை வைத்துக்கொண்டு பாடாமல். நெட்ரூ பண்ணி பாடவேண்டும்

விஜய் சிவா – இந்த தடவையாவது ஒரு நடை, மியூசிக் அகாடமி போய் பேசி, அப்படியே அந்த சங்கீத கலாநிதி விருதையும் வாங்கி, குருநாதர், டி,கே ஜெயராமனுக்கு, பெருமை சேர்க்க வேண்டும்.

சஞ்சய் சுப்ரமண்யன் – நிறைய கோவில் போய் கச்சேரி பண்ணவேண்டும். கொஞ்சம் “பண விஷயத்தில்” கருணை காட்ட வேண்டும்

திருச்சூர் சகோதரர்கள்: இந்த தடவையாவது, அப்பாவைத்தவிர வேறு மிருதங்கக் காரர்களுக்கு சான்ஸ் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டும்.

 

 

 

 

Wednesday, 30 December 2020

செம்மங்குடியும் மார்கழி மாதமும்

 

இந்த சிற்றுரைக்கு - ஷ்யாமளா தண்டகமும், திருப்புகழும் என்று கூட தலைப்பு வைக்க நினைத்தேன்

மார்கழி மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை தவிர, மேற் சொன்ன இரண்டையும் பற்றி கொஞ்சம் “அசை” போடலாம் என்றுதான் இது.

நான் ஏதோ இரண்டையும் ஆராய்ந்து கட்டுரை எழுதப்போகிறேன் என்று பயப்பட வேண்டாம். என்னை இந்த இரண்டும் எப்படி என் வாழ்க்கை நீரோட்டத்தில் நின்று யோசிக்க வைத்தது/பாதித்தது என்பதைப் பற்றித்தான் இது.

செம்மங்குடியில் எங்கள் வீடு, பெருமாள் கோவிலில் இருந்து நான்காவது வீடு. மார்கழி மாதத்தில் விடியற் காலை நான்கு மணிக்கு, பாட்டு போட்டு விடுவார்கள். அதில் பல பாடல்கள், எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

உதாரணமாக, பாடகி எம், எல். வசந்தகுமாரியின் யின் திருப்பாவை. “திருப்பதி மலைவாசா வெங்கடேசா” என்ற T M சௌந்தர ராஜனின் பாட்டைச் சொல்லலாம். (இதற்க்குப் பிறகு வேறு எங்கேயும் நான் இந்தப் பாட்டைக் கேட்டதில்லை). “அங்கம் ஹரே” என்று கனகதாரா ஸ்தோத்ரமும் உண்டு

இதில் முக்கியமாக, 5 செகண்ட் வீணை வாசித்தவுடன், ஒரு பெண்மனி “மாணிக்க வீணாம் உபலாயந்திம்” என்று “பொட்டில் அடித்தார் போல” ஒரு பாட்டு ஆராம்பிப்பார்.  ஸ்லோகம் போன்று நீண்ட வரிகளோடு ஒரு 15 நிமிடம் ஒரு பாட்டு வரும். அதுதான் பின்னாளில், நான் தெரிந்துகொண்ட ஷ்யாமளா தண்டகம்.  

கொஞ்சம் ஷ்யாமளா தண்டகம் பற்றி:

தண்டகம் என்பது ஒரு செய்யுள் போன்று, அதில் 26 வார்த்தைகள், அதற்கு மேலேயும் வரும். ஒரே மூச்சில் பாடினால்தான் அது அழகாக இருக்கும். இல்லாவிட்டால் நமக்கு தொடர்ந்து படிப்பது கஷ்டமாகக் கூட இருக்கும். இது ஒரு செய்யுள் போல இல்லாமல், உரை நடை போல கூட இருக்கும்.

இதை இயற்றிவர் மஹாகவி காளிதாசன். பாரதியார் “கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும் தெரியாமல் போயிற்று” என்று பெருமையாகச் சொல்லும் ஒரு புலவர்.  அம்பாளின் அருளுக்கு ஏங்கி, அதைப் பெற்றவுடன், பீறிட்டுக் கொண்டு வந்தது இந்த ஷ்யாமளா தண்டகம். மிகவும் பட்டினி கிடந்து இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கு, சோறு கிடைத்தால் எப்படி சாப்பிடுவான். அது போல்.

திரும்பவும் செம்மங்குடி:

எனக்கு செம்மங்குடியில், கோவிலில்,  இந்தப் பாட்டு ஆரம்பித்தவுடன், கடுப்பாக இருக்கும். “யாராவது மார்கழி மாதத்தில் விடியற் காலை 5 மணிக்கு மூச்சு விடாமல் பாடுவார்களா ?  (அரைத்தூக்கத்தில் ரசித்த ஸ்லோகமும் இதுவே..என்பது வேறு விஷயம்)  இவ்வளவு நீளமான வார்த்தைகள். யாரு இந்த பாடும் அம்மா !!!, இப்படிப் படுத்தறாளே”, என்று இருக்கும். போதாக்குறைக்கு, சிவன் கோவிலில் இருந்து, விஸ்வநாத ஆசாரி தன் குழுவோடு “தோடுடைய செவியன்” என்று பாடிக்கொண்டே வருவார்கள். ஜால்ரா வேறு. கோவில் மணி மாதிரி.  என் வீட்டைக் கடந்து போனபின்பு, “அப்பாடி” என்று இருந்தால், “u turn”  போட்டு, “தில்லை வாழ் அந்தணர்க்கு அடியார்க்கும்” என்று பாடிக்கொண்டு செல்வார்கள். போதாதிற்கு, சீர்காழி கோவிந்தராஜன் வேறு “சின்னஞ்சிறு பெண் போலே” என்று பாட..... (சீர்காழி பாடினால், இந்தப்பக்கம் மணக்கால் அய்யம்பேட்டை, அந்தப்பக்கம் சேங்காலிபுரம் வரை கேட்கும்)

இதை விட கோவிலில் பாட்டு போடும், record player என்பது ஒரு மினி  ஜெனேரேடர் மாதிரி இருக்கும்.  அதில் வட்டமாக ஒரு  சாதனத்தைப் போட்டு. ஒரு  கைப்பிடி மாதிரி இருக்கின்ற ஒன்றில் ஒரு ஊசியைப் போட்டு, அந்த ரெகார்ட் (தட்டில்) மேல் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும்.   பாட்டு முடிந்தவுடன் அந்த ஊசியைத் தூக்கிப் போட்டு வேறு ஒரு ஊசி (அடுத்த ரெகார்டுக்கு). அது பாட ஆரம்பிக்கும்.  இதில் என்ன வேடிக்கை என்றால்,  அந்த ஊசி ஒரு சின்ன டப்பாவில் (பொடி டப்பா  மாதிரி)  இருக்கும் அந்த டப்பா காலியானவுடன், அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். அதற்க்கு நாங்கள் அடித்துக் கொள்வோம்.   முன்னமேயே "ரிசர்வ்" செய்து வாங்கி கொள்வோம்.  இப்போது  நினைத்தால் அதெல்லாம் பைத்தியக்காராத் தனமாகக் கூட தோன்றும்.  ஆனால் அந்த வாழ்க்கையின்  நினைப்பே சுகமானது.

இப்போதும் அதே மாதிரி டப்பா இருக்கிறது. அதை  இரண்டு பகுதியாகப் பிரித்து,  சாப்பிடுவதர்க்கு முன்,  சாப்பிட்ட பின் என்று மாத்திரை வைத்து இருக்கிறேன்.  !!!!

அரைப் பரீட்சை முடிந்து, ஸ்கூல் லீவ் விட்டபிறகு, தொடங்கும் மார்கழி மாதத்தில், விடியற்காலை தூக்கம் என்பது, ஒரு அனுபவம். அது ஏதோ எழுதினோம், போனோம் என்று இல்லாமல், ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது. அதைக் கூட அனுபவிக்காமல் இப்படி பாட்டு போட்டு கடுப்பேத்தினால் எப்படி இருக்கும் ?

மார்கழி மாதத்தில் எல்லோரும் வாசலில் கோலம் போட்டு, பூசணிப் பூவை நடுவில் அழகாக வைத்து இருப்பார்கள். வீதியே பூக்கோலம் பூண்டிருக்கும். ஓட்டு மேல் பூசணிக் கொடி படர்ந்து இருக்க, ஓட்டு மேல் ஏறி, பூ பறித்து தரவேண்டியது என் வேலை. பக்கத்து ஆத்து நாகராஜன் வீட்டில், திருடி ஒரு தடவை “சந்திராவிடம்” (நாகராஜன் அக்கா) மாட்டி கொண்டேன்.

மார்கழி மாதத்தில், நான் ஏறக்குறைய அடித்துதான் எழுப்பப்படுவேன். அப்படி அடிபடாமல் நானாகவே எழுந்த நாள், திருவாதிரை தான், சிவன் கோவிலில், களி கிடைக்கும். பல வீட்டில் இருந்து நைவத்யம் பண்ணி கோவிலில் விநியோகம். பல் தேய்த்துவிட்டு, நேரே சிவன் கோவில் குளத்தில் குளித்து விட்டு களி சாப்பிட்டுவிட்டு, ஏதோ “உலகத்தையே ஜெயித்தால் போல” ஒரு நடை நடந்து வீட்டுக்கு வருவேன்.  

தேவுடு மாமா வாத்தில் இருந்து, இந்தப்பக்கம் அப்புவாம் வரை. பிரசாதம் கொடுத்து காலி பாத்திரத்தை அவர்கள், அவர்கள் வீட்டில் சேர்க்கும் வேலை எனக்கு. அதனால் அவர் அவர்கள் வீட்டுக்குப் போய் “எக்ஸ்ட்ரா” களி வேறு. ஒரு “கட்டு” கட்டிவிடுவேன். சாஸ்த்ரிகள் பேரன் என்ற மரியாதை வேறு.   

அதைத் தவிர எங்கள் வீட்டில் "எறிச்ச கூட்டு" என்று  "மீந்து போன" கூட்டை (கூட்டு என்பது, பல வித காய்கறிகளின் சங்கமம்)  சுண்ட வைத்து ஒரு வாரம் வைத்து இருந்து பழைய சாதத்தை,  (எருமைத்) தயிருடன்  கலந்து, உருட்டி,  வலது கையில் வைத்து,  நடுவில் குழித்துக் கொண்டு, அரை கரண்டி அந்த  எ.கூட்டு வைத்து சாப்பிட்டால்,  ஏறக்குறைய சொர்க்கத்தைப் பார்க்கலாம்.  நான் பல முறை பாரத்து இருக்கிறேன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,  இது ஒன்றுமே எனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்வது போல்,  மார்கழி மாசம் முழுவதும் 4 மணிக்கு எழுந்து, ஒரு நாள் கூட விடாமல் தனுர் மாச பூஜை பண்ணிய என் அப்பா, தானும் எழுந்து, நைவேத்யம் என்று சொன்னவுடன்,  "டாண்" என்று பொங்கல் பண்ணி கொண்டு வைத்த  என் அம்மா"  ... இப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சம் சத்தியமாக விம்முகிறது.   

கோலப்போட்டியை நீங்கள் செம்மங்குடியில் மார்கழி மாத்ததில் பார்க்க வேண்டும். எத்தனை புள்ளி வைத்து கோலம் போடுவது என்று முதல் நாள் வீட்டில் ஒத்திகை நடக்கும்.  எதித்தாத்து, கணக்கு பிள்ளை மாமாவின் பெண் பத்மா,  எங்கள் வீட்டில் சசி,  ONE TO ONE .....  "சின்னதாக கோலம் போது போறும், பனியாக இருக்கிறது" என்று கரிசனப்படும்  எங்கள் அப்பா.

இன்று என் வீட்டில் செய்த "திருவாதிரை களி" யை என் வீட்டு  WATCH MAN மற்றும் அவன் மனைவி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்

 ஷ்யாமளா தண்டகமும் திருப்புகழும்:

பின்னால், சம்ஸ்க்ருதம் படிக்க ஆரம்பித்த பிறகு, சங்கீத அறிவு சற்று வளர்ந்த பிறகு, ஷ்யாமளா தண்டகத்தை கேட்க வாய்ப்புக் கிடைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் செம்மங்குடியில் கேட்ட பாட்டு இசை அரசி டி. கே பட்டம்மாள் அவர்களின் குரல் என்பது மேலும் ஒரு சந்தோஷம், சம்ஸ்க்ருத உச்சரிப்பு ஸ்பஷ்டமாக, மிகவும் அழகாக பாடி இருந்ததைக் கேட்க ஒரு புரியாத பிரமிப்பு

நான் எம்.எஸ், எம்.எல் வி போன்ற பெண் பாடகர்களின் தீவிர ரசிகன். DKP எனக்கு என்னமோ சுதந்திர பாடல்கள் “ஆடுவோமே பள்ளு” பாடுவதற்குத்தான் லாயக்கு என்று இருந்த நான், ஷ்யாமளா தண்டகத்தைக் கேட்ட பிறகு, நிறைய கச்சேரி ஆடியோ கேட்டு, “பட்டம்மாள் ஸ்கூல் சங்கீதத்தின்” ஆழத்தை கண்டு பிரமித்து நின்றேன். நான் விஜய் சிவாவிடம் சீட்டு கொடுத்து “எந்த செளுவகே” என்ற புரந்தராசரின் கிருதி பாடச் சொன்னது, பட்டம்மாள் அவர்கள் பாட்டு கேட்ட பிறகுதான்

பட்டம்மாள் அவர்கள் அந்த 5 செகண்ட் வீணை (ராகம் தன்யாசி) முடிந்த வுடன், பாட ஆரம்பித்து,  அதற்குப் பிறகு நடுவில் ராகத்தை மாற்றி, ஆரபி, பிலஹரி, சரஸ்வதி, ஸ்ரீ என்று பாடி அசத்தி இருந்தார். அதில் வித்யா பற்றி வரும் வரிகளை, சரஸ்வதி ராகத்திலும், கடைசியில் ஸ்ரீ என்று மகாலக்ஷ்மியைப் பற்றி வரும் இடத்தில ஸ்ரீ ராகத்திலும் பாடி இருப்பார்.

மிகவும் கஷ்டமான, மூச்சு விடாமல் சொன்ன ஒரு உரைநடை போன்ற இது. நான் புத்தகம் வைத்துக் கொண்டு, யூ டியுப் உதவியுடன் DKPயின் குரலில் ஷ்.த கேட்ட பிறகு கூட, அவருடன் தொடர்ந்து சொல்ல முடியவில்லை. இதற்கு அவர் எவ்வளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும், தப்பு இல்லாமல் சொல்வதற்கு. !!! 

அதே போன்ற அனுபவம், எனக்கு திருப்புகழிலும் நடந்தது. அங்கே அம்மா காளிதாசனுக்கு உதவி செய்ய, இங்கே பிள்ளை முருகன், அருணகிரிக்கு..

முத்தை என்று எடுத்துக் கொடுக்க, “முத்தைத்திரு” என்று ஆரம்பித்து  இருக்கிறார்.  தமிழின் அந்த “வீச்சு” அபாரம். இதை பலர் T M சௌந்தரராஜன், ஷண்முகப்ரியா ராகத்தில் பாடி கேட்டிருக்கலாம். ஆனால் குருஜி ராகவன் அவர்கள், கௌளை ராகத்தில் பாடியிருக்கும் பாடல் அது.

இந்தப் பாடலைப் பார்த்து ஒழுங்காகப் படித்தாலே போதும். தமிழ் தாய் மனங் குளிர்ந்து விடுவாள். அருணகிரியின் பல பாடல்கள், பார்த்துப் பாடுவதே மிக கஷ்டம். என்கண் என்ற செம்மங்குடி அருகில் உள்ள ஊரில் உள்ள முருகனைப் பற்றி ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். இதை ரஞ்சனி ராகத்தில் பாடுவோம். இப்படி எல்லாம் கூட ஒரு தமிழ் வரிகள் இருக்க முடியுமா என்று மலைக்கும் விஷயம்.  செம்மங்குடியில் பிறந்த, என் சித்தி சரஸ்வதி என்ற  சசிக்கு,  நிறைய திருப்புகழ் அத்துபடி.

இறை அருள் இருந்தால் எது தான் முடியாது ? செம்மங்குடியில் நான் படித்த தமிழ், எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்கள், போன மாதம் மறைந்த என் பெரியப்பா, ஸ்ரீ பாலக்ருஷ்ண தீட்சிதர் உட்பட,  போட்ட தமிழ் விதை, இது போன்ற அற்புதமான ஸ்லோகங்களை விமர்சிக்கும் அளவு, தைர்யத்தைக் கொடுத்து இருக்கிறது.

 கொசுறு:

இந்த நூற்றாண்டிலும், குருஜி ராகவன் போன்ற மகத்தான பெரியார்கள், திருப்புகழை உலகம் முழுவதும் பரவச் செய்து, மிகவும், மகத்தான சேவை செய்து இருக்கிறார்.

நான் துபாயில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அங்கு இருந்த, பெண்மணி, என் பெண்ணுக்கு அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தாள். (குருஜியின் சிஷ்யை). கடைசி வரை ஒரு பைசா கூட வாங்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

Sunday, 28 June 2020

ஸந்த்யாவந்தனத்தை விட்ட பாபத்தை எங்கே தொலைப்பது ?


பிராஹ்மணர்கள் மூன்று காலங்களும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்பதும், ஸ.வ பண்ணினால் தான் பிராஹ்மணன் என்றும் பண்ணாவிட்டால் மற்ற பித்ரு கார்யங்களை (தர்பணங்களை} செய்ய யோக்யதை இல்லை என்பதை மஹா பெரியவா, சிருங்கேரி பெரியவா மற்றும் பல உபன்யாசகர்கள் சொல்லி கேட்டாகி விட்டது. நாம் திருந்தியதாக தெரியவில்லை. அதற்க்கு மாறாக சிருங்கேரி பெரியவரிடமே “ஸந்த்யாவந்தனத்திற்க்கு மாற்று உண்டா” என்று கேட்கிறோம். (வீடியோ whatsapp ல் வந்தது)

காயத்ரீ யை விட ஒரு உயர்ந்த மந்த்ரம் கிடையாது. அம்மாவை விட ஒரு உயர்ந்த தெய்வம் கிடையாது என்பது வேத வாக்கு.

கொரொனா காலத்தில், வேறு வேலை இல்லாததால், ஸந்த்யாவந்தனம் பண்ண ஆரம்பித்து, ஸ்ரத்தையாக செய்து கொண்டிருப்பவர்களை நான் அறிவேன்.  (அதற்க்கு நாம் கொரொனாவுக்கு thanks கூட சொல்லலாம் !!!!)

ஸ்ரீ. சுந்தர குமாரின் அருமையான ஒரு உபன்யாசத்தில், ஸந்த்யாவந்தனம் பண்ணாத பாவத்தை எங்கே தொலைப்பது என்பது பற்றி பேசினார். அதில் இருந்து சில துளிகள்.

“பஞ்ச மஹா பாதக விதிரிக்தனாம்” என்று ஆவணி அவிட்டம் அன்று சொல்லும் மகா சங்கல்பத்தில் (மந்த்ரத்தில்) ஒரு வாக்யம் வரும். பஞ்சமகா பாதகங்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பிராயச்சித்த மகா சங்கல்பம் என்று நினைத்தால் தவறு. பஞ்ச மகாபாதகங்களை விட்டுவிட்டு மீதி பாபங்களுக்கு பிராயசித்தம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ப.ம,பாதகங்களுக்கு பிராயசித்தம், ரிஷிகளால் கூட சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.

ப.ம.பாதகங்கள் என்ன என்பதையும் அதற்கு என்ன பண்ணலாம் என்பதையும் பார்ப்போம்:  ப.ம.பாதாகம் என்று பல உண்டு. ஆனால் அந்தப் பாவத்தை வேறு ஒரு ப.ம.பாதகம் செய்பவனிடம் சேர்த்து விடலாம். அதற்க்கு தர்ம சாஸ்த்ரம் இடம் கொடுத்து இருக்கிறது. என்ன புரிய வில்லையா. மேலே பார்க்கலாம்:  (இது இந்த share transfer மாதிரி....}

முதலில், ஆரம்பிப்பது, --காலையில் தூங்கிக்கொண்டிருப்பவனிடம் இருந்து. காலயில் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டு இருப்பது மகா பாபம்.

-காலையில் தூங்குபவன், தன்னுடைய பாபத்தை சாயங்காலம் படுத்துக்கொண்டிருந்தவ்னிடம்  தள்ளினான்.

-சாயங்காலம் படுத்து தூங்கிக்கொண்டு இருப்பவன் –நகம் சொத்தையாகப் போனவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். . தங்கத்தை திருடியவனுக்கு நகம் சொத்தையாகப் போய்விடும். (அதனால் தங்கத்தை திருடுவது பாபம் என்பது அறிக)

-சொத்தை நகம் உடையவன் சொத்தைப் பல் உடையவனிடம் கொண்டு இந்த பாவத்தைத் தள்ளினான். பல் சொத்தையாகப் போவது என்பது “சோம பானம், சுரா பானம்” போன்ற திரவங்களைப் குடிப்பதால் வருவது.

-சொத்தைப் பல் உடையவன் “அக்ரதிதீஷூ” விதம் தள்ளினான். அக்ரதிதிஷூ என்பது சம்ஸ்கிருத பதம். இந்தப் பதத்திருக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரே வரியில் வாக்யம் இருக்குமா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் எவ்வளவு உயர்வான பாஷை என்பது இதையெல்லாம் படிக்கும்போது தெரியவரும். அக்ரதிதிஷூ என்ற பதத்திருக்கு “அக்காவுக்கு முன்னால், தங்கையை விவாகம் செய்து கொள்ளக்கூடியவன்” என்று அர்த்தம்.

அப்படிக் கல்யாணம் செய்து கொண்ட பர்த்தாவிடம், சொத்தைப் பல் உடையவன், தன் பாவத்தை தள்ளினான்

-அக்ரதிதீஷூ பாபத்தை அடைந்தவன், “பரிவேத்தா” (சம்ஸ்க்ருத பதம்) விடம் தன் பாபத்தைத் தள்ளினான்.  இந்த வார்த்தையும் சம்ஸ்க்ருத அழகு பதம். “பரிவேத்தா” என்ற பதத்துக்கு, “அண்ணா கல்யாணம் செய்து கொள்வதற்க்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பிக்கு” என்று அர்த்தம்.  இதெல்லாம் மகா பாபம். அண்ணா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், தம்பியும் சும்மா இருக்க வேண்டியதுதான். அப்படி மீறி செய்து கொண்டால் நரக பிராப்தி...
பரிவேத்தா என்ற பதத்தை ராமாயணத்தில் வாலி, ராமனிடம் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது:

“ராஜஹா, பிரஹ்ம்ஹா, கோக்ணஹா, சோரஹா, பிராணிவதே ரதஹா, நாஸ்திகப் பரிவேத்தா ச சர்வே நிரயகாமினஹா..”   (4-17-35)
இதன் பொருள்:

“ராஜாவை, பிராஹ்மணனை, பசுவை, கொன்றவர்கள், மற்றும் திருடன், உயிருடன் இருக்கும் பிராணிகளை வதம் செய்பவன், நாஸ்திகன், அண்ணன் திருமணம் செய்யாமல் இருக்கும்போது, திருமணம் செய்யும் தம்பி, - எல்லோரும் நரகத்துக்குப் போவார்கள்” – வாலி ராமனிடம் கூறுவது...

-“பரிவேத்தா” தோஷம் அடைந்தவன் “வீரஹத்தி” தோஷம் அடைந்தவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். இந்த பதத்திற்கு - ஏதோ வீரனை கொலை செய்வது என்பது அர்த்தமில்லை. பரம்பரையாக இருக்கும் தர்மத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வீரகத்தி தோஷம் அடைகிறான்.  வீரஹா என்ற பதத்துக்கு “கர்மஸூ குஷலஹா” என்று அர்த்தம். அக்னிஹோத்ரத்தை எடுத்துக் கொண்டு அதை பாதியிலே விட்டு விட்டால், அவன் “வீரகத்தி” தோஷம் அடைந்தவன் ஆகிறான். அக்னிகோத்ரம் என்பது மிகவும் கடினமான, சிரம சாத்யமான ஒரு அனுஷ்டானம். யாராவது கோடியில் ஒருவர்தான் பண்ண முடியும். ஆயிரம் பிராஹ்மன ஜன்மம் எடுத்தால் தான் யஜ்வாவாக (அக்னிஹோத்ரம்) முடியும். கோடி ஜன்மா எடுத்தால்தான் ஸந்யாஸி ஆகும் பாக்யம் கிடைக்கும்.  (சன்யாஸக் கோடி ஜன்மஸூ:)  அக்னி ஹோத்ரம் “ஆதானம்” பண்ணி விட்டால் அதை கடைசி வரை ரக்ஷிக்க வேண்டும். அக்னிஹோத்ரம் அக்னியாக இருந்தாலும் சரி (ஸ்ரௌதாக்னி), ஒளபாசனத்தில், ஸ்மார்த்த அக்னி யாக இருந்தாலும் சரி.  (ஸ்ரௌத, ஸ்மார்த, விஹித நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா..-யக்ஞோபவீத மந்த்ரம்-இதிலிருந்து வந்ததுதான்).

“நாம் இந்த மந்த்ரங்களைச் சொல்லி பூணல் போட்டுக் கொள்கிறோம். ஆனால் ஸ்ரௌத, ஸ்மார்த்த,- இரண்டையும் விட்டுவிட்டோம். விவாஹ மந்த்ரத்தில் – “ஜன்மம் முழுவதும் ஔபாசனம் செய்கிறேன், பரமேஸ்வரா” என்று மந்த்ரம் சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த வேளையே ஔபாசனம் செய்வது இல்லை.” நாம் அதற்கு கொஞ்சமும் முக்யத்துவம் கொடுப்பது இல்லை, என்பது சோகமான உண்மை.”

அதனால்தான், விதுர நீதியிலும், யாயாதி தர்மத்திலும் சரி- 4 விஷயங்கள் சரியாகச் செய்தால் அபயத்தைக் கொடுக்கும். சரியாகச் செய்ய வில்லை என்றால் பயத்தைக் கொடுக்கும். அதில் அக்னிஹோத்ரம் ஒன்று.

கிருஷ்ண பரமாத்மா ஆறு பேருக்கு நமஸ்காரம் செய்கிறார். நித்யம் அன்ன தானம் செய்பவர்கள், பால்யப் பிராயத்திலே அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், பதிவ்ரதைகள், சாந்த்ராயணம் போன்ற விரதங்களை எடுத்து உபவாஸம் செய்பவர்கள், வேதாந்தந்தம் கற்றுத் தேர்ந்த ஞாநிகள், சதாபிஷேகம் ஆன தம்பதிகள்... என்று.

இந்த வீரகத்தி தோஷம் அடைந்தவேனிடம், பரிவேத்தா, தன் பாவத்தை தள்ளினான். 

-வீரகத்தி பாபம் செய்தவன் பிரஹ்மஹத்தி பண்ணியவன் மேல் தன் பாபத்தைத் தள்ளினான் !!!

பிரஹ்மஹத்தி என்றால் என்ன ? பிரஹ்மஹத்தி   என்றால் பிராஹ்மணனை கொலை செய்தவன் என்று ஆர்த்தமாகுமா ?  என்றால் – உண்மைதான். அது ஒரு விதமான பிரத்யக்ஷமான பிரஹ்மஹத்தி. பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு பல அர்த்தங்கள். பரப்ரஹ்மம் என்று ஒரு அர்த்தம், பிராஹ்மணன் என்று ஒரு பொருள். வேதம் என்று ஒரு அர்த்தம் உண்டு.  மூன்று வேதங்களின் சாரமாக காயத்ரியை ரிஷிகள் அனுக்ரஹம் செய்து கொடுத்தார்கள்.  அந்த காயத்ரியை எவன் ஒருவன் ஜபம் பண்ணாமல் விட்டு விடுகிறானோ, ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் “பிரஹ்மஹத்தி தோஷத்தை அடைகிறான்” என்று வேதம் சொல்கிறது.

ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் தனக்கு வந்த பாபத்தை எங்கு போய் தள்ளினான் என்று வேதம் சொல்லவில்லை.

The buck ends here.

அதனால் ஸந்த்யாவந்தனம் பண்ணாத பிராஹ்மணன், தான் அனுஷ்டானம் பண்ணாத பாபத்தை சுமப்பதைத் தவிர, முன்னமே 7 பேரின் பாவத்தையும் சேர்த்தே சுமக்கிறான்.

இதைவிட ஸந்த்யாவந்தனம் எவ்வளவு முக்கியம் ? என்று சொல்வதற்க்கு ஒரு வியாக்கியானம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை !!!

முடிவுரை:

தேவதைகள் மந்த்ரத்திற்கு கட்டுப்படுபவர்கள். அந்த மந்த்ரம் பிராஹ்மணனுக்கு கட்டுப் படுகிறது.
ராமாயணத்தில், சீதை அசோக வானத்தில் ராமனின் பெருமையை ராவணிடம் சொல்லும்போது,

अहमौपयिकी  भार्या तस्यैव वसुधापतेः।। व्रतस्नातस्य विप्रस्य विद्येव विदितात्मनः। 5.21.17।।

நன்றாக ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை
ஒழுங்காகச் செய்து (vratasnaatasya) தேஜஸ் ஆக இருக்கும், தபஸ்விக்கு (விப்ரஸ்ய) எப்படி சகல வித்யைகளும் சர்வ சாதாரணமாக வருமோ, அப்படி நான் ராமனுக்கு சொந்தமானவள்”  என்று சீதை ராவணனிடம் சொல்கிறாள்.

ஆங்கிலத்தில்:

"I am alone the lawful wife of the lord of the earth like the knowledge of the Vedas which rightfully belongs to a wise brahmin who has realised the self after having had his ceremonial bath (as a token of celibacy) and having observed strict vows during the period of his study.

தீர்த்தம் இல்லாவிட்டால், மணலைக்கூட அர்க்யப் பிரதானமாகச் செய்யலாம் என்று ஸ்ரீ. அனந்த ராம தீக்ஷிதர் சொல்கிறார். ஸ்வதர்மத்தை விடவே கூடாது.

கொரொனா காலத்தில் இத்தனை பூஜைகள், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சஹஸ்ர காயத்ரி நடந்து கொண்டிருக்கின்ற போதும் கூட, அதனுடைய  தீவிரம் குறையவே இல்லை. இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய செயல்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இதற்கு எல்லாம் ஒரே மருந்து “காயத்ரி உபாசனை”.  அதை நாம் விட்டுவிட்டோம். அந்த பாபத்தின் விளைவு தான் இது.  நம் நாட்டில் இது குறைவாக இருப்பது இன்னும் மகா பெரியவா போன்ற பல யோகிகளின் இன்றும் இருந்து கொண்டு “அரண்” மாதிரி நமது தேசம் அழியாமல் காத்துக் கொண்டு இருப்பது,  மற்றும் இன்னும் காயத்ரியை மற்றும் இதர அனுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு இருக்கும் பிராஹ்மணர்கள்..


Monday, 22 June 2020

ஆதி சங்கரரும் முருகனும் (புஜங்கத்தில் தந்தையர் தினம்) (Father’s Day)


ஆதி சங்கரர் தமிழ் கடவுளான முருகனைப் பற்றி அருளிய பாடல்களில்/, கிரந்தங்களில் மிக முக்கியமானது, சுப்ரமண்ய புஜங்கம். 

ஆதி சங்கரர், விநாயகர், சிவன், தேவி, விஷ்ணு, ஸூர்யன், குகன் என்று ஆறு வடிவங்களில் உபாசனை புரியும்படி உபதேசிக்கிறார்கள். அதில் முருகனுக்காக பாடிய சுப்ரமண்ய புஜங்கம் மிகவும் விஷேஷமானது. ஏனெனில், கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆதி சங்கரர் பாடிய பாடல் இது.

கடுமையான வயிற்று வலி வந்து, மனமுருகி பாடி, இறைவனின் அருளால், நோய் நீங்கி குணமானவர்கள் 3 மகான்கள்.
ஆதி சங்கரர்- சுப்ரமண்ய புஜங்கம்
நாராயண பட்டத்ரீ- நாராயணீயம்
நாராயண தீர்த்தர்- கிருஷ்ண லீலா தரங்கிணி          

இதில் முதல் இருவரும், வயிற்று வலியுடன் பாடிய பாடல்கள். (ஆதி சங்கரர் பன்னீர் இலையில் வீபூதி எடுத்து தரித்துக் கொண்டவுடன் அவர் வயிற்று வலி சரியாகி விட்டது. பிறகுதான் புஜங்க பாடினார் என்ற ஒரு school of thought ம் உண்டு}. சத்குரு நாராயண தீர்த்தர், வயிற்று வலியால் அவதிப்பட்டு, காவேரி ஆற்றுப் படுகையில் உள்ள விநாயகர் சன்னிதியில் உறங்க, கனவில், நாளை காலை உன் முன் முதலில் எது தோன்றுகிறதோ, அதன் பின்னால் செல்வாயாக” என்று கட்டளை பிறக்க, அடுத்த நாள், ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று தோன்ற, அதன் பின்னால் சென்று பூபதி ராஜ புரம்” என்ற வரகூர் க்ஷேத்திரதித்தில் வந்து அடைந்த பின் அவருக்கு வயிற்று வலி தீர்ந்து விடுகிறது. பிறகு அவர், கிருஷ்ண லீலையை விவரிக்கும் ஸ்ரீமத் பாகவத்தின் 10 வது பிரிவை, தரங்கிணி என்று பாடலாய் பாடுகிறார்.

பட்டத்ரீ கதை மிகவும் கஷ்டமானது. அவர் வயிற்று வலி துடிக்க துடிக்கப் பாடுகிறார். ஒவ்வொரு பகுதி முடியும்போது, “வயிற்று வலியால் கஷ்டப்படுகிறேனே குருவாயூரப்பா என்னை காப்பாற்ற மாட்டாயா ?” என்று அரற்று.கிறார்.  மூன்றாவது தசகம் படித்துப் பாருங்கள். புரியும்.

திரும்பவும் சு.பு க்கு வருவோம்

அபினவ குப்தர் ஆதி சங்கரரிடம் பல வாதங்கள் செய்து தோற்றபின், ஆபிசார வேள்வி செய்து, ஆதி சங்கரர்க்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியதும், கோகர்ணத்தில் திருத்தலத்தில் தங்கி இருந்த இவருக்கு ஈசன் கனவில் தோன்றி, முருகப்பெருமான் குடியிருக்கும் திருசெந்தூர் சென்று தரிசித்தால் உனக்கு வயிற்று வலி குணமாகும் என்று சொல்ல, திருசெந்தூர் வந்து, பன்னீர் இலை வீபூதியை பூசிக்கொண்ட பின் அவருக்கு தீரா வயிற்று வலி மறைந்தததும் பல பேருக்குத் தெரிந்த கதை

சுப்ரமண்ய பூஜங்கத்தைப் பற்றி நான் விரிவாக எழுதப்போவதில்லை. ஆனால் 18 வது ஸ்லோகம் மட்டும் கொஞ்சம் விசேஷம். இதில் “பரமேஸ்வரன், குழந்தாய், இங்கே வா, என்று பரிவுடன் கூப்பிட, தாயின் மடியில் இருந்து குதித்து, தந்தையை அடைந்து, தந்தையான சிவபெருமானால் உடல் முழுதும் அடங்க அணைக்கப் பெற்றவருமான பால வடிவிரான குமாரனை வழி படுகிறேன்.” என்று பொருள்பட ஆதி சங்கரர் எழுதி இருக்கிறார்.  (வைத்ய ஸ்ரீ ராதாக்ருஷ்ண சாஸ்த்ரி அவர்களின் விளக்கம் இது)

சாதாரணமாக ஸ்லோகங்களில், புராணங்களில், அம்மா கூப்பிட்டு பிள்ளை ஓடி வந்து அணைத்துக்கொள்வது என்பது பிரசித்தமான ஒன்று. நீங்கள் வைதீஸ்வரன் கோவில் போனால், அடிக்கடி மூத்துக்குமாரஸ்வாமி, பாலாம்பிகாவிடம் ஓடிச் சென்று அம்மாவுடன் இருப்பார்.  வைத்யநாதஸ்வாமி டாக்டர் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அப்பா பிள்ளையை கொஞ்சினார் என்று நான் பார்தது இல்லை. நடை முறையில் கூட, தகப்பன் பிள்ளை நடுவே ஒரு புரிதல் என்பது இருக்காது. மனதிற்க்குள் பாசம் இருந்தாலும், இருவரும் வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த ஸ்லோகம்...  father’s day க்காகவே ஆதி சங்கரர் எழுதியைப் போல் உள்ளது.

சம்ஸ்க்ருததில், சுப்ரமண்ய ஸ்வாமி மேலே, நிறைய ஸ்லோகங்கள் உள்ளது. ஸ்ரீ. ஆனந்தராம தீக்ஷிதர் அவர்கள் “ஜெய மங்கள ஸ்தோத்ரம்” என்று தடி தடியாக 4-5 புத்தகங்கள் போட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தை, திருவல்லிக்கேணியில் ரோடில் உள்ள புத்தகக் கடையில் பார்த்தேன். பதறிப் போய் வாங்கினேன். அதில் “குக பஞ்சரத்னம், சுப்ரமண்ய மங்களாஷ்டகம், மூல மந்த்ரஸ்தவம், கத்யம், பஞ்சக ஸ்தோத்ரம், பஞ்ச ரத்னம் என்று மானாவாரிக்கு ஸ்லோகங்கள் உள்ளது. ஆனால் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தை தவிர ஒன்றே ஒன்றில் தான் முருகனைக் குறிப்பிடுகிறார்: அது -

சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என்ற ஒரு பகுதியில், சுப்ரமண்யருக்காக அவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்று உள்ளது, அதன் அர்த்தத்தை முதலில் பார்ப்போம்:

முன்பு தாரகன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைப் போரில் வென்று அவர்களுக்கு அளவு கடந்த இன்னல்களை விளைவித்துக் கொண்டிருந்தான். ஆத்தேவர்களின் புண்ய பலத்தால் லோக மாதாவான பார்வதி தேவிக்கும், தந்தையான பரமேஸ்வரனுக்கும், ஸ்கந்தன் என்ற பிரசித்தி வாய்ந்த திருக்குமாரன் பிறந்தான். அவன் தான் கூர்மையான பாணங்களைக் கொண்டு கிரௌஞ்சம் என்ற மலையைப் பிளந்து பரசுராமருக்கு தன்னுடைய திறமையைக் காண்பித்தான். ஞானக்கடவுளாக இருப்பதால் அவன் ஸம்ஸாரமென்ற ஆழமான கிணற்றில் வீழ்ந்து தவிக்கின்றவர்களை, கரையேற்றுகின்றார். தாரகனைக் கொன்று தேவர்களின் இன்னல்களை களைந்த அந்த முருகப் பெருமான் நமக்குச் சிறந்த செல்வங்களை தந்து, நம்மக் காத்தருள்வாராக !

சம்சார சாகர அகாத கூப உதர பதித சமுத்தாரக :  - என்ற சம்ஸ்க்ருத பதம்

சம்சாரம் என்ற கடலில் (சாகர), ஆழமான (அகாத), கிணற்றின் (கூப), நடுவில் (உதர), விழுந்தவர்களை (பதித) கரையேற்றுபவராயும் உள்ள (சமுத்தாரக:) – என்ன ஒரு அருமையான ஸ்லோகம்...... 

ஆதி சங்கரர் மட்டும் இல்லை என்றால், பல நல்ல ஸ்லோகங்கள் நமக்குப் படிப்பதற்கு இருந்திருக்காது. அதுவும் கோரொனா “டயத்தில்” ஏதோ படிப்பதற்கு இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டு கொள்ளவேண்டும். ஆதி சங்கரருக்கு நாம் காலம் காலமாக நன்றி சொல்லவேண்டும். TV யின் கொடுமையிலிருந்து நம்மைக் காப்பது பகவத் பாதரின் ஸ்லோகங்களே !!!

என்னமோ “தந்தையர் தினம்” என்று கொண்டாடுகிறார்களே என்று தோன்றியது.  கைலாச மாலையிலே அரங்கேறி விட்டது த.தி.