Sunday 28 June 2020

ஸந்த்யாவந்தனத்தை விட்ட பாபத்தை எங்கே தொலைப்பது ?


பிராஹ்மணர்கள் மூன்று காலங்களும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்பதும், ஸ.வ பண்ணினால் தான் பிராஹ்மணன் என்றும் பண்ணாவிட்டால் மற்ற பித்ரு கார்யங்களை (தர்பணங்களை} செய்ய யோக்யதை இல்லை என்பதை மஹா பெரியவா, சிருங்கேரி பெரியவா மற்றும் பல உபன்யாசகர்கள் சொல்லி கேட்டாகி விட்டது. நாம் திருந்தியதாக தெரியவில்லை. அதற்க்கு மாறாக சிருங்கேரி பெரியவரிடமே “ஸந்த்யாவந்தனத்திற்க்கு மாற்று உண்டா” என்று கேட்கிறோம். (வீடியோ whatsapp ல் வந்தது)

காயத்ரீ யை விட ஒரு உயர்ந்த மந்த்ரம் கிடையாது. அம்மாவை விட ஒரு உயர்ந்த தெய்வம் கிடையாது என்பது வேத வாக்கு.

கொரொனா காலத்தில், வேறு வேலை இல்லாததால், ஸந்த்யாவந்தனம் பண்ண ஆரம்பித்து, ஸ்ரத்தையாக செய்து கொண்டிருப்பவர்களை நான் அறிவேன்.  (அதற்க்கு நாம் கொரொனாவுக்கு thanks கூட சொல்லலாம் !!!!)

ஸ்ரீ. சுந்தர குமாரின் அருமையான ஒரு உபன்யாசத்தில், ஸந்த்யாவந்தனம் பண்ணாத பாவத்தை எங்கே தொலைப்பது என்பது பற்றி பேசினார். அதில் இருந்து சில துளிகள்.

“பஞ்ச மஹா பாதக விதிரிக்தனாம்” என்று ஆவணி அவிட்டம் அன்று சொல்லும் மகா சங்கல்பத்தில் (மந்த்ரத்தில்) ஒரு வாக்யம் வரும். பஞ்சமகா பாதகங்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பிராயச்சித்த மகா சங்கல்பம் என்று நினைத்தால் தவறு. பஞ்ச மகாபாதகங்களை விட்டுவிட்டு மீதி பாபங்களுக்கு பிராயசித்தம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ப.ம,பாதகங்களுக்கு பிராயசித்தம், ரிஷிகளால் கூட சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.

ப.ம.பாதகங்கள் என்ன என்பதையும் அதற்கு என்ன பண்ணலாம் என்பதையும் பார்ப்போம்:  ப.ம.பாதாகம் என்று பல உண்டு. ஆனால் அந்தப் பாவத்தை வேறு ஒரு ப.ம.பாதகம் செய்பவனிடம் சேர்த்து விடலாம். அதற்க்கு தர்ம சாஸ்த்ரம் இடம் கொடுத்து இருக்கிறது. என்ன புரிய வில்லையா. மேலே பார்க்கலாம்:  (இது இந்த share transfer மாதிரி....}

முதலில், ஆரம்பிப்பது, --காலையில் தூங்கிக்கொண்டிருப்பவனிடம் இருந்து. காலயில் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டு இருப்பது மகா பாபம்.

-காலையில் தூங்குபவன், தன்னுடைய பாபத்தை சாயங்காலம் படுத்துக்கொண்டிருந்தவ்னிடம்  தள்ளினான்.

-சாயங்காலம் படுத்து தூங்கிக்கொண்டு இருப்பவன் –நகம் சொத்தையாகப் போனவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். . தங்கத்தை திருடியவனுக்கு நகம் சொத்தையாகப் போய்விடும். (அதனால் தங்கத்தை திருடுவது பாபம் என்பது அறிக)

-சொத்தை நகம் உடையவன் சொத்தைப் பல் உடையவனிடம் கொண்டு இந்த பாவத்தைத் தள்ளினான். பல் சொத்தையாகப் போவது என்பது “சோம பானம், சுரா பானம்” போன்ற திரவங்களைப் குடிப்பதால் வருவது.

-சொத்தைப் பல் உடையவன் “அக்ரதிதீஷூ” விதம் தள்ளினான். அக்ரதிதிஷூ என்பது சம்ஸ்கிருத பதம். இந்தப் பதத்திருக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரே வரியில் வாக்யம் இருக்குமா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் எவ்வளவு உயர்வான பாஷை என்பது இதையெல்லாம் படிக்கும்போது தெரியவரும். அக்ரதிதிஷூ என்ற பதத்திருக்கு “அக்காவுக்கு முன்னால், தங்கையை விவாகம் செய்து கொள்ளக்கூடியவன்” என்று அர்த்தம்.

அப்படிக் கல்யாணம் செய்து கொண்ட பர்த்தாவிடம், சொத்தைப் பல் உடையவன், தன் பாவத்தை தள்ளினான்

-அக்ரதிதீஷூ பாபத்தை அடைந்தவன், “பரிவேத்தா” (சம்ஸ்க்ருத பதம்) விடம் தன் பாபத்தைத் தள்ளினான்.  இந்த வார்த்தையும் சம்ஸ்க்ருத அழகு பதம். “பரிவேத்தா” என்ற பதத்துக்கு, “அண்ணா கல்யாணம் செய்து கொள்வதற்க்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பிக்கு” என்று அர்த்தம்.  இதெல்லாம் மகா பாபம். அண்ணா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், தம்பியும் சும்மா இருக்க வேண்டியதுதான். அப்படி மீறி செய்து கொண்டால் நரக பிராப்தி...
பரிவேத்தா என்ற பதத்தை ராமாயணத்தில் வாலி, ராமனிடம் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது:

“ராஜஹா, பிரஹ்ம்ஹா, கோக்ணஹா, சோரஹா, பிராணிவதே ரதஹா, நாஸ்திகப் பரிவேத்தா ச சர்வே நிரயகாமினஹா..”   (4-17-35)
இதன் பொருள்:

“ராஜாவை, பிராஹ்மணனை, பசுவை, கொன்றவர்கள், மற்றும் திருடன், உயிருடன் இருக்கும் பிராணிகளை வதம் செய்பவன், நாஸ்திகன், அண்ணன் திருமணம் செய்யாமல் இருக்கும்போது, திருமணம் செய்யும் தம்பி, - எல்லோரும் நரகத்துக்குப் போவார்கள்” – வாலி ராமனிடம் கூறுவது...

-“பரிவேத்தா” தோஷம் அடைந்தவன் “வீரஹத்தி” தோஷம் அடைந்தவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். இந்த பதத்திற்கு - ஏதோ வீரனை கொலை செய்வது என்பது அர்த்தமில்லை. பரம்பரையாக இருக்கும் தர்மத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வீரகத்தி தோஷம் அடைகிறான்.  வீரஹா என்ற பதத்துக்கு “கர்மஸூ குஷலஹா” என்று அர்த்தம். அக்னிஹோத்ரத்தை எடுத்துக் கொண்டு அதை பாதியிலே விட்டு விட்டால், அவன் “வீரகத்தி” தோஷம் அடைந்தவன் ஆகிறான். அக்னிகோத்ரம் என்பது மிகவும் கடினமான, சிரம சாத்யமான ஒரு அனுஷ்டானம். யாராவது கோடியில் ஒருவர்தான் பண்ண முடியும். ஆயிரம் பிராஹ்மன ஜன்மம் எடுத்தால் தான் யஜ்வாவாக (அக்னிஹோத்ரம்) முடியும். கோடி ஜன்மா எடுத்தால்தான் ஸந்யாஸி ஆகும் பாக்யம் கிடைக்கும்.  (சன்யாஸக் கோடி ஜன்மஸூ:)  அக்னி ஹோத்ரம் “ஆதானம்” பண்ணி விட்டால் அதை கடைசி வரை ரக்ஷிக்க வேண்டும். அக்னிஹோத்ரம் அக்னியாக இருந்தாலும் சரி (ஸ்ரௌதாக்னி), ஒளபாசனத்தில், ஸ்மார்த்த அக்னி யாக இருந்தாலும் சரி.  (ஸ்ரௌத, ஸ்மார்த, விஹித நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா..-யக்ஞோபவீத மந்த்ரம்-இதிலிருந்து வந்ததுதான்).

“நாம் இந்த மந்த்ரங்களைச் சொல்லி பூணல் போட்டுக் கொள்கிறோம். ஆனால் ஸ்ரௌத, ஸ்மார்த்த,- இரண்டையும் விட்டுவிட்டோம். விவாஹ மந்த்ரத்தில் – “ஜன்மம் முழுவதும் ஔபாசனம் செய்கிறேன், பரமேஸ்வரா” என்று மந்த்ரம் சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த வேளையே ஔபாசனம் செய்வது இல்லை.” நாம் அதற்கு கொஞ்சமும் முக்யத்துவம் கொடுப்பது இல்லை, என்பது சோகமான உண்மை.”

அதனால்தான், விதுர நீதியிலும், யாயாதி தர்மத்திலும் சரி- 4 விஷயங்கள் சரியாகச் செய்தால் அபயத்தைக் கொடுக்கும். சரியாகச் செய்ய வில்லை என்றால் பயத்தைக் கொடுக்கும். அதில் அக்னிஹோத்ரம் ஒன்று.

கிருஷ்ண பரமாத்மா ஆறு பேருக்கு நமஸ்காரம் செய்கிறார். நித்யம் அன்ன தானம் செய்பவர்கள், பால்யப் பிராயத்திலே அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், பதிவ்ரதைகள், சாந்த்ராயணம் போன்ற விரதங்களை எடுத்து உபவாஸம் செய்பவர்கள், வேதாந்தந்தம் கற்றுத் தேர்ந்த ஞாநிகள், சதாபிஷேகம் ஆன தம்பதிகள்... என்று.

இந்த வீரகத்தி தோஷம் அடைந்தவேனிடம், பரிவேத்தா, தன் பாவத்தை தள்ளினான். 

-வீரகத்தி பாபம் செய்தவன் பிரஹ்மஹத்தி பண்ணியவன் மேல் தன் பாபத்தைத் தள்ளினான் !!!

பிரஹ்மஹத்தி என்றால் என்ன ? பிரஹ்மஹத்தி   என்றால் பிராஹ்மணனை கொலை செய்தவன் என்று ஆர்த்தமாகுமா ?  என்றால் – உண்மைதான். அது ஒரு விதமான பிரத்யக்ஷமான பிரஹ்மஹத்தி. பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு பல அர்த்தங்கள். பரப்ரஹ்மம் என்று ஒரு அர்த்தம், பிராஹ்மணன் என்று ஒரு பொருள். வேதம் என்று ஒரு அர்த்தம் உண்டு.  மூன்று வேதங்களின் சாரமாக காயத்ரியை ரிஷிகள் அனுக்ரஹம் செய்து கொடுத்தார்கள்.  அந்த காயத்ரியை எவன் ஒருவன் ஜபம் பண்ணாமல் விட்டு விடுகிறானோ, ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் “பிரஹ்மஹத்தி தோஷத்தை அடைகிறான்” என்று வேதம் சொல்கிறது.

ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் தனக்கு வந்த பாபத்தை எங்கு போய் தள்ளினான் என்று வேதம் சொல்லவில்லை.

The buck ends here.

அதனால் ஸந்த்யாவந்தனம் பண்ணாத பிராஹ்மணன், தான் அனுஷ்டானம் பண்ணாத பாபத்தை சுமப்பதைத் தவிர, முன்னமே 7 பேரின் பாவத்தையும் சேர்த்தே சுமக்கிறான்.

இதைவிட ஸந்த்யாவந்தனம் எவ்வளவு முக்கியம் ? என்று சொல்வதற்க்கு ஒரு வியாக்கியானம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை !!!

முடிவுரை:

தேவதைகள் மந்த்ரத்திற்கு கட்டுப்படுபவர்கள். அந்த மந்த்ரம் பிராஹ்மணனுக்கு கட்டுப் படுகிறது.
ராமாயணத்தில், சீதை அசோக வானத்தில் ராமனின் பெருமையை ராவணிடம் சொல்லும்போது,

अहमौपयिकी  भार्या तस्यैव वसुधापतेः।। व्रतस्नातस्य विप्रस्य विद्येव विदितात्मनः। 5.21.17।।

நன்றாக ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை
ஒழுங்காகச் செய்து (vratasnaatasya) தேஜஸ் ஆக இருக்கும், தபஸ்விக்கு (விப்ரஸ்ய) எப்படி சகல வித்யைகளும் சர்வ சாதாரணமாக வருமோ, அப்படி நான் ராமனுக்கு சொந்தமானவள்”  என்று சீதை ராவணனிடம் சொல்கிறாள்.

ஆங்கிலத்தில்:

"I am alone the lawful wife of the lord of the earth like the knowledge of the Vedas which rightfully belongs to a wise brahmin who has realised the self after having had his ceremonial bath (as a token of celibacy) and having observed strict vows during the period of his study.

தீர்த்தம் இல்லாவிட்டால், மணலைக்கூட அர்க்யப் பிரதானமாகச் செய்யலாம் என்று ஸ்ரீ. அனந்த ராம தீக்ஷிதர் சொல்கிறார். ஸ்வதர்மத்தை விடவே கூடாது.

கொரொனா காலத்தில் இத்தனை பூஜைகள், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சஹஸ்ர காயத்ரி நடந்து கொண்டிருக்கின்ற போதும் கூட, அதனுடைய  தீவிரம் குறையவே இல்லை. இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய செயல்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இதற்கு எல்லாம் ஒரே மருந்து “காயத்ரி உபாசனை”.  அதை நாம் விட்டுவிட்டோம். அந்த பாபத்தின் விளைவு தான் இது.  நம் நாட்டில் இது குறைவாக இருப்பது இன்னும் மகா பெரியவா போன்ற பல யோகிகளின் இன்றும் இருந்து கொண்டு “அரண்” மாதிரி நமது தேசம் அழியாமல் காத்துக் கொண்டு இருப்பது,  மற்றும் இன்னும் காயத்ரியை மற்றும் இதர அனுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு இருக்கும் பிராஹ்மணர்கள்..


No comments: