Wednesday, 3 June 2020

த்யானம் என்றால் என்ன ?


கொரோனா சமயத்தில் எல்லோரும் த்யானம் செய்கிறேன் (வேறு வழியில்லாமல், "எத்தனை மணி நேரம் சார் டீ வீயே பார்ப்பது ? கடுப்படிக்கிறது !. அதான் த்யானம் செய்யப் போகிறேன்"} என்று கிளம்பி விட்டார்கள். இது எதோ கார் டிரைவிங் மாதிரி !

பஞ்ச பாத்திர உத்தரிணி எல்லாம், எதோ பாக்யராஜ் படத்தில் வரும் "ஐந்து பாத்திரம்" என்ற நிலை மாறி, நிஜமாகவே திரி கால, at least ஒரு காலமாவது பண்ண ஆரம்பித்து விட்டார்கள். மஹா பெரியவா அன்போடு சொன்னதை, கொரோனா அடித்துச் சொல்லி இருக்கிறது

எனக்கும பிராமணர்கள், நிஜமாகவே பிராமணர்கள் ஆகி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது !!

த்யானம் கொஞ்சம் சீரியஸ் ஆன விஷயம். அதனால் கொஞ்சம் சீரியஸ் ஆக பார்ப்போம்.

 கோடி பூஜை = ஸ்தோத்ரம்
கோடி ஸ்தோத்ரம் – ஜபம்
கோடி ஜபம்  = த்யானம் என்று எல்லாம் உபன்யாசகர்கள் சொல்வது வழக்கம்.

த்யானம் சித்திக்க, எண்ணிக்கையில் மனசு வைக்காமல், சிந்தனையை உள் நோக்கித் திருப்பவேண்டும். ஆனால், த்யானம் ஆரம்பத்தில், எண்ணிக்கையில் தான் மனசு போகும். மெதுவாக எண்ணிக்கையில் இருந்து விலக வேணும் என்று சிலர் சொல்கிறார்கள்

ஸ்ரீ ஸ்ருங்கேரி நருசிம்ம பாரதி சுவாமிகள், த்யானம் செய்வதைப் பற்றி அருமையான விளக்கம் சொன்னதை, மஹா பெரியவா ஒரு இடத்தில சொல்கிறார்.

ஒரு சிஷ்யர் ஸ்ருங்கேரி பெரியவாளிடம், த்யானம் சித்திப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு, “நீ த்யானம் செய்து கொண்டே இரு, தானாக சித்திக்கும்” என்றார். சிஷ்யர் விடாமல், “நானும் செய்து கொண்டே இருக்கிறேன், சித்திக்க மாட்டேன் என்கிறதே !” என்றார்.

அப்போது, சுவாமிகள், “நீ த்யானம் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் நெல் மணிகளின் மீது உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்தால், அது பொரிந்து விடும்” என்றார்.  அதை பரிட்சித்து பார்க்க, குருவையே செய்து காட்டச் சொல்லி, சந்திரசேகர பாரதி தீர்த்த சுவாமி, அப்படியே நெல் மணிகளைப் போட்டு தியானத்தில் ஈடுபட நெல் மணிகள் பொரிந்து பொறியாக வெடித்தன. (இப்படியும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்கள் நம்மிடையே இருந்து இருக்கிறார்கள் !!)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நாம் த்யானம் பண்ணுகிறேன் என்று நெல் மணிகளின் மேல் உட்கார்ந்தால், அது பொடியாகி, கோல மாவு (கோகிலா இல்லை) மாதிரி ஆகிவிடும். பிறகு எங்கே பொரியும் ?  ஸ்வாமிகள், தன் உடலையும் லேசாக ஆக்கிக்கொண்டு, நெல் மணிகளின் மேல் உட்கார்ந்து த்யானம் செய்கிறார் என்று நினைத்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியும் குருமார்கள் இருந்திருக்கிறார்கள் என்று !!

ரமண பகவான் சொல்கிறார் – த்யானம் செய்வது என்பது வாய் திறக்காமல், சப்தம் வராமல் ஜபம் செய்ய வேண்டும்.  சப்தம் வராமல் செய்தால் கூட, நமக்குள் ஒரு சப்தம் வருமே, (நமக்குள் அதை உணர முடியும்)  அது எங்கிருந்து வருகிறது எங்கு கிளம்புகிறது ? என்று தேடினால், த்யானம் சித்தித்து விடும்.  (ஒரு முகப்படுத்தி ஜபம் செய்வது என்பது என்பது என்ன ? )

இப்படி எல்லாம் த்யானம் செய்வது என்பது சாத்தியமா ? (அட, போங்கப்பா, )

1௦ நிமிடம் த்யானம் செய்ய முடியாமல் தவிப்பதற்கு முதல் காரணம் மனைவி தான் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் 

நீங்கள் த்யானம்/அனுஷ்டானம் என்று ஏதோ செய்து கொண்டு இருக்கிறீர்கள். மணி காலை 9 என்று வைத்துக் கொள்வோம். சூடா தோசை செய்து (தோசை மாவை கல்லில் உற்றி, சுற்றி, நல்ல எண்ணையை "உண்டு" என்று உற்றி, நடுவில் கொஞ்சம் நெய்யை உற்றி, ஒரு 4 - 5 பண்ணி ஹாட் பாக்கில் வைத்து, உங்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். (ஹாட் paakai திறந்து வேறு வைத்து)  வலது பக்கத்தில், தேங்கா சட்னி, இடது பக்கத்தில், மொளகா பொடி, எண்ணை. (வெங்காய சட்னி சாப்பிடும் பிராமணர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்). அன்பாக "சாபிடுங்கோ ! ஆறிடப் போறது" என்று வேறு சொல்கிறாள்

இப்போது நீங்கள் தோசை வேண்டாம் என்று த்யானம் செய்வீர்களா ? அல்லது போறும் என்று த்யானத்தை முடித்து விட்டு, தோசையை சாபிடுவீர்களா ?  முதல் category ஞானி,  ரெண்டாவது, நம்ம category. !!!

நாம் எல்லோரும் "அஜாமிளன்" மாதிரி கடைசி காலத்தில் "நாராயணா என்று சொன்னால், புஷ்பக விமானத்திலோ (அ) கருட வாகனதிலோ பெருமாள் வந்து கை தூக்கி அழைத்துக் கொண்டு செல்வான் - என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படியே இருப்போம். அதான் நமக்கு நல்லது. !!!! தியானத்தை அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்ளலாம். !!!

கீரன் ஒரு அருமையான கதை சொல்வார். ஒருவன் பக்தி பண்ணாமலேயே வாழ் நாளை கடத்தி விட்டான். அவன் மகன் பிரஹ்லாதன் மாதிரி நல்ல பக்தி பண்ணி ஒரு செம்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தன் தந்தையின் கடைசி காலத்தில், அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு "அப்பா, எதாவது பகவன் நாமா சொல்லு, போகிற வழிக்கும் புண்ணியம் கிடைக்கும்.  (எதிரே இருக்கும் பகவான் படங்களைக் காட்டி) எதாவது ஒரு பேரை சொல்லு" என்கிறான்.

அப்பா திடீரென்று "முரு, முரு" என்று சொல்லி திணறுகிறார். பையன் உடனே ஓடிப்போய் ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வந்து வாயில் சொட்டு சொட்டாக உற்றி, "சொல்லுப்பா சொல்லு"  என்று கதறுகிறான்.

அவர் மெதுவாக ஆஸ்வாசப்படுதிக்கொண்டு, தன், பையனிடம் கண்ணீர் மல்க சொல்கிறார்.

"எனக்கு முரு(று)கலா. ஒரு ரவா தோசை கிடைக்குமா"...........


No comments: