Monday, 22 June 2020

ஆதி சங்கரரும் முருகனும் (புஜங்கத்தில் தந்தையர் தினம்) (Father’s Day)


ஆதி சங்கரர் தமிழ் கடவுளான முருகனைப் பற்றி அருளிய பாடல்களில்/, கிரந்தங்களில் மிக முக்கியமானது, சுப்ரமண்ய புஜங்கம். 

ஆதி சங்கரர், விநாயகர், சிவன், தேவி, விஷ்ணு, ஸூர்யன், குகன் என்று ஆறு வடிவங்களில் உபாசனை புரியும்படி உபதேசிக்கிறார்கள். அதில் முருகனுக்காக பாடிய சுப்ரமண்ய புஜங்கம் மிகவும் விஷேஷமானது. ஏனெனில், கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆதி சங்கரர் பாடிய பாடல் இது.

கடுமையான வயிற்று வலி வந்து, மனமுருகி பாடி, இறைவனின் அருளால், நோய் நீங்கி குணமானவர்கள் 3 மகான்கள்.
ஆதி சங்கரர்- சுப்ரமண்ய புஜங்கம்
நாராயண பட்டத்ரீ- நாராயணீயம்
நாராயண தீர்த்தர்- கிருஷ்ண லீலா தரங்கிணி          

இதில் முதல் இருவரும், வயிற்று வலியுடன் பாடிய பாடல்கள். (ஆதி சங்கரர் பன்னீர் இலையில் வீபூதி எடுத்து தரித்துக் கொண்டவுடன் அவர் வயிற்று வலி சரியாகி விட்டது. பிறகுதான் புஜங்க பாடினார் என்ற ஒரு school of thought ம் உண்டு}. சத்குரு நாராயண தீர்த்தர், வயிற்று வலியால் அவதிப்பட்டு, காவேரி ஆற்றுப் படுகையில் உள்ள விநாயகர் சன்னிதியில் உறங்க, கனவில், நாளை காலை உன் முன் முதலில் எது தோன்றுகிறதோ, அதன் பின்னால் செல்வாயாக” என்று கட்டளை பிறக்க, அடுத்த நாள், ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று தோன்ற, அதன் பின்னால் சென்று பூபதி ராஜ புரம்” என்ற வரகூர் க்ஷேத்திரதித்தில் வந்து அடைந்த பின் அவருக்கு வயிற்று வலி தீர்ந்து விடுகிறது. பிறகு அவர், கிருஷ்ண லீலையை விவரிக்கும் ஸ்ரீமத் பாகவத்தின் 10 வது பிரிவை, தரங்கிணி என்று பாடலாய் பாடுகிறார்.

பட்டத்ரீ கதை மிகவும் கஷ்டமானது. அவர் வயிற்று வலி துடிக்க துடிக்கப் பாடுகிறார். ஒவ்வொரு பகுதி முடியும்போது, “வயிற்று வலியால் கஷ்டப்படுகிறேனே குருவாயூரப்பா என்னை காப்பாற்ற மாட்டாயா ?” என்று அரற்று.கிறார்.  மூன்றாவது தசகம் படித்துப் பாருங்கள். புரியும்.

திரும்பவும் சு.பு க்கு வருவோம்

அபினவ குப்தர் ஆதி சங்கரரிடம் பல வாதங்கள் செய்து தோற்றபின், ஆபிசார வேள்வி செய்து, ஆதி சங்கரர்க்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியதும், கோகர்ணத்தில் திருத்தலத்தில் தங்கி இருந்த இவருக்கு ஈசன் கனவில் தோன்றி, முருகப்பெருமான் குடியிருக்கும் திருசெந்தூர் சென்று தரிசித்தால் உனக்கு வயிற்று வலி குணமாகும் என்று சொல்ல, திருசெந்தூர் வந்து, பன்னீர் இலை வீபூதியை பூசிக்கொண்ட பின் அவருக்கு தீரா வயிற்று வலி மறைந்தததும் பல பேருக்குத் தெரிந்த கதை

சுப்ரமண்ய பூஜங்கத்தைப் பற்றி நான் விரிவாக எழுதப்போவதில்லை. ஆனால் 18 வது ஸ்லோகம் மட்டும் கொஞ்சம் விசேஷம். இதில் “பரமேஸ்வரன், குழந்தாய், இங்கே வா, என்று பரிவுடன் கூப்பிட, தாயின் மடியில் இருந்து குதித்து, தந்தையை அடைந்து, தந்தையான சிவபெருமானால் உடல் முழுதும் அடங்க அணைக்கப் பெற்றவருமான பால வடிவிரான குமாரனை வழி படுகிறேன்.” என்று பொருள்பட ஆதி சங்கரர் எழுதி இருக்கிறார்.  (வைத்ய ஸ்ரீ ராதாக்ருஷ்ண சாஸ்த்ரி அவர்களின் விளக்கம் இது)

சாதாரணமாக ஸ்லோகங்களில், புராணங்களில், அம்மா கூப்பிட்டு பிள்ளை ஓடி வந்து அணைத்துக்கொள்வது என்பது பிரசித்தமான ஒன்று. நீங்கள் வைதீஸ்வரன் கோவில் போனால், அடிக்கடி மூத்துக்குமாரஸ்வாமி, பாலாம்பிகாவிடம் ஓடிச் சென்று அம்மாவுடன் இருப்பார்.  வைத்யநாதஸ்வாமி டாக்டர் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அப்பா பிள்ளையை கொஞ்சினார் என்று நான் பார்தது இல்லை. நடை முறையில் கூட, தகப்பன் பிள்ளை நடுவே ஒரு புரிதல் என்பது இருக்காது. மனதிற்க்குள் பாசம் இருந்தாலும், இருவரும் வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த ஸ்லோகம்...  father’s day க்காகவே ஆதி சங்கரர் எழுதியைப் போல் உள்ளது.

சம்ஸ்க்ருததில், சுப்ரமண்ய ஸ்வாமி மேலே, நிறைய ஸ்லோகங்கள் உள்ளது. ஸ்ரீ. ஆனந்தராம தீக்ஷிதர் அவர்கள் “ஜெய மங்கள ஸ்தோத்ரம்” என்று தடி தடியாக 4-5 புத்தகங்கள் போட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தை, திருவல்லிக்கேணியில் ரோடில் உள்ள புத்தகக் கடையில் பார்த்தேன். பதறிப் போய் வாங்கினேன். அதில் “குக பஞ்சரத்னம், சுப்ரமண்ய மங்களாஷ்டகம், மூல மந்த்ரஸ்தவம், கத்யம், பஞ்சக ஸ்தோத்ரம், பஞ்ச ரத்னம் என்று மானாவாரிக்கு ஸ்லோகங்கள் உள்ளது. ஆனால் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தை தவிர ஒன்றே ஒன்றில் தான் முருகனைக் குறிப்பிடுகிறார்: அது -

சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என்ற ஒரு பகுதியில், சுப்ரமண்யருக்காக அவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்று உள்ளது, அதன் அர்த்தத்தை முதலில் பார்ப்போம்:

முன்பு தாரகன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைப் போரில் வென்று அவர்களுக்கு அளவு கடந்த இன்னல்களை விளைவித்துக் கொண்டிருந்தான். ஆத்தேவர்களின் புண்ய பலத்தால் லோக மாதாவான பார்வதி தேவிக்கும், தந்தையான பரமேஸ்வரனுக்கும், ஸ்கந்தன் என்ற பிரசித்தி வாய்ந்த திருக்குமாரன் பிறந்தான். அவன் தான் கூர்மையான பாணங்களைக் கொண்டு கிரௌஞ்சம் என்ற மலையைப் பிளந்து பரசுராமருக்கு தன்னுடைய திறமையைக் காண்பித்தான். ஞானக்கடவுளாக இருப்பதால் அவன் ஸம்ஸாரமென்ற ஆழமான கிணற்றில் வீழ்ந்து தவிக்கின்றவர்களை, கரையேற்றுகின்றார். தாரகனைக் கொன்று தேவர்களின் இன்னல்களை களைந்த அந்த முருகப் பெருமான் நமக்குச் சிறந்த செல்வங்களை தந்து, நம்மக் காத்தருள்வாராக !

சம்சார சாகர அகாத கூப உதர பதித சமுத்தாரக :  - என்ற சம்ஸ்க்ருத பதம்

சம்சாரம் என்ற கடலில் (சாகர), ஆழமான (அகாத), கிணற்றின் (கூப), நடுவில் (உதர), விழுந்தவர்களை (பதித) கரையேற்றுபவராயும் உள்ள (சமுத்தாரக:) – என்ன ஒரு அருமையான ஸ்லோகம்...... 

ஆதி சங்கரர் மட்டும் இல்லை என்றால், பல நல்ல ஸ்லோகங்கள் நமக்குப் படிப்பதற்கு இருந்திருக்காது. அதுவும் கோரொனா “டயத்தில்” ஏதோ படிப்பதற்கு இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டு கொள்ளவேண்டும். ஆதி சங்கரருக்கு நாம் காலம் காலமாக நன்றி சொல்லவேண்டும். TV யின் கொடுமையிலிருந்து நம்மைக் காப்பது பகவத் பாதரின் ஸ்லோகங்களே !!!

என்னமோ “தந்தையர் தினம்” என்று கொண்டாடுகிறார்களே என்று தோன்றியது.  கைலாச மாலையிலே அரங்கேறி விட்டது த.தி.

1 comment:

Nistula said...

Superb writeup, Periappa.