Sunday 24 January 2021

கொரோனாவும் ஸங்கீத சீசனும்

 

கொரேனாவால், இந்த சங்கீத சீசனில், என்னை மிகவும் பாதித்த விஷயம், பல உப பக்க வாத்தியக்காரர்கள், சுத்தமாக ஒரு கச்சேரியும் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதை நான் நேரின் பார்த்தேன். இந்த வருடம் வெளி வந்த கச்சேரிகளில் கூட, மிருதங்கம், வயலின் மட்டும் இருந்ததே தவிர, கஞ்சிரா, கடம், முகர்சிங் போன்ற வாத்தியங்கள் “மிஸ்ஸிங்”.

இன்றொன்று, நாதஸ்வர கலைஞர்கள். நாங்கள் சாதரணமாக, தஞ்சாவூரில், கிராமத்தில் உள்ள கோவில்களில், 10 நாட்கள் உதஸவமாகச் செய்யும் பொது, ஒவ்வொரு நாளும், ஒரு நாதஸ்வர கலைஞர்கள் குழுவை வைத்து, 10 நாளும் 10 வேறு விதமான கலைஞர்களை வைத்து, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அழகு பார்த்த “தஞ்சாவூர் ஜில்லா” இந்த முறை ஒரு கல்யாணக் கச்சேரி கூட இல்லாமல் அவதிப படுவது, பெரிய சோகம்.

மேலும், முக்கயமான ஒன்று,  நிறைய பேருக்குத் தெரியாதது, முதியோர் இல்லத்தில் இருக்கும்  மக்களுக்கு, இலவசமாக சங்கீத கச்சேரிகளை "பணம் கட்டி"  அவர்கள் பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்த  சில நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.  ஆச்சர்யப்பட்டேன்.   கொரோனாவால் விளைந்த நன்மை என்று நான் சொல்வேன்.   கோயம்புத்தூரிலும் சென்னையிலும் உள்ள பல மு.இ. அடக்கம்

நானும் மியூசிக் அகாடமி யும் தான் இன்னும் “ஸ” யூஸ் பண்ணுகிறோம் என்று நினைக்கிறேன். (ஸங்கீத வித்வத் சபை)

நான் எழுதும் இந்த பதிவு அரங்கேறும்போது, சங்கீத வித்வத் சபையில் “ஸதஸ்” நடந்து முன்டிண்டு இருக்கும். ஒரு- நான் எதிர்பார்த்த ரஞ்சனி காயத்ரியோ அல்லது வயதான இசைக் கலைஞர்களோ, யாருக்காவது, கலாநிதி விருது கிடைத்திருக்கும். சதஸ் முடிந்தவுடன் நல்ல சாப்பாடு கிடைத்து இருக்கும். டான்ஸ் (நடன நிகழ்சிகள் ஆரம்பித்து இருக்கும். அரிதாரம் பூசிய பெண்மணிகள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ் குருமார்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு இருப்பார்கள். வாணி மஹாலில், ட்ராமா ஆரம்பித்து, காத்தாடியும், எஸ். வீ. சேகரும், Y G மகேந்திராவும் ஜமாய்த்துக் கொண்டு இருப்பார்கள்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வராமலே, அரசியலில் இருந்து விலகியது போல், சங்கீத சீசன் ஆரம்பிக்காமலே முடிந்து விட்டது.

நான் சென்னை வந்து,  எல்லா வருடங்களிலும் சங்கீத சீசனில் கலந்து கொண்டு பல கச்சேரிகள் கேட்டு இருக்கிறேன். CA படித்த காலத்தில், படிப்பு, படிப்பு என்று இருந்ததனால், இந்த விஷயங்களுக்கு சான்ஸ் இல்லை. ஒரு ரவுண்டு, பெங்களூர், மும்பை, துபாய் என்று சுற்றி திரும்பவும் சென்னை வந்து முருகப்பா குழுமத்தில் வேலை கிடைத்து, அப்பாடா, என்று மூச்சு விட்டபிறகு, சங்கீதக் கச்சேரி பக்கம் என் காதுகளை அலைய விட்டேன். செம்மங்குடியில் பிறந்தது, ஸ்ரீனிவாச அய்யர் எதுத்தாதில் குடி இருந்தது,  என் அப்பாவின், அபார சங்கீத ஆர்வம், (மிக நன்றாகப் பாடுவார், சோமு என்றால் இன்றும் அவருக்கு கண்ணீர் வரும். மதுரை சோமுவின் சங்கீதத்தில் கரைந்ததவர். இன்றும் கரைந்து கொண்டு இருப்பவர்).

சென்னைக்கு குடி வந்தவுடன் எனக்கு மயிலாப்பூர், மந்தவெளிப்பாக்கம், மந்தவெளி சுற்றியே வாசம் செய்து வந்ததால், சங்கீதக் கடலை அள்ளி, அள்ளிக் குடிக்கும் பேறு பெற்றேன். சுற்றி வர சங்கீத சபாக்கள் நிறைந்து இருப்பதால், எப்படியாவது வாரத்திற்கு/மாதத்திற்க்கு என்று ஏதாவது ப்ரோக்ராம் நடந்து கொண்டே இருக்கும். உபன்யாசமா, நாம சந்கீர்த்தனமா, ராதா கல்யாணமா, திடீரென்று “தமிழும் நானும்” என்றும் சஞ்சய் ஆரம்பித்தால், “சஞ்சையும் நானும்” என்றும் கிளம்பி விடலாம்.. போதாதற்கு “ஹயுமர் க்ளப்” என்று எங்கள் ஊர் பக்கத்து “அரசவனங்காடு” ஸ்ரீ/ சேகர் ஒரு ப்ரோக்ராம் வைத்தால் அதிலும் ஆஜர். நாத இன்பம், ஆர்,கே கன்வென்ஷன் ஹால் எல்லாமே. “ஏழைகளின் சங்கீத வித்வத் சபை”. வாரா வாரம் யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள், இங்கே. சங்கீதம் தழைத்து ஓங்கும் இடம் என்றால் சத்தியமாக எங்கள் மயிலாப்பூர் தான்.

என்னதான், மைலாப்பூர் மக்கள் புலம் பெயர்ந்து, நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என்று போனாலும், மைலாப்பூரிலேயே இருக்கும் இசை ரசிகர்கள், கற்பகம், கபாலி ஆசி பெற்றவர்கள்.

கொரோனா புரட்டிப் போட்டதில், டிசம்பர் சங்கீதம் சத்தியமாக ஆடிப் போனது உண்மை. சுமார் 5௦௦௦ கச்சேரிகள் நடக்கும் டிசம்பர் மாதத்தில் 5௦ கச்சேரிகள் கூட, அதுவும் கம்பயூட்டரில், “லைவ்” வீடியோ என்றும், பணம் கட்டினால் “லைவ்” ஆகவும் பார்க்கலாம், பிறகும் பார்க்கலாம் என்ற “வீட்டுக்குள்ளேயே” சங்கீத நிகழ்சிகளை கொண்டு வந்தார்கள்.

சாதாரணமாக, பாரதீய வித்யா பவன் தான் முதலில் கச்சேரிகள் ஆரம்பிக்கும். அது இலவசம் என்பதாலும், சஞ்சய் தவிர எல்லா முன்னணி, பாடகர்கள் பாடுகிறார்கள் என்பதாலும், டி வீ எல்லாம் வைத்து, கூட்டத்தை சமாளிப்பதாலும், என்னுடைய வீட்டிலிருந்து 1௦ நிமிடம் என்பதாலும். முக்கால்வாசி எல்லா கச்சேரிகளிலும் நான் இருப்பேன்.

எனக்குப் பிடித்த இடம் பா.வி.பவனம்தான், ஏனெனில், மயிலாப்பூர் வாசிகளான நாங்கள், படி தாண்டா பதிகள். எங்களுக்கும், கிருஷ்ணா கான சபாவோ, தியாக பிரஹ்ம காண சபாவோ, டிசம்பரில் முளைக்கும் ஹபிபுல்லா ரோடு ஹால் கச்சேரியோ, இன்போசிஸ் ஹால் கச்சேரியோ, பாகிஸ்தான் போல. நாங்கள் போக மாட்டோம்.

மேலும், பா.வி.பவேனில் என்ன சௌகர்யம் என்றால், வாசல் வரை சேர் போட்டு இருப்பார்கள். நினைத்தால் ஒரு பாட்டு கேட்டு அப்படியே எழுந்து வந்து விடலாம். மெயின் உருப்படி ராகம் வாசித்து வயலின் வாசிக்கும்போது, கொஞ்சம் கறிகாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். தனி ஆவர்த்தனம் போது, கற்பகாம்பாளை போய் பார்த்து ஒருசுத்து சுத்திவிட்டு வந்து விடலாம்.

மற்றொரு இடம், NGS. நாரத கான சபாவின் “சான்னித்தியம்” எனக்கு ரொம்ப பிடிக்கும். சுவாமி ஹரிதாஸ் கிரி சுவாமி ஆரம்பித்ததினால் இருக்கலாம். சத்குரு ஞானாநந்தரின் பெரிய படம் இருப்பதினாலோ என்னவோ, ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் நம்மையே பார்ப்பது போல இருக்கும்.

அது இந்த தடவை, பா.வி.ப புலம் பெயர்ந்து, கீழ்பாககத்தில் அருகில் எதோ ஒரு பள்ளியில் நடத்தினார்கள். மயிலாப்பூர் இருந்து, பஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணுவதாகவும் சொன்னார்கள். கூட்டம் வந்ததா என்று தெரிய வில்லை.

அப்போ அப்போ, யூ டியூபில், சில கச்சேரிகளை கேட்க முடிந்தது. சங்கீத வித்வத் சபையும், 90 நிமிடங்களுக்கு ஒரு கச்சேரி என்று போட்டார்கள். அதற்கு ரூ 3௦0 என்று நிர்ணயம் செய்தார்கள். ஒரு நாளைக்கு இரு கச்சேரிகள் கேட்க 300 ரூபாய் போய், ஒரு கச்சேரிக்கு என்று வைத்தார்கள். நான் கிட்டகேயே போகவில்லை. அகாடமியில், விக்னேஷ் ஈஸ்வர் மற்றும் கேட்டேன். சஞ்சையின் “தமிழும் நானும்” கேட்டேன்.. என்னுடைய டி.சீ முடிந்து விட்டது.

ஆக மொத்தத்தில், எனக்கு ஒரு சங்கீதப் பிடிப்பு இல்லாத சங்கீத சீசனாகப் பொய் விட்டது.

இந்த கொரோனா டயத்தில், நிறைய கச்சேரிகள் அந்தக் காலத்து, பாடகர்கள், பாடியதை, (புதுசு, புதுசாக யூ டியூபில் “அப்லோட்” செய்து கொண்டே இருந்தார்கள். அதனால்) கேட்கும் பாக்கியம் கிடைத்தது. செம்மங்குடி முதல் எம். எஸ், ஜி.என்.பீ, சேஷகோபாலன், டி எஸ் கல்யாணராமன் என்று பல பாடகர்களின் அருமையான் கச்சேரிகள் கேட்கும் பேறு பெற்றேன். அதற்க்கு நான் “கொரோனாவுக்கு” நன்றி சொல்ல வேண்டும். திடீரெண்டு காலையில் மாலியின் “கீரவாணி” கேட்டேன். கண்களில் இரு சொட்டு கண்ணீர்.

வேறு ஒரு எண்ணமும் தோன்றியது. இந்த வருடம் இசைக் கலைஞ்சர்கள் என்ன சபதம் எடுத்துக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்ததன் விளைவு, கீழே

டி.எம் கிருஷ்ணா – “இந்த தடவையாவது, மெக்கா போய் “இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டை, ஹுசேன் (னி) ராகத்தில் பாட வேண்டும்.  கொரோனா ஒழிவதைப் பற்றி ஒரு பாட்டு எழுதி, அதை அமெரிக்காவில், கொரோனா இல்லாத ஒரு சர்ச்சில். தேவ மனோஹரியில் பாட வேண்டும்.

மகாதேவன் சங்கரநாராயணன் “  சொந்தமாக பாட்டு எழுதி பாடுவதை, நிறுத்திவிட்டு, அப்பா மாதிரி பாடாமல், நிறைய கச்சேரி செய்ய வேண்டும்

ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்:- சாரீரத்தை நன்கு வைத்துக் கொள்வது போல், சரீரத்தையும் கொஞ்சம் “நன்கு” கவனிக்க வேண்டும்

ரஞ்சனி காயத்ரி: சங்கீத கலாநிதி வாங்கும் வயது வந்துவிட்டது. இனிமேலாவது புஸ்தகத்தை வைத்துக்கொண்டு பாடாமல். நெட்ரூ பண்ணி பாடவேண்டும்

விஜய் சிவா – இந்த தடவையாவது ஒரு நடை, மியூசிக் அகாடமி போய் பேசி, அப்படியே அந்த சங்கீத கலாநிதி விருதையும் வாங்கி, குருநாதர், டி,கே ஜெயராமனுக்கு, பெருமை சேர்க்க வேண்டும்.

சஞ்சய் சுப்ரமண்யன் – நிறைய கோவில் போய் கச்சேரி பண்ணவேண்டும். கொஞ்சம் “பண விஷயத்தில்” கருணை காட்ட வேண்டும்

திருச்சூர் சகோதரர்கள்: இந்த தடவையாவது, அப்பாவைத்தவிர வேறு மிருதங்கக் காரர்களுக்கு சான்ஸ் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டும்.

 

 

 

 

No comments: