Saturday, 30 January 2021

என்னுள்ளிலும் புட்டபர்த்தி சாய் பாபா

 

இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள்.  இன்று புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரத்தில், இரண்டு பாகங்களைப் படிக்கும் பேறு பெற்றேன்.

சாதரணமாக நடக்கக் கூடியது இல்ல. நான் புட்டபர்த்தி மகானின் தீவிர பக்தனோ அல்லது அடிக்கடி பிரஸாந்தி நிலையம் சென்று சேவை செய்தவனோ அல்லது அவரை எங்கேயாவது நேரே தரிசித்தவனோ கிடையாது.

இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால், இப்பொழுது, நான் இருக்கும் மந்தவெளியில் இருந்து, 10 நிமிடத்தில் புட்டபர்த்தி சாய் பாபாவின் கோவில் உள்ளது. மிகவும் அற்புதமாக நிர்வகித்து, சாய் பாக்தர்களின் தன்னலமற்ற சேவையுடன் அமைந்து இருக்கிறது.  ஓரே ஒரு முறை, வீபூதி வாங்குவதற்கு சென்றேன். அப்போது உள்ளே சென்று பார்க்கும்போது, அங்கே தனித்தனியாக பெண்களும் ஆண்களும் அமர்ந்து இருந்து மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்கள்

பிறகு நேற்று இரண்டாவது முறையாக  “தபோவனம்” என்ற அவரில் அற்புத லீலைகள் அடங்கிய புத்தகம் வாங்கச் சென்றேன்.  அந்தக் கதையை பின்னால் சொல்கிறேன்

என்னுடைய குழந்தைப் பருவம் பற்றி கொஞ்சம், சாய் பாபாவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள், “புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்” என்ற பகுதிக்குப் போகலாம்:

நான் சாய் பாபா கோவில், சாய் சரிதம் இவைகளில் இருந்து விலகியே இருந்தேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் பிறந்த செம்மங்குடி கிராமத்தில், நான் அம்மா என்று அழைக்கும் என் பாட்டி, முதலில் காண்பித்த கோவில், சிவன் கோவில், பிறகு பெருமாள் கோவில். ஆனந்தவல்லி உடனுறை அகச்தீஸ்வரரும், வரதராஜப் பெருமாளும்தான்.

என் அப்பா (தாத்தா) வை நான், செம்மங்குடியில் நினவு தெரிந்து பார்க்கும்போது, அவர் சிவ பூஜை, (சாளக்ராம பூஜை) செய்து கொண்டே இருப்பார். ஒரு நாள் கூட தவறியதே இல்லை. த்ரி கால சந்த்யாவந்தனம், சிவ பூஜை இரண்டும் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது என் தாத்தாவிடம் நான் வாங்கிய பிச்சை என்று கூட சொல்லலாம்.  என் அப்பாவிற்கு, வில்வம் பறித்துக் கொடுப்பது, ஜலம் எடுத்துக் கொடுப்பது என்ற சேவை ஒன்றுதான், இன்று என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று சத்தியமாக நம்புவன் நான். அதனால் எனக்கு அனுஷ்டானம், சாளக்ராம பூஜை தான் மிக முக்கியம்.

பிறகு, மேலே படித்து, பெங்களூர், பாம்பே, துபாய் என்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, சென்னையில் மைலாப்பூரில் வந்த போது எனக்கு விட்ட குறை, தொட்ட குறையாக, கற்பகத்திடமும், காபாலியிடமும் இருந்த காதல், வேறு யாரிடமும் இல்லாமல் போனது உண்மை. பாவாடை கட்டினால், சிறுமி போல, புடவை காட்டினாள், மணப் பெண் போல, மடிசாறு கட்டினால் தாலி தொங்க தொங்க மங்களகரமாக இருக்கும் “மாமி” போல – என் மனதை இன்றும் கற்பகத்திடம் பறி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

கொரோனா சமயத்தில் கூட, கோபுரத்தைப் பார்த்துவிட்டாவது வரும் ஆசாமி நான்.

என் மனைவி அடிக்கடி மைலாபூரில் இருக்கும் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு  செல்வாள். நாங்கள் இந்தக் கோவிலுக்கு பின்புறம் 2 வருடம் வாடகை வீட்டில் வேறு இருந்தோம். நிதமும் ஆரத்தி பாட்டுக்கள், கணீரென்று கேட்கும்.

முடிந்தபோது நானும் அவளுடம் செல்வேன். எந்த ஒரு குருநாதரையும் நான் வணங்கவேண்டும. என் மனது பாக்குவப்படவேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையும் அவரிடமே வைப்பேன். அந்த பக்குவம்தான் எனக்கு திருக்கோவிலூர் அருகில் இருக்கும் தபோவனம் ஞானானந்தரிடம் பக்தி செய்யத் தூண்டியது. பாத பூஜையில் மகத்துவத்தை அறிய வைத்தது. பல முறை சென்று திரும்பி வரும் போது,, அம்மாவைப் பிரிந்து வரும் சிறு குழந்தை போல மனது வருத்தப்படும் அளவுக்கு என்னை கொண்டு விட்டு இருக்கிறது. அவரை நினைக்காத நாள் இல்லை என்ற அளவுக்குக் கொண்டு விட்டது. இதுவும் குருவின் அளப்பரிய கருணையே அன்றி என்னிடம் ஒன்றுமே இல்லை.

ஒரே ஒரு முறை, நான் ஷீரடி கூட போய் இருக்கிறேன். ஆபீஸ் விஷயமாக பூனா போய் இருந்த பொது, நேரே கிளம்பி ஷீரடி போய், அங்கே ரூமில், பச்சை தண்ணீரில் விடியற்காலை குளித்து விட்டு, (அன்று ஏகாதசி) சாய் பாபாவை வணங்கி விட்டு வந்தேன். 

புட்டபர்த்தி சாய் பாபா அனுபவம்

திருப்பி விஷயத்திற்கு வருவோம். போன வாராம் முழுவதுமே எனக்கு மிகவும் டென்ஷன் ஆன வாரம் என்று சொல்லலாம். வீடு மாறி, மந்தவெளியில், திருவேங்கடம் தெரு (விரிவு) குடி போனேன்.

வீடு மாற்றுவது என்பது பெரிய கொடுமை. ஒரு வாரம் ஆன பின்பும்,  எதை எங்கே வைப்பது, பல சாமான்கள் எங்கு இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை.

தை பூசம் ஒரு பக்கம் அமக்களப் பட்டுக் கொண்டிருக்க, கொரோனா கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைந்து வரும் நிலையில், மயிலாப்பூர், தெப்பத்திற்காக, திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது.

From now, You have to read carefully – the sequence of Events

போன வாரம், நான் மிகவும் மதிக்கும், நடமாடும் பெரியவாளாக நான் கருதும், மஹாதானபுரம் மாமா அவர்களின் பெண், சௌ.பாரதி (என் மச்சினனின் மனைவி) எனக்குப் போன் செய்து, “புட்டபர்த்தி சாய் பாபாவின் சரித்திரம் படிக்க ஒரு சான்ஸ் கிடைத்து இருக்கிறது, நீங்கள் படிக்கிறீர்களா” என்று என் மனைவியிடம் கேட்க, என் மனைவி ஓகே சொல்லி என்னிடம் சொன்னாள். நான் பார்க்கலாம் என்று சொன்னேன்.

வீடு மாறியதால், மிகவும் டெண்ஷன், மிகவும் களைத்துப் போய், இது ஏறக்குறைய மறந்தே விட்டது/

நேற்று, வெள்ளிக்கிழமை, என்னிடம் சாவி இருந்தது தெரியாமல், வீட்டை தெரியாமல் பூட்டி விட,, என் மனைவி எனக்கு போன் பண்ணி பேசியதில், நான் “வருவதற்கு 6 மணியாகும். நீ அப்படியே பொடி நடையாக சாய் பாபா கோவிலுக்கும் போய் வா” என்று சொன்னேன். பர்ஸ், பணம், செல் போன் ஒன்றுமே கிடையாது.  சரி என்று அவள் கிளம்பி சென்று, பாபா தரிசனம் முடிந்து, திரும்பி வந்து, வீட்டின் அருகே உள்ள, பிள்ளையார் கோவிலில் பிரதட்சிணம் செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது நான்கு வீடு தள்ளி, கும்பல், போலீஸ் வேன் இருக்க, விஜாரித்ததில், “அஹோபில மட” ஜீயர் வந்திருக்கிறார், என்று கேள்விப்பட்டு, எனக்கு உடனே போன் செய்ய, எனக்கு வெள்ளிக்கிழமை ஆபீஸ் பூஜை இருந்ததால், அதையும் முடித்துவிட்டு, வீட்டுக்கு நேரே வந்து, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, உடனே அங்கே சென்றேன். என் மனைவி அதற்கு முன்பே, சேவித்து விட்டு திரும்பி வர, நான் போய் நமஸ்காரம் செய்து திரும்பி வந்தேன்.

வரும்போது, மணி 6, அப்போதுதான், எனக்கு புட்டபர்த்தி சாய் பாபாவின் “திவ்ய சரித்ரம்” படிப்பதற்கு புஸ்தகம் இல்லையே என்று உறைத்தது. என்ன செய்வது, எனக்கு pdf அனுப்புகிறேன் என்று சௌ. பாரதி சொன்னபோது கூட, புத்தகத்தை ஸ்வாமியிடம் வைத்து, ஒரு புஷ்பத்தை சமர்ப்பித்து, பிறகு எடுத்துப் படிப்பது தான் சிறந்தது என்று நினைத்தேன்

சாய் மகான் எனக்களித்த ஆச்சரியங்களின் பிரவாகம் – இனி வருவது

உடனே கிளம்பி புட்டபர்த்தி சாய் பாபா கொவிலுக்கு சென்று புத்தகம் இருக்கா என்று பார்க்கலாம் என்று கிளபினேன். அங்கு போய், வண்டியை நிறுத்திய போது, கோவில் அமைதியாக இருந்தது. யாருமே இல்லை. “சரி,

நமக்கு pdf  தான் என்று நினைத்து உள்ளே போனால், “Library மூடலை சார், நீங்கள் போங்கள்” என்று ஒருவர் சொல்ல “முதல் ஆச்சரியம்”

உள்ளே போய், “தபோவனம்” புத்தகம் இருக்கிறதா என்று விசாரிக்க, அங்கு இருந்த பக்தர், இங்கிலீஷ், தமிழா என்று கேட்டார். அப்போது எனக்கு தெரியும், இது பல மொழகளில் இருக்கிறது. என்று. நான் தமிழ் என்று சொன்னேன். “சாரி சார், தமிழ் இல்லை” என்று சொன்னார். நான் மனதிக்குள் “நமக்குப் ப்ராப்தம்” அவ்வளவு தான். என்று கிளம்பும்போதுதான் – அந்த அதிசயம் நடந்தது

அவர் “என்னிடம் ஒரே ஒரு தமிழ் புத்தகம் இருக்கிறது. என் நண்பருக்குக் கொடுப்பதற்காக வைத்து இருக்கிறேன் அதை உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார்” நான் அப்படியே “விக்கித்து நின்று விட்டேன்”. இப்படி ஒரு கருணையா, நான் இந்த கருணையை பெறுவதற்கு என்ன செய்தேன். மாணிக்கவாசகர் சொன்னது போல் “கொண்டது என் தன்னை, தந்தது உன் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்” என்ற வாக்கியத்தின் உண்மையை நான் அப்போது புரிந்து கொண்டேன்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.

அது மட்டும் இல்லை. என்னிடம் 500 ரூபாய் நோட்டுதான் இருந்தது. சில்லறை இல்லை. அவரிடமும் இல்லை. நான் மீண்டும் என் பர்சில் தேடியதில் 10 ரூபாய் குறைந்தது.  என்னடா இது என்று சொல்லி அவரைப் பார்க்க,  அவர் சிறிது யோசித்து. சற்று இருங்கள் என்று, ஒரு டிராயரைத் திறந்தார். அதில் கொஞ்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. என்ன ஆச்சர்யம், மிச்சம் அதில் இருந்தது. நான் வெல வெலவெலத்துப் போய் விட்டேன்.

இன்னும் முடியவில்லை”

இன்று, காலையில், திவ்ய சரித்ரம் படிப்பதற்கு சங்கல்பம் செய்து கொண்டு ஆரம்பித்தேன். இன்றுதான் முதல் முறையாக இந்த புத்தகத்தை தொடுகிறேன். எனக்கு  5 மேலும் 6 பகுதிகள் “படிப்பதற்காக அனுமதி அளித்து இருந்தார்கள். 5 வது பகுதி நானும் 6- என் மனைவியும் படிப்பதாக முடிவு செய்தோம்.

நான் “சாளக்ராம பூஜை” செய்து வருகிறேன். “சாம்ப பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்ற ஒரு வரி என் சங்கல்பத்தில் வரும். திவ்ய சரித்ரத்தை படிப்பதற்கு முன்பு சங்கல்பத்தில் “சாம்ப பரமேஸ்வர” என்று வந்துவிட்டது. நான் சரிதான், தவறு ஒன்றுமில்லை என்று நினைத்து, புட்டபர்த்தி சாய் பாபாவையும், பிரார்த்தனை செய்து கொண்டு, படிக்க ஆராபித்தேன்.

என்ன ஆச்சர்யம். 5 வது chapter ல் “சாம்பா” என்ற வார்த்தைக்கு “அர்த்தம்” சொல்வது போல் ஒரு பாரா வந்தது.  எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், ஹோமம், பூஜை ஒரு பிராமணனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் விளக்கப் பட்டு இருந்த்து. எனாக்காவே, அவரைப் புரிந்து கொள்ளாமல், இத்தனை காலமாக இருந்த எனக்காகவே அவர் எழுதியது போல இருந்து.

ஷீரடி சாய் பாபா தான் நான் என்று அர்த்தத்துடனும் ஒரு பாரா இருந்தது.

நான் காண்பது, கனவா, நனவா, நான் இருக்கும் உலகத்தில், எனக்கென்று இவ்வளவு, இறங்கி வந்து, தன்னைப் பற்றி, நான்தான் சர்வமும், நானும் உனக்கு குருநாதர் தான் என்று “சர்வ சுலபனாக” புட்டபர்த்தி சாய் பாபா பெய்த கருணை மழை – நான் நனைந்து நனைந்து ஆனந்தப் பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

நான் முன்னமே சொன்னாற்போல், எனக்கு இதற்க்கு இம்மி அளவு கூட அருகதை கிடையாது. புட்டபர்த்தி சாய் பாபா கோவிலில் சேவை செய்யும் மாந்தர்களில் கால் தூசு கூட நான் பெற மாட்டேன். எனக்கு அவர் செய்த கருணை நினைத்து மெய் சிலிர்க்கிறது.

என் மனைவி படித்த 6 வது பகுதியிலும், பல விஷயங்கள், நாங்கள் வாழ்ந்த வாழ்கையை, திரும்பிப் பார்க்க வாய்த்த விஷயங்கள் நிறைய.

சாய் பாபா கோவில், எதேச்சையாக சென்ற என் மனைவி, இன்று புட்டபர்த்தி சாய் பாபா சரித்ரம் படித்த நான்.  என் மனைவி வழி காட்ட, அபிராமி பட்டர் சொன்னது போல், “நின்றும், இருந்தும் கிடந்தும்” நினைப்பது உன்னை – என்று நான் சொல்ல, அருளுகிறார் இந்த மகான்.

ஒரு பாபநாசம் சிவன் அவர்களின் பாட்டு உண்டு “நெக்குருகி உன்னை பனியா கல் நெஞ்சன் எனக்கு அருள்வாய்- முருகா”  என்று

எனக்கு அருளி இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது

சர்வம் சாய் மயம். சத்குரு புட்டபர்த்தி சாய் பாபாவின் சரணங்களிலும், அவருடைய கோடி கோடி பக்தர்களுக்கும், என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்.

பின் குறிப்பு : ஒரே மூச்சில் நான் தமிழில் என் “பதிவேடுகளில்” கட்டுரை எழுதியே இல்லை. ஒரு ஒரு பக்கமாக ஒரு வாரமாவது ஆகும். இது ஒரே மூச்சில், இடத்தை விட்டு எழுந்திராமல் – எழுதிய பதிவு.

இதுவும் குருநாதர் கருணை.

 

 

 

 

 

 

 

 

 

No comments: