Friday, 2 April 2021

கலைக் கோவில் – பட விமர்சனம் !!

 

இந்தப் பழைய படத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  காதலிக்க நேரமில்லை என்ற படத்தைப் பற்றித் தெரிந்திருந்தால், இந்தப் படத்தை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.  ஏனெனில், காதலிக்க நேரமில்லை படத்தை எடுத்து “மிக பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த ஸ்ரீதர், உடனே, அடுத்து, எம். எஸ். விஸ்வநாதனை தயாரிப்பாளராக வைத்து, சுட சுட எடுத்த அடுத்த படம், கலைக் கோவில்.

26 நாளில் எடுத்த படம். வீணை இசைக் கலைஞரைப் பற்றிய படம்

பயங்கர அடி வாங்கிய படம். டைரக்டர் ஸ்ரீதர், இந்தத் தோல்வியை, ஜீரணிக்க முடியாமல் ஒரு வாரம் ஜுரம் வந்து படுத்து விட்டார், என் MSV சொல்லியதாக இன்றும் you tube ல் இருக்கிறது.

பல நூறு படங்கள் MSV- கண்ணதாசன் combination ல் இருக்க நான் இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் பாடலகை அலசும்போது, அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனவே,- இந்தப பதிவு.

சாதாரணாமாகவே, MSV சங்கீதம் என்பது அருமையாக இருக்கும். அதுவும், சொந்தப் படம் என்பதால், கண்ணதாசனும், MSV யும் அற்புதமான பாடல்களைத் தந்திருந்தார்கள், இந்தப் படத்தில் ஒரு பாடலில் “சரணங்களை”  பற்றி என் பதிவு இது. எப்படியெல்லாம் அழகு படுத்தலாம் என்று, கண்ணதாசன் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். விஸ்வநாதனிடம் உள்ள அளவு கடந்த பாசத்தினால். அளவு கடந்த “கற்பனையுடன்” எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்

ஒரு காதலன், காதலி மிகவும அன்யோன்யமாக இருக்கும்போது பாடும் பாடல் இது.  “நான் உன்னைச் சேர்ந்த செல்வம்” என்று ஆரம்பிக்கும் பாடல் இது. இதில், சரணத்தில் கண்ணதாசனின் வரிகளைப் பார்ப்போம்:

“உன் அச்சம், நாணம் என்ற நாலும்

என் அருகில் வந்தவுடன் அஞ்சும்

இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்”

நாலும், அஞ்சம், ஆறும், எழும். என்று அழகாக.. ஆஹா என்ன கற்பனை.

இதில் இன்னொரு சரணத்தில்,

மீட்டும், வாட்டும், கூட்டும், காட்டும் என்று முடிவது போல் ஒரு சரணம் இருக்கும்.

பி சுசீலாவின் தேன் குரலில் பாடும் இந்த வரிகள்

“உன் விழிகள் என் உயிரை வாட்டும்

உன் விரல்கள் என் அழகை மீட்டும்

உன் குரலும் என் பெயரைக் கூட்டும்

அதில் கோடி கோடி இன்பம் காட்டும்”

இதில் சுசீலா அவர்கள் இரண்டாவது முறை பாடும்போது, PBS ஒரு ஹம்மிங் கொடுப்பார். அது “ஹெட் போன்” போட்டுக் கேட்டால் தான் கேட்கும். அதி அற்புதம்.

இப்போது கொஞ்சம் தமிழ் இலக்கணத்திற்க்கு செல்வோம்..

இதில் முதல் மூன்று வரிகள் சீர் எல்லாம் “உன்” ல் ஆரம்பிக்கும்

சரணத்தில் முதல் வரியில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரியாக இருந்தால் அதற்க்குப் பெயர் இலக்கணத்தில்:

“அடி எதுகை” என்று பெயர். 

அடுத்தது, முதல் சீர், மூன்றாம் சீர் இவைகளைப் பார்த்தால் ஒரே வரிகள், அதாவது “உன், என்” – இப்படி இருந்தால் அதற்குப் பெயர்

“பொழிப்பு எதுகை”

சரணத்தில் முதல் வரி, ஒரே எழுத்தில் ஆரம்பித்தால், அதற்கு

அடி மோனை  என்று பெயர். (இங்கு உ)

கடைசி நான்கு வரிகள் “ட்டும்” என்று முடிகிறது, அப்படி முடிந்தால் அதற்கு “அடி இயபுத் தொகை” என்று பெயர்.

கண்ணதாசனுக்கு இந்த இலக்கணம் தெரியுமோ தெரியாதோ, இந்தப் பாட்டின் இலக்கணமே எனக்கு “வேறு”.

தமிழ் இலக்கண வகுப்பு முடிந்தது

இன்னொரு சரணத்தில்

ஸ்ரீ ராமன் நெஞ்சில் நின்ற சீதை

மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை

மனம் உருகி சூடிக் கொண்ட கோதை

ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை”

இன்னொரு சரணத்தில்

நம் உள்ளம் கலைக்கோவில்

இரு கண்கள் கோவிலுக்கு வாசல்

நமதாசை கோவில் மணி ஓசை

அதில் அன்பு வண்ண மலர் பூஜை

 

பி,பி ஸ்ரீநிவாஸ், சுசிலாவின் மதுரக் குரல்களில் குழைந்து வரும் இந்த பாட்டு. 

இப்போதும் 65000 பேர் கேட்ட பாட்டு, you tube இல் இருக்கிறது.

கண்ணதாசனைப் பற்றி பல பேர் பல விதமாக எழுதிவிட்டார்கள். நான் எழுதுவதற்க்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்கும்போது, சத்தியமாக என் நெஞ்சை அள்ளியது.

இது “நிலவும் மலரும் பாடுது” என்று தேன் நிலவு படத்தில் ஒரு பாட்டு வரும். அதன் சாயலில் இருப்பது போல் தோன்றும்.  அது A M ராஜா அவர்கள் இசை.  ஆனால் எந்த வித்ததிலும் மெருகு குலையாமல் அருமையாக அமைந்த பாடல். 

இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் இதற்க்கு இணையானது தான்

தங்க ரதம் வந்தது – பாடியவர் ஸ்ரீ பால முரளி க்ருஷ்ணா, இது “ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல் என்று கருதுகிறேன்”

முள்ளில் ரோஜா – எல் ஆர் ஈஸ்வரி (நடுவில் பி பி ஸ்ரீநிவாஸ் ஒரு ஹம்மிங்க் கொடுத்து இருப்பார்- கேளுங்கள் – out of the world.

மற்றும் சில எனக்கு “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடலின் வரிகள் நெஞ்சை அள்ளியதால் இந்தப் பதிவு.

அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு மிகவும் நன்றி.

 

 

 

No comments: