Wednesday, 13 May 2020

முக பஞ்ச ஷதியில் கர்ணன்


கர்ணன் பிறப்பு, மகாபாரதத்தில் அவனின் பாத்திரப் படைப்பு ஒரு புறம் இருக்கட்டும்.  மூக பஞ்ச சதியில், மூக கவி, கர்ணனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யம்.  காமாக்ஷியின் பெருமைகளை வாரி வாரிக் கொடுத்த கவி,  கடாக்ஷ சதகத்தில் 5 வது பாடலில். கர்ணனைக் குறிப்பிடுகிறார். பாண்டவர்களையும் குறிப்பிடுகிறார். அந்தப் பாடலின் அர்த்தத்தைப் பார்ப்போம், முடிந்தால் சம்ஸ்கருத்தையும் பார்ப்போம்

கடைக்கண் பார்வையை மட்டும் வைத்து 100 ஸ்லோகங்கள் எழுதி இருக்கிறார். காஞ்சி மகான் அடிக்கடி மேற் கோள் காட்டும் அற்புதமான புத்தகம் இது.

1944 ல், காஞ்சீபுரம் காமாக்ஷி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூக பஞ்ச சதி, புத்தகம் ஒன்று வெளிவந்து, அது என் கைக்குக் கிடத்தது. அதிலிருந்து. இந்த பதத்துக்கு விளக்கம்:

“காமாக்ஷியே ! அடிக்கடி வெண்ணிறமுடைய புன்முறுவலின் உதவியைப் பெற்றதாகினும், பயங்கர மூர்த்தியாகிய பரமசிவனின் மனத்தைக் களிப்பிப்ப்பதும் ஆகிய உம்முடைய கடைக்கண் ஒளியானது, அடிக்கடி புன் முறுவலை உடைய அர்ஜுனனின் உதவியைப் பெற்றதாகியும், பீமசேனனுடைய மனதை களிப்பிப்பதுமாகியுள்ள பாண்டவர்களின் சேனையைப் போன்றதாகியும் இருந்த அது .. “ஐயோ, கர்ணனுடைய பக்கத்திலே போய்ச் சேர்வதைப் போல், காதுகளின் அருகே செல்கின்றதே ?!!”  என்ற அர்த்தத்துடன் அமைந்து இருக்கிறது.

தேவியின் கண்கள் காது வரை நீண்டு இருக்கிறது. கடைக்கண்ணோக்குகள் காதுகளின் பக்கமாகச் செல்கின்றன என்று கூறி, கர்ணனின் பக்கம் சேர்ந்து கொண்டு விட்டாயே = என்று சிலேடையும், ஆச்சர்யமும் வருத்தமும் தோன்றக் கூறுகிறார்.
இப்படி ஒரு “Comparison” நான் பார்த்ததில்லை, கேட்டதில்லை. அபாரம். அம்பாளின் அருள் பெற்றால் எது தான் சாத்தியமாகாது  ??

வைத்ய ஸ்ரீ S.V.ராதா கிருஷ்ண சாஸ்த்ரிகள் தான் எழுதிய முக பஞ்ச ஷதி பாஷ்யத்தில், இப்படிக் கொண்டாடுகிறார்

உன் கடாக்ஷத்தின் அழகாகிய லக்ஷ்மீ, புன்சிரிப்பாகிற அர்ஜுனனுக்கு உதவுவதாக, பீமனாகிற சிவனின் மனத்தை மகிழ்விப்பதாக, பாண்டவரின் சேனை போல், கர்ணனாகிய காதின் அருகே செல்கிறது.
அர்ஜுனன் பீமன் கர்ணன் என்பவை இரு பொருள் உள்ள சொற்கள். புன் சிரிப்பு வெள்ளை, அர்ஜுனனும் வெள்ளை.  பீமன்-பீமசேனனும் சிவ பெருமானும். பீம சங்கரர் என்ற ஜோதிர் லிங்கம் புகழ் பெற்றது. பதினொரு ருத்ரர்களில் ஒருவர் பீமர். கர்ணன் குந்தியின் பிள்ளையாக இருந்தும், பாண்டவர்களின் விரோதி.  பண்டவ சேனை, கர்ணனை வெல்ல, அவன் அருகே செல்கிறது. கடாக்ஷம் காதின் அருகே செல்கிறது. பாண்டவர் சேனை போன்று தேவியின் கடாக்ஷ அழகு
பாண்டவர் சேனை, அர்ஜுனனுக்கு உதவ, பீமனை மகிழ்விக்க, கர்ணனை நோக்கி செலவது போல், தேவியின் கடாக்ஷ அழகு, வெண்ணிறமுள்ள புன் சிரிப்புக்கு உதவ, சிவனின் மனம் குளிர, காதின் அருகே செல்கிறது.

“......காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீணா..” என்கிறார், முக கவி.
கவிகளின் உலகம், எல்லையற்ற சுகம்.



Friday, 8 May 2020

எடுக்கவோ கோர்க்கவோ


மகாபாரதம் ஒரு சிக்கலான ஒரு காவியம். பல பெயர்கள். பல கிளைக் கதைகள். வியாச முனிவரின் சொந்தக் கதையைப் படித்தாலே தலை சுற்றும். சிகண்டி ஏன் சிகண்டினியாக மாறினாள். ? பீஷ்மரை வைத்து ஒரு வருடத்திக்கு, prime time ல் ராமாநந்த சாகரின் ராமாயணத்திற்கு முன்பு ஒரு சீரியல் ஓட்டலாம்.  ஏன் –எதற்கு-எப்படி நிறைய உண்டு. இப்போது தலைப்புக் கதைக்கு வருவோம்.

மகாபாரதம் படித்தவர்களும், கொஞ்சம் தமிழில் ஆசை உள்ளவர்களுக்கும், அட.. கர்ணன் படம் பார்த்தவர்களுக்கும், (சிவாஜி-சாவித்திரி-அசோகன்) மேற் சொன்ன வரிகள் புரிந்திருக்கும்
வில்லிப்புதூரார், எப்படி தன் பாடலில் இந்த இடத்தைக் கையாளுகிறார் என்று பார்க்கலாம்.

“சட்” என்று புரியாதவர்களுக்கு, சுருக்கமாக, கதையைப் பார்க்கலாம்.  கதை தெரிந்தவர்கள் அடுத்த பாராவை “ஸ்கிப்” செய்து விடலாம்

குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். அதற்கு முன்பு....

கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர் தூது முடிந்தபின், கர்ணனை, துரியோதனிடம் இருந்து பிரிக்க வேண்டும், அப்படி பிரிக்க முடியாவிட்டால், செயலிழ்க்கவாவது செய்ய வேண்டும் என்று குந்தியைப் பார்க்க வருகிறார். குந்தியிடம் கர்ணன் பிறப்பைப் பற்றிச் சொல்லி, “அவன் உன் மகன்” என்று சொல்லி குந்தியைப் பதற வைக்கிறார். கர்ணனைப் போய் பார்த்து உண்மையைக் கூறுமாறும், பாண்டவர் பக்கம் வந்து விடுமாறும் கூறச் சொல்கிறார்.  அப்படி அவன் மறுத்தால் (செஞ்சோற்றுக் கடன்). அவனிடம் இரண்டு வரங்களைக் கேட்கச் சொல்கிறார்.

இரண்டு வரங்கள் என்ன என்பதை நான் கூறப்போவதில்லை. இந்த கட்டுரைக்கு அது அவசியம் இல்லை.

குந்தி சந்திக்க வருகிறாள்.  கர்ணனிடம் தான் உன் தாய், நான்தான் என்று கூறுகிறாள்.  நிலை குலைந்து நிற்கும் கர்ணனிடம், குந்தி பாண்டவர் பக்கம் வந்துவிடுமாறு கூறுகிறாள்.

கர்ணன் மறுக்கிறான், அவன் பாண்டவர் பக்கம் ஏன் வரமாட்டேன் என்பதற்கு ஒரு காரணம் கூறுகிறான். அதுதான் இந்த “தலைப்பு”

இப்போது வில்லியாரின் பாடலைப் பார்ப்போம்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு

அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப

"எடுக்கவோ?கோக்கவே?'" என்றான்; திடம் படுத்திடு வேல் 

இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

சில வரிகளுக்கு அர்த்தம் பார்ப்போம்:

பொன்-திரு மேகலை மணி- இடையில் கட்டி இருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே – உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம் தன்னில் – (நான் மிகவும் ரசித்த வரிகள்) – கர்ணனும் பானுமதியும் தனியாக இருக்கிறார்கள். ஆனாள், அந்த குற்றமோ, தவறோ நிகழாத இடம்.

மற்ற வரிகள் எளிமையானவை, அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமில்லை

சரி – இப்போது விஷயத்திற்கு வருவோம் – எடுக்கவோ கோர்க்கவோ என்று துரியோதனன் கேட்கிறான் !

எடுப்பது சரி, எதற்குக் கோக்கவேண்டும் ?

முத்தில் நூலைக் கோர்க்கும்போது, கை நடுங்காமல் இருக்க வேண்டும். கை எப்போது நடுங்கும். ஆத்திரத்தில்,  கோபத்தில் நடுங்கும்.

கோபம் கொள்ளக் கூடிய, ஆத்திரம் அடையக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது. ஆனால் துரியோதனுக்கு, ஆத்திரமும் இல்லை, பயமும் இல்லை. நிதானமாக இருக்கிறான். கர்ணனின் மேல் 

அவ்வளவு நம்பிக்கை. அதனால், “கோர்க்கவோ” என்றான்.

இரண்டு அர்த்தம் கொள்ளலாம்- ஒன்று, கர்ணனோ, பானுமதியோ அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர், எதிர் பாராத இந்த நிகழ்ச்சியால் – துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று (அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து)

“நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்துத் தருகிறேன்” என்று துரியோதனன் சொன்னது, தன் உயிர் நண்பனிடம், தன் மனைவியிடமும் அவன் வைத்த நம்பிக்கை.

இதை கர்ணன் தன் அம்மாவிடம் சொன்னது இன்னும் மேன்மையானது. இது போன்ற ஒரு “ situation” ஐ இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். அதுவும் தன் தாய் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் – சொல்கிறான்.

ஒரு வரி- இரண்டு அர்த்தம். வில்லியாரின் வரிகள் அபாரம்.

கர்ணன் படம் திருப்ப பார்க்கும்போது – இந்த சீனைப் பாருங்கள். “சிவாஜியில் அதிர்ச்சியும், சாவித்திரியின் பதற்றமும், அசோகனின் கனிந்த பார்வையும் – அபாரமாக இருக்கும்.





Thursday, 12 March 2020

நான் புரிந்து கொண்ட இராமாயணம் 1 - செம்மங்குடியில் போட்ட விதை


இராமாயணத்தை நான் பல முறை கேட்டிருக்கிறேன்.  தமிழ் நாட்டில் பிறந்து. தமிழ் தெரிந்த நான் எப்போதும் பெருமைப் படும் விஷயம், இதே போல், ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ மத் பாகவதம் போன்ற பல நல்ல கதைகளை, சிறு வயதிலேயே கேட்டது

செம்மங்குடியிலே, கோபால வாஜபேயாஜி போன்ற பல உபன்யாசகர்களின் கதைகளைக் கேட்கும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது. அவர் தன் பெயருக்கு முன்னால், “உபன்யாஸ கேசரி” என்றெல்லாம் போட்டிருப்பார். பக்கத்து ஊரான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களும் “புடை சூழ” வந்து, பெருமாள் கோவிலில் உபன்யாசம் செய்ததுண்டு.  சின்ன வயதில் ஆழப் பதிந்த இந்த கதைகள், 5 வருடம் கழிந்த பின்னும் இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுதுகிறது என்றால், அது ராமன் என்ற அற்புதமான கதாபாத்திரமும், அதன் உட்கருத்துகளை புரியும்படியும், பிரமிக்கும் படியும் சொன்ன மகான்கள்.

சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீக்ஷிதர் மூலமாக 9 நாட்கள் சொல்லும் “நவாகம்” – இராமாயண உபன்யாசம் வரகூரில் கோவிலில் வைத்தது மூலம் எங்கள் குடும்பம் கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கொண்டோம். மேலும் செம்மங்குடி தாத்தாவும் ஸ்ரீரங்கத்தில் நவாகம் வைத்து, ஆஞ்சநேயர் போல தீக்ஷிதர் பக்கத்தில் உட்கார்ந்து அணு அணுவாக ரசித்தது என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ராமாயணத்தில் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேட்ட ரசித்த பல நிகழ்வுகளை என்னுடைய “பதிவேட்டில்” இடுவதன் மூலம் கொஞ்சம் புண்ணியம் தேடலாம் என்பது எனது எண்ணம்.

“நேற்று நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்து கொண்டிருக்கும்போது (சுகர் நடைதான்) சு. தீக்ஷிதர் அவர்களின் ராமாயணம் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில்

சீதா கல்யாணம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாளில் “ஆண்டாள் கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம், சீதா கல்யாணம் போன்ற திருக் கல்யாணமங்கள் நடந்த நாட்கள். இவை மற்றுமின்றி, முருகன், ஐயப்பன் இவர்களுக்கும் மிகுந்த நாள்” என்றும் சொன்னார். 

“அன்று ஒரு நாள் தான், ஸ்ரீ ரங்கத்தில் தாயார் வெளியில் வருவார். படி தாண்டா பத்னி என்பது தாயாருக்குத் தான் பொருந்தும். அன்று ஒரு நாள் கர்ப்பக் கிருகத்தில் இருந்துட வெளியில் வந்து அரங்கனாதருடன், எழுந்தருளி காட்சி கொடுத்து விடடு, அன்று இரவே உள்ளே சென்று விடுவார். பிறகு அடுத்த பங்குனி உத்தரம்தான்.  வெளியில் வருவது, வெளிப் பிராஹாரம், வீதி உலா, எல்லாம் நம்மாள்தான் (அரங்கநாதர்). தனிக்காட்டு ராஜா.”

திருச்சியில் 5 வருடம் படித்த எனக்கு, இது நேற்றுதான் தெரியும். 

ஜனகன் ஒரு பெரிய ஞானி, அவருடைய குல குருவான “சதாநந்தரை விட” மிகவும் சிறந்த ஒரு தீர்க்கதரிசி யான அரசன். சீதைக்கு மணம் முடிக்கும் முன், அக்கினி குண்டத்தின் அருகில் சென்று மெளனமாக நின்று 2 நிமிடம் சென்று பிறகு கன்னிகா தானத்திற்கு செல்கிறான்.  அந்த நிமிடத்தில் அவர் நினைத்தது, “ஏ அக்கினியே, இன்று சுயம்வரத்தில் உன் சாட்சியாக என் மகளை இராமனிடம் ஒப்படைக்கின்றேன்.  இன்றொரு சமத்தில் உன் சாட்சியாக சீதையின் ஒழுக்கத்தை, பாதிவ்ரதத்தை, சோதிக்கிற நேரம் வரும். அப்போது அவளை கை விட்டு விடாமல் காக்க வேண்டும்” – என்று பிரார்த்திக்கிறான்.

என்ன ஒரு அருமையான பாத்திரம், அருமையான எண்ணங்கள்.

தொடரும்




Friday, 13 December 2019

எழுதும் பணியே பணியாய் அருள்வாய். – 3 – “யார் பிராஹ்மணர்”


சாஸ்திர ரத்னாகர தேதியூர் சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் அவர்களின் நூற்றாண்டு விழா  நினைவாக வெளியிடப்பட்ட  “ப்ரஹ்ம வித்யா உபாக்யான சதகம்” என்ற நூலில் இருந்து சில பகுதிகள்:

பாஷ்ய பாவக்ஞ வரகூர் கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்: (கட்டுரை எழுதியவர்- நான் வழி மொழிகிறேன்-அவ்வளவுதான்)

விதேஹ நாட்டின் மாமன்னருள் ஜனகர் ஒரு சமயத்தில் “பஹு தட்சிணம்” என்ற பெயருள்ள வேள்வியைச செய்தார்.  அப்போது அந்த வேள்வியில், அழைக்கப்பட்டும், அழைக்கப்படாமலும், குரு தேசத்தில் இருந்தும், பாஞ்சால தேசத்தில் இருந்தும், மற்றும் பல தேசங்களில் இருந்தும் அனேக பிராஹ்மணர்கள் அங்கு வந்து கூடியிருந்தனர். 

அவர்களைப் பாரதத்துடன் ஜனக மகாராஜாவுக்கு, பிராமணன்’ என்ற உபநிஷத் வாக்கியத்தின் படி உண்மையில் பிரஹ்மத்தை அறிந்த பிராஹ்மணன் யார்” என்று அறியவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு உபாயமாக ஒரு பரந்த திடலில், நடுத்தர வயதுள்ள ஆயிரம் பசுக்களை நிறுத்தி, ஒரு பசுவிற்கு, இரண்டு கொம்பிலுமாக, இரண்டரை கிராம் தங்கத்தை கட்டி, வேள்விக்கு வந்திருந்த பிராஹ்மணர்களிடம் “உங்களுள் யார் சிறந்த பிராஹ்மணர்களோ அதாவது ப்ரஹ்மத்தை நன்கு அறிந்தவர்களோ, அவர்களுக்கு இந்த பசுக்களை பரிசாகத் தருகிறேன்” என்றார்.

அதைக் கேட்டு அங்கு இருந்தவர்களுள், யாக்ஞவல்க்யரைத் தவிர, வேறு ஒருவரும், பசுக்களை ஓட்டிச் செல்ல துணியவில்லை. அப்பொழுது, யாக்ஞவல்க்யர் தன்னிடம் சாம வேதம் பயிலும் ஒரு சீடனைக் கூப்பிட்டு அவ்வளவு பசுக்களையும் தனது வீட்டிற்க்கு ஒட்டிச்செல்லுமாறு கூறினார். இதைக் கண்டு திகைத்துப் போன மற்ற ப்ராஹ்மணர்களுள், ஆச்வலர், ஆர்த்த பாகர், புஜ்யு, உஷஸ்த்தர், கஹோளர், ஆருணி, காரகர், சாகல்யர் போன்றவர்கள், யாக்ஞவல்க்யர் பொறாமை கொண்டு,  நீர் ப்ரஹ்மிஷ்டரா ? அல்லது பசுக்களை அடைய வேண்டும் என்ற ஆசையில் இதை செய்தீர்களா ? என்று கேட்க, அதற்கு யாக்ஞவல்க்யர் வினயமாக, “பிரம்மிஷ்டர்களை நாம் வணங்குகிறோம். பசுக்களின் மேல் உள்ள ஆசையினால் மட்டும் தான் இதை செய்ய துணிந்தேன்.” என்று கூறினார்/

இருந்தாலும், அவர் பிரம்மிஷ்டர் அல்ல என்று நிரூபிக்க அவரிடம் பல தரப்பட்ட கேள்விகள் கேட்டார்கள். அவை யாவற்றிற்கும், சரியான விடை சொல்லி, யாக்ஞவல்க்யர். அவர்களைத் தோற்கடித்து. நானே உண்மையில் மிகச் சிறந்த ப்ராஹ்மணர் என்று நிரூபித்தார்.

முடிவுரை: (என்னுரை)

ப்ருஹதாரண்யகம் – மூன்றாவது அத்தியாயதிலிருந்து ஒரு சிறிய பகுதி இது.  இதை எழுதியவர், எங்கள் வரகூரைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் பெருமை.  சம்ஸ்கருத பாஷையில் மிகவும் பண்டிதராக விளங்கி இருக்கிறார் என்பதும், பல கிரந்தங்களை இயற்றி இருக்கிறார் என்பது அவருக்குக் கொடுக்கபட்டு இருக்கிற “அடை மொழியில்” தெரிகிறது.

யாகஞவல்க்யரைப் பற்றிப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது – இப்படியும் ஒரு மகான் இருக்க முடியுமா என்று ?

யாக்ஞவல்க்யர், சுக்ல யஜுர் வேதத்தை நமக்கு வழங்கியவர். பிரம்ம ரதன் என்பவர்க்கும், சுனந்தா தேவிக்கும் பிறந்தவர்.  பிரசவம், நீண்ட நாடகள் ஆகாமற் போகவே, சுனந்தா தேவி, உள்ளே இருக்கும் சிசுவிடம் கேட்க, “நான் ஸ்ரீ மந் நாராயணின் அணுக்ரஹம் கிட்டினால் தான் அவதரிப்பேன்” என்று குரல் வந்தது. உடனே பிரம்ம ரதன், மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருக்க, ஐந்து வருடம் கழித்து யாகஞவல்க்யர் பிறந்தாராம்.  இவர் எழுதிய “யாக்ஞவல்கியர் ஸ்ம்ருதி” என்ற நூல்தான், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆதாரம் என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை.

இதை விட மேலும் ஒரு ஆச்சர்யம், வேத வியாசரிடம் (or vaisambaayanar)  சீடனாக இருந்து, யஜுர் வேதம் கற்றுக்கொண்ட யாகஞவல்க்யர், பிறகு வியாசரிடம், ஏற்பட்ட, மனக் கசப்பு காரணமாக, தான் கற்ற கல்வியை மீண்டும் வியாசருக்கே திரும்பித் தர நேரிட்டது.  தான் கற்றதை அப்படியே தன வாய் வழியாக கக்கி விட்டார்.  அதை வேத மாதா, ஒரு பறவை வடிவில் வந்து உண்டது. அப்படி வந்ததுதான் “தைத்ரிய உபநிஷத்”.

Sunday, 1 December 2019

சபரிமலையும் அத்வைதமும்


குருசுவாமி + மாலை + சபரிமலை = அத்வைதம்  என்று கூட இந்த பதிவேடுக்குப் பெயர் வைக்க நினைத்தேன்.

கார்த்திகை மாதம் வந்தால் மாலை போட்டுக்கொண்டு விரதம்  இருந்து, இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் கோடானு கோடி, தமிழ் அய்யப்பமார்களுக்கு  இந்த சிறு கட்டுரை சமர்ப்பணம்; 

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொள்வது என்பது ஒரு பெரிய அத்வைத சித்தாந்தக்கு அடிக்கல்.  ஈடு இணையில்லாத ஒரு பெரிய தன்னிலை அறிதல் (INTROSPECTION)  என்று கூட சொல்லலாம்

பதினெட்டு படி ஏறி மேலே போகும்போது "தத்வமசி" என்று எழுதி இருக்கும். அது, நாம் அத்வைதத்தை நோக்கிப் போவதை உறுதிப் படுத்தும்.

நாம் அகங்காரம் அடைவதற்க்கு, பல காரணங்கள்,  மேன்மை, குலம், கல்வி, அழகு போன்ற பல. இவை எல்லாம் தவிடு போடியகிற இடம்,  எருமேலியில் நடக்கும் "பேட்டைத் துள்ளல்".  இதில் எல்லா ஐயப்பன் மார்களும், தன் முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு,  டான்ஸ் ஆடிக் கொண்டு வருவார்கள்.  டாக்டர், எஞ்சினீயர், ஆடிட்டர்,  பெரிய தொழிலதிபர்,  செருப்ப தைப்பவன், எல்லோரும் ஒரே கலர், ஒரே சாமி.  ,,, இதைவிட ஒரு சமத்துவம் எங்கே பார்க்க முடியும் !!!!

இப்போதேல்லாம் கோவில் போவது என்பது  பீச்சுக்குப் போவது போல் ஆகிவிட்டது.  சரவண பவன் ஹோட்டல் போவதற்கு முன்பு, கபாலியையும், சாய் பாபாவையும் பார்த்து விட்டுச் செல்லலாம், என்ற அளவில் இருக்கிறது, பக்தி. இதில் ஷூ போட்டுக்கொண்டு, சர்வ சாதாரனமாக,  வண்டியில்  உட்கார்ந்து கொண்டு, போகிற வழியில், சாமியைப் பார்த்துக்கொண்டு போகிறவர்கள் ஏராளம்.    

நீங்கள் மைலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு காலையில் வந்து பார்த்தால்,  jogging  போய் விட்டு, சாக்ஸ், ஷூ சகிதம்,  வியர்வை சிந்தும் சட்டையோடு, வாசலில்  கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கும்  அருள் வழங்கும், துர்பாக்கியம் சாய் நாதருக்கு !  காரில் உட்கார்ந்து கொண்டே சாய் நாதரைப் பார்ப்பவர்கள் ஏராளம்.

இப்படி ஒரு கால கட்டதத்தில், சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்வதும், அதனை தொடர்ந்து “விரதம்” என்ற பெயரில் நாம் செயும் தியாகங்களும் மெச்சத் தகுந்த ஒன்று.  எல்லோரும் சாமிதான்- இது ஒரு மதத்தான ஒருமைப்பாடு.  இதை எந்த ஒரு கோவிலிலோ, விரதத்திலோ-பார்க்கவே முடியாது

நான் பல முறை சொல்லி/எழுதி இருக்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும், குருநாதர் இல்லாமல் எந்த ஒரு ஆன்மீக வாழ்க்கை யாருக்கும் அமையாது. அந்த குரு எந்த ரூபத்தில்  வருகிறார் என்பது நமக்கே தெரியாது.  நம்மை அறியாமல் நம்முடனே இருப்பார்.  தவறான பாதையில் போனால், சரி செய்வார். அவரை நாம் பூரணமாக நம்ப வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு சரணாகதி பண்ணி விட வேண்டும்.  இதைத்தான் பஜ கோவிந்தத்தில், "குரு சரணாம்புஜ நிர்பர பக்தஹ......" என்று சொல்லி, குரு சரணத்தில், களங்கமில்லாத பக்தியை செலுத்தினால்,  ஹ்ருதயத்தில், இறைவனைப் பார்க்கலாம்.....என்று ("ஹ்ருதய: த்வம் தேவம்" )  முடிக்கிறார்

திருப்பதி மலை மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன்.  எதிரில் நாமம் போட்டுக் கொண்டு வந்த ஒருவர் கைத்தடியைக் கொடுத்து, எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். வாங்கிக்கொண்டு இரண்டு நிமிடம் கழித்துத் திரும்பிப் பார்த்தால், யாருமே இல்லை. இவர் யார் ?  குருநாதரேதான்:  அதனால் தான் கிருஷ்ண பரமாத்மா சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலம் படிக்கச் சென்றார்.  64 கலைகளை 64 நாட்களில் கற்றுக்கொண்ட கிருஷ்ணனுக்கு, குரு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாதா என்ன ?  ராமன் விஸ்வாமித்ரரின் பின்னால் ஏன் “பவ்யமாகச்” சென்றான் காட்டிற்கு ?

ஹரிதாஸ் கிரி அவர்கள் சத்குரு ஞானானந்தர் அவர்களைப் பற்றி எழுதிய பாடலில்

பிறந்து பிறந்து என்ன பேரின்பத்தைக் கண்டாய்

பிறவாதிருக்க என்ன வழிதான் செய்து கொண்டாய்

மறந்தொரு தரமாகில் குருநாதா என்று சொன்னால்

திறந்து வழி காட்டுவான் திரும்பி வராதிருக்க

மிகச் சிறந்த குரு கிடைத்தவர்கள் தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவேண்டாம்.  குரு கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிடுவார். அதே போல் நல்ல குருசாமி கிடைத்தால் தன் சபரி மலை யாத்திரையைப் பற்றி கவலை வேண்டாம். 

சபரிமலையாத்திரை என்பது ஒரு அனுபவம்.  ஒரு 42 நாள் கட்டுக் கோப்பான வாழ்க்கை. மாலை போட்டுக் கொண்டவுடன், நமக்கு சில கட்டுப்பாடுகள் தானே வருகிறது.  தவறு செய்தால் யாரும் பார்க்கப் போகிறதில்லை என்றாலும், மனதுக்குள் ஒரு பயம் வருகிறது. அந்த பய உணர்வு தான் குருநாதர்.

மாலை போட்டுக் கொண்டவுடன் உடனே எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வந்து விடும் என்று சொல்வதெல்லாம் பொய். 11 மாதங்களாக தறி கேட்டு ஓடிய மனதை, சாப்பிட்ட சாப்பாடு, பார்த்த படங்கள், எதிரில் வரும் இம்சை அரசிகள், “தெரிந்தும், தெரியாமலும்” செய்த பாவங்கள், இவை எல்லாவற்றையும்,  switch போட்டார் போல்,  மாலை போட்டுக் கொண்டவுடன் நிறுத்துவது, என்பது சாத்தியமே இல்லை !!

மாலை போட்டுக் கொண்ட நான்காவது நாளில், வீட்டில் மனைவியுடன் “வெட்டு குத்து” நடக்கும்.  மாலை போட்டுக் கொண்டு இப்படிக் கோபப் படக் கூடாது என்று மனைவி நினைவு படுத்தும் நிலையாகி விடும். ஆபீசில் யாரோடு அனாவசியமாக கோபித்துக் கொண்டு, இரவு, குளித்துவிட்டு,
நமஸ்காரம் செய்து, “லோக வீரம் மஹா பூஜ்யம்” சொல்லும்போது “அடடா மாலை போட்டுக் கொண்டு கோபித்து கொண்டு விட்டோமே” என்று வருத்தப்படுவோம்.

“குருநாதர் அருளும், இரு மாத வ்ரதமும், துணையாக உடன் வந்து காக்குதைய்யா” என்ற பாடலில் சொல்லிய படி, கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள் நகர நகர, நம் மனதில் ஐயப்பன் வந்து “ஜம்” என்று உட்காருவார். நாம் சற்று நம் குடும்பத்தில் இருந்து விலகுவது போல் தோன்றும். ஜாஸ்தி பேச மாட்டோம், தாடி வளர வளர, சித்தர் போல ஒரு சிந்தனை உடல் முழுவதும் பரவும். அதற்க்குத்தான், பஜனை, சரண கோஷம், உணவில் கட்டுப்பாடு, எல்லோரையும் சமமாகப் பாவித்து, எல்லோரையும் சாமியாக நினைப்பது/பார்ப்பது. பெண்களையும், மஞ்ச மாதா என்று "பெண் தெய்வமாக- பார்ப்பது... ...

இந்த குருநாதர் மூலம் போட்ட, மாலை என்ற விதை, சரண கோஷம், கட்டுப்பாடு போன்ற தண்ணீர் பாய்ச்சி, 42 நாட்களில் வ்ருக்ஷமாக வளர்ந்து, பெரிய பாதையில் நடந்து போகும்போது, விரி என்ற தங்கும் இடங்கள், அந்த மரத்தின் நிழலாக நமக்கு துணை வர,  ஐயப்பன் சந்நிதானத்தில் போய் நிற்கும்போது, எப்படி சிவபெருமான் மாங்கனியை பிள்ளையாருக்கு கொடுத்தாரோ, அப்படி, ஐயப்பன் நமக்கு அந்த மரத்தில் இருந்து, அருள் என்ற ஒரு பழத்தைத் தருவார்” – அது தான் மஹா பிரசாதம்.

கரிமலை ஏறும்போது “பெண்டு” கழண்டுவிடும், இறங்கும்போது, கால் துவளும். பம்பையில் குருசாமியைப் பார்க்க “வலி பறந்து போகும்” சந்நிதானத்தில் ஐயப்பனை தரிசித்த பின்னர், குருசாமியிடம் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, நம்மை அறியாமல் நம் கண்களில் ஒரு துளி கண்ணீர் வரும்.  அதுதான் சரணாகதி.  இந்த ஆனந்தத்தை அளிப்பவர் குருசாமி.



இந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

இதைதான் அபிராமி பட்டர் செய்தார். சும்மா உட்கார்ந்துகொண்டு, பௌர்ணமியை, அமாவாசை என்று மாற்றிச் சொல்லி, அரசன் கோபம் கொண்டு, கீழே பற்றி எரியும் நெருப்பில், “சொல்லடி அபிராமி, நில்லடி முன்னாலே” என்று ஒருமையில் அம்பாளை “மிரட்டும்” அளவுக்கு ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பக்தி செய்திருக்க வேண்டும்

சாதாரணமான பக்தி செய்யும் ஒரு சுப்பிரமணிய அய்யரை எப்படி  அபிராமி பட்டர் என்ற ஒரு பெரிய பக்தியின் சிகரமாக மாறினார்- என்பதை- பால குமாரன் – என் “கண்மணித் தாமரை” என்ற ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.  என்னைக் கேட்டால், வாழ்க்கையில் ஒரு முறை சாசிக்குப் போக வேண்டும் என்று சொல்வது போல்,  இந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும்... வாங்கிப் படியுங்கள். உன்னதமான் வரிகளில், அபிராமி பட்டரைச் செதுக்கி இருப்பார். நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அனுபவம் அது.

இந்த நிலையை அருணகிரிநாதர் உணர்ந்து இருக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு, அவர் திருவண்ணாமலையில் வல்லாள கோபுரத்தில் இருந்து, உயிரை மாய்த்துக் கொள்ள குதிக்கிறார். அவரை முருகப் பெருமான் தடுத்து ஆட்கொண்டு, முத்தை என்ற வரி வைத்து பாடு என்கிறார்.  “முத்தைத்திரு” என்று பாட ஆரம்பிக்கிறார்.  பிறகு திருவண்ணாமலையில் இருந்து நேரே “குமார வயலூர்” வருகிறார். அங்கு “பக்கரை விச்த்றமணி” என்ற பிள்ளையார் மேல் ஒரு பாட்டு பாடுகிறார். 

அதற்கு அந்த பிள்ளையார், சந்தோஷத்தால், நடனம் ஆடுகிறார். இப்போதும், வயலூர் சென்றால், முருகன் சன்னதி செல்வதற்க்கு முன்னாள், அந்த நர்த்தன விநாயகரைப் பார்க்கலாம்.

அவர் சொல்கிறார், பக்தியின் ஆரம்பத்தில். தன்னுடைய திருப்புகழில் ‘சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேரமட்டில், தவ முறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி...” என்கிறார்.

எனக்கு மிகவும் ஆச்சர்யமூட்டும் வரிகள் இவை. முருகன், பிள்ளையார் அருள் பெற்ற பிறகு,  தம்மை எவ்வளவு தாழ்த்திக் கொள்கிறார்- என்பதைப் பார்க்க. அப்படியென்றால் நம் பக்திக்கு என்ன adjective போடலாம் ?

இப்படி அவர் பாடி பாடி, பல முருகன் கொவிலுக்குச் சென்று, அநுபூதி பெற்ற பிறகு, என்ன பாடுகிறார் என்று பாருங்கள் !!

“எல்லாமற என்னை இழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூபதியே”

என்னையே உன்னிடம் இழந்து விட்டேன் என்கிறார். இவர்தான் முதலில், தன்னை மூட, மட்டி என்கிறார்.

அத்வைதம் என்பதை உணருவது என்பது கடலில் நீந்தி கரை காணுவது போல. ஆதிசங்கரரின் எல்லா போதனைகளும் அதை நோக்கியே.  இதை ஒரு மாலை போட்டு நம்மை ஆசிர்வப்பதன் மூலம், நம் குருசாமி, சர்வ சாதாரணமாக புரிய வைக்கிறாரே ?  அதுதான் குருநாதர் !!!

இதுதான் அத்வைதம். பக்தி செய்ய செய்ய நம்மை மறந்து இறைவனிடம் சேருகிற அந்த நேரம் தான் அத்வைதத்தின் உச்சம். அதை நாம் அய்யபபனின் சன்னதியில் உணரலாம். உணருவோம்.

ஸ்வாமி சரணம்