Thursday, 22 November 2012

நோ பார்மாலிட்டீஸ் ப்ளீஸ்...!


எண்ணம் போலத்தான் வாழ்க்கை. சரி, இதையும் சொல்றீங்க. அதே நேரம், நடக்கிற எல்லா விஷயங்களும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டவைன்னும் சொல்றீங்க..? ஒன்னுக்கு ஒன்னு contra ஆகுதே.... கொஞ்சம் புரியும்படியா சொல்ல முடியுமான்னு நண்பர் ஒருத்தர் கேட்டார். 

இறைவன் விதி என்னும் ரூபத்தில் , ஒவ்வொருவரின் எண்ணங்களையும் செயல்களையும் தீர்மானிக்கிறார். அதன் விளைவுகளையும் கூட. ஒருவரது மதி செயல்படக்கூட விதி ஒத்துழைக்கவேண்டும். அவரவர் பூர்வ ஜென்ம வினைகள் விதி ரூபத்தில் இப்படித் தான் விளையாடுகின்றன. எல்லோரும் தான் கஷ்டப்பட்டு வேலை செய்றாங்க. ஆனால் ஒரு சிலர் மட்டும் மேலே மேலே உயர்ந்துவிடுறாங்க. ஆனால், இன்னும் சிலர் அவர் அவர் முயற்சிக்குப் பலன் கிடைக்காம தானே இருக்கிறாங்க. 

அதனால, நம்ம முயற்சிக்கு பலா பலன் குறைவா கிடைக்குதுன்னா, நம்ம கர்ம கணக்கிலே , கொஞ்சம் குறையுதுன்னு நினைச்சிக்கிட்டு , இன்னும் விடாமல் உங்கள் முயற்சியை தொடருங்கள்...! பலன் நிச்சயம். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதை நினைத்து வருந்தி பயன் இல்லை இனி நடக்க விருப்பவை மேலும் நம் பாவக் கணக்கில்  சேரா வண்ணம் நம் செயல்கள் அமையட்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ரெண்டுங் கெட்டான்  நம்பிக்கையின்மை தான் நம்மோட பெரிய  பலவீனம். கடவுள் இல்லவே இல்லை என்று வாதிடும் நாத்திக வாதிகள் கூட, மரண தருவாயில் யாராவது விபூதி கொடுத்தால், உடனே பூசிக் கொள்கிறார்கள் அப்படியாவது மரணம் தள்ளிப் போகாதா என்கிற நம்பிக்கையில். நம்மைப் போன்றவர்களுக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி சொல்லி வளர்த்து இருக்கிறார்கள். இருந்தாலும் மனதில் ஊசலாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முழு மனதோடு இறைவனை நம்புபவர்களுக்கு எந்த ஒரு பார்மாலிட்டீஸூம்  தேவையில்லை என்பதை கீழே உள்ள ஒரு சிறிய கதையைப் படிக்கும்போது நீங்கள் உணர முடியும்....



 

எந்த சக்தி நம்மை, இந்த உலகை ,இயக்குகிறதோ  அந்த பரம்பொருளை முழுவதும் பணிந்து - நம் அன்றாட கடமையை செவ்வனே செய்து வந்தாலே , நம் முயசிகள் பலனளிப்பதொடு - அவன் தரிசனமும் கிட்டும். இதுதான் ஒரு கர்ம யோகியின் செயல்...... நாம் அனைவரும் செய்யக் கூடியது இதுதான். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து சந்நியாசம் வாங்கிக் கொள்வது , இயலாத காரியம். ஆனால், அவனை நினைத்தபடியே நம் எல்லா செயல்களும் செய்வது நம்மால் முடியும் காரியம். நம்பிக்கையுடன் முயல்வோம்..!

ரொம்ப நாளைக்கு முன்பு, படித்த இரண்டு கதைகளை , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். ரொம்ப எளிமையான, அதே சமயம் மனதை விட்டு அகலாத அருமையான கதைகள். இவை, நமக்கு ச் சொல்லும் செய்திகள் ஏராளம்...! படித்துப் பாருங்கள்!

கடவுள் உங்கள் ஊருக்கு வரப்போகிறார். இந்த அசரீரி ஒலியைக்கேட்டதும், மக்கள் அனைவரும் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஊர் எல்லைக்கு ஓடினார்கள். அனைவரும் வழிமேல் விழிவைத்து  கடவுளுக்காகக் காத்திருந்தனர், ஒரே ஒரு 
வேலைக்காரச் சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானுண்டு தன் வேலை உண்டு என வீட்டு வேலையை கவனமாக பார்த்து கொண்டிருந்தாள். 

கொஞ்சநேரத்தில் காற்றைப் போல், கதிரொளியைப் போல் முதியவர் ஒருவர் உதித்தார் ஊருக்குள்! வெறிச்சோடிக் கிடந்த வீதிகளில் வலம் வந்தார். ஆளரவமற்ற வீடுகளைப் பார்த்துப் புன்னகைத்தார். மெல்ல நடந்தார். ஒரு வீட்டுக்குள்ளிலிருந்து மட்டும் பாத்திரம் உருட்டும் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்தார் முதியவர். கடமை உண்ர்ச்சியுடன் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரச் சிறுமி.

சின்னப் பெண்ணை வாஞ்சையோடு அருகே அழைத்தார் முதியவர். அளவான ஆசையையும், அளவற்ற ஆசியையும் கொடுத்தார். ஊரார் வந்ததும், நான் என் கடமையைச் செய்து கொண்டிருந்தால், கடவுள் எனக்கு தரிசனம் தந்தார் எனக்கூறு..! என்று சொல்லிவிட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மறைந்தார். யார் தன் கடமையைச் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு கடவுள் தரிசனம் தருவார்.

நன்றி : தினமலர்
==================================================================

லியோ டால்ஸ்டாய் என்றாலே ரஷிய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளான ‘போரும் சமாதானமும்’ மற்றும் ‘அன்னா கரீனா’வும் நினைவுக்கு வரலாம். ஆனால் அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளும் கூட மிகச்சிறந்தவையும், பொருள் பொதிந்தவையும் ஆகும். உதாரணத்திற்கு அவருடைய ’மூன்று ஞானிகள்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம்.

ஒரு பிஷப் பாதிரியார் பல யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு கடல்கடந்து இருக்கும் ஒரு புனிதத்தலத்திற்குக் கப்பலில் செல்கிறார். கப்பலில் செல்கையில் அந்தப் புனிதத்தலத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு தீவில் மூன்று மகத்தான ஞானிகள் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காக அந்த ஞானிகள் சதா சர்வகாலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சொல்லவே பிஷப்பிற்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. கப்பல் கேப்டனிடம் அவர் அந்தத் தீவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்தத் தீவின் கரை வரை கப்பல் செல்ல முடியாதென்றும், தீவருகே சென்று ஒரு படகில் தான் அங்கு செல்ல முடியும் என்றும் கூறிய கேப்டன் அவரை மனம் மாற்றப் பார்க்கிறார். ஆனால் பிஷப் தன் விருப்பத்தில் உறுதியாய் இருக்கவே கேப்டன் ஒத்துக் கொள்கிறார்.

அந்தத் தீவிற்கு சற்று தொலைவில் கப்பல் நிற்க படகு மூலம் அந்தத் தீவிற்கு ஆவலுடன் பிஷப் பயணிக்கிறார். ஆனால் தீவில் மூன்று ஞானிகளைக் காண்பதற்குப் பதிலாக அவர் கண்டது கந்தலாடைகள் அணிந்த வயதான மூன்று கிழவர்களைத் தான். பிஷப்பின் உடைகளைப் பார்த்து அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள பாதிரியார் என்பதைப் புரிந்து கொண்ட கிழவர்கள் அவரை பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியவுடனேயே அவர்கள் மூவருக்கும், கல்வியறிவோ, பைபிள் பற்றிய ஞானமோ இல்லை என்பது பிஷப்பிற்குத் தெரிந்து விட்டது. இந்த படிப்பறிவில்லாத கிழவர்களைப் போய் ஞானிகள் என்று சொல்லித் தன் ஆவலை வீணாகத் தூண்டி விட்டார்களே என்று எண்ணிய பிஷப் அவர்களிடம் நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.

“நாங்களும் மூவர். நீங்களும் மூவர். எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று சொல்லி பிரார்த்தனை செய்கிறோம்” என்று மூன்று கிழவர்களும் பணிவுடன் சொன்னார்கள்.

அவர்கள் நீங்கள் மூவர் என்று சொன்னது கர்த்தர், பிதா, பரிசுத்த ஆவியைச் சேர்த்துத் தான்.

பிஷப் திகைப்படைந்தார். “இது என்ன பிரார்த்தனை. இப்படியுமா பிரார்த்தனை செய்வார்கள்” என்று அவருக்கு தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து இவர்களின் அறியாமையை அறிந்த பின் அவர்களுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லித் தருவது தன் கடமை என்று உணர்ந்த பிஷப் அவர்களுக்கு முறைப்படியாக பிரார்த்தனை செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார். அவர் அவர்களது அறிவுக்கேற்ப எளிய பிரார்த்தனையை தான் கற்றுத் தந்தார் என்றாலும் அதைக் கற்கவே அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இத்தனை வருடங்கள் ஒரு வரி பிரார்த்தனை செய்து வந்த அவர்களுக்கு சில வரிகள் கொண்ட புதிய பிரார்த்தனை சிரமமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

எப்படியோ அவர்களுக்கு முறைப்படி கற்றுத் தந்த பிஷப் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு படகு மூலம் கப்பலுக்குத் திரும்பினார். அவர் கப்பலை நெருங்கிய சமயத்தில் அந்த மூவரும் அவர் படகை நோக்கி ஓடோடி வந்தார்கள். “ஐயா எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு மீண்டும் தாங்கள் சொல்லித் தந்த பிரார்த்தனை மறந்து விட்டது. இனியொரு முறை சொல்லித் தருவீர்களா?”

தரையில் ஓடி வருவது போல கடலில் சர்வ சாதாரணமாக ஓடி வந்த அவர்களைப் பார்த்த பிஷப் பிரமித்தார். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி சொன்னார். ”நீங்கள் இது வரை செய்து வந்த பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள் பெரியோர்களே. உங்களுக்கு வேறெந்த பிரார்த்தனையும், போதனையும் தேவையில்லை. முடிந்தால் தயவு செய்து எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்”

பிஷப்பே பழைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்தால் போதும் என்று அனுமதி அளித்து விட்ட திருப்தியில் அந்த மூவரும் அவரை வணங்கி விட்டு நிம்மதியாகத் தங்கள் தீவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்ற திசையில் ஒரு பொன்னிற ஒளியை அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் கண்டார்கள்.

எந்த வழிபாட்டையும், பிரார்த்தனையையும் புனித நூல்களில் சொல்லப்பட்ட விதங்களை பின்பற்றியோ, முன்னோர் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை பின்பற்றியோ, முறையான சடங்குகள் என்று நாம் நம்பி வருவதை பின்பற்றியோ செய்தால் தான் அது இறைவனை எட்டும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பெரும்பாலான மதத்தலைவர்களும் அப்படியே தான் மக்களை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் பிரார்த்தனைகளின் மகத்துவம் சடங்கு, சம்பிரதாய வழிகளில் பின்பற்றப்படுவதில் இல்லை. அது ஆத்மார்த்தமாகவும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யப்படுவதிலேயே தான் இருக்கின்றது. எல்லா மதங்களிலும் இந்த செய்தி பிரதானமாகச் சொல்லப்படுகின்றது.

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம் சம்பிரதாயத்தைப் பின்பற்றியது அல்ல. ஆண்டாள் வழிபட்ட விதமும் அப்படியே. சபரியின் பக்தியும் அப்படியே. இறைவன் செவிமடுத்து வந்த பிரார்த்தனைகள் பெரும் பண்டிதர்களுடைய பிரார்த்தனைகளாக இருந்ததில்லை. நீண்ட சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததில்லை. மாறாக அவை தூய்மையான, எளிமையான நெஞ்சங்கள் பெரும் பக்தியோடு செய்யப்பட்ட மனமுருகிச் செய்த பிரார்த்தனைகளாக இருந்திருக்கின்றன.

தருமி என்ற தரித்திரப் புலவனும், கண்ணப்பன் என்ற வேடுவனும், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவியும் பிரார்த்தனையால் இறைவனைத் தங்களிடமே வரவழைத்த கதைகள் நாம் அறிவோம். டால்ஸ்டாய் சொன்ன அந்தக் கதையிலும் தேவாலயங்களில் முறைப்படி நீண்ட நேரம், நீண்ட காலம் முறைப்படி பிரார்த்தனை செய்தும் ஒரு பாதிரியார் அடையாத நிலையை ஒரு வேடிக்கையான வாசகத்தைப் பிரார்த்தனையாகச் சொல்லி வந்த மூன்று கள்ளங்கபடமற்ற கிழவர்கள் அடைந்ததைப் பார்த்தோம்.

எனவே உங்கள் பிரார்த்தனைகள் எளிமையாக இருக்கட்டும். அவை உண்மையாக இருக்கட்டும். அவை நியாயமானவையாக இருக்கட்டும். அவை இதயத்தின் ஆழத்தில் இருந்து வருபவையாக இருக்கட்டும். நீண்ட பிரார்த்தனைகளிலும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் அதிகமாய் கவனம் செலுத்தாமல் மனத்தூய்மையுடனும், பக்தியுடனும் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனைகள் என்றுமே வீண் போகாது.

இந்த அருமையான கதையை இணையத்தில் பதிவேற்றிய திரு என். கணேசன் அவர்களுக்கும் ஈழ நேசனுக்கும் மனமார்ந்த நன்றி!

No comments: