Thursday 22 November 2012

ஆறுவது சினம்; சீறுவது அல்ல

இன்னல்களை ஏற்படுத்திவிடும் கோபத்தின் கெடுதி உணர்ந்தே பெரியோர் பலரும் ‘கோபம் தவிர்! கோபம் தவிர்!’ என்று சொல்கிறார்கள். பாரதியும் அதைப் ‘பழகு’ என்றுதான் சொல்கிறான். பழக்கமில்லாவிட்டால் ஏடாகூடமாய்ப் பாய்ந்துவிடும்@ நம்மையும் சேர்த்தே குதறிவிடும் என்பதுதான். அதனால்தான் ‘சீறுவதல்ல, ஆறுவதே சினம்’ என்றிருக்கிறார்கள்.

அடுத்த வீட்டுக்காரனிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகள் வரை நமது கோபத்துக்குத் தீனி போடப் பலப்பல உண்டு. அந்த நெருப்பினால் நாமும் நம்மோடு பிறரும் வெந்து விடாமல் பார்த்துக்கொள்ளத் தெரிய வேண்டும். தனிப்பட்ட கோபமாக இருந்தாலும் சரி சமூகக் கோபமாக இருந்தாலும் சரி அதன் பாதிப்புகள் விளைவுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.இலக்கிய உதாரணங்களில் பார்த்தால் கூட, கோபம், அதற்கு ஆளாகியவர்களையும் அழித்து, கோபப்பட்டவர்களையும் அழித்தே அடங்கியிருக்கிறது. அப்படியொரு முதுசமாக நமக்குள் வந்திருக்கும் கோப-வன்முறை உணர்வுகளை, மனிதர்கள் இன்று அடைந்திருக்கும் நாகரிக வளர்ச்சியுடன் பொருத்தி ஆராய்ந்த பிறகே பொங்க வேண்டும். அதே பழைய ‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்’ வகையறாக்களுடன் வீர, ரோச வெறிகளைப் பொங்க விடுவது…. பத்தாயிரம் வருட நாகரிக வளர்ச்சிக்குப் பின்னான இன்றைய மனிதனுக்குரிய இயல்போ விவேகமோ அல்ல.

“போர்த் தொழில் விந்தைகள் காண்பாய், ஹே! பூதலமே” என்ற பார்த்தனின் முழக்கத்தோடு எழுந்த பாண்டவர்களின் கோபம் கௌரவர்களை மட்டும் அழித்து அடங்கிவிடவில்லை. பாண்டவர் தரப்பையும் மிச்சம் விடாமல் அழித்துவிட்டே ஓய்ந்தது என்பதே உண்மை.

“பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையும்….” என்று பொங்கிய கண்ணகியின் கோபம் ஒரு நகரையே அழித்துவிட்டே ஓய்ந்தது.

“….உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை” என்று கோபத்தில் உலகை அழித்துவிடத்தான் துடிக்கிறது ராமனின் வீரமும்! “ஆராயாமல் மாயமானின் பின் சென்ற குற்றம் உங்களுடையது. குலத்துக்கே நாசம் உண்டாக்கியதில் பாதிப்பங்கு குற்றத்தை உங்களிடமே வைத்துக்கொண்டு சும்மா கோபவெறி கொள்ளுதல் தப்பு” என்று சடாயு எடுத்துரைப்பதாகக் கம்பன் பாடுகிறான்.

குலத்துக்கே நாசம் விளைவிக்கும் கோபத்தை யாரும் சரி என்று கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுதல் முழுக்க முழுக்க சுயநலத்தின் பாற்பட்டதே.

கோபமும் வீரமும் வெகுமக்களின் அழிவைக் கொண்டுவருவதாக அமையும்போது, அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோபமாக இருந்தால் கூடப் பாராட்டப்பட முடியாத ஒன்றே. மக்களைக் காக்கின்ற வகையில் அந்தக் கோபத்தை ஒத்திவைப்பதோ அல்லது வேறுவழியில் சாதித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தைப் பிரயோகிப்பதோதான் நெஞ்சில் சமூக அக்கறை இருப்பவர்களின் எண்ணமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகால மனித அறிவு வளர்ச்சியில், இந்த நிலையை வந்தடைய முடியாதவர்கள் வெறும் ஆதிமனித அழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுவாகவே ரோசத்தில் தீய்ந்தழிவதைத் தடுக்க முடியாமற் போகும்.


--


      
          

No comments: