Saturday, 30 March 2024

>> ஜெய ஜெய வராஹபுரி வெங்கடேசா >>>

 எங்கள் பெருமாள் அளப்பரிய கருணை மிக்கவர். அது எங்கூர்க்காரர்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் எந்த உத்சவம் என்றாலும், எங்கு இருந்தாலும் உடனே வரகூர் வந்து, பெருமாளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

நேற்று, நான் மைலாப்பூர் ஸ்ரீ ராம் சிட்ஸ் கிளைக்கு சென்றிருந்தேன். அங்கு உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது வரகூர் புராணத்தை பாடிவிட்டு, மேலே பார்த்தால் வரகூர் பெருமாளின் காலண்டர் மாட்டி இருக்கிறது. யாரோ மாட்டி இருக்கிறார். இதே போல். P.S.CBSE  பள்ளியில், Secretary யும், பெண்ணாத்தூர் அவர்களின் பேரனும், இப்போது தலைமை நிதி நிர்வாகி யும் (Treasurer of PS Group of School) ஆன ஸ்ரீ P.S.Prabhakar  அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அருகில் வரகூர் monthly calender இருந்தது. அவரிடம் கேட்டபோது, “யாரோ கொண்டு கொடுத்தார்கள், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கொடுத்து விட்டார்.  இந்த சின்ன விஷயங்கள், வரஹூர்க்காரனான எனக்கு சின்ன சிலிர்ப்பு உண்டாக்கும் நிகழ்வுகள்.

அது போகட்டும்

சேங்காலிபுரம் என்று ஒரு ஊர் உண்டு.  (அனந்தராம் தீட்சிதர்) அங்கு பிறந்தவர்கள், காசிக்குப் போக மாட்டார்கள். ஏனென்றால் சேங்காலிபுரம் தான் காசி, அங்கு ஓடும் தீர்த்தம் தான் கங்கை என்று. இன்றும் அப்படித்தான்.

அப்படித்தான் வரஹூர்

மஹா பெரியவா சொல்லுவார் “வரஹூர் க்காரானுக்கு அவன் பெருமாள் உசத்தி. வேறு ஒரு கோவிலுக்குப் போகவும் யோசிப்பான். அங்கு போனாலும், வரஹூர் சுவாமியாகவே அதையும் பார்ப்பான்?” என்று

ஏன் அப்பா சொல்வார். மஹா பெரியவாளிடம், ஒருவர் சென்று, “நான் வரஹூர் போய் வந்தேன் என்று சொல்ல, அவர் “தனியா போனியா, ஆத்துக்காரியை அழைச்சிண்டு போனியா” என்று கேட்க, அவர் “தனியா போனேன்” என்றார். அதற்க்கு, பெரியவா “எண்டா, வரஹூர் பெருமாளே, தாயாரை மடியில் வச்சிண்டு இருக்கார். நீ என்னடான்னா, தனியா போனேன் கறியே..... இனிமேல் அங்கு போனால் தம்பதி சமேதரா போங்கோ” என்றாராம்.

இந்தக் கதை எதுக்கு என்று அப்புறம் சொல்கிறேன்.

நேற்று முன் தினம், இப்போது இருக்கும் எங்கள் ஊர் பட்டாச்சார்யார், சில நிர்பந்தங்கள் காரணமாக, போக வேண்டிய சூழ்நிலை. இவர் வந்து சுமார் ஒரு வருடம் இருக்கலாம். இதற்க்கு முன்பு இருந்த மாது பட்டாச்சர்யார் (நாங்கள் அன்புடன் கூப்பிடும் மாது அண்ணா) திரும்பி வருவதாக முடிவு செய்யப்பட்டு விட்டது.

இப்போது இருக்கும் பட்டாச்சர்யார், எப்படி வந்தார் என்பது, வரகூர் வாசிகளுக்கு மட்டுமே தெரியும். பெருமாளின் கருணை எத்தகையது என்பது. இது போகட்டும். !!!!

இந்த நிகழ்வை நான் யோசித்தேன். இதில் பெருமாளின் திருவிளையாடல் என்ன என்று ?  ஏன் ஒருவர் வரவேண்டும், ஒரு வருடத்திற்குள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ???? 

இப்போது இருக்கும் பட்டாச்சர்யாருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பேர் வெங்கடேஷ் பட்டாச்சர்யார். (ஜூனியர் பட்டாச்சார்யார்). வரகூர் பெருமாள் பேரும் அதே தான்.

வெங்கடஷுக்கு  திருமண வயது. அவருக்கு திருமணம் ஆக வில்லை. தாயார் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் இரண்டு மூன்று வருடமாக. சரியாக அமையவில்லை.  என் அம்மாவிடம் பல முறை சொல்லியும் இருக்கிறார். ஏன் அம்மா, எப்போதும் எல்லோரிடமும் சொல்லும் ஒரே வார்த்தை. “வரஹூர் பெருமாளை கெட்டியா புடிச்சிக்கோங்கோ.. அவர் கை விடவே மாட்டார், இது சத்தியம்”  என்பதுதான்

இங்கு வந்த சில மாதங்களிலே, அவருக்கு சில மாதங்களில் நிச்சயம் ஆகி, பெருமாள் சந்நிதானத்தில் கல்யாணம் ஆகி விட்டது. ஊர் கூடி கல்யாணம்.

எங்கள் பெருமாள் என்ன நினைத்தார் என்றார். “நீங்கள் என் ஊருக்கு வாருங்கள், என்னைத் தொட்டு பூஜை செய்யுங்கள், நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி, சொன்ன வண்ணம் செய்து, உரியடி உற்சவத்தையும், இப்போது இருக்கும், பட்டாச்சர்யார் மூலமாக நடத்திக் கொண்டும் விட்டார்.

ஆனால், மாது அண்ணாவை விட, எங்கள் பெருமாளுக்கு மனமில்லை. திருமணமான எந்தப் பெண்ணுக்கும், பிறந்த வீட்டுப் பாசம் விடாது, என்பது போல. மிகவும் பிடித்த மாது அண்ணாவை திருப்பிச் சேர்த்துக் கொண்டுவிட்டார்.

இப்போது நான் சொன்ன கதை புரியும்.  தனியாக வந்த எங்கள் ஜூனியர் பட்டாசார்யாரை தம்பதி சமேதராக அனுப்பி வைத்தார்.

அதுதான் எங்கள் பெருமாள் அணுகிரஹம்.....

திருமூலர் சொன்னது போல் “ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார் அந்த அகலமும் நீளமும்”

//....ஜெய ஜெய வராஹபுரி ஸ்ரீ வெங்கடேசா..........

 

 

  

 

 

 

 

 


Thursday, 9 November 2023

நிலை பெறுமாறு எண்ணுதியேல்.. –

 

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்....?

செல்வம் – வரும் போகும்...

ஆரோக்கியம் – இன்று வரும் நாளை  போகும்

சுற்றவும் உறவும்.....ரயில் பிரயாணம் போல....

மனமோ – ஒரு நொடிக்கு ஓராயிரம் நினைவுகள்.

வாலிபம், சடார் என்று ..... முதுமை

 

இங்கு சற்று நின்று திருப்புகழை யோசிப்போம்

 

முதுமை பற்றி திருப்புகழ் நிறைய சொல்கிறது......

“மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக மகளிரும் நகைக்க......”

என்று ஒரு திருப்புகழ்.... இதன் அர்த்தம்... “வயசாகி விட்டது, நோய் வந்து படுத்து விட்டோம்.. மனைவி நகைக்கிறாள். ஆசையாக நம்முடன் கூடி, அளவளாவிய மனைவி, நக்கல் அடிக்கிறாள்.  எப்படா கூடாரம் காலியாகும் என்று பார்க்கிறாள்”

இதில் மூன்றாவது வரி. லோகத்தில் உள்ள மகளிரும் நகைக்க. என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தை வருகிறது. அருணகிரிநாதர், மிகவும் அனுபவத்துடன் இந்த வரியை எழுதுகிறார்.

லோகத்தில் வேறோரு பெண், நமக்குத் தெரியாதவள், நம் நிலைமையைப் பார்த்துச் சிரித்தால்,.. நமக்கு எப்படி இருக்கும். கூனிக் குறுகி போவோம்.  ஒரு ஆண், எந்த வயதாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம், பந்தா காட்டாமல் இருக்க மாட்டான். ஏதோ ஒரு வகையில்.

அப்படிபட்ட ஒரு பெண். நம்மைப் பார்த்து நகைத்தால். அது கொடுமை.

திரும்பவும் தலைப்புச் செய்திக்கு வருவோம்

இங்கு அப்பர் என்ன சொல்கிறார் என்றால்....

நிலை பெற வேண்டும் என்றால், நிதமும் கோவிலுக்குப் போ,

புலவர்கள் முன் உட்கார்ந்து, அவர் சொல்லும் கருத்துக்களை மெய் மறந்து கேள்.  தலை ஆரக் கும்பிடு.  கூத்து ஆடு. சங்கரா சங்கரா  என்று பிதற்று. ....என்கிறார்

தேவராம்:

நிலை பெறுமாறு என்னுகியேல் . நெஞ்சே நீ

வா. நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு.

புலவர் தன் முன் அலகிட்டு, மெழுகும் இட்டு, பூமாலை

புனைந்து எத்தி, புகழ்ந்து பாடி, தலை ஆரக் கும்பிட்டு,

கூத்தும் ஆடி, சங்கரா ஜெய ஜெய போற்றி போற்றி என்றும்

அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ.....

 

Friday, 25 August 2023

இன்றும் நான் காதலிக்கும் படம்

 

பிப்ரவரி 1964  இல் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அது அந்தக் கால இளைஞர்களை கட்டிப் போடுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஈஸ்ட்மேன் கலரில் செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வலுவான கதை என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று இருந்த காலத்தில், கொஞ்சம் கதை, நிறைய காமெடி, அசத்தலான மியூசிக் என்று விகிதாசாரத்தை பிரித்து வெளிவந்த படம். இன்று வரை பிரமிப்பையும், காதலையும் எனக்கு தந்து கொண்டு இருக்கும் படம். அது- காதலிக்க நேரமில்லை.

வாலி சொல்லுவார். சினிமா என்பது ஒரு டைரக்டர் ன் முயற்சி தான். எந்த கதையையும் ஒரு நல்ல டைரக்டர் மிக அழகாக செதுக்க முடியும். இசையோ, நடிகர்களோ மற்றவர்கள் பங்களிப்பு அப்புறம் தான். – எனக்கு இதில் உடன்பாடு உண்டு. 

இந்த வருடம் வந்த சில படங்கள்.  ஆண்டவன் கட்டளை, படகோட்டி, கர்ணன, வேட்டைக்காரன்.. இப்படிப் பார்த்தால் தான் கா.நே படத்தின் அருமை புரியும்.

நானும் இந்த வருடம் தான் பிறந்தேன். அதனால் நானும் இந்தப் படமும் அறுபது வயதில் குதித்து இருக்கிறோம்.

இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெரும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் கூட நினைத்து இருக்க மாட்டார். இந்தப் படம் காரில் உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. பீச் ல் உட்கார்ந்து எழுதிய கதை, நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு சீரியஸ் படம் எடுத்த பிறகு, ஒரு ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்று தோன்றி, பிறந்த கதை. – இதெல்லாம் செவி வழி செய்தி.

இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்......

நான் சிறுவயது முதல் பார்த்த பல படங்களில் இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாத படங்கள் வெகு சில. அதில் முதாவதாக இருப்பது கா. நே. தான். தில்லானா மோகனாம்பாள், எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை மற்ற சில.

கா. நே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதபடம். அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி உச்சத்தில் இருந்த காலம். ஸ்ரீதர் – வி,ரா இணைந்து வழங்கிய பல படங்களில் இது உச்சத்தின் உச்சம் என்பேன்.

1964 ல் இப்படி ஒரு கற்பனை, இப்படி ஒரு சினிமா பார்வை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு முழு நீள காமெடி என்று சில படங்கள் இதற்கு முன்பு வந்தாலும் கூட. கா.நே . ஒரு நெத்தி அடிபடம்.  முத்துராமன், பாலையா போன்ற பழைய நடிகர்களைத் தவிர, மற்ற எல்லோரும் புது முகம். நாகேஷ் புது முகம் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த யாரிடம் கேட்டாலும் அவர்கள் உடனே சொல்வது பாலையாவிடம், நாகேஷ் கதை சொல்லும் காட்சி தான். என்னை கேட்டால் இதை கடைசியில் தான் வைப்பேன். பல “அழகுகள்” இந்தக் கதையில் உண்டு.

 முதல் அழகு: முதல் சீனிலே, சித்திரம் போன்று வரைந்து அது நிஜமாகி, முத்துராமன் காஞ்சனாவாக உருப்பெற்று, சென்னை பீச் ல் டான்ஸ். “என்ன பார்வை” என்ற பாடல் யேசுதாஸ், பி. சுசீலா.. இந்தப் பாடல் முழுவதும் இளமை பொங்கி வழியும். கடந்த ஐந்து வருடங்களில், இப்படி ஒரு அழகான காதல் பாட்டு ஒரு இருந்தால் சொல்லுங்கள். இந்த பாடல் முழுவதும். இருவரும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்புல விசுவல் மிகவும் பிரமாதமாக இருக்கும்

இந்தப் பாடலில் ஒரு சீனில், காரில் \முத்துராமன் வர. கார் நடு   கண்ணாடியில் (Centre Mirror)  காஞ்சனா முகம் தெரியும் இன்னொன்று, ஒரு ஆச்சர்யமான அழகு. அந்தக் கார் தானாகவே மூடிக்கொள்ளும். கிராமத்தில் இருந்து  வந்த எனக்கு, இந்தக் காட்சியெல்லாம் அப்படியே போட்டோ மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டது. 1967 ல் கே. பாலச்சந்தர், அனுபவி ராஜ அனுபவி படம் எடுக்கும்போது, இப்படித்தான், நாகேஷயும், முத்துராமனையும், ஸ்டில் போட்டோ மாதிரி காட்டி. “அழகிருக்குது உலகிலே” பாட்டைப் போட்டு இருப்பார்.

இரண்டாம் அழகு – ரவிச்சந்திரன், “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா” என்ற பாடல் பாடும் சீன்.  இது காஞ்சனாவையும், ராஜஸ்ரீ யையும் பார்த்து பாடுவதாக அமைந்த பாடல். இதில் முதல் சீனில், ஒரு காரை தலை கீழாக காண்பிப்பார். பிறகு ரவிச்சந்திரன் அந்தப் பாடலை பாட ஆரம்பிப்பார்.  இது ஒரு புது யுக்தி. ரவிச்சந்திரன், காரில் பானெட்டில் தலை கீழாகப் படுத்து இருப்பார். அவர் அந்தப் காரை பார்ப்பது போல் (தலை கீழாக) காண்பித்து இருப்பார் டைரக்டர். அந்தக் காலத்தில் இது எத்தனை பேருக்குத் தோன்றும்.

பிறகு, பாட்டில் கூட, முத்துராமனுக்கு,  கே.ஜே.யேசுதாஸ்,   ரவிச்சந்திரனுக்கு, பீ.பி. ஸ்ரீநிவாஸ்/  அதில் கூட ஒரு நேர்த்தி. “காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை” சாமியார் பாட்டு என்பதால் சீர்காழி. சீர்காழி யின் பாட்டை இவ்வளவு காதலுடன் யாரும் பாடி இருக்கமுடியாது.

  பிறகு. நாகேஷ் பாத்திர வடிவமைப்பு. அவர் பேசும் வசனம்..

உன் பேர் என்ன ?

மீன லோசனி

மீன ?

லோசனி

இனிமேல் உனக்கு லோஷன் எதுவும் வேண்டும். வெறும் மீனாதான்.

இன்னும் ஒன்று

மீனா. உனக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமா ?

ஆமா சார், நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப் படறேன்.

அத இப்ப சொல்லாத, அடுத்த படத்துக்கு ஒன்கிட்ட,  நொந்து போய் ஒரு producer வராம் பார் அவன்ட சொல்லு.

இன்னும் ஒன்று

சார். நீங்க படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள நான் கிழவி ஆயிடுவேன்.

ஆனா என்ன. ஒன்ன வச்சு அழகா, கலர்ல அவ்வையார் படம் எடுக்கிறேன்....

இப்படிப் பல “டான் டான்” வசனங்கள்...

இந்தப் பாடத்தில் இன்னொரு அழகு, ஒவ்வொரு சீனையும் தனித்தனியாக ரசிக்கலாம், சேர்ந்தும் ரசிக்கலாம். உதாரணமாக, ரவிச்சந்திரன்-நாகேஷ் கதை சொல்லும் காட்சி, சாப்பிடும் இடத்தில், பாலையா-நாகேஷ் வசனம்.

நாகேஷ்-பாலையா விடம் கதை சொல்ல, அதை வேர்த்து, விறுவிறுக்க, கண்ணில் மிரட்சியுடன் கேட்கும் பாலையா. அசகாய சூர நடிப்பு.

என்ன பார்வை பாட்டை வேகமாக ஊட விட்டால், “மலரென்ற முகம்” ஒன்று பாட்டின் சாயல் தெரியும். ஆனால் வி.ரா.. இசை ஜோடி அவர்கள் ஜித்தர்கள். 60 களிலும்   70 களிலும் அவர்களின் இசை மூலமாக என்னை வாழ வைத்த தெய்வங்கள்.

நான் படித்த பள்ளியிலும் சரி, மேற் படிப்பு படித்த திருச்சி யிலும், சரி, எத்தனை முறை இவர்கள் இசை அமைத்த பாடலகளை கேட்டு இருப்பேன். கர்நாடக சங்கீதம் என் வாழ்க்கையில் புகுந்து “கோலோச்சியதர்க்கு” முக்கிய காரணம் வி.ரா அவர்களின் மெல்லிசைதான்.  அதனால்தான், விஸ்வநாதன் அவர்களின் மறைவின் போது “எங்கேயும் எப்போதும், சங்கீதம் சந்தோஷம்” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தமிழ் தந்த தவப் படம் இது, தவப் புதல்வர்கள் ஸ்ரீதரும், விஸ்வநாதன் ராமமுர்த்தி அவர்களும்.

இந்தப் பதிவில் கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரைப் பற்றி என்ன என்று எழுத !!! எங்கள் இளமைப் பருவத்தை இனிமையாக்கியவர். 

“கால் நடந்த நடையிலே, காதலையும் அளந்தாள்”.

“அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு”

எண்ணிரெண்டு பதினாறு வயது, பாடலின் வரியில் வரும் வரிகள். ஏதோ ஒரு நிலையில், ஒவ்வொரு ஆண்மகனும், மேலே சொன்ன வரியை அனுபவித்து கடந்து போய் இருப்போம்.....

இந்த ரெண்டு வரியும் போதும்.  திருவள்ளுவராவது ஒன்று அரை  வரி எழுதி விளக்கினார்.  கண்ணதாசன் ஒரே வரி தான். 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, 12 June 2023

திருப்ப்கழ் என்ற ஒரு அமிர்தம் - பாகம் 1

 

பாகம் 1- தடிநிகர் அயிற்கடாவி.....

என்று ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறது. திருப்புகழில்.

 

தமிழை நேசிப்பவருக்கு திருப்புகழை நேசிக்காமல் இருக்க முடியாது. இந்த ஜன்மத்தில் திருப்புகழை நாம் படித்து விடவேண்டும். ராகம் தெரிந்தால் ராகத்தோடு பாடி விடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தெரிந்து இந்த ஜன்மம் வேஸ்ட்.....

 

நமக்கு மிகவும் தெரிந்த, “முத்தைத் திரு” பாட்டை எடுத்துக் கொண்டால், ஏதோ, ‘அகத்திக் கீரை” என்ற வார்த்தையெல்லாம் வருகிற மாதிரி இருக்கும். ஆனால் நிஜ அர்த்தமே வேறு.

 

இந்த தமிழகம், தமிழ் நாடு, என்று அரட்டை அடிப்பவர்களுக்கு, ஒரு நாலு திருப்புகழைப் பார்த்து படியுங்கள் என்று சொன்னால் போதும். பிறகு அப்படி ஒரு வாக்குவாதமே இருக்காது.

 

எனக்குத் தெரிந்தவரை, திருப்புகழ் ஒரு குழந்தை.  முருகனே ஒரு ஞானக்குழந்தை. அதனால் அவருடைய பாடலும் அப்படியே. அருணகிரிநாதர் போன்று ஒருவர் அவதரித்து நமக்குக் கொடுத்த அற்புதமான பொக்கிஷம் இது.

 

வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள் பற்றி ஒரு கதை உண்டு. அவர் திருப்புகழுக்காக தம் வாழ் நாளை அர்ப்பணித்தவர்

 

பீ.எஸ். கிருஷ்ண அய்யர் என்பவர் வள்ளி மலை சச்சினாந்த சுவாமிகளுடன் கடைசி காலத்தில் நெருங்கி பழகியவர். ஸ்வாமிகள் சொன்னது “அருணகிரி நாதர்  திருஞான சம்பந்தர் அவதாரம் – என்று சொன்னதாக.

 

“இருமலு ரோக”. என்று ஒரு திருப்புகழ் உண்டு. டாக்டர்கள் வியாதி பேர் தெரியவில்லை என்றால் இந்தப் பாட்டை refer பண்ணலாம்.  அதே போல் “கெளரி மனோஹரி” ராகத்தில் “வலிவாத பித்தமோடு” என்று ஒரு பாடல் உண்டு

 

அருகே போய் கூப்பிட்டால் திருப்புகழ் கிட்டே வராது. அதன் போக்குக்குப் போய், ஆழப் புரிந்து கொண்டு. அருகே சென்றால், நம்மை அணைத்துக் கொள்ளும்

 

நாம் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றால் kaummaaram.com க்குதான். திருப்புகழின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் எழுதி இருக்கிறார்கள்.  இதில் இங்கிலீஷ் ல் வேறு. பிரமிக்க வைக்கும் முயற்சி. ஸ்ரீ. கோபாலசுந்தரம் என்பவர் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு கோடி நமஸ்காரம் செய்யலாம்

 

உதாரணத்திற்கு, மேலே எழுதி இருக்கும். “தடி நிகரி அயிற்கடாவி” என்ற வரி. கீழ்க்காணும் வரியில் உள்ள ஒரு வார்த்தை..

 

.....தடி நிகரி அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு, சமரிடை விடுத்த சோதி...... (மனையவள் என்று தொடங்கும் திருப்புகழ்) – சத்தியமாக பார்த்துப் படித்தாலே தப்பாக படிப்போம்

 

“மின்னல் போல ஒளி விடும் வேலாயுதத்தை வீசி” அசுரர்கள் இறக்குமாறு சண்டை போட்ட, ஒளிப்பிழம்பான முருகா: என்று இதற்குப் பொருள்.

 

இப்படி அர்த்தம் தெரியவில்லை என்றால் யாரும் திருப்புகழ் கிட்டயே போக மாட்டோம்.

 

இன்னொருவர், திருப்புகழ் ராகவன் சார். எல்லா பாடல்களுக்கும் ராகம் போட்டு, தாளக் கட்டையும் குறிப்பிட்டு, பாடவும் பாடி, அவரி இறுதி மூச்சு வரையும் பாடி, இன்றும் இந்தியா/உலகம் முழுவதும், திருப்புகழ் பஜனை என்று ஒன்று பிரமாதமாக நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அவர்தான் காரணம்.

 

உதாரணமாக, கெளரி மனோஹரியில், மேலே சொன்ன வல்லிவாத பித்தமொடு” – இந்த ஒரு பாடல் தான் இந்த ரகத்தில் இருக்கிறது. கௌமார்த்தில்  அவர் பாடியும் இருக்கிறார். எப்படி கரெக்டாக கெளரி மனோஹரியில் உட்காருகிறது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யம்

 

அதே போல் திருவான்மியூர் முருகன் மேல் தர்மவதி ராகத்தில் “குசமாகி” என்ற ஒரு பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாயகரமான ராகம், கிட்டக்க அரை டஜன் ராகங்கள் தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதை கற்றுக்கொண்டு பாடினால், தர்மவதி ராகத்தை யார் பாடினாலும் கண்டு பிடித்து விடலாம்.

 

திருப்புகழை ஆழப் படித்தால், முதல் ஆறு வரியில், நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்று ஒரு நீதியை, “பளார்” என்று அறைகிறார் போல் சொல்லுவார். அடுத்த 6 வரியில், அந்த முருகன், திருமால் மருகன், எப்படி அணுக்ரஹம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.   

 

திருப்ப்கழை இன்னும் கொஞ்சம் புகழலாம் -

 

 

 

 

 

Tuesday, 27 December 2022

சாத்தூர் கிருஷ்ணா ராமரத்னம் -சங்கீத வித்வத் சபை -21.12.22

 

சாத்தூர் ஏ‌ஜி சுப்ரமணியன் அவர்களுடைய பேரன் இவர். 

தன்னுடைய 20 வயதிலேயே “சங்கீத பூஷணம்’” விருது பெற்ற சாத்தூர்ஏ ஜி சுப்ரமணியன் (ஏ‌ஜி‌எஸ்)அவர்களைப் பற்றி, இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கொஞ்சம் தான். தெரியும்.  ஆத்மார்த்தமாக, கர்நாடக இசையை நேசிப்பவர்களுக்கு, இந்த இசைக் களைஞரைப் பற்றி நன்கு தெரியும்.

இவருடைய இசைய அதிகமாக பதிவு பண்ணாமல் போனால் கூட, அவருடைய சில கச்சேரிகளைக் கேட்கும்போது, அவருடைய ஆழ்ந்த சங்கீத அம்சங்கள் நம்மை அசர வைக்கும். தன் வாழ்க்கையில், நெறியுடன் வாழ்ந்த கலைஞர்.

அனுஷ்டானம் என்ற ஒரு மிகவும் மேன்மையான சக்தியையும், சங்கீதம் என்ற மிகப் பெரிய கலையையும், இரண்டு கண்களாக பாவித்து, காஞ்சி, மகா பெரியவரிடம், அளவு கடந்த பக்தியுடன் வாழ்ந்தவர்.

இப்போது, சங்கீத கலைஞர்களோ, ஸம்ப்ரதாய பஜனை (ராதா கல்யாணம் போன்ற) பண்ணுபவர்களோ, (உயரே செல்ல செல்ல), முதலில் விட்டு விடுவது, அனுஷ்டானம் தான். (First casuality)

மிகவும் ஸ்ரத்தையாக, தன் பெண்களுக்கு, சங்கீதம் சொல்லிக்கொடுத்து, சாத்தூர் சகோதரிகள் என்ற ஒரு உயர்ந்த இடத்தை கொடுத்து, அவர்களும் சென்னையிலும், சங்கீத வித்வத் சபையிலும், பல ஊர்களிலும், கச்சேரி செய்து, தன் தந்தை பாணியை தன்னுடைய சிஷ்யர்கள் மூலமாக இன்றும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.  

இவர்களுடைய ஷிஷ்யர் தான் எஸ்‌கே‌ஆர்.

ஒவ்வொரு வியர்வைக்கும், “காலம்” வேர் வைக்கும், - என்ற வாலியின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. சாத்தூர் என்ற சங்கீத பூஷணத்தின் பேரன் அவர் உட்கார்ந்த இடத்தில், உட்கார்ந்து பாடுவது, அந்தக் குடும்பத்திற்க்கு, பெருமை மட்டும் இல்லை. சாத்தூர் பாணியை, இதுவரை கேட்காதவர்களுக்கு, இது ஒரு சான்ஸ்.

HCL க்காக, MA மினி ஹாலில் பாடி இருக்கிறார். முதல் முறை, ஒவ்வொரு கர்நாடக இசைக் கலைஞனின் கனவு மேடையில் ஏறிப் பாடுகிறார்

ஒரு 11.45 முதல் 1.15 வரை, ஒரு கச்சேரி என்பது, ஒரு சவாலான. குறுகிய நேரத்தில், ஒரு சப்-மெயின், மெயின், தனி –அதுவும் மிகவும் பெருமை வாய்ந்த சங்கீத வித்வத் சபையில்.

இப்போது கச்சேரி”:

 

விக்னேஷ் தியாகராஜன் – வயலின்

ராகவன் VS- மிருதங்கம்

அவருடைய மிகவும் பிரபலபமான “ஆரபியும்” “கல்யாணியையும்” பாடி தாத்தாவுக்கு பெருமை சேர்த்தார்.

பட்ணம் அவர்களில் தோடி ராக வர்ணத்துடன் ஆரம்பித்த அவர்.  சாத்தூர் அவர்களின் மிக பிரபலமான ஆரபி ராக நாத சுதா ரசம் என்ற ரூபக தாள கிருதியை அலசினார்.

பொறுமையாக, ரீதிகௌள ராகத்தை எடுத்து, அழகாக ராகம் பாடி. “ஓராறு முகனே” என்ற நீலகண்ட சிவன் பாடலைப் பாடினார். ஈராறு” என்ற இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தார்.

கல்யாணியை எடுத்து, தாத்தா பாணியில், சில பிடிகளை” அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டு, ராகம் பாடி, ஏதாவுனரா”- வை எடுத்து, (தியாகராஜர்) மிகவும் சிறப்பாக பாடினார். நிரவலை “சீதா கௌரி வாகீஸ்வரி யனு” ல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

அரவிந்த பத மலர் –காபி ராக அம்புஜம் கிருஷ்ணா பாடலைப் பாடி முடித்தார்

சுகமான தனி. 

மேலே ராகஆலாபனையில் சற்று ஸ்ரமப்பட்டாலும், முதலில் ம்யூசிக் அகாடெமியில் பாடும் இவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியது, கல்யாணியில் நிரவல் மிகவும் அநாசாயமாக இருந்தது.

ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் இவர், டிசம்பர் ல் நல்ல இசை கேட்க/கொடுக்க சென்னை வருகிறார்.

மீண்டும் மீண்டும் நிறைய கச்கேரிகள் செய்து, நம்மை சந்தோஷப்படுத்த வாழ்த்துவோம்

 

Friday, 23 December 2022

சஞ்சய் சுப்ரமண்யன் என்கிற “இசை அதிசயம்”

 தியாக ப்ரம்ஹ கான சபாவில் சஞ்சய் கச்சேரி. சில விஷயங்கள் அலுக்கவே அலுக்காது என்பதற்கு, பெரியவர்கள், கடல் அலை, யானை என்றெல்லாம் சொல்லுவார்கள்.  அதில் சஞ்சய் கச்சேரியை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். கால் பந்து ஃபைனல் – ஒரு புறம் சென்றுகொண்டிருக்க, இங்கு அருமையான இசையை தந்து கொண்டிருந்தார்.  

பல முறை நான் இந்த கலைஞனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை நரசுஸ் காபி மாதிரி, நிறம், மணம், குணம் மாறாமல் சூடான இசையை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இவர் strict ஆ சில வரை முறைகளை வைத்து இருக்கிறார்.

இப்போது எல்லாம் கச்சேரி எப்படி என்றால், பக்க வாத்யக்காரர்கள், யார் வேணும் னாலும், எங்க வேணும்னாலும் உட்கார்ந்து கொள்ளலாம். வயலின் காரர், பாடுபவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். கடம் காரர் முன்னால்,  அப்படி...... இஷ்டத்துக்கு. 

வயலின் காரர், பாடுபவரின் கண்ணை குத்துவது போல ஒரு முறை வாத்தியத்தை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார். பயந்தே போய் விட்டேன் !!

ஆனால், சஞ்சய் கசேரியில் அப்படி கிடையாது.

இரண்டாவது, டிரஸ் கோடு, இந்த குர்தா போடுவது, கலர் காலராக டிரஸ் போடுவது, மாடு முட்டிவிடுமோ என்று பயம் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் இங்கு கிடையாது. வெள்ளை டிரஸ் தான்.

விம்பிள்டன், கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் –டிரஸ் கோடு- இவையெல்லாம் நமக்கு தரும் பாடம்  இது. எத்தனை விஷயங்கள் புதிது புதிது ஆக வந்தாலும், பழமை தான் நிலைத்து இருக்கும்.

அனாவசிய பேச்சு கிடையாது. மைக் சிஸ்டெம் சரியில்லை, “இத ஏத்து, இத குறை”- sharp வை.என்று அனாவசிய “பொங்கல்” கிடையாது.

சிஷ்யர்கள் புடை சூழ உட்காருவது, இரண்டு தம்பூரா, முன்னாடி எலக்ட்ரிக் தம்பூரா. 4 பாட்டு பாடுவதற்க்கு, 10 புஸ்தகம், மினி லேப்டாப்......அதை அடிக்கடி தடவி தடவி தள்ளுவது..... ..

ம்ஹூம்...

பழமை மாறாமல், சங்கீத மழை பொழியும் வித்தகர்.

எனக்கு கசேரியில், லேட் ஆக வருவது பிடிக்காது. கூடிய வரையில் முடியும் வரை இருப்பேன். பாதியில் எழுந்து செல்பவர்களைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும். அவர்களுக்கு, பசி இருக்கலாம். சுகர்.  இத்யாதி.

ஆனால் ஒரு நாளைக்கு இந்த அற்புதக் கலைஞனுக்காக தியாகம் செய்தால் தான் என்ன. ? ஒரு மூன்று மணி நேரம், ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல், கடைசி பாட்டு வரை 100% அர்ப்பணிப்புடன் செய்யும் அற்புத பாடகர் – இவருக்காக நாம் செய்யும் மரியாதை உட்கார்ந்து இருப்பதுதான். – என்பது என் எண்ணம்.

முதலில் இந்தக் கச்சேரியில், மோர்சிங் வாசித்த பாக்யலக்ஷ்மி கிருஷ்ணா அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் பக்க வாத்யம் வாசித்த கச்சேரிகளை நான் கேட்டதே இல்லை. இப்போது தான் முதல் முறை. மோர்சிங் வாத்யமே அரிதாகி விட்ட இந்த காலத்தில், ஒரு பெண்மணி, கடினமான இந்த வாத்யத்தை சிறப்பாக வாசித்து, அதுவும் தனி ஆவர்தனத்தில், பின்னினார். மிக அழகாக இருத்தது. அவருடைய கச்சேரிகளை “மிஸ்” பண்ணிவிட்டேனே என்று மிகவும் வருத்தப்பட்டேன். 

நான் தாளத்தில் expert கிடையாது. தனி ஆவர்த்தனதை சுமாராகத்தான் ரசிப்பேன். ஆனால் என் கண்ணையும், காதையும் எடுக்க விடாமல் செய்த அந்த பெண்மணிக்கு, இதயம் கனிந்த வாழ்துக்கள்.

மோர்சிங் வாசிப்பவர்கள், முகத்தை குனிய முடியாது. பாடுபவரோரோ, மிருதங்க காராரோடு போடும் தாளத்தை பார்க்க முடியாது. வாயில்வைத்து வாசிக்கும்போது நாக்கு காயப் படக் கூட வாய்ப்பு உண்டு. ஒரு பெண்மணி இதை வாசிப்பதற்க்கு ஒரு தைர்யம் வேண்டும்.

பக்க வாத்யம் வாசிக்கும் பெண்மணிகளுக்கு சில சங்கடங்கள் உண்டு. கச்சேரி ரசித்தாலும், சிரிக்கவோ, பேஷ் என்று சொல்லவோ முடியாது. சிரித்தாலும் சங்கடம், சோகமாக உட்கார்ந்தாலும் சங்கடம். ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து அப்பப்போ ஒரு புன் சிரிப்புதான். அவர் முகத்தில் ஒரு தெய்வீக அழகு இருந்தது.

மோர்சிங் வாசிக்கும் குடும்பத்தில் வந்தவர் போலும். வாழ்க அவரின் சங்கீதம்.

கர்நாடக சங்கீதம் என்பது ஒரு அதிசயம். அரியக்குடி காலத்தில் இருந்து, இன்று முளைத்து இரண்டு இலை விடும் பாடகர்கள் வரை, தோடியையும்,, பைரவியையும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.  நமக்கு அலுப்பதே இல்லை.

சஞ்சய் என்ன பாட்டு என்று நாம் யூகிக்க விடுவதில்லை. அவருடைய முக நூலில் எழுதி விடுகிறார். இருந்தாலும்

பாடல் லிஸ்ட்:

வாரண முகவா-  ஹம்ஸத்வனி – பாபநாசம் சிவன் – நிரவல்- “முன்னவனே நீ முன் நின்றால், முடியாதது ஒன்றுமில்லை”- ஸ்வரம்

ச ரி க ப நீ..... முடியாதது ஒன்றுமில்லை என்று வரதராஜனையும், நெய்வேலி வெங்கடேஷையும் கையை காட்டி ஒரு ஸ்வரம்... “நீங்கள்” முடியாதது ஒன்றுமில்லை என்று ரசிகர்களைப் பார்த்து. ஒரு ஸ்வரம் பாடினார்.

கச்சேரி களை கட்டிவிட்டது:

இரண்டாவதாக பௌளி ராகத்தை கொஞ்சம் காட்டி. “பார்வதி நாயக பாஹிமாம்” என்ற ஸ்வாதி திருநாள் கிருதியை எடுத்து பாடினார். 3 சரணங்கள் கொண்ட அற்புதமான பாடல். “பானு ஷஷி” என்ற இரண்டாவது சரணத்தை எடுத்து உருகி பாடினார். 

மூன்றாவதாக, கானடா ராகத்தை எடுத்து, பாடிவிட்டு, “காந்திமதி அன்னை நீ கதி” என்ற பாபநாசம் சிவன் அவர்களை பாடினார். இந்தப் பாடல், நெல்லை கோவிலைச் சுற்றியும், தாமிரபரணியயும், அழகாகச் சொல்லி இருப்பார்.  கானடா ராகத்தில் ஒரு 5 பாடல்களை எடுத்தால், அதில் ஒன்று இந்தப் பாட்டு என் லிஸ்ட் ல் நிச்சயம் வரும். கும்ப முனி என்றால் அகத்தியர் என்று நினைக்கிறேன்.

பூர்ணசந்த்ரிகா ராகம் கொஞ்சம் கோடி காட்டி- ஜி‌என்‌பி அவர்களின் “வரத நிபுண” பாடினார்

“கள பேடா, கொள பேடா” என்று  அவரே கோபிகாதிலகம் ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று பாடினார். கேட்பதற்க்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

தோடி நான் நினைத்தபடி அமையவில்லை. வயதாகிறது சஞ்சய்க்கு- என்று புரிந்தது. ராகத்தில் மேலே கொஞ்சம் கஷ்டப்பட்டார். வரது அதை வயலினில் சரி கட்டினார்.  தியாகராஜரின் “சேசினதெல்ல மரசிதிவோ ஓ ராம ராம”. அருமையான பாட்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னி எடுத்தார். எவ்வளவு முறை தோடியைக் கேட்டாலும் அலுக்காது.

ராகம் தாளம் பல்லவி - நா.கு. ஆலத்தூர் சகோதரர்கள், அந்தக் காலத்திலேயே பாடி பிரபலப் படுத்திய – “எங்களது நாட்டை குறிஞ்சி என்பார்” பல்லவியை தூசி தட்டி பாடினார். இதை டி.என் சேஷகோபாலன், நாட்டை, குறிஞ்சி, நாட்டை குறிஞ்சி என்று 3 ராகத்தில் பாடிஒரு காசெட் வெளியீட்டு, அது போடு போடு என்று போட்டது. சேஷூ சங்கீதம் எல்லாம், குறிஞ்சி மலர் போல.

துர்காவையும், சிந்து பைரவியையும் பல்லவியோடு வருடி முடித்தார். முதலில் பாடிய ராகம் என்னவென்று தெரியவில்லை.

ஸ்ரீ. வேணுகோபால என்ற மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி மேல் தீக்ஷிதர் எழுதிய பாடலை பாடினார். இதில் தீக்ஷிதர் குறிஞ்சி ராகத்தை மிகவும் லாவகமாக பாடலின் உள்ளே நுழைத்து இருப்பார். “ஸ்ரீ குரஞ்சித காம ஸ்ரித சத்யபாம” – இதன் அர்த்தம் “ஸ்ரீதேவி பூமிதேவி அவர்களால் மனம் குளிர விரும்பப்படுகிறவன், சத்யபாமையினால் ஆஸ்ரயிக்கப் பட்டவன்”- மிகவும் அழகு. எனக்கு ஏனோ சந்தானம் பாடிய “கிஷீராப்தி கன்னிகே, ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்ற குறிஞ்சி (ராக மாலிகை) பாட்டு நினைவுக்கு வந்தது

பிறகு எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- என்ற பாரதியாரின் தேஷ் ராகப் பாடல். இதை ராஜகுமார் பாரதி ஒரு தடவை இதே ராகத்தில் பாடி கேட்டு இருக்கிறேன்.

திருமழிசை பிரான் எழுதிய பாசுரம் “ஊனின் மேய ஆவி நீ. உறக்கமோடு உணர்ச்சி நீ  -பாடி ராமனை பஜித்தால் என்ற மாண்ட் ராகப் பாடலோடு, “பவமான” சொல்லி முடித்தார்.

பண் படுதல். பண் பாடுதல்

இந்த வருடம் சங்கீத கலாநிதி விருது பெறும், நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் தன்னுடைய நன்றியுரையில் “பண் படுதல், பண் பாடுதல் இரண்டும் ஒன்று என்று சொன்னார். நான் மிகவும் ஆச்சர்யப்பட்ட வார்த்தை இது. பண் பாடினால் மனது பண் படுமா  ? இல்லை எப்போதெல்லாம் மனது பண் படும். என்ற ஒரு கேள்வி எழுப்பினால், என் பதில் படும்...... சிலரின் சங்கீதம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும். 

எனக்கு, ஒரு மதுரை சோமு, மதுரை மணி அய்யர், மகாராஜபுரம் சந்தானம், இப்போது சஞ்சய். இவர்கள் இசை கேட்கும்போது.

கண்ணதாசன், சர்வர் சுந்தரம் படத்தில் “தத்தை நெஞ்சம் பாடலில், பண் பட்டதா ? இல்லையா ? என்ற ஒரு கேள்வி எழுப்பி இருப்பார். பாட்டை கேளுங்கள். 

முடிவுரை::

“கமர்ஷியல்” ஆக சஞ்சய் போய் விட்டார் என்று ஒரு சாரார் பேசுகிறார்கள். சித் ஸ்ரீராம் க்கு, செம்மங்குடிக்கும், மணி அய்யருக்கும் வாசிச்ச, உமையாள்புரம் சிவராமன் வாசிப்பது, எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமா, கமர்சியலா....... இப்படியெல்லாம் ஒரு புறம் சீரழிந்து கொண்டிருக்கும்  கர்நாடக சங்கீதத்திற்க்கு நடுவே, சஞ்சய் மாதிரி “ரசிகர்கள் சம்ப்ரதாயமான நல்ல இசையைத்தான் விரும்புவார்கள்”, என்று ஆணித்தரமாக நம்பி, கச்சேரி செய்யும் இவர், எனக்கு அதிசயம் தான்.

எனக்கு என்ன ஆசை என்றால், சஞ்சய் ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரி, மதுரை

சோமு மாதிரி பண்ண வேண்டும். அவர்தான் பண்ண முடியும். கடைசி வரை 

எழுந்து போகாத ரசிகர் கூட்டம் அவரிடம் தான் இருக்கிறது