Friday, 25 August 2023

இன்றும் நான் காதலிக்கும் படம்

 

பிப்ரவரி 1964  இல் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அது அந்தக் கால இளைஞர்களை கட்டிப் போடுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஈஸ்ட்மேன் கலரில் செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வலுவான கதை என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று இருந்த காலத்தில், கொஞ்சம் கதை, நிறைய காமெடி, அசத்தலான மியூசிக் என்று விகிதாசாரத்தை பிரித்து வெளிவந்த படம். இன்று வரை பிரமிப்பையும், காதலையும் எனக்கு தந்து கொண்டு இருக்கும் படம். அது- காதலிக்க நேரமில்லை.

வாலி சொல்லுவார். சினிமா என்பது ஒரு டைரக்டர் ன் முயற்சி தான். எந்த கதையையும் ஒரு நல்ல டைரக்டர் மிக அழகாக செதுக்க முடியும். இசையோ, நடிகர்களோ மற்றவர்கள் பங்களிப்பு அப்புறம் தான். – எனக்கு இதில் உடன்பாடு உண்டு. 

இந்த வருடம் வந்த சில படங்கள்.  ஆண்டவன் கட்டளை, படகோட்டி, கர்ணன, வேட்டைக்காரன்.. இப்படிப் பார்த்தால் தான் கா.நே படத்தின் அருமை புரியும்.

நானும் இந்த வருடம் தான் பிறந்தேன். அதனால் நானும் இந்தப் படமும் அறுபது வயதில் குதித்து இருக்கிறோம்.

இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெரும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் கூட நினைத்து இருக்க மாட்டார். இந்தப் படம் காரில் உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. பீச் ல் உட்கார்ந்து எழுதிய கதை, நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு சீரியஸ் படம் எடுத்த பிறகு, ஒரு ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்று தோன்றி, பிறந்த கதை. – இதெல்லாம் செவி வழி செய்தி.

இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்......

நான் சிறுவயது முதல் பார்த்த பல படங்களில் இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாத படங்கள் வெகு சில. அதில் முதாவதாக இருப்பது கா. நே. தான். தில்லானா மோகனாம்பாள், எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை மற்ற சில.

கா. நே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதபடம். அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி உச்சத்தில் இருந்த காலம். ஸ்ரீதர் – வி,ரா இணைந்து வழங்கிய பல படங்களில் இது உச்சத்தின் உச்சம் என்பேன்.

1964 ல் இப்படி ஒரு கற்பனை, இப்படி ஒரு சினிமா பார்வை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு முழு நீள காமெடி என்று சில படங்கள் இதற்கு முன்பு வந்தாலும் கூட. கா.நே . ஒரு நெத்தி அடிபடம்.  முத்துராமன், பாலையா போன்ற பழைய நடிகர்களைத் தவிர, மற்ற எல்லோரும் புது முகம். நாகேஷ் புது முகம் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த யாரிடம் கேட்டாலும் அவர்கள் உடனே சொல்வது பாலையாவிடம், நாகேஷ் கதை சொல்லும் காட்சி தான். என்னை கேட்டால் இதை கடைசியில் தான் வைப்பேன். பல “அழகுகள்” இந்தக் கதையில் உண்டு.

 முதல் அழகு: முதல் சீனிலே, சித்திரம் போன்று வரைந்து அது நிஜமாகி, முத்துராமன் காஞ்சனாவாக உருப்பெற்று, சென்னை பீச் ல் டான்ஸ். “என்ன பார்வை” என்ற பாடல் யேசுதாஸ், பி. சுசீலா.. இந்தப் பாடல் முழுவதும் இளமை பொங்கி வழியும். கடந்த ஐந்து வருடங்களில், இப்படி ஒரு அழகான காதல் பாட்டு ஒரு இருந்தால் சொல்லுங்கள். இந்த பாடல் முழுவதும். இருவரும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்புல விசுவல் மிகவும் பிரமாதமாக இருக்கும்

இந்தப் பாடலில் ஒரு சீனில், காரில் \முத்துராமன் வர. கார் நடு   கண்ணாடியில் (Centre Mirror)  காஞ்சனா முகம் தெரியும் இன்னொன்று, ஒரு ஆச்சர்யமான அழகு. அந்தக் கார் தானாகவே மூடிக்கொள்ளும். கிராமத்தில் இருந்து  வந்த எனக்கு, இந்தக் காட்சியெல்லாம் அப்படியே போட்டோ மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டது. 1967 ல் கே. பாலச்சந்தர், அனுபவி ராஜ அனுபவி படம் எடுக்கும்போது, இப்படித்தான், நாகேஷயும், முத்துராமனையும், ஸ்டில் போட்டோ மாதிரி காட்டி. “அழகிருக்குது உலகிலே” பாட்டைப் போட்டு இருப்பார்.

இரண்டாம் அழகு – ரவிச்சந்திரன், “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா” என்ற பாடல் பாடும் சீன்.  இது காஞ்சனாவையும், ராஜஸ்ரீ யையும் பார்த்து பாடுவதாக அமைந்த பாடல். இதில் முதல் சீனில், ஒரு காரை தலை கீழாக காண்பிப்பார். பிறகு ரவிச்சந்திரன் அந்தப் பாடலை பாட ஆரம்பிப்பார்.  இது ஒரு புது யுக்தி. ரவிச்சந்திரன், காரில் பானெட்டில் தலை கீழாகப் படுத்து இருப்பார். அவர் அந்தப் காரை பார்ப்பது போல் (தலை கீழாக) காண்பித்து இருப்பார் டைரக்டர். அந்தக் காலத்தில் இது எத்தனை பேருக்குத் தோன்றும்.

பிறகு, பாட்டில் கூட, முத்துராமனுக்கு,  கே.ஜே.யேசுதாஸ்,   ரவிச்சந்திரனுக்கு, பீ.பி. ஸ்ரீநிவாஸ்/  அதில் கூட ஒரு நேர்த்தி. “காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை” சாமியார் பாட்டு என்பதால் சீர்காழி. சீர்காழி யின் பாட்டை இவ்வளவு காதலுடன் யாரும் பாடி இருக்கமுடியாது.

  பிறகு. நாகேஷ் பாத்திர வடிவமைப்பு. அவர் பேசும் வசனம்..

உன் பேர் என்ன ?

மீன லோசனி

மீன ?

லோசனி

இனிமேல் உனக்கு லோஷன் எதுவும் வேண்டும். வெறும் மீனாதான்.

இன்னும் ஒன்று

மீனா. உனக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமா ?

ஆமா சார், நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப் படறேன்.

அத இப்ப சொல்லாத, அடுத்த படத்துக்கு ஒன்கிட்ட,  நொந்து போய் ஒரு producer வராம் பார் அவன்ட சொல்லு.

இன்னும் ஒன்று

சார். நீங்க படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள நான் கிழவி ஆயிடுவேன்.

ஆனா என்ன. ஒன்ன வச்சு அழகா, கலர்ல அவ்வையார் படம் எடுக்கிறேன்....

இப்படிப் பல “டான் டான்” வசனங்கள்...

இந்தப் பாடத்தில் இன்னொரு அழகு, ஒவ்வொரு சீனையும் தனித்தனியாக ரசிக்கலாம், சேர்ந்தும் ரசிக்கலாம். உதாரணமாக, ரவிச்சந்திரன்-நாகேஷ் கதை சொல்லும் காட்சி, சாப்பிடும் இடத்தில், பாலையா-நாகேஷ் வசனம்.

நாகேஷ்-பாலையா விடம் கதை சொல்ல, அதை வேர்த்து, விறுவிறுக்க, கண்ணில் மிரட்சியுடன் கேட்கும் பாலையா. அசகாய சூர நடிப்பு.

என்ன பார்வை பாட்டை வேகமாக ஊட விட்டால், “மலரென்ற முகம்” ஒன்று பாட்டின் சாயல் தெரியும். ஆனால் வி.ரா.. இசை ஜோடி அவர்கள் ஜித்தர்கள். 60 களிலும்   70 களிலும் அவர்களின் இசை மூலமாக என்னை வாழ வைத்த தெய்வங்கள்.

நான் படித்த பள்ளியிலும் சரி, மேற் படிப்பு படித்த திருச்சி யிலும், சரி, எத்தனை முறை இவர்கள் இசை அமைத்த பாடலகளை கேட்டு இருப்பேன். கர்நாடக சங்கீதம் என் வாழ்க்கையில் புகுந்து “கோலோச்சியதர்க்கு” முக்கிய காரணம் வி.ரா அவர்களின் மெல்லிசைதான்.  அதனால்தான், விஸ்வநாதன் அவர்களின் மறைவின் போது “எங்கேயும் எப்போதும், சங்கீதம் சந்தோஷம்” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தமிழ் தந்த தவப் படம் இது, தவப் புதல்வர்கள் ஸ்ரீதரும், விஸ்வநாதன் ராமமுர்த்தி அவர்களும்.

இந்தப் பதிவில் கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரைப் பற்றி என்ன என்று எழுத !!! எங்கள் இளமைப் பருவத்தை இனிமையாக்கியவர். 

“கால் நடந்த நடையிலே, காதலையும் அளந்தாள்”.

“அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு”

எண்ணிரெண்டு பதினாறு வயது, பாடலின் வரியில் வரும் வரிகள். ஏதோ ஒரு நிலையில், ஒவ்வொரு ஆண்மகனும், மேலே சொன்ன வரியை அனுபவித்து கடந்து போய் இருப்போம்.....

இந்த ரெண்டு வரியும் போதும்.  திருவள்ளுவராவது ஒன்று அரை  வரி எழுதி விளக்கினார்.  கண்ணதாசன் ஒரே வரி தான். 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, 12 June 2023

திருப்ப்கழ் என்ற ஒரு அமிர்தம் - பாகம் 1

 

பாகம் 1- தடிநிகர் அயிற்கடாவி.....

என்று ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறது. திருப்புகழில்.

 

தமிழை நேசிப்பவருக்கு திருப்புகழை நேசிக்காமல் இருக்க முடியாது. இந்த ஜன்மத்தில் திருப்புகழை நாம் படித்து விடவேண்டும். ராகம் தெரிந்தால் ராகத்தோடு பாடி விடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தெரிந்து இந்த ஜன்மம் வேஸ்ட்.....

 

நமக்கு மிகவும் தெரிந்த, “முத்தைத் திரு” பாட்டை எடுத்துக் கொண்டால், ஏதோ, ‘அகத்திக் கீரை” என்ற வார்த்தையெல்லாம் வருகிற மாதிரி இருக்கும். ஆனால் நிஜ அர்த்தமே வேறு.

 

இந்த தமிழகம், தமிழ் நாடு, என்று அரட்டை அடிப்பவர்களுக்கு, ஒரு நாலு திருப்புகழைப் பார்த்து படியுங்கள் என்று சொன்னால் போதும். பிறகு அப்படி ஒரு வாக்குவாதமே இருக்காது.

 

எனக்குத் தெரிந்தவரை, திருப்புகழ் ஒரு குழந்தை.  முருகனே ஒரு ஞானக்குழந்தை. அதனால் அவருடைய பாடலும் அப்படியே. அருணகிரிநாதர் போன்று ஒருவர் அவதரித்து நமக்குக் கொடுத்த அற்புதமான பொக்கிஷம் இது.

 

வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள் பற்றி ஒரு கதை உண்டு. அவர் திருப்புகழுக்காக தம் வாழ் நாளை அர்ப்பணித்தவர்

 

பீ.எஸ். கிருஷ்ண அய்யர் என்பவர் வள்ளி மலை சச்சினாந்த சுவாமிகளுடன் கடைசி காலத்தில் நெருங்கி பழகியவர். ஸ்வாமிகள் சொன்னது “அருணகிரி நாதர்  திருஞான சம்பந்தர் அவதாரம் – என்று சொன்னதாக.

 

“இருமலு ரோக”. என்று ஒரு திருப்புகழ் உண்டு. டாக்டர்கள் வியாதி பேர் தெரியவில்லை என்றால் இந்தப் பாட்டை refer பண்ணலாம்.  அதே போல் “கெளரி மனோஹரி” ராகத்தில் “வலிவாத பித்தமோடு” என்று ஒரு பாடல் உண்டு

 

அருகே போய் கூப்பிட்டால் திருப்புகழ் கிட்டே வராது. அதன் போக்குக்குப் போய், ஆழப் புரிந்து கொண்டு. அருகே சென்றால், நம்மை அணைத்துக் கொள்ளும்

 

நாம் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றால் kaummaaram.com க்குதான். திருப்புகழின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் எழுதி இருக்கிறார்கள்.  இதில் இங்கிலீஷ் ல் வேறு. பிரமிக்க வைக்கும் முயற்சி. ஸ்ரீ. கோபாலசுந்தரம் என்பவர் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு கோடி நமஸ்காரம் செய்யலாம்

 

உதாரணத்திற்கு, மேலே எழுதி இருக்கும். “தடி நிகரி அயிற்கடாவி” என்ற வரி. கீழ்க்காணும் வரியில் உள்ள ஒரு வார்த்தை..

 

.....தடி நிகரி அயிற்கடாவி அசுரர்கள் இறக்குமாறு, சமரிடை விடுத்த சோதி...... (மனையவள் என்று தொடங்கும் திருப்புகழ்) – சத்தியமாக பார்த்துப் படித்தாலே தப்பாக படிப்போம்

 

“மின்னல் போல ஒளி விடும் வேலாயுதத்தை வீசி” அசுரர்கள் இறக்குமாறு சண்டை போட்ட, ஒளிப்பிழம்பான முருகா: என்று இதற்குப் பொருள்.

 

இப்படி அர்த்தம் தெரியவில்லை என்றால் யாரும் திருப்புகழ் கிட்டயே போக மாட்டோம்.

 

இன்னொருவர், திருப்புகழ் ராகவன் சார். எல்லா பாடல்களுக்கும் ராகம் போட்டு, தாளக் கட்டையும் குறிப்பிட்டு, பாடவும் பாடி, அவரி இறுதி மூச்சு வரையும் பாடி, இன்றும் இந்தியா/உலகம் முழுவதும், திருப்புகழ் பஜனை என்று ஒன்று பிரமாதமாக நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அவர்தான் காரணம்.

 

உதாரணமாக, கெளரி மனோஹரியில், மேலே சொன்ன வல்லிவாத பித்தமொடு” – இந்த ஒரு பாடல் தான் இந்த ரகத்தில் இருக்கிறது. கௌமார்த்தில்  அவர் பாடியும் இருக்கிறார். எப்படி கரெக்டாக கெளரி மனோஹரியில் உட்காருகிறது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யம்

 

அதே போல் திருவான்மியூர் முருகன் மேல் தர்மவதி ராகத்தில் “குசமாகி” என்ற ஒரு பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு அபாயகரமான ராகம், கிட்டக்க அரை டஜன் ராகங்கள் தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதை கற்றுக்கொண்டு பாடினால், தர்மவதி ராகத்தை யார் பாடினாலும் கண்டு பிடித்து விடலாம்.

 

திருப்புகழை ஆழப் படித்தால், முதல் ஆறு வரியில், நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்று ஒரு நீதியை, “பளார்” என்று அறைகிறார் போல் சொல்லுவார். அடுத்த 6 வரியில், அந்த முருகன், திருமால் மருகன், எப்படி அணுக்ரஹம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.   

 

திருப்ப்கழை இன்னும் கொஞ்சம் புகழலாம் -

 

 

 

 

 

Tuesday, 27 December 2022

சாத்தூர் கிருஷ்ணா ராமரத்னம் -சங்கீத வித்வத் சபை -21.12.22

 

சாத்தூர் ஏ‌ஜி சுப்ரமணியன் அவர்களுடைய பேரன் இவர். 

தன்னுடைய 20 வயதிலேயே “சங்கீத பூஷணம்’” விருது பெற்ற சாத்தூர்ஏ ஜி சுப்ரமணியன் (ஏ‌ஜி‌எஸ்)அவர்களைப் பற்றி, இந்த ஜெனரேஷன் மக்களுக்கு கொஞ்சம் தான். தெரியும்.  ஆத்மார்த்தமாக, கர்நாடக இசையை நேசிப்பவர்களுக்கு, இந்த இசைக் களைஞரைப் பற்றி நன்கு தெரியும்.

இவருடைய இசைய அதிகமாக பதிவு பண்ணாமல் போனால் கூட, அவருடைய சில கச்சேரிகளைக் கேட்கும்போது, அவருடைய ஆழ்ந்த சங்கீத அம்சங்கள் நம்மை அசர வைக்கும். தன் வாழ்க்கையில், நெறியுடன் வாழ்ந்த கலைஞர்.

அனுஷ்டானம் என்ற ஒரு மிகவும் மேன்மையான சக்தியையும், சங்கீதம் என்ற மிகப் பெரிய கலையையும், இரண்டு கண்களாக பாவித்து, காஞ்சி, மகா பெரியவரிடம், அளவு கடந்த பக்தியுடன் வாழ்ந்தவர்.

இப்போது, சங்கீத கலைஞர்களோ, ஸம்ப்ரதாய பஜனை (ராதா கல்யாணம் போன்ற) பண்ணுபவர்களோ, (உயரே செல்ல செல்ல), முதலில் விட்டு விடுவது, அனுஷ்டானம் தான். (First casuality)

மிகவும் ஸ்ரத்தையாக, தன் பெண்களுக்கு, சங்கீதம் சொல்லிக்கொடுத்து, சாத்தூர் சகோதரிகள் என்ற ஒரு உயர்ந்த இடத்தை கொடுத்து, அவர்களும் சென்னையிலும், சங்கீத வித்வத் சபையிலும், பல ஊர்களிலும், கச்சேரி செய்து, தன் தந்தை பாணியை தன்னுடைய சிஷ்யர்கள் மூலமாக இன்றும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.  

இவர்களுடைய ஷிஷ்யர் தான் எஸ்‌கே‌ஆர்.

ஒவ்வொரு வியர்வைக்கும், “காலம்” வேர் வைக்கும், - என்ற வாலியின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. சாத்தூர் என்ற சங்கீத பூஷணத்தின் பேரன் அவர் உட்கார்ந்த இடத்தில், உட்கார்ந்து பாடுவது, அந்தக் குடும்பத்திற்க்கு, பெருமை மட்டும் இல்லை. சாத்தூர் பாணியை, இதுவரை கேட்காதவர்களுக்கு, இது ஒரு சான்ஸ்.

HCL க்காக, MA மினி ஹாலில் பாடி இருக்கிறார். முதல் முறை, ஒவ்வொரு கர்நாடக இசைக் கலைஞனின் கனவு மேடையில் ஏறிப் பாடுகிறார்

ஒரு 11.45 முதல் 1.15 வரை, ஒரு கச்சேரி என்பது, ஒரு சவாலான. குறுகிய நேரத்தில், ஒரு சப்-மெயின், மெயின், தனி –அதுவும் மிகவும் பெருமை வாய்ந்த சங்கீத வித்வத் சபையில்.

இப்போது கச்சேரி”:

 

விக்னேஷ் தியாகராஜன் – வயலின்

ராகவன் VS- மிருதங்கம்

அவருடைய மிகவும் பிரபலபமான “ஆரபியும்” “கல்யாணியையும்” பாடி தாத்தாவுக்கு பெருமை சேர்த்தார்.

பட்ணம் அவர்களில் தோடி ராக வர்ணத்துடன் ஆரம்பித்த அவர்.  சாத்தூர் அவர்களின் மிக பிரபலமான ஆரபி ராக நாத சுதா ரசம் என்ற ரூபக தாள கிருதியை அலசினார்.

பொறுமையாக, ரீதிகௌள ராகத்தை எடுத்து, அழகாக ராகம் பாடி. “ஓராறு முகனே” என்ற நீலகண்ட சிவன் பாடலைப் பாடினார். ஈராறு” என்ற இடத்தில் ஸ்வரம் பாடி முடித்தார்.

கல்யாணியை எடுத்து, தாத்தா பாணியில், சில பிடிகளை” அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டு, ராகம் பாடி, ஏதாவுனரா”- வை எடுத்து, (தியாகராஜர்) மிகவும் சிறப்பாக பாடினார். நிரவலை “சீதா கௌரி வாகீஸ்வரி யனு” ல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

அரவிந்த பத மலர் –காபி ராக அம்புஜம் கிருஷ்ணா பாடலைப் பாடி முடித்தார்

சுகமான தனி. 

மேலே ராகஆலாபனையில் சற்று ஸ்ரமப்பட்டாலும், முதலில் ம்யூசிக் அகாடெமியில் பாடும் இவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியது, கல்யாணியில் நிரவல் மிகவும் அநாசாயமாக இருந்தது.

ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் இவர், டிசம்பர் ல் நல்ல இசை கேட்க/கொடுக்க சென்னை வருகிறார்.

மீண்டும் மீண்டும் நிறைய கச்கேரிகள் செய்து, நம்மை சந்தோஷப்படுத்த வாழ்த்துவோம்

 

Friday, 23 December 2022

சஞ்சய் சுப்ரமண்யன் என்கிற “இசை அதிசயம்”

 தியாக ப்ரம்ஹ கான சபாவில் சஞ்சய் கச்சேரி. சில விஷயங்கள் அலுக்கவே அலுக்காது என்பதற்கு, பெரியவர்கள், கடல் அலை, யானை என்றெல்லாம் சொல்லுவார்கள்.  அதில் சஞ்சய் கச்சேரியை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். கால் பந்து ஃபைனல் – ஒரு புறம் சென்றுகொண்டிருக்க, இங்கு அருமையான இசையை தந்து கொண்டிருந்தார்.  

பல முறை நான் இந்த கலைஞனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை நரசுஸ் காபி மாதிரி, நிறம், மணம், குணம் மாறாமல் சூடான இசையை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இவர் strict ஆ சில வரை முறைகளை வைத்து இருக்கிறார்.

இப்போது எல்லாம் கச்சேரி எப்படி என்றால், பக்க வாத்யக்காரர்கள், யார் வேணும் னாலும், எங்க வேணும்னாலும் உட்கார்ந்து கொள்ளலாம். வயலின் காரர், பாடுபவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். கடம் காரர் முன்னால்,  அப்படி...... இஷ்டத்துக்கு. 

வயலின் காரர், பாடுபவரின் கண்ணை குத்துவது போல ஒரு முறை வாத்தியத்தை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார். பயந்தே போய் விட்டேன் !!

ஆனால், சஞ்சய் கசேரியில் அப்படி கிடையாது.

இரண்டாவது, டிரஸ் கோடு, இந்த குர்தா போடுவது, கலர் காலராக டிரஸ் போடுவது, மாடு முட்டிவிடுமோ என்று பயம் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் இங்கு கிடையாது. வெள்ளை டிரஸ் தான்.

விம்பிள்டன், கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் –டிரஸ் கோடு- இவையெல்லாம் நமக்கு தரும் பாடம்  இது. எத்தனை விஷயங்கள் புதிது புதிது ஆக வந்தாலும், பழமை தான் நிலைத்து இருக்கும்.

அனாவசிய பேச்சு கிடையாது. மைக் சிஸ்டெம் சரியில்லை, “இத ஏத்து, இத குறை”- sharp வை.என்று அனாவசிய “பொங்கல்” கிடையாது.

சிஷ்யர்கள் புடை சூழ உட்காருவது, இரண்டு தம்பூரா, முன்னாடி எலக்ட்ரிக் தம்பூரா. 4 பாட்டு பாடுவதற்க்கு, 10 புஸ்தகம், மினி லேப்டாப்......அதை அடிக்கடி தடவி தடவி தள்ளுவது..... ..

ம்ஹூம்...

பழமை மாறாமல், சங்கீத மழை பொழியும் வித்தகர்.

எனக்கு கசேரியில், லேட் ஆக வருவது பிடிக்காது. கூடிய வரையில் முடியும் வரை இருப்பேன். பாதியில் எழுந்து செல்பவர்களைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும். அவர்களுக்கு, பசி இருக்கலாம். சுகர்.  இத்யாதி.

ஆனால் ஒரு நாளைக்கு இந்த அற்புதக் கலைஞனுக்காக தியாகம் செய்தால் தான் என்ன. ? ஒரு மூன்று மணி நேரம், ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல், கடைசி பாட்டு வரை 100% அர்ப்பணிப்புடன் செய்யும் அற்புத பாடகர் – இவருக்காக நாம் செய்யும் மரியாதை உட்கார்ந்து இருப்பதுதான். – என்பது என் எண்ணம்.

முதலில் இந்தக் கச்சேரியில், மோர்சிங் வாசித்த பாக்யலக்ஷ்மி கிருஷ்ணா அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் பக்க வாத்யம் வாசித்த கச்சேரிகளை நான் கேட்டதே இல்லை. இப்போது தான் முதல் முறை. மோர்சிங் வாத்யமே அரிதாகி விட்ட இந்த காலத்தில், ஒரு பெண்மணி, கடினமான இந்த வாத்யத்தை சிறப்பாக வாசித்து, அதுவும் தனி ஆவர்தனத்தில், பின்னினார். மிக அழகாக இருத்தது. அவருடைய கச்சேரிகளை “மிஸ்” பண்ணிவிட்டேனே என்று மிகவும் வருத்தப்பட்டேன். 

நான் தாளத்தில் expert கிடையாது. தனி ஆவர்த்தனதை சுமாராகத்தான் ரசிப்பேன். ஆனால் என் கண்ணையும், காதையும் எடுக்க விடாமல் செய்த அந்த பெண்மணிக்கு, இதயம் கனிந்த வாழ்துக்கள்.

மோர்சிங் வாசிப்பவர்கள், முகத்தை குனிய முடியாது. பாடுபவரோரோ, மிருதங்க காராரோடு போடும் தாளத்தை பார்க்க முடியாது. வாயில்வைத்து வாசிக்கும்போது நாக்கு காயப் படக் கூட வாய்ப்பு உண்டு. ஒரு பெண்மணி இதை வாசிப்பதற்க்கு ஒரு தைர்யம் வேண்டும்.

பக்க வாத்யம் வாசிக்கும் பெண்மணிகளுக்கு சில சங்கடங்கள் உண்டு. கச்சேரி ரசித்தாலும், சிரிக்கவோ, பேஷ் என்று சொல்லவோ முடியாது. சிரித்தாலும் சங்கடம், சோகமாக உட்கார்ந்தாலும் சங்கடம். ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து அப்பப்போ ஒரு புன் சிரிப்புதான். அவர் முகத்தில் ஒரு தெய்வீக அழகு இருந்தது.

மோர்சிங் வாசிக்கும் குடும்பத்தில் வந்தவர் போலும். வாழ்க அவரின் சங்கீதம்.

கர்நாடக சங்கீதம் என்பது ஒரு அதிசயம். அரியக்குடி காலத்தில் இருந்து, இன்று முளைத்து இரண்டு இலை விடும் பாடகர்கள் வரை, தோடியையும்,, பைரவியையும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.  நமக்கு அலுப்பதே இல்லை.

சஞ்சய் என்ன பாட்டு என்று நாம் யூகிக்க விடுவதில்லை. அவருடைய முக நூலில் எழுதி விடுகிறார். இருந்தாலும்

பாடல் லிஸ்ட்:

வாரண முகவா-  ஹம்ஸத்வனி – பாபநாசம் சிவன் – நிரவல்- “முன்னவனே நீ முன் நின்றால், முடியாதது ஒன்றுமில்லை”- ஸ்வரம்

ச ரி க ப நீ..... முடியாதது ஒன்றுமில்லை என்று வரதராஜனையும், நெய்வேலி வெங்கடேஷையும் கையை காட்டி ஒரு ஸ்வரம்... “நீங்கள்” முடியாதது ஒன்றுமில்லை என்று ரசிகர்களைப் பார்த்து. ஒரு ஸ்வரம் பாடினார்.

கச்சேரி களை கட்டிவிட்டது:

இரண்டாவதாக பௌளி ராகத்தை கொஞ்சம் காட்டி. “பார்வதி நாயக பாஹிமாம்” என்ற ஸ்வாதி திருநாள் கிருதியை எடுத்து பாடினார். 3 சரணங்கள் கொண்ட அற்புதமான பாடல். “பானு ஷஷி” என்ற இரண்டாவது சரணத்தை எடுத்து உருகி பாடினார். 

மூன்றாவதாக, கானடா ராகத்தை எடுத்து, பாடிவிட்டு, “காந்திமதி அன்னை நீ கதி” என்ற பாபநாசம் சிவன் அவர்களை பாடினார். இந்தப் பாடல், நெல்லை கோவிலைச் சுற்றியும், தாமிரபரணியயும், அழகாகச் சொல்லி இருப்பார்.  கானடா ராகத்தில் ஒரு 5 பாடல்களை எடுத்தால், அதில் ஒன்று இந்தப் பாட்டு என் லிஸ்ட் ல் நிச்சயம் வரும். கும்ப முனி என்றால் அகத்தியர் என்று நினைக்கிறேன்.

பூர்ணசந்த்ரிகா ராகம் கொஞ்சம் கோடி காட்டி- ஜி‌என்‌பி அவர்களின் “வரத நிபுண” பாடினார்

“கள பேடா, கொள பேடா” என்று  அவரே கோபிகாதிலகம் ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று பாடினார். கேட்பதற்க்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

தோடி நான் நினைத்தபடி அமையவில்லை. வயதாகிறது சஞ்சய்க்கு- என்று புரிந்தது. ராகத்தில் மேலே கொஞ்சம் கஷ்டப்பட்டார். வரது அதை வயலினில் சரி கட்டினார்.  தியாகராஜரின் “சேசினதெல்ல மரசிதிவோ ஓ ராம ராம”. அருமையான பாட்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னி எடுத்தார். எவ்வளவு முறை தோடியைக் கேட்டாலும் அலுக்காது.

ராகம் தாளம் பல்லவி - நா.கு. ஆலத்தூர் சகோதரர்கள், அந்தக் காலத்திலேயே பாடி பிரபலப் படுத்திய – “எங்களது நாட்டை குறிஞ்சி என்பார்” பல்லவியை தூசி தட்டி பாடினார். இதை டி.என் சேஷகோபாலன், நாட்டை, குறிஞ்சி, நாட்டை குறிஞ்சி என்று 3 ராகத்தில் பாடிஒரு காசெட் வெளியீட்டு, அது போடு போடு என்று போட்டது. சேஷூ சங்கீதம் எல்லாம், குறிஞ்சி மலர் போல.

துர்காவையும், சிந்து பைரவியையும் பல்லவியோடு வருடி முடித்தார். முதலில் பாடிய ராகம் என்னவென்று தெரியவில்லை.

ஸ்ரீ. வேணுகோபால என்ற மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி மேல் தீக்ஷிதர் எழுதிய பாடலை பாடினார். இதில் தீக்ஷிதர் குறிஞ்சி ராகத்தை மிகவும் லாவகமாக பாடலின் உள்ளே நுழைத்து இருப்பார். “ஸ்ரீ குரஞ்சித காம ஸ்ரித சத்யபாம” – இதன் அர்த்தம் “ஸ்ரீதேவி பூமிதேவி அவர்களால் மனம் குளிர விரும்பப்படுகிறவன், சத்யபாமையினால் ஆஸ்ரயிக்கப் பட்டவன்”- மிகவும் அழகு. எனக்கு ஏனோ சந்தானம் பாடிய “கிஷீராப்தி கன்னிகே, ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்ற குறிஞ்சி (ராக மாலிகை) பாட்டு நினைவுக்கு வந்தது

பிறகு எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- என்ற பாரதியாரின் தேஷ் ராகப் பாடல். இதை ராஜகுமார் பாரதி ஒரு தடவை இதே ராகத்தில் பாடி கேட்டு இருக்கிறேன்.

திருமழிசை பிரான் எழுதிய பாசுரம் “ஊனின் மேய ஆவி நீ. உறக்கமோடு உணர்ச்சி நீ  -பாடி ராமனை பஜித்தால் என்ற மாண்ட் ராகப் பாடலோடு, “பவமான” சொல்லி முடித்தார்.

பண் படுதல். பண் பாடுதல்

இந்த வருடம் சங்கீத கலாநிதி விருது பெறும், நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் தன்னுடைய நன்றியுரையில் “பண் படுதல், பண் பாடுதல் இரண்டும் ஒன்று என்று சொன்னார். நான் மிகவும் ஆச்சர்யப்பட்ட வார்த்தை இது. பண் பாடினால் மனது பண் படுமா  ? இல்லை எப்போதெல்லாம் மனது பண் படும். என்ற ஒரு கேள்வி எழுப்பினால், என் பதில் படும்...... சிலரின் சங்கீதம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும். 

எனக்கு, ஒரு மதுரை சோமு, மதுரை மணி அய்யர், மகாராஜபுரம் சந்தானம், இப்போது சஞ்சய். இவர்கள் இசை கேட்கும்போது.

கண்ணதாசன், சர்வர் சுந்தரம் படத்தில் “தத்தை நெஞ்சம் பாடலில், பண் பட்டதா ? இல்லையா ? என்ற ஒரு கேள்வி எழுப்பி இருப்பார். பாட்டை கேளுங்கள். 

முடிவுரை::

“கமர்ஷியல்” ஆக சஞ்சய் போய் விட்டார் என்று ஒரு சாரார் பேசுகிறார்கள். சித் ஸ்ரீராம் க்கு, செம்மங்குடிக்கும், மணி அய்யருக்கும் வாசிச்ச, உமையாள்புரம் சிவராமன் வாசிப்பது, எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமா, கமர்சியலா....... இப்படியெல்லாம் ஒரு புறம் சீரழிந்து கொண்டிருக்கும்  கர்நாடக சங்கீதத்திற்க்கு நடுவே, சஞ்சய் மாதிரி “ரசிகர்கள் சம்ப்ரதாயமான நல்ல இசையைத்தான் விரும்புவார்கள்”, என்று ஆணித்தரமாக நம்பி, கச்சேரி செய்யும் இவர், எனக்கு அதிசயம் தான்.

எனக்கு என்ன ஆசை என்றால், சஞ்சய் ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரி, மதுரை

சோமு மாதிரி பண்ண வேண்டும். அவர்தான் பண்ண முடியும். கடைசி வரை 

எழுந்து போகாத ரசிகர் கூட்டம் அவரிடம் தான் இருக்கிறது

Tuesday, 15 November 2022

“காந்தாரா” வும் எங்கள் ஊர் அய்யனாரும்.

 .இந்தக் கதை நம்மூர் அய்யனார் பற்றிய கதை. நம் ஒவ்வொருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும்- என்பது உண்மை.

எத்தனை ஆழமாக, நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படம் எடுக்கப்படுகிறதோ, அது உலக அளவில் பேசப்படும். –  ஒரு பாச மலர் போன்று. தில்லானா  மோகனாம்பாள் போல இப்போது -காந்தாரா ஒரு உதாரணம்.

ஒரு சினிமா என்பது நாம் கடந்து வாழ்ந்த வாழ்க்கையின் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தும் போது, நாம் அந்த சினிமாவுடன் ஒன்றிப் போகிறோம். சில சமயம் நெகிழ்ந்து கூடப் போகிறோம்.  அடுத்த தலைமுறைக்கு நாம் மிகவும் மதித்த ஆன்மீக ஆச்சர்யங்களை கொண்டு போய் சேர்க்காமல் இருந்துவிட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்வு கூட நம்மை சூழ்ந்து கொள்கிறது.

இந்தக் கன்னட படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது பெரிய விஷயமல்ல. தமிழ் நாட்டில் லேசில், ஒரு வெளி மாநிலப் படம் ஓடாது. அதில் எனக்குத் தெரிந்தவரை, இரண்டு படங்கள் விதி விலக்கு. ஒன்று சங்கராபரணம், இரண்டு, காந்தாரா. நான் சொல்வது கதை அம்சம் உள்ள படங்கள்.  Fantasy படங்கள் அல்ல.

சினிமா படங்களைத் தவிர்த்து பல வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வனையும், காந்தாராவையும் பார்க்க நேர்ந்தது. முதலில் பொன்னியின் செல்வனைப் பற்றித்தான் எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் காந்தாராவைப் பார்த்தவுடன் நான் “ஆடிப்” போனேன்.  2 நாள் நான் சரியாக பேச முடியவில்லை. கிராபிக்ஸ் படங்களும், மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், துப்பாக்கி, தோட்டா, கத்தி என்று, படம் பார்க்கும் நமக்கு ரத்தம் வரும் வரை சண்டை போட்டுக்கொள்ளும் படங்களும் வரும் இந்தக் காலத்தில், நாம் மண்ணை நேசித்து, மிகவும் யதார்த்தமாக, என் இளமைப் பருவத்தில், என் கிராமத்தில்  நான் பார்த்து ரசித்த, அந்த அழகை வெளிப்படுத்திய அந்த பெயர் தெரியாத அந்த “காந்தாரா” ஹீரோ வுக்கு ஒரு “சபாஷ்”

“வராஹ ரூபம்” – என்ற ஒரு பாடல் பிலஹரியிலும், பைரவியிலும், தோடியிலும், மிகவும் பிரபலமாகி நம்மை மயக்க, படமோ நம்மை நெகிழ வைக்கிறது

இந்தக் கட்டுரையை மூன்று பாகங்களாக பிரிக்கலாம்:

ஒன்று படம் நமக்குச் சொல்லும் பாடம்;

நிலம் (இயற்க்கை) சார்ந்த வாழ்க்கை நாம் வாழாமல் போனால், இயற்கை, (பெருமாள்) எப்படி வராஹ உருவம் (பன்றி) எடுத்து, அசுரரை அழித்தாரோ (ததோ), அதுபோல், வேறு ஒரு உருவம் கொண்டு நம்மை அழித்துவிடும் – இதுதான் காந்தாரா படத்தின் கதை.

நம் இயற்கை என்பது கடவுள் போட்ட பிச்சை. நாம் ஒவ்வொரு முறை இயற்கையை அழிக்கும்போது நம்மை எச்சரிக்கிறது. அப்படியும் நாம் உணரவில்லை என்றால்- சுனாமி தான்.....என்பதும் இந்தக் கதையில் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.

இந்தப் படம் முழுக்க ஆன்மீகப் (தெய்வ) படம் அல்ல. தேவர்களின் படமும் அல்ல. சிவ பெருமான் அனுப்பிய பூத கணங்கள், அய்யனார் வடிவில் வந்து நம்மையும, நம் நிலத்தையும் காப்பவர்கள். அதனால் நாம் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நிலத்திற்க்கும் கொடுப்போம். அந்த பூத கணங்களுக்கு மரியாதை செய்வது போல், கர்நாடகாவில்- “கோலா நடனம் என்று ஒன்று இன்றும் உண்டு. நம் கிராமத்தின் தெருக்கூத்து போல இருக்கும்.

நம்மூர் அய்யன்னாரிலேயே, பல வகை உண்டு, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி போல. நல்ல அய்யனாரும் உண்டு, எதிர் மறையும் உண்டு. கர்நாடாகாவில், பஞ்ஜூரிலி, குலிகா – என்று இரண்டு தெய்வங்கள் பிரசித்தம், முதல் சாது, இரண்டாவது உக்ரமான சாமி’.  

மண்ணுக்காக நடந்த சண்டை தான் மகாபாரதம். பஞ்ச பூதங்களை நாம் வணங்காவிட்டால் அது திருப்பி நம்மைத் தாக்கும்போது எங்கே செல்வோம் ? என்ற கருத்து தான் இந்தப் படம்.

படத்தின் கதையை, சில வரிகளில் சொல்லி விடலாம். தான் மிகவும் நேசித்த நிலத்தையும், அந்த நிலத்தை காலம் காலமாக காத்து வரும் “அய்யனாரையும்” பயந்து போற்றி வணங்கும் அந்த கிராமத்து மக்கள். கிராமத்தில் Forest ஆபிசர் வந்து, நிலத்தை அபகரிக்க முயல்கிறார், மறு புறம், அந்த கிராம ஜமீன்தார், நிலத்தை ஒரு புறம் அபகரிக்க முயல்கிறார். அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஹீரோ- வந்து அதற்க்கு ஒரு முடிவு கட்டுகிறார், அது எப்படி ? என்ன என்ப்துதான் ?  - இது சினிமாத்தனமாக எடுத்திருந்தால், தெலுங்குப் படம் ரேஞ்சுக்குப் போயிருக்கும்.. யதார்த்தமாக, ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல், ஆன்மீக நெடியுடன் எடுக்கப்பட அற்புதமான படம். 

டைரக்டர் ஒரு பேட்டியில் “இந்த பட வெற்றிக்கு, இந்த படத்தில் உள்ள ஆன்மீகம் தான் காரணம்” என்றார். அதான் உண்மை.  

இந்தப் படத்தில், காதை கிழிக்கிறாற்போல் ஒரு சத்தம் போடுவார், அந்த சத்தம் கேட்கும் வரை உள்ள நிலம் எனக்குச் சொந்தம் – என்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தர வல்ல- எல்லை சாமி சொல்லுவது மாதிரி கதை போகிறது.

அந்த சத்ததை இப்போது நீங்கள் செய்ய முடியமா ? என்று ஒரு நிருபர் கேட்க, “அது இப்போதும் எங்கள் கிராமத்தில், புனிதமாக கருத்தப்படும் அந்த ஓசை, அது நாங்கள் வெளியில் சொல்லி, அந்த சப்தத்தின் புனித்ததை கெடுக்க விரும்பவில்லை” என்றார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

“பூத காலா” நடனம் என்று இந்த படத்தில் ஒன்று வரும். ஒரு மாதிரி கதகளி நடனம் போன்று. அதிகமான மேக்கப் போட்டு, இந்த நடனம் பார்க்கும்போதே நமக்கு ஒரு தெய்வீக உணர்வு வரும்.  ஹீரோ ஒரு பேட்டியில் சொல்கிறார்- “இந்த உடையுடன் ஷூட்டிங் நடக்கும்போது நான் சாப்பிடவில்லை, ஏனெனில், இந்த வேடம், எங்கள் கிராமத்தில் பக்தியின் உச்சம்”

எனக்குத் தெரிந்த அய்யனார்:

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அய்யனார் மேல் மிக உயர்ந்த பக்தி, மரியாதை உண்டு.  இந்தப் படத்தை பற்றி நான் நினைத்து எழுதும்போது, எனக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் நடந்தது.

என் மனைவி ஆச்சர்யமாக சௌந்தர்யலஹரியில் மூன்றாவது ஸ்லோகத்தை எனக்குச் சொன்னாள். அது, “தம்ஶ்ட்றா முரரிபு வராஹஸ்ய பவதி” என்று ஸம்ஸாரக் கடலில் மூழ்கியவனுக்கு, எப்படி, பூமியை, ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் தள்ளியபோது, நாராயணன்ன் வராஹ அவதாரம் எடுத்து, தனது தெற்றுப் பல்லால் மேலே கொண்டு வந்தாரோ, அப்படி அம்பாள் ரக்ஷிப்பாள்” என்கிறார்.

பூமித்தாயை போற்ற வேண்டும் என்பது என் சின்ன வயதிலேயே நான் கற்ற பாடம். எங்கள் கிராமத்தில், தைப்பொங்கல் பொது எங்கள் வயல் நிலத்திற்க்குச் சென்று நமஸ்காரம் செய்வோம். நெல் விதை தெளிப்பதற்க்கு முன்பு, ஆட்கள் நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் செய்வார்கள். சூர்ய வழிபாடு, பஞ்ச பூதங்கள் வழிபாடு என்பது நாம் வழி வழியாக வரும் வழக்கம். நானும் நிலத்தில் நமஸ்காரம் செய்திருக்கிறேன். கதிர் அறுத்து நெல் மூட்டை கட்டும், அந்த இடத்தில் நடக்கக் கூட மாட்டோம். அவ்வளவு மரியாதை.

செம்மங்குடியில் நான் குழந்தையாக இருந்தபோது, ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக இருக்கும் அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ண ஸ்வாமி போன்ற பல தெய்வங்களை பார்ப்பேன். சற்று தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு பெரிய குதிரையும், பெரிய யானையும் இருக்கும். பயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். என் தாத்தா, அந்தக் கோவிலின் வழியாக நடந்து போகும் பொது, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு நடப்பார்.  நாம் ஊரைக் காப்பாற்றும் தெய்வம் என்பதும், அம்மை போன்ற கொடும் வியாதிகள் வரும்போது, மந்திரிக்க நான் அந்தக் கோவில் பூசாரியிடம் சென்று வீபூதி வாங்கி வருவேன். 

காஞ்சி மகா பெரியவர், செம்மங்குடி விஜயம் செய்த பொது (1935 என்று நினைக்கிறேன்) அவருக்கும் 'காளி, மகமாயீ ரூபத்தில் வந்து இருக்க" 3 மாதம் செம்மங்குடியிலேயே இருந்தாராம். "அம்பாள் என் கூடவே இருக்கிறாள்" என்று சொன்னாராம்.  இந்த விஷயம் இந்த ஊர் மகமாயீ கோவில் கல்வெட்டில் இன்றும் பார்க்கலாம்

செம்மங்குடியில், கரும்பாயிரம் ஸ்வாமி, மகமாயீ என்று எல்லை காவல் தெய்வங்கள் உண்டு. வருடா வருடம், அரிச்சந்த்ரா நாடகம் உண்டு. என் சித்தி சொல்லும்போது “ ஒரு முறை அரிச்சந்திர நாடகம் பதில், ராமர் நாடகம் போடப்பட்டபோது, கிராமத்தில், அம்மை நோய், மிகவும் உக்ரமாக தாக்க, சாமி வந்த பூசாரியிடம் கேட்க,  நாடகத்தை மாத்தக் கூடாது என்று சொல்ல பிறகு அரிச்சந்த்ரா நாடகம் தான் வருடா வருடம் போட்டார்களாம்.

என்னுடைய குல தெய்வமான வரகூரில் உள்ள பெரமனார் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. கேரளாவில் உள்ள ஒரு பெரியவர், மாந்த்ரீகம் தெரிந்தவர், அவர் கூடவே அய்யானாரை, நமது மந்த்ர பலத்தால் அழைத்து வர, அய்யனார் வரகூர் கிராமத்து எல்லையில் தங்கிவிட, அந்த பெரியவர் வரகூரில் தங்கியதாக சொல்வார்கள். இன்றும் அது காவல் தெய்வமாக அந்த கிராம மக்களை ரக்ஷித்து கொண்டு இருக்கிறார் என்பதும் உண்மை.

எருமைத்தலை அய்யனார் என்று சேங்காலிபுரத்தில் (குடவாசல் அருகே) ஒரு கோவில் உண்டு.  ஆனந்தராம தீக்ஷிதர் “திரயம்பாக புராதீசம்” என்று ஒரு ஸ்லோகம் சொல்வார்.  அது இந்த அய்யனார் தான்.

கல்லில் செய்து, காவல் தெய்வமாக, இன்றும் மயிலாபூரில், முண்டககன்னியம்மன், இருக்கிறாள் என்பதும் உண்மைதானே.  !

கொஞ்சம் அய்யப்பன்:

அய்யப்பன் ஒரு அவதாரமா, அல்லது அய்யனார் தான் அய்யப்பனா என்று பல கேள்விகள் எழுகிறது. ஏனென்றால். பாற்கடல் கடையும்போது, விஷ்ணு மோஹினி அவதாரமாக வந்த்தும். சிவபெருமானுக்கும், மோகினி அவதாரத்திருக்குமாய் பிறந்தவர் தான் சாஸ்தா- என்றாலும். இந்த சரித்திரம், ஸ்ரீ மத் பாகவத்தில் இல்லை.

பகவத்பாதாள், சிவ பாதாதி கேச ஸ்தோத்ரம் என்று ஒரு கிரந்தம் அருளிச் செய்து இருக்கிறார். அதில் ஆரம்ப ஸ்லோகத்தில் அய்யப்பனைப் பற்றி ஒரு ஸ்லோகம் வருகிறது. எனக்குத் தெரிந்து இதுதான் ஆதாரபூர்வமான அத்தாட்சி”

“ஆரூடப் பிரௌட வேக ப்ரவிஜிதபவனம் துங்க துங்கம் துரங்கம்.......மாமகீனே” – இதன் தமிழ் அர்த்தம் இப்படி இருக்குறது.

“மிகவும் உயரமான குதிரையில், ஆரோகணித்து, காற்றை விட வேகமாக செல்பவரும், கருப்பு வஸ்த்ரம் அணிந்து இருப்பவரும், கையில் வில், அம்பு, வேல் வைத்து இருப்பவருமான தர்ம சாஸ்தா,  நம், மனதில், பொறாமை, காமம், லோபம் போன்ற பலவிதமான விஷ ஜந்துக்கள்  இருந்து, பீதியக் கிளப்பும் இந்த நேரத்தில், என் மனதில் நிரந்தரமாக தங்கி இருந்து, இந்த விஷ ஜந்துக்களை வேட்டை ஆடட்டும்.” என்கிறார்

அய்யப்பன் தான் அய்யனார்.

சபரிமலைக்குப் போகும்போது, திருச்சியில் உள்ள இரட்டை மலை அய்யனாருக்குச் சென்று, வணங்கி விட்டுச் செல்வதும், புது வருடம், திருச்சி, மேலூரில் உள்ள அய்யனாரை வணங்கி செல்வது, சர்வ சாதாரணமான ஒன்று.

சபரிமலை செல்லும்போது, கரிமலை இறக்கத்தில், பகவதிக்கென்று, (காளி) கல்லில் செய்து ஒரு சிலை வைத்திருப்பார்கள். அது கோவில் இல்லை. கோபுரம் இல்லை. போகிற போக்கில் கல்லோடு கல்லாக இருக்கும். அதற்கு நிறைய குங்கும், மஞ்சள் அர்ச்சனை செய்து, வழித்துணையாக வர  வேண்டும் என்று வணங்கிச் செல்வார்கள். அய்யப்ப பக்தர்கள். – இதுவும் ஒரு பக்தி.

முடிவுரை:

சினிமா கடைசியில், ஹீரோ, வராஹ அவதாரம் (சாமி வருவது போல்) ஒன்று எடுத்து, எதிரியை த்வம்ஸம் பண்ணுவார் பாருங்கள்- எச்சிலைக் கூட முழுங்காமல் பார்த்தேன். 

இப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒரு கதையை, அழகாக காட்டிய இந்த நடிகருக்கு என் உளங்கனிந்த நன்றிகள்.

இந்தப் படம் நன்கு ஓடுவதில் இருந்தே எத்தனை பேர் இந்த அனுபவத்தை அடைந்து இருக்கிறார்கள் என்பது தான்